A for apple; B for bat; C for cat
A - arbre; B - ballon; C - chien; D - domino
அ - அணில் ; ஆ - ஆடு; இ - இலை ; ஈ - ஈட்டி
உயிர் எழுத்துக்களின் அகர வரிசையை இப்படித்தான் கற்றுவந்துள்ளன ◌தற்காலத் தலைமுறைகள். மிகப் பழைய காலத்தில் அதாவது குருகுலம், திண்ணைப்பள்ளிகளில் உயிர் எழுத்துக்களின் எழுத்து வடிவத்தைக் கற்பிக்கும் முன்பாகவே அவற்றின் அகர வரிசையைப் பிள்ளைகளின் மனத்தில் பதியுமாறு செய்ய அறம்செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல். . . . சொற்றொடர்களை மனனம் செய்ய வைத்தார்கள் ஆசிரியர்கள். அறிவுரைகளை அல்லது நீதிகளைப் பிஞ்சு மனத்தில் பசுமரத்தாணி போல முத்திரை குத்துவதையே இலக்காகக் கொண்ட இந்த நீதி நூல்தான் குழந்தைகள் முதல் முதலாகப் பயின்ற தமிழ் இலக்கியம் ஆகும்.
இதை இதைச் செய், இதை இதைச் செய்யாதே என்று தாய் தன் குழந்தைக்கு ஆணையிட்டு வழிநடத்துகிறாள். அதுபோல நம் தமிழ் மக்களைத், தமிழ்ச் சமுதாயத்தை நல்வழிப்படுத்த எளிய, சிறிய சொற்களால் கட்டளை இடும் பாணியில் 12 -ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் எழுதியதுதான் மேற்குறிப்பிட்ட இலக்கியம் .
'ஆத்திசூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே'
என்ற கடவுள் வாழ்த்துடன் இந்நூல் தொடங்குவதால் 'ஆத்திசூடி' என்பதே இந்நூலின் பெயராயிற்று.
மொழிக்கு முதலில் வரக்கூடிய எழுத்துக்களைக் கொண்டும் வராத சில எழுத்துக்களுக்கு உயிரெழுத்தைச் சேர்த்தும் முறையாக அறநெறிகளை 109 பாக்களில் கூறுகிறார் ஔவை
இதன் மற்ற சிறப்புகள்:
எவை பற்றி எல்லாம் பேசுகிறது இந்நூல்?
தனி மனித ஒழுக்கம்:
அறம் செய விரும்பு - விரும்பித் தர்மம் செய்ய வேண்டும். எந்தச் செயலையும் விருப்பத்துடன் செய்தால்தான் அதை அடிக்கடி ஈடுபாட்டுடன் செய்ய முடியும்.
அறம் என்ற சொல் ஒழுக்க நெறியையும் குறிக்கும் ஆதலால் அறநெறியில் நிற்க ஒருவன் விரும்பவேண்டும் என்றும் பொருள் உண்டு.
ஆறுவது சினம்:
தணியவேண்டியது கோபம்.
இயல்வது கரவேல்:
உன்னால் முடிந்ததை மறைக்காதே- சொல், செயல், பொருள், திறமை,நேரம்.......உன் பங்களிப்பு தேவை என்பதை உணர்த்துகிறது.
ஈகை:
ஈவது விலக்கேல்
தானமது விரும்பு
ஐயமிட்டு உண்
உழைப்பு:
சோம்பித் திரியேல்
மண்பறித் துண்ணேல்
கைவினை கரவேல்
என கைத்தொழிலின் மேன்மையையும் பொருள் தேடலின் இன்றியமை யாமையையும் கூறுகிறது
கல்வி:
எண் எழுத்து இகழேல் - கணக்கையும் மொழியையும் (இலக்கணத்தையும்) கற்க வேண்டும்.
இதையே கொன்றை வேந்தனில் அவ்வை ' எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்' என்பார். திருவள்ளுவரோ சற்று நீட்டி முழக்கி '
"எண் என்ப ஏனைய எழுத்தென்ப இவையிரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்பார்.
இளமையில் கல்
ஓதுவது ஒழியேல்
நூல் பல கல்
கேள்வி முயல் - படிக்க முடியாவிட்டாலும் கற்ற பெரியவர் சொல்வதைக் காதுகொடுத்துக் கேள் என்பதாம்.
தன்னம்பிக்கை:
ஊக்கமது கைவிடேல்
விவசாயத்தின் அவசியம்:
பூமி திருத்தி உண்
நெற் பயிர் விளை
நீதி:
ஓரஞ் சொல்லேல் - ஒரு பக்கம் சாயாமல் நடுநிலைமையில் இருக்க வேண்டும்
வியாபாரம்:
அஃகஞ் சுருக்கேல்- விற்கும் தானியத்தின் அளவைக் குறைத்துக் கொடுக்காதே என்பதாம்.
வீணான ஆடம்பரம் தவிர்:
இடம் பட வீடிடேல்
சமுதாய ஒழுக்கம்:
ஊருடன் கூடி வாழ்
ஒப்புரவு ஒழுகு
தேசத்தோடு ஒத்து வாழ்
மற்றவருடன் பேசும் முறை:
வெட்டெனப் பேசேல்
ஔவியம் பேசேல்
பிழைபடச் சொல்லேல்
மிகைபடச் சொல்லேல்
நொய்ய வுரையேல்
வல்லமை பேசேல்
சித்திரம் பேசேல்
சுளிக்கச் சொல்லேல்
நாம் சொல்ல விரும்புவதைத் தடுமாற்றமின்றித் தெளிவாக பிறர்க்குப் புரியும்படிப் பேச வேண்டும் என்பதை ஔவையார்
மொழிவதற மொழி என்கிறார்.
அறநூல்கள் தெரிவிக்கும் அறவழியில் வாழ்ந்து போர் இல்லாத சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் ஒளவையார், ‘போர்த் தொழில் புரியேல்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஔவையார் சொல்கிறார் – ‘கெடுப்பது ஒழி'
பிறருக்குத் தீமை செய்யும் வழக்கத்தை அடியோடு விட்டுவிடு.
இதன்படி நடந்தால் அன்றாடம் நாம் கேள்விப்படும் வழிப்பறியும் கொள்ளையும் கொலையும் வன்முறைகளும் நடக்குமா?
உடல் சார்ந்த செய்திகளும் இதில் உள்ளன. காட்டாக:
சனி நீராடு
இலவம் பஞ்சில் உறங்கு
வைகறை துயில் எழு
அனந்த லாடேல் ( மிகுதியாகத் தூங்காதே)
மீதூண் விரும்பேல் - மிகுந்த உணவை விரும்பி உண்ணாதே
நுண்மை நுகரேல் - நொறுக்குத் தீனி உண்ணாதே
கடைசியாகக் குறிப்பிட்ட இரண்டையும் நம் முன்னோர்கள் கடைப்பிடித்ததால்தான் அந்தக் காலத்தில் நிரிழிவு நோய் இல்லை போலும்.
மேலும் நட்பு,,.
. பற்றியெல்லாம் கூறப்பட்டுள்ளன.
ஆத்திசூடியில் வரும் சில சொற்றொடர்களை நாம் இன்றும் பழமொழிகளாகக் கூறிவருகிறோம்
பருவத்தே பயிர் செய்
உத்தமனாய் இரு
செய்வன திருந்தச் செய்
பிற்காலத்தில் பாரதியார் புதிய ஆத்திசூடி எழுதினார். அவரை அடுத்துப் பாரதிதாசனார் இளையோர் ஆத்திசூடி எழுதினார். இவை இண்டும் அந்தந்தக் காலச் சூழ் நிலைக்கேற்ப அவ்வையின் பாடு பொருளில் இருந்து வேறுபட்டவை.
-London bridge is falling down, falling down
-Ringa ringa roses
போன்ற பொருளற்ற, பாடல்களை நம் மழலைச் செல்வங்கள் சொல்வதைக் கேட்டுப் பூரிக்காத பெற்றோர் இல்லை எனலாம். உண்மைதான். கூடவே நல்லொழுக்கத்தைக் கற்பிக்கும் 'ஆத்திசூடி' எளிய பாடல்களை சிறு வயதிலேயே நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது நம் கடமையாகும். அவர்கள்தான் நாளைய சமுதாயத்தின் தூண்கள். வருங்காலத் தலைவர்களாகும் அவர்களின் மனம் பிஞ்சிலேயே பண்படுத்தப்படவேண்டுமே தவிர பிஞ்சிலேயே பழுக்க விட்டுவிடக்கூடாது.முதலில் பெற்றோர் இத்தகைய நூல்களைக் கற்போம்.நம்பிள்ளைகள் அவற்றைப் படிக்க ஊக்குவிப்போம்.
மிகவும் புகழ் பெற்ற தமிழ் அறிஞரைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியைக் கூறி முடிக்கிறேன்
"ஆங்கிலம் படித்தால் இங்கே நன்றாக வாழலாம். வட மொழி(சமஸ்க்ரிதம்)படித்தால் அங்கே (மோட்சத்தில் ) நன்றாக வாழலாம் . எது படிக்கிறாய்?" என்று தந்தை மகனிடம் கேட்டாராம். மகனின் பதில் என்ன தெரியுமா?
"எங்கும் நன்றாக வாழத் தாய்மொழி தமிழையே படிக்கிறேன்" என்றாராம்.
நம் தாய்மொழியாம் தமிழ் என்னும் கடலில் மூழ்கி நல் முத்துகளாம் இலக்கியங்களைக் கற்றுத் தெளிவு பெறுவோம்.
திருமதி.லூசியா லெபோ
|
|
பொறுப்பாளர்கள்
கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்
vendredi 30 janvier 2015
ஆத்திசூடியின் அருமையும் பெருமையும்
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire