அன்புடையீர்,
வணக்கம்.
மனிதன் வளர்ச்சியுற்ற பின் தன் வாழ்வியலைப் பதிந்து வைத்ததே "இலக்கியம்"
எனப்படுகிறது. அது அந்தந்தக் காலக் கட்டத்தின் கண்ணாடியாகப் பிரதிபலித்து
மாற்றங்களின் சான்றாக உலவுகிறது. வாழ்வே புதுமையாக இருந்த நேரத்தில்,
காதலும், அதன் நுண்ணிய உணர்வுகளும், அது கை கூடுவதற்கான முயற்சியுமே
சுவையான களமாக ருசித்தது. அன்றாட வாழ்க்கைப் போராட்டம் வீரத்தின் வாயிலாக
வெளிப்பட்டது.
பின்னர்
நீதி, பக்தி போன்ற மனிதனை மேம்படுத்தும் இலட்சியங்கள் புராணங்கள்,
காப்பியங்கள் வழியே பரப்பப்பட்டன. மொழித் திறனும், கவிதை நுட்பமும்
அவற்றுக்கு மெருகூட்டின. அவற்றோடு இசையும் சேர, உணர்வுகளின் வெளிப்பாடு
மனதை மயக்கும் போதையாயிற்று.
விஞ்ஞானத்
தாக்கத்தால் ஆராய்ச்சிகளும், அறிவியலும் வளர்ந்து இந்த இனியக் கனவுலகைக்
கலைத்து விட்டதென்றே சொல்ல வேண்டும். கணினி யுகம் ஓர் புது இயந்திரத்தனத்தை
மனிதனுக்குள் நுழைத்து விட்டது. அவனது சிந்தனைகள் இயற்கையை வாழ்வோடு
இணைத்து ரசிப்பதிலிருந்து மாறுபட்டு, வறண்டு போய்விட்டன. அவை சூழலுக்கேற்ப
பொருந்தினாலும் மனதோடு உறவாடாமல் எட்டியே நிற்கின்றன. எப்படி பொருளாதார
மேம்பாடு மேலோட்டமாக உறவுகளைக் கொள்ள வைத்ததோ அதே போல உணர்வுகளை இவைத்
தனிமைப்படுத்தி விட்டன.
இன்றைய
இலக்கியம் செழிப்புற்று மக்களைச் சென்றடைகிறதோ இல்லையோ 'திரை உலகம்'
முன்னணியில் நின்று கவனம் ஈர்க்கிறது. அதில் எழுதுபவர்கள் சமூக அங்கீகாரம்
பெற்று விடுகிறார்கள். பெரும்பாலான இளைய சமுதாயம் அதன் வழியேதான் தமிழையே
காண்கிறது. அதனால் ஒருவகையில் தமிழ் வளர்ச்சிக்குத் திரை உலக
எழுத்தாளர்களும், கவிஞர்களும் பொறுப்பாகிறார்கள். அந்த அடிப்படையில்
அவர்கள் கற்பனை, சொல்லாற்றல் தமிழினத்துக்கு எந்த வகையில் உதவுகிறது என்று
பார்ப்பதில் தவறேதும் இல்லை.
'யாரேனும் மணிகேட்டால் அதைச் சொல்லக்கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே' - என்றொரு பாடல்.
காதலில் மூழ்கி விட்டால் நேரம், காலம் என்பதெல்லாம் நினைவுக்கு வருவதில்லை என்பதே சொல்ல வரும் கருத்து. இதையே முன்பொரு காதலி,
"தூக்கமில்லை, வெறும் ஏக்கமில்லை - பிறர்
பார்க்கும் வரை எங்கள் பிரிவுமில்லை" என்றாள்!
'காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை?
யூற்றான், எலெக்ட்ரான் உன் நீலக் கண்ணில் மொத்தம் எத்தனை?' - உயிரூட்டும் காதலை ரசாயன மாற்றமாக மலிவாக்கும் வரிகள்.
இவ்வேளையில்
"அமுதூற்றினை ஒத்த இதழ்களும், நிலவூறித் ததும்பும் விழிகளும்" என்ற
சொற்றொடர் நினைவில் வந்து மோதுவதைத் தடுக்க இயலவில்லை!
சிதறடிக்கும்
இசைக்கருவிகளின் நடுவே, வந்து விழும் அரிதான மெல்லிசையும், வளர்ந்து வரும்
புகைப்படத் திறமையும், குரலின் மென்மையும் இப்பாடல்களை வெற்றியின்பால்
கொணர்கின்றன.
இன்னும்
'என் உச்சி மண்டைல சுர்ருங்குது', 'லவ்வுல மாட்டுனா டாருதான்டா', 'ஒரு
பொண்ணு என்ன சுத்தி வந்து டாவடிச்சாடா' என்னும் 'பிரபல' பாடல்கள் நிறைய
உண்டு.
இசையோடு
இயைந்து, பாடலில் மயங்கி, மனதோடு கொஞ்சும் தமிழ் கேட்க மனம் ஏங்குகிறது.
தமிழின் இனிமையையும், பல அர்த்தங்களை உள்ளடக்கிய ஒரு வார்த்தையின் நயம்
தரும் மாயத்தையும் மீண்டும் பெற இறைவனை வேண்ட வேண்டுமோ!?
திருமதி சிமோன்
Aucun commentaire:
Enregistrer un commentaire