எல்லோரும் இன்புற்று வாழ்கவே! அன்பொளிரும்
சொல்லோடு மன்பதை சுற்றுகவே! - நல்லமுதாம்
சங்கத் தமிழ்மணக்கச் சந்தக் கவியினிக்கப்
பொங்கல் திருநாளே பொங்கு!
ஒற்றுமை ஓங்கி ஒளிருகவே! நல்லொழுக்கம்
பற்றுனைப் பற்றிப் படருகவே! - நற்றுணையாய்த்
திங்கள் தரும்நலமாய்த் தென்றல் கமழ்மணமாய்ப்
பொங்கல் திருநாளே பொங்கு!
உழைப்பே உயர்வுதரும்! உண்மையொளி யூட்டும்!
இழைப்பே பொலிவுதரும்! எங்கும் - குழையாமல்
தங்க மனமேந்தித் தந்த வளமேந்திப்
பொங்கல் திருநாளே பொங்கு!
மாண்பெனும் சோலை மலருகவே! வண்டமிழ்
ஆண்டெனத் தைமகளை வேண்டுகவே! - பூண்டொளிரும்
மங்கை அணியழகாய் மாலை மதியழகாய்ப்
பொங்கல் திருநாளே பொங்கு!
செய்யும் தொழிலையே தெய்வமென எண்ணிடுக!
உய்யும் வழியுணர்க! ஒண்டமிழ் - நெய்கின்ற
வங்கக் கடல்புதுவை வாழும் புலமையெனப்
பொங்கல் திருநாளே பொங்கு!
துணிவே துணையெனக் கொண்டிடுக! நெஞ்சுள்
பணிவே உயர்வுதரும் பண்பாம்! - பணிசிறக்க!
செங்கதிர் முற்றிச் செழித்துள்ள பொன்னிலமாய்ப்
பொங்கல் திருநாளே பொங்கு!
ஒழுக்கம் உயிரினும் ஓம்பிடுக! கற்றோர்
பழக்கம் பயனுறுக! பாரே - செழித்தாட
மங்கலம் நல்கும் மலர்த்தமிழ் வாய்மறையைப்
பொங்கல் திருநாளே பொங்கு!
அன்பொன்றே இவ்வுலகை ஆட்படுத்தும்! பேராற்றல்
ஒன்றென்றே ஓதி உணர்வுறுக ! - நன்றாடித்
தொங்கும் மனக்குரங்கைத் தங்கும் வழிகாட்டிப்
பொங்கல் திருநாளே பொங்கு!
கடமையும் கண்ணியமும் நற்கட்டுப் பாடும்
உடமையாய்ப் பெற்றே ஒளிர்க! - குடியோங்கித்
தங்கி மகிழ்விருக்கத் தாள இசையொலிக்கப்
பொங்கல் திருநாளே பொங்கு!
எண்ணமே வாழ்வாகும்! என்றென்றும் உண்மையொளிர்
வண்ணமே ஆன்ம வளமாகும்! - மண்ணுலகம்
எங்கும் இனிமையுற ஏற்ற நெறிகளைப்
பொங்கல் திருநாளே பொங்கு!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
Aucun commentaire:
Enregistrer un commentaire