இறை நம்பிக்கை-வாழ்வில் காணும் வேறுபாடுகள், ஏற்றத் தாழ்வுகள் இவை இரண்டுக்கும் இருக்கும் முரண்பாடு அவரைச் சிறு வயது முதலே சிந்திக்க வைத்தது. பிரம்ம சமாஜ உறுப்பினராகி, அது திருப்தி தராததால் வெளியேறினார்.
1881 இல், இராமகிருட்டிண பரம அம்சரின் சந்திப்பு நரேந்திரரின் வருங்காலத்தை நிர்ணயித்தது. பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் இவற்றின் அவசியத்தை உணர்ந்து, அவரது சீடராக விளங்கியவர் குருநாதரின் மறைவுக்குப் பின், 1886இல் துறவு பூண்டு, விவேகானந்தர் என்னும் பெயர் பெற்றார்.
இந்தியா முழுதும் கால் நடையாகப் பயணம் செய்தவர், 1892 டிசம்பர் 24இல் கன்னியாகுமரி வந்த போது, கடலில் இருந்த பாறையில் மூன்று நாட்கள் தியானம் மேற்கொண்டு, இந்தியாவைப் பற்றிச் சிந்தித்தார். வேதாந்தத்தின் உயிரோட்டமான உண்மைகள் மக்களைச் சென்றடையவில்லை, வறுமையும் - அறியாமையும் அவற்றைத் தடுக்கின்றன என்று கண்ட அவர், மேலை நாட்டினர் அந்த உண்மைகளை ஏற்கும் நிலையில் இருப்பதை உணர்ந்து, அவற்றை அவர்களுக்கு அளித்து பொருளீட்ட தக்கத் தருணத்தை எதிர் நோக்கி இருந்தார்.
1893, செப்டம்பர் 11ஆம் நாள், சிகாகோ அகில உலக அனைத்துச் சமயப் பேரவை அதற்கு வழி வகுத்தது. இந்து மதத்தின் சார்பாக “சகோதர சகோதரிகளே” என்று தொடங்கி அவர் ஆற்றிய பேருரை இந்தியர்களின் மனித நேயத்தைப் பறை சாற்றியது. 17 நாட்கள் நடைபெற்ற மாநாட்டில், விவேகானந்தர் மட்டுமே 6 முறை சிறப்புரை ஆற்றினார். நான்கு ஆண்டு காலம் வெளிநாடுகளில் தங்கி நியூயார்க்,லண்டன் போன்ற நகரங்களில் வேதாந்த மையங்களை அமைத்தார்.
1897இல் இந்தியா திரும்பி இராமகிருட்டிண மடத்தை நிறுவினார். வளமான இளைஞர்கள் கைகளில்தான் நாட்டு முன்னேற்றம் அடங்கியுள்ளது எனக்கருதிய அவர் அவர்களுக்கு விழி! எழு! உழை! எனக் கட்டளையிட்டார். எண்ணற்ற அவரது ஆழ்ந்த கருத்துகளில் ஒரு சில
- மனிதர் இயல்பில் தெய்வீகமானவர். இதை வெளிப்படுத்துதலே வாழ்வின் சாரம்.
- உலகக் குறைகளைப் பற்றி வருந்து. பேசாதே! பேசி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே! ஏனெனில் குற்றங்குறைகள் பலவீனத்தால் விளைபவை.
- சிந்தித்து செயலாற்று!
- நன்மை-தீமை, அறிவு-அறியாமையின் கலவையே பிரபஞ்சத்தின் இயல்பு.
- உலக தீமை பற்றி வருந்துமுன், உன் உள்ள நச்சு எண்ணம் பற்றி வருந்து. உள்ளம் ஒழுங்கானால் உலகம் ஒழுங்குபடும்.
- பக்தி பாசாங்கைவிட நாத்திகம் மேல்.
- எப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே!
- தன்னம்பிக்கை இல்லாதவன் நாத்திகன் என்பது புதுமதம்.
- நீ நினைப்பதைப் போலவே மாறுகிறாய்! புனிதமானதை தியானிப்பது மன அழுக்குகளை எரித்து, உயர்த்தும்.
- ஆற்றலை ஒருமுகப்படுத்து.
- புது சக்திகளை உருவாக்க முடியாது. மனவலிமை கொண்டு மிருக சக்தியை வெளிப்படுத்துவதற்கு பதில் ஆன்ம சக்தியை வெளிப்படுத்து.
- பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனை தெய்வமாக்கவும் முயல்வது மதம்.
- சொந்த மனம்தான் உலகை அழகாகவும், அவலட்சணமாகவும் ஆக்குகிறது. எனவே எல்லாவற்றையும் சரியாக புரிந்து கொள்ள முயற்சி செய்.
- இப்போது அனுபவிப்பது முன்வினைப் பயன் என்றால், எதிர்காலம் நமது கையில் என்று பொருள். வீசும் காற்றை பயன்படுத்துவது கப்பலின் கையில்தான்!
- பிறரால் படைக்கப்பட்ட ஒன்றை என்னால் அழிக்க முடியாது. ஆனால் என் விதியைப் படைப்பவன் நான் எனும் உறுதி கொள்.
- வீரமில்லா விவேகம் கோழைத்தனம். விவேகமில்லா வீரம் காட்டுமிராண்டித்தனம்.
- வாழ்வைச் சோலையாகக் காணும் காதலன் மனநிலை தேவையில்லை! வாழ்க்கைப் போர்க்களத்தில் அஞ்சாத வீரனின் மனநிலையே நமக்கு வேண்டும்.
- சுயநலம் துறப்பதே துறவு. காவி அணிவது அல்ல.
- பயன் எதிர்பாராத கடமையே தொண்டு.
- எங்கே பெண்களுக்கு மேன்மையான இடம் இல்லையோ அங்கே உயர்வுக்கான நம்பிக்கையே இல்லை!
- துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.
இந்தியப் பெருமைகளை,ஆன்மீக நெறிகளை உலகறியச் செய்த விவேகானந்தர் 1903 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 4ஆம் நாள் புகழுடம்பு எய்தினார்.
இந்தியா அவரது பிறந்த நாளை “இளைஞர் தினம்" எனக் கொண்டாடுகிறது.
-- சரோசா தேவராசு
