பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 30 avril 2012

டீ டைம்



ஒரு மனிதனின் செய்கை மற்றொரு மனிதனுக்கு விசித்திரமாக இருக்கலாம் என்று சொல்வார்கள். காபி, டீ விஷயத்தில் இது உண்மை என்று உணர்ந்தேன்.நான் வெளிநாட்டுக்கு வந்த புதிது- பால் கலந்து காப்பி, டீ நான் அருந்துவதைக் கண்ட என் வெள்ளைக்கார  நண்பி என்னைக் கேலி செய்தாள். நம்மூர்ப் பழக்கம் அவளுக்கு விசித்திரமாக இருந்தது. பால் சேர்த்து இவற்றைக் குடிப்பதைக் காட்டிலும் அவற்றைக் குடிக்காமல் இருப்பதே மேல் என்றும் பால் சேர்ப்பதால் குறிப்பாக டீ, தன் மருத்துவக் குணங்களை இழந்து விடுவதாகவும் கூறினாள்(எதிர்த்தாத்து மாமி தயாரிக்கும் ஸ்டிராங் டிக்காஷன் காப்பி பற்றி அவளுக்கு எப்படித் தெரியும்?)..
சென்ற ஆண்டு விடுமுறையில் நானும் என்னவரும் தாயகம் சென்றபொழுது ஒரு வாரம் கேரளா சுற்று பயணம் சென்றோம் டாக்ஸ்சியில். வழி நெடுக ஓங்கி வளர்ந்த ரப்பர் மரங்களும் பச்சை நிறக் கம்பளம் விரித்தது போன்ற தேயிலைத் தோட்டங்களும்தான். எங்கள் விருப்பத்தை அறிந்த ஓட்டுனர் எங்களை ஒரு தேயிலை தோட்டத்துக்கும் தேயிலை பதனிடும் தொழிற்சாலைக்கும் அழைத்துச் சென்றார்.அங்கு நான் தெரிந்துகொண்ட செய்திகள் என் நண்பியின் கருத்தைஉறுதிப் படுத்தின. இதுபற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.    
"மூன்று நாட்கள் உணவு கிடைக்காவிட்டால் கூடப் பரவாயில்லை, ஒரே ஒரு நாள் கூடத் தேநீர் பருகாமல் இருக்க இயலாது" என்பது சீனப் பழமொழி. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பச்சைத் தேயிலை சீனாவில் பயன்பட்டு வந்துள்ளது. இச்செய்தியை 4700 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவை ஆண்ட பேரரசர் ஷினாங், எழுதிய நூலான The Divine Farmer's Herb-Root  Classic  உறுதிப்படுத்துகிறது . பச்சைத் தேயிலையின் சிறப்புகளை பற்றி இதில்  கூறியுள்ளார். சீன மக்கள் தினமும் தேநீர் பருகும் பழக்கத்தைக் கொண்டதால், தேயிலையைப் பயிரிடத் தொடங்கினர். தற்பொழுது 35 நாடுகளில் தேயிலை பயிரிடப்பட்டாலும் இந்தியா, இந்தோனேஷியா, கொரியா, இலங்கை, நேப்பாளம், தைவான், வியட்நாம் ஆகிய நாடுகள்தாம் முன்னணியில் உள்ளன.  பச்சைத் தேயிலை விதைகள், ஜப்பானின் புத்தத் துறவிகள் (710 - 794) சீனாவிற்கு விஜயம் செய்த பொழுது அறிமுகப்படுத்தப்பட்டன.ஜப்பானி
ன் தேயிலைத் தொழிற்சாலை, துறவி ஈசாயால் (Eisai), 1191 -இல் துவங்கப்பட்டது.
   
கமீலியா சினென்சிஸ் (camellia sinensis) என்ற பச்சைத் தேயிலைச் செடியின் மூன்று முக்கிய வகைகள் இந்தியாவிலும்  சீனாவிலும் விளைகின்றன. பச்சைத் தேயிலையில் 700 -உக்கும் மேற்பட்ட மூலக்கூறுகள் உள்ளன. இதில் உள்ள கேட்ச்சின்(catchins), பாலிபினால்(polyphenol), எபிகேல்லோகாட்ச்சின் கெல்லட் (EGCG) போன்றவை மருத்துவக் குணமுடையவை.மேலும் அமினோ அமிலங்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும் ஆண்டி ஆக்சிடன்ட் நிறைய உள்ளன. இந்தத் தாவரத்தின் இலைகளிலிருந்து தேநீர் தயாரிக்கப்படுகிறது. டீயில் வைட்டமின் பி, சி, ஈ, கே; பொட்டாசியம், துத்தநாகம், மாங்கனீசு ஆகியவையும் உள்ளன. கலோரி இதில் துளியும் இல்லை.  
தேயிலைகளைப் பறித்த பிறகு அவை நொதியாவதை( ferment) தடுக்க உலர்த்தப் படுகிறது. இதற்கு இயந்திரங்கள் பயன் படுத்தப்படுகின்றன.தேயிலையின் தேர்வு , தூளாக்கப்படும் முறை, தயாரிப்பு இவற்றின் அடிப்படையில் டீ வகைப்படுத்தப்படுகிறது.
 சில்வர் டிப்ஸ் டீ:
இந்த வகை டீ தயாரிக்கத் தேயிலையின் மொக்குகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. மொக்குகள் வெண்மையாக வெள்ளி நிறத்தில் இருப்பதால் இப்பெயர் பெற்றது. கிரீன் டீக்கு அடுத்ததாக இதில் தேயிலையின் சத்துக்கள் மிகுதியாக உள்ளன. சுவை மிக்கது.
 கிரீன் டீ:
தேயிலைச் செடியின் முதல் இரண்டு துளிர் இலைகளும் அவற்றுடன் இணைந்த மொக்கும் பறிக்கப்பட்டு, தயாரிக்கப்படும் டீ இது. பச்சைத் தேயிலை ஃபெர்மெண்டேஷன் செய்யாமல் காய வைக்கப்படுகின்றது. இதனால் தேயிலையின் இயற்கையான தன்மை, நிறம் பாதுகாக்கப்படுகின்றன. தேயிலையில் உள்ள பெரும்பாலான சத்துக்கள் இதில் இருக்கின்றன. இது சிறிது துவர்ப்பாக இருக்கும். 
டஸ்ட் டீ:
துளிர், மொக்குகள் தவிர்த்து ஏனைய இலைகளைப் பறித்து இயந்திரத்தில் பக்குவப்படுத்தி இந்த டீத்தூள் தயாரிக்கப்படுகிறது.தேயிலை சுமார் ஒன்றரை மணி நேரம் முழுமையாக ஆக்சிடேஷன் செயப்படுவதால் பச்சை நிறத்தில் இருக்கும் தேயிலை பழுப்பு நிறத்துக்கு மாறிவிடும்.பெரும்பாலானவர்கள் அருந்தும் டீ இது.இதில் காபீன் அதிகமாக இருக்கும். இதனால் இந்த டீ குடித்ததும் புத்துணர்வு தூண்டப்படும். இதில் கலப்படம் அதிகம் அதனால் பல்லில் கறை படுவது போன்ற பல நோய்கள் வர வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கிறார்கள்.அனைத்துச் சத்துக்களும் க்ரீன் டீயில் அதிகபட்ச அளவிலும் டஸ்ட் டீயில் குறைந்தபட்ச அளவிலும் உள்ளன.
ஒலாங் டீ :
கிரீன் டீ போன்று முதல் இரண்டு துளிர் இலைகளும் அவற்றுடன் இணைந்த மொக்கும் பறிக்கப்பட்டு, குளிர்ந்த காற்றும் வெப்பக் காற்றும் மாற்றி மாற்றிப்  பாய்ச்சப்பட்டுப் பதப்படுத்தும் ஆக்சிடேஷன் முறையைப் பின்பற்றி (அதிகபட்சம் 20 நிமிடங்கள்) தயாரிக்கப்படுகிறது.கைகளால் நசுக்கித் தயாரிக்கப்படுவதால் இதன் விலை அதிகம். கிரீன்டீயைவிடச் சத்து இதில் சற்றுக் குறைவுதான்.
தேயிலைத் தூளில் உயர் தரம், நடுத்தரம், மலிவு என்று விலை அடிப்படையில் பல ரகங்கள் இருக்கலாம். ஆனால், எல்லாத் தேயிலைகளுக்கும் மூலப்பொருள் ஒன்றேதான்.
தேயிலை தயாரிக்கப்படும் விதத்தைக் கொண்டு அதன் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. இது தவிர தேயிலையுடன் இஞ்சி, எலுமிச்சை, பாதாம் போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டும் டீ வகைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த துணைப் பொருட்களின் சத்தும் தேநீருடன் சேரும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
தேநீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்:
  • எல்.டி.எல்(LDL) மோசமான கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.
  • பாக்டிரியா மற்றும் இன்ப்ளுயன்சா வைரசுகளை அழிக்கிறது.
  • இரத்தக் கட்டிகள் உருவாவதைக் குறைப்பதால் மாரடைப்பு,பக்கவாதம் போன்றவை தவிர்க்கப்படுகின்றன.
  • இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது .
  • மூளையில் ஆல்ஃபா அலைகளைத் தூண்டி மனத்துக்கு அமைதி தருகின்றது.
  • வயது முதிர்வைத் தாமதப்படுத்தும் ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் இதில் அதிக அளவில் உள்ளது.
  • நீரிழிவுச் சிக்கல்வராமல் தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.
  • இதய நோயைத் தவிர்க்கும் ஃப்ளவனாயிட்ஸ் (Flavonoids) தேநீரில் நிறைந்திருக்கிறது.
  • காஃபின், தியோபுரோமின், தியாஃபிலின் போன்ற அல்கலாய்டுகள் டீயில் உள்ளன. இவை மனித உடலுக்குப் புத்துணர்வைத் தருபவை. சிகரெட் புகைப்பதால் உடலில் படியும் நிகோடின் அளவை தியோபுரோமின் குறைப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
  • மாச்சா வகையைச் சேர்ந்த பச்சைத் தேயிலையில் உள்ள வைட்டமின்கள் சி,பி,இ மற்றும் ப்ளோரைடு பல் சொத்தையைத் தடுக்கிறது.
  • புற்று நோயை எதிர்க்கும் தன்மையைத் தருகிறது.
  • எச் ஐ வி நோயாளிகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • உடல் எடையைக் குறைக்கப் பலரும் இதை விரும்பி அருந்துகின்றனர்.

ஓரளவுக்கு ஆக்சாலிக் அமிலம் இருப்பதால், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
தேநீர் என்பது இயற்கை பானம். இதில் பால் சேர்க்கும்போது அதில் உள்ள வேதிப் பொருட்கள் தேநீரில் உள்ள சத்துக்களை முறித்துவிடும். எந்த வகை டீத்தூளாக இருந்தாலும், தண்ணீரில் டீத்தூளைப் போட்டு கொதிக்கவிடக் கூடாது. மாறாக, டீத்தூளை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொண்டு அதில், நன்கு கொதித்த வெந்நீரை ஊற்ற வேண்டும். இரண்டு - மூன்று நிமிடங்களில் டீத்தூளின் சாறு வெந்நீரில் கலந்துவிடும். பிறகு வடிகட்டி அந்த நீரை அப்படியே அருந்தலாம். சர்க்கரையை தவிர்ப்பது நல்லது. தேவையானால் எலுமிச்சை சாறு சேர்த்தும் குடிக்கலாம்.
சுடுதண்ணீர் மட்டுமே காய்ச்சத் தெரிந்த கணவன்மார்கள் இனிமேல் டீ தயாரிக்கவும் தெரியும் என்று பெருமைப் பட்டுக்கொள்ளலாம்.
டீ ஒரு ஆண்டி ஆக்சிடென்ட் என்று முன்பு குறிப்பிட்டு இருக்கிறேன். அதுபற்றிச் சில செய்திகள்.
திசுக்கள் திண்ணமாய்ச் செயலாற்றிட இரு வெவ்வேறு ஆக்சிடென்ட் சமமாய்ச் செயல்பட வேண்டும். ஒன்று ப்ரி -ஆக்சிடென்ட் மற்றொன்று ஆண்டி ஆக்சிடென்ட். திசுக்களுக்குப் பிராண வாயுவை வாரி வழங்குபவை ப்ரி-ஆக்சிடென்ட். திசுக்களில் நடக்கும் பல வேதியல் மாற்றத்தால் வெளியாகும் ப்ரி-ராடிக்கல்(free Radical) ,உடலின் ஒவ்வொரு உறுப்பையும் பாதிக்கும் பலம் வாய்ந்தவையாகும். இவற்றை வெளியே தள்ளும் சக்தி ஆண்டி-ஆக்சிடெண்டுக்கு மட்டுமே உண்டு. இந்த ப்ரி ராடிகல்கள் நம் உடலில் அதிகமானால் நோய்கள் நொடியில் வரும்,முதுமை முந்தி வரும். எனவே ஆண்டி ஆக்சிடென்ட் மிகுந்துள்ள பச்சைக் காய்கள், பழங்கள், உலர்ந்த பழங்கள், பாதாம், பிஸ்தா,பேரிச்சம் பழம்,பால், பச்சை டீ இவற்றை உண்டு பயன்பெறுவோம். இந்தியாவில் உண்ணப்படும் 14 பழங்களில் 'ஏழைகளின் ஆப்பிள்' என்று அழைக்கப்படும் கொய்யாவில் (100 கிராம் கொய்யாவில் 496 மில்லி கிராம்) அதிக அளவு ஆண்டி ஆக்சிடென்ட் இருக்கிறதாம்.

தேயிலையிலிருந்து cream, deoderont தயாரிக்கும் ஆராய்ச்சிகள் நடந்து  வருகின்றன.

டீ குடித்துக்கொண்டு தொகுத்தவர் லூசியா லெபோ 


2 commentaires:

  1. வணக்கம்
    நீங்கள் தயார் செய்த டீ குடிக்க வேண்டும்போல் இருக்கிறது
    நன்றி
    சிவப்பிரகாசம்

    RépondreSupprimer