பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 29 août 2012

எண்ணப் பரிமாற்றம்

                                                    

அன்புடையீர்,

வணக்கம். 'உலகமே ஒரு நாடக மேடை', நாமனைவரும் அவரவர் பாத்திரங்களை 'ஆட்டுவிப்பவன் ' விரும்பியவண்ணம் ஏற்றுக்  குறைவற நடித்து முடிக்கிறோம் என்பது யதார்த்தமான உண்மை . ஒரு வேளை, நாம் விரும்புகிற வகையில் அது இல்லாது போகும் ஏக்கமோ, அல்லது அந்த ஏக்கத்தைக் கற்பனையிலாவது போக்கிக் கொள்ள விழையும் தாகமோ, மனிதன் பெரும்பாலும் கலைகள் மூலம் தன்னையும் 'படைப்பவன்' ஆக்கிக்கொண்டு  நிறைவு காண   விரும்புகிறான்  என்று தோன்றுகிறது.

ஏனெனில் பொழுது போக்கிற்கென அவன் படைத்த இசையாகட்டும், அன்றி நாட்டியமாகட்டும் உள்ளார்ந்த சோகத்தையும், அந்த வலியையும் சில வேளைகளில் பிரதிபலிக்கவேச்  செய்கிறது. கதைகளும், நாடகங்களுமோ  வாழ்க்கைப் பிரச்சனைகளையும், குணக்கேடுகளையும் அதனால் விளையும் துன்பங்களையும் அலசாமல் இருப்பதில்லை ! ஆனால் முடிவு மட்டும் 'சுபம்' என்றே இருக்கும். ஒரு சில நிதர்சனவாதிகள் முடிவையும் துயரமாகவே காட்டுவதுண்டு. உண்மையில் வாழ்க்கையும் அவ்வாறே சில கேள்விகளுக்கு பதில் தராது, சில குழப்பங்களுக்கு விளக்கம் தராது சடுதியில் முடிந்துவிடும் புதிராகத்தான் உள்ளது.

ஆனால் கால மாற்றம் தற்போதுள்ள சூழலை இலக்கின்றி, இன்னும் சொல்லப்போனால் கவலைதரும் வகையில் நிறுத்தி இருக்கிறதோ என்ற எண்ணம்  சிந்திக்கும் எல்லோருக்கும் உண்டாவதைத் தடுக்க இயலாது. கதைகள் - ஒரு பக்கம், அரைப் பக்கம், இரண்டு வரிகள் எனக் குறைந்து கொண்டு வருகின்றன. அதற்கு மேல் படிப்பதற்கு பொறுமை இருக்காது என்று முடிவு கட்டி விட்டார்கள் போலும் ! திரைப்படங்கள் கவர்ச்சியையும் அர்த்தமற்ற நகைச்சுவையையும் புரியாத பாடல்களையும் சத்தம் மிகுந்த இசையையும் இட்டு சில சண்டைக் காட்சிகளுடன் நிறைவு கொள்கிறது. இதில் பல படங்கள் முடங்கிக் கிடக்கின்றன என்று பொருமுகிறார்கள். தொலைகாட்சி, தன் தொடர்களில் பெண்களை, முக்கியமாகத் தாயையும், இளம் பெண்களையும்  பயங்கரமான கொடுமைக்காரிகளாகச் சித்தரிக்கிறது. சமூகத்தில் மட்டும் பெண்களைத் தெய்வமாக மதிக்க வேண்டும் என்றால் , யார் முன் வருவார் ?  கால் மணி நேரப் படத்தில் எவனாவது போதையில் தள்ளாடும் காட்சி வராமல் இருக்காது. பத்திரிக்கைகள் ஜனரஞ்சகம் என்ற பெயரில் சினிமாச் செய்திகள், யாருக்கும் உதவாத நடிகர்களின் பேட்டிகளால் நிரப்புவதையும் தனக்கே உரித்தானத் தமிழில், (உ ம் . இப்படி அதிரி புதிரி ஹிட்டாக  அதுக்கான உழைப்பையும் பெருக்கினோம் .)  இதைத் தமிழ் என்று சொல்லலாமா என்று கூடத் தெரியவில்லை, தருகின்றன.   இந்த நிலையில் தற்போதைய நாடகங்கள் எப்படி உள்ளன, நாடகத்தின் வருங்காலம் என்னவாகும் என்று புரியவில்லை .

ஒரு சாதாரண சாமான்யனுக்குத் தோன்றும் இந்த உண்மைகளை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து பரிகாரம் ஏதாவது செய்ய மாட்டார்களா என்று ஆசைப்படுவதைத் தவிர நம்மால் என்ன செய்ய முடியும்?

திருமதி சிமோன்
Aucun commentaire:

Enregistrer un commentaire