பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 30 août 2014

எண்ணப் பரிமாற்றம்



வணக்கம்,

'சுதந்திரம்' என்ற வார்த்தையைக் கேட்டதும் அடிமைப்படுத்தப்பட்டவர் விடுதலையை வேண்டியோ, போராடியோ  பெற்று, தன் விருப்பப்படி வாழ்தல் என்ற பொருளை நினைவு கூர்கிறோம். ஆனால் கருத்துச் சுதந்திரம்,பேச்சுச் சுதந்திரம், எழுத்துச்  சுதந்திரம் போன்ற பதங்களும், பெண் உரிமை, குழந்தைகள் உரிமை என்றெல்லாம் பேசப்படுபவைகளும் ஏதோ ஒன்று,யாரோ ஒருவர் தன்னியல்புப்படி செயல்பட இயலாமல் நசுக்கப்படுவதை உணர்த்துகின்றன.இதை வெறும் ஆணாதிக்கம், முதலாளித்துவம், பட்டம்- பணம் - பதவி மூலம் வரும் அடக்குமுறை எனக் கொள்வதற்கில்லை. ஏனெனில் உறவு, நட்பு, பழக்கம் என்ற அள்வில் கூட இந்த 'அழுத்தம்' தரப்படுகிறது.அவ்வேளையில் ஓர் ஊமைக்காயம் துன்பம் தருவதை எல்லாரும் ஏதோ ஒரு நேரத்தில் அனுபவிக்கிறோம்.

'உரிமை என்பது  தரப்படுவதில்லை .எடுத்துக் கொள்ளப்படுவது' என்றவொரு சொல்லலங்காரம் பொருளற்று பரவியுள்ளது.இது எந்த அளவு உரிமை மறுக்கப்படுபவர்களால் கைகொள்ளக்கூடியது எனப் புரியவில்லை. உதாரணமாக ஒரு குழந்தையோ ஒரு பெண்ணோ தன உரிமைக்காகத் தனித்துப் போராடுகையில் அவர்களுடைய அச்சிறு வட்டத்தில் அதைப் புரிந்து துணை நிற்போரோ, ஏற்போரோ இல்லையேல் அம்முயர்ச்சியும் நசுக்கப்பட்டு, 'குற்றவாளிக் கூண்டில்' நிறுத்தப்படும் அபாயமே அதிகம். சமூக அளவிலும் ஓர் தனிப்பட்ட நபர் வென்றுவிட முடியும் என்பதற்கில்லை. அதற்கானத் தருணம் கனிந்து, ஒரே கருத்தைப் பலர் கொள்ளும்வரை வெற்றி பெற வாய்ப்பில்லை. இதனால்தான் ஓர் உயர்ந்த இலட்சியமாயினும் வெல்வதற்குள் பல்லாயிரக்கணக்கானத் தை உயிர்கள் பாதிக்கப்படுகின்றன, பலியாகின்றன.

இப்பிரச்சனையில் இன்னுமொரு சிக்கலும் உண்டு.உரிமைக்காகப் போராடுகிறவர்களின்  குறிக்கோளைப் பற்றியத் தெளிவான சிந்தனையும், பெறப்போகும் உரிமையின் நிலைத்த பயனையும் அவர்கள் உணர்ந்திருக்கிறார்களா என்பதையும், அவற்றின் தரத்தையும் யார் நிர்ணயிப்பது?! முதிர்ச்சி இல்லையேல் உரிமையின் பேரால் அவர்கள் எடுத்துவைக்கம் அடி அவர்களையே வீழ்த்தும் என்பது  வீழ்ந்தப்பின்னர்தானே புரியும்?

மனித மனம் என்னதான் சகதியில் இருந்தாலும், அதிலிருந்து மீளவே நாட்டம் கொள்கிறது. இந்தச் 'சுய உணர்வு' தனக்குள் தன்னைப் பற்றிய 'உண்மை கணிப்பைக்' கொண்டிருந்த போதிலும், பிறர் அதை சுட்டிக்காட்ட  இடமளிக்க விரும்புவதில்லை. 'தன்முனைப்பு' அங்கே சுவராக நின்று தடுக்கிறது. ஆணவம் கண்ணை மறைக்கத், தன்னிலும் தாழ்ந்தோராய் மற்றவரைச் சித்தரிப்பதில் வக்கிரமாய் திருப்தி கொள்கிறோம்.இந்த அகங்கார வெளிப்பாடே 'ஆண்டான் அடிமையாக உருக்கொள்கிறது. தனது பக்கமுள்ள நியாயமான வெளிப்பாட்டை செயல் வடிவாக்க இயலாதவகையில், அகங்காரச் சுமை கீழிறக்குகிறது. அந்த பலவீனத்திற்கு ஆளான பின் கோபம் மட்டுமே அங்கே ஆட்சி புரிகிறது. கண்மூடித்தனமான அராஜகம் களன் ஏறுகிறது.

ஒவ்வொருவரும் இதை உணர்ந்து விடுபட்டாலே சமத்துவம் தன்னால் நிலவும். மனச்சான்றும், மனித நேயமும் கடைப் பிடிக்கப்பட்டால் அவரவர் செயல்கள் கட்டுப்பாட்டுக்குள்ளாகி, பிறர் துன்பம் உணரப்பட்டு 'அடக்கும்' எண்ணம் 'அடங்கிப்' போகும்!

திருமதி. சிமோன் 


Aucun commentaire:

Enregistrer un commentaire