பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 30 janvier 2015

ஆத்திசூடியின் அருமையும் பெருமையும்



A for apple; B for bat; C for cat
A - arbre; B - ballon; C - chien; D - domino
- அணில் ; - ஆடு; - இலை ; - ஈட்டி
உயிர் எழுத்துக்களின் அகர வரிசையை இப்படித்தான் கற்றுவந்துள்ளனதற்காலத் தலைமுறைகள். மிகப் பழைய காலத்தில் அதாவது குருகுலம்திண்ணைப்பள்ளிகளில் உயிர்  எழுத்துக்களின் எழுத்து வடிவத்தைக் கற்பிக்கும் முன்பாகவே அவற்றின் அகர வரிசையைப் பிள்ளைகளின் மனத்தில் பதியுமாறு செய்ய அறம்செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல். . . .  சொற்றொடர்களை மனனம்  செய்ய வைத்தார்கள் ஆசிரியர்கள். அறிவுரைகளை அல்லது நீதிகளைப் பிஞ்சு மனத்தில் பசுமரத்தாணி போல முத்திரை குத்துவதையே இலக்காகக் கொண்ட இந்த நீதி நூல்தான் குழந்தைகள்  முதல் முதலாகப் பயின்ற தமிழ் இலக்கியம் ஆகும்.
இதை இதைச் செய், இதை இதைச் செய்யாதே என்று தாய் தன்  குழந்தைக்கு ஆணையிட்டு வழிநடத்துகிறாள். அதுபோல  நம் தமிழ் மக்களைத், தமிழ்ச் சமுதாயத்தை நல்வழிப்படுத்த எளிய, சிறிய சொற்களால் கட்டளை இடும் பாணியில் 12 -ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் எழுதியதுதான் மேற்குறிப்பிட்ட இலக்கியம் .
'ஆத்திசூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே'
என்ற  கடவுள் வாழ்த்துடன் இந்நூல் தொடங்குவதால் 'ஆத்திசூடி' என்பதே இந்நூலின் பெயராயிற்று.
மொழிக்கு முதலில் வரக்கூடிய எழுத்துக்களைக் கொண்டும் வராத சில எழுத்துக்களுக்கு உயிரெழுத்தைச் சேர்த்தும் முறையாக அறநெறிகளை 109 பாக்களில்  கூறுகிறார் ஔவை

இதன் மற்ற சிறப்புகள்:
  •   மதம், கடவுள், வழிபாடு பற்றிப் பேசுவது கிடையாது.
  •  எல்லாக் காலம், மொழி, நாடு, மதங்களுக்கும்  இந்த அறிவுரைகள் பொருந்தும்.
  •   ஆண்-பெண்; சிறியவர்-பெரியவர்; ஏழை-பணக்காரர், கற்றவர்-கல்லாதவர் . . . நல்ல நிலையில் இருப்பவர் இல்லாதவர் என அனைவருக்கும் இவை  அவசியம் தேவை.
  •  அனைவரும் மனத்தில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி.
எவை பற்றி எல்லாம் பேசுகிறது இந்நூல்?
தனி மனித ஒழுக்கம்:

அறம் செய விரும்பு  - விரும்பித் தர்மம் செய்ய வேண்டும். எந்தச் செயலையும் விருப்பத்துடன் செய்தால்தான் அதை அடிக்கடி ஈடுபாட்டுடன் செய்ய முடியும்.
அறம் என்ற சொல் ஒழுக்க நெறியையும் குறிக்கும் ஆதலால் அறநெறியில் நிற்க ஒருவன் விரும்பவேண்டும் என்றும் பொருள் உண்டு.
ஆறுவது சினம்:
தணியவேண்டியது கோபம்.
இயல்வது கரவேல்:
உன்னால் முடிந்ததை மறைக்காதே- சொல், செயல், பொருள், திறமை,நேரம்.......உன் பங்களிப்பு தேவை என்பதை உணர்த்துகிறது.
 ஈகை:
ஈவது விலக்கேல்
தானமது விரும்பு
ஐயமிட்டு உண்
 உழைப்பு:
சோம்பித் திரியேல்
மண்பறித் துண்ணேல்
கைவினை கரவேல்
என கைத்தொழிலின் மேன்மையையும் பொருள் தேடலின் இன்றியமை யாமையையும் கூறுகிறது
கல்வி:
எண் எழுத்து இகழேல் - கணக்கையும் மொழியையும் (இலக்கணத்தையும்) கற்க வேண்டும்.
இதையே கொன்றை வேந்தனில் அவ்வை ' எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்என்பார். திருவள்ளுவரோ சற்று நீட்டி முழக்கி '
"எண்  என்ப ஏனைய எழுத்தென்ப இவையிரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்குஎன்பார்.
இளமையில் கல்
ஓதுவது ஒழியேல்
நூல் பல கல்
கேள்வி முயல் - படிக்க முடியாவிட்டாலும் கற்ற பெரியவர் சொல்வதைக் காதுகொடுத்துக் கேள் என்பதாம்.
 தன்னம்பிக்கை:
ஊக்கமது கைவிடேல்
 விவசாயத்தின் அவசியம்:
  பூமி திருத்தி உண்
 
நெற் பயிர் விளை
 நீதி:
ஓரஞ் சொல்லேல் - ஒரு பக்கம் சாயாமல் நடுநிலைமையில் இருக்க வேண்டும்
 வியாபாரம்:
அஃகஞ் சுருக்கேல்- விற்கும் தானியத்தின் அளவைக் குறைத்துக் கொடுக்காதே என்பதாம்.
வீணான ஆடம்பரம் தவிர்:
இடம் பட வீடிடேல்
 சமுதாய ஒழுக்கம்:
ஊருடன் கூடி வாழ்
ஒப்புரவு  ஒழுகு
தேசத்தோடு ஒத்து வாழ்
மற்றவருடன் பேசும் முறை:
வெட்டெனப் பேசேல்
ஔவியம் பேசேல்
பிழைபடச் சொல்லேல்
மிகைபடச் சொல்லேல்
நொய்ய வுரையேல்
வல்லமை பேசேல்
சித்திரம் பேசேல்
சுளிக்கச் சொல்லேல்
நாம் சொல்ல விரும்புவதைத் தடுமாற்றமின்றித் தெளிவாக பிறர்க்குப் புரியும்படிப் பேச வேண்டும் என்பதை ஔவையார்
மொழிவதற மொழி என்கிறார்.
அறநூல்கள் தெரிவிக்கும் அறவழியில் வாழ்ந்து போர் இல்லாத சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் ஒளவையார், ‘போர்த் தொழில் புரியேல்‘  என்று குறிப்பிட்டுள்ளார்.

ஔவையார் சொல்கிறார் – ‘கெடுப்பது ஒழி'
பிறருக்குத் தீமை செய்யும் வழக்கத்தை அடியோடு விட்டுவிடு.
இதன்படி நடந்தால் அன்றாடம் நாம் கேள்விப்படும் வழிப்பறியும் கொள்ளையும்  கொலையும் வன்முறைகளும் நடக்குமா?
உடல் சார்ந் செய்திகளும் இதில் உள்ளன. காட்டாக:
சனி நீராடு
இலவம் பஞ்சில் உறங்கு
வைகறை துயில் எழு
அனந்த லாடேல் ( மிகுதியாகத் தூங்காதே)
மீதூண்  விரும்பேல் - மிகுந்த உணவை விரும்பி உண்ணாதே
நுண்மை நுகரேல் - நொறுக்குத் தீனி உண்ணாதே
கடைசியாகக் குறிப்பிட்ட இரண்டையும் நம் முன்னோர்கள் கடைப்பிடித்ததால்தான் அந்தக் காலத்தில் நிரிழிவு நோய் இல்லை போலும்.
மேலும் நட்பு,,. .  பற்றியெல்லாம் கூறப்பட்டுள்ளன.
ஆத்திசூடியில் வரும் சில சொற்றொடர்களை நாம் இன்றும் பழமொழிகளாகக் கூறிவருகிறோம்
பருவத்தே பயிர் செய்
உத்தமனாய் இரு
செய்வன திருந்தச் செய்
பிற்காலத்தில் பாரதியார் புதிய ஆத்திசூடி எழுதினார். அவரை அடுத்துப் பாரதிதாசனார் இளையோர் ஆத்திசூடி எழுதினார். இவை இண்டும் அந்தந்தக் காலச் சூழ் நிலைக்கேற்ப அவ்வையின்  பாடு பொருளில் இருந்து வேறுபட்டவை.
-London bridge is falling down, falling down
-Ringa ringa roses
போன்ற பொருளற்ற, பாடல்களை நம் மழலைச் செல்வங்கள் சொல்வதைக் கேட்டுப் பூரிக்காத பெற்றோர் இல்லை எனலாம். உண்மைதான். கூடவே நல்லொழுக்கத்தைக் கற்பிக்கும் 'ஆத்திசூடிஎளிய பாடல்களை சிறு வயதிலேயே நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது நம் கடமையாகும். அவர்கள்தான் நாளைய சமுதாயத்தின் தூண்கள். வருங்காலத்  தலைவர்களாகும் அவர்களின் மனம் பிஞ்சிலேயே  பண்படுத்தப்படவேண்டுமே தவிர பிஞ்சிலேயே பழுக்க விட்டுவிடக்கூடாது.முதலில் பெற்றோர்  இத்தகைய நூல்களைக் கற்போம்.நம்பிள்ளைகள்  அவற்றைப் படிக்க ஊக்குவிப்போம்.

மிகவும் புகழ் பெற்ற தமிழ் அறிஞரைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியைக் கூறி முடிக்கிறேன்
"ஆங்கிலம் படித்தால் இங்கே நன்றாக வாழலாம். வட மொழி(சமஸ்க்ரிதம்)படித்தால் அங்கே (மோட்சத்தில் ) நன்றாக வாழலாம் . எது படிக்கிறாய்?" என்று தந்தை மகனிடம் கேட்டாராம். மகனின் பதில் என்ன தெரியுமா?
"எங்கும் நன்றாக வாழத் தாய்மொழி தமிழையே படிக்கிறேன்" என்றாராம்.
நம் தாய்மொழியாம் தமிழ் என்னும் கடலில் மூழ்கி நல் முத்துகளாம் இலக்கியங்களைக் கற்றுத் தெளிவு பெறுவோம்

திருமதி.லூசியா லெபோ

mercredi 31 décembre 2014

எண்ணப் பரிமாற்றம்


அன்புடையீர்,

வணக்கம். "புதியதோர் உலகம் செய்வோம்" என்று பாடத் தூண்டியது, நிச்சயம் இருக்கும் குறைகளை நீக்க வேண்டும் என்ற பேராவல் தான். மனிதன் எத்தனை நிறை அம்சங்களைக் கொண்டிருக்கிறானோ, துரதிஷ்டவசமாக அத்தனை குறைகளையும் தன்னகத்தே அடக்கியுள்ளான். இந்தப் போராட்டம் தனி மனித வாழ்வில் மட்டுமல்ல, சமுதாயத்திலும் தொன்று தொட்டு இருந்தே வருகிறது.

நீதியும், நேர்மையும் அடிபட்டு போவதும், எளியோரை உருக்குலைப்பதும், சுயநலம் தலை விரித்தாடுவதும், வேறு வழியின்றி உண்மை ஊமையாவதும் அன்று முதல் பெறும் அனுபவமே! ஒவ்வொரு காலத்தில் இவை ஒவ்வொரு வடிவத்தில் சவாலாக மனித இனத்துக்கு இருக்கிறது. சர்வாதிகள் நெறி பிறழ்ந்ததிலிருந்து, இன்றைய அரசியல்வாதிகளோ அல்லது பண பலம் கொண்ட முதலாளிகளோ முறை கெடுவது வரை, அதன் தாக்கம் அடி மட்ட சாமானியன் மீது விழுவதைத் தடுக்க இயல்வதில்லை!

இரை தேடி அலைவதொன்றே வாழ்வு என்றிருந்தவன், என்று விளைச்சலும், தன்னிறைவுமாக வாழ ஆரம்பித்தானோ அதுவே அவனது பொற்காலம் என்றாயிற்று! அதில் திருப்தியுறாமல், மேலும், மேலும் சேர்க்க ஆரம்பித்ததன் விளைவுதான் இன்றைய நிலை! பணத்துக்காக எதையும் செய்தும் பூரண அமைதி பரவியபாடில்லை. இல்லாமை பரவிக்கொண்டே போக, குற்றங்களும், நோயும் மலிய, சேர்த்தவனும் அவற்றுக்கு பலியாகவேண்டி உள்ளது.

இந்நிலையை மாற்ற நினைத்த நல்லுள்ளங்கள் உலகம் முழுதிலும் ஒவ்வொரு வழியில் செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.

 இரண்டாம் உலகப் போரில் மீந்து போன வெடிமருந்து உப்பை ரசாயன உரமாக்கி இயற்கையைக் கெடுத்து, தட்ப-வெட்ப நிலை மாறி அவதியுறும் உலகைக் காக்க, வீணே பயன்படாதிருக்கும் நிலத்தில் இயற்கை உர விளைச்சலை (காய்கறிகள், பழங்கள் போன்றவை) மேற்கொள்ளுவதுடன், பலனை எல்லோருக்கும் இலவசமாகப் பகிர்ந்தளிக்கும் முறை எங்கும் பரவி வருகிறது. இதன் மூலம் 'விலை நிர்ணயிப்பு' என்றப் போர்வையில் பணம் திரட்ட வழி மூடிப் போவதுடன், எல்லோருக்கும் சத்துள்ள உணவு கிடைக்கிறது.

பண்ட மாற்று முறையில் தன்னிடம் உள்ளதை, அது தோட்டத்தில் விளைந்ததோ அன்றி சமைத்ததோ தேவைப்படுவோருக்கு அளித்து விட்டு, அவர்களிடம் உள்ளது தனக்குத் தேவை என்றால் அதைப் பெறும் முறை ஒன்று 'புட் ஸ்வாப் நெட்வொர்க்' என்ற பெயரில் நடைபெறுகிறது. உணவு மட்டுமல்லாது, துணிகள், பொருட்கள் எனவும் இதை விரிவுபடுத்துகிறார்கள்.

இதையும் தாண்டி, திறமைகளை இலவசமாகப் பகிர்தலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இயந்திரங்களை பழுது பார்க்கத் தெரிந்தவர்கள், தேவைப்படுவோருக்கு செய்து கொடுத்து விட்டு, அதற்குப் பதிலாக, வீடு கட்டத் தெரிந்தோரின் உதவியைப் பெற்றுக் கொள்ளலாம். எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு உதவி செய்து, அவர்களால் செய்ய முடிந்த தன்  தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். 

இவை அவரவர் தேவையை இலவசமாக நிறைவேற்றிக் கொள்ள மட்டும் உதவவில்லை. பண அரக்கனை ஒழித்துக் கட்டுவதோடு, ஒருவர் திறமையை மதிக்கவும், பரஸ்பரம் நேயம் கொள்ளவும், அதன் மூலம் நல்லிணக்கம் கொள்ளவும் வைக்கிறது. பேதங்கள் மறைய இது ஓர் நல்ல வழி. சாதிச் சண்டை, மத வெறுப்பு போன்ற இதுவரை தீர்க்க இயலாத பிரச்சனைகள் கூட இதன் வழியாக இல்லாது போகும்.

கீதையில் கண்ணன் கூறிய "எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்!" என்ற பாதையை நோக்கி செல்கிறோம் என்பதற்கு இது ஓர் நல்ல எடுத்துக்காட்டு!

உலகை அனைவரும் இன்புறும் ஓர் சொர்க்கமாக மாற்ற இப்பாதை தொடரட்டும். இயற்கை வளங்கொழிக்கும் பூங்காவாய் அது மாறட்டும். இன்று இது கனவுலகோ என்ற ஐயத்தை எழுப்பினாலும், தொடர் முயற்சியால் மனிதனால் ஆகாதது எதுவுமில்லை என்கிற உண்மை நம்பிக்கை அளிக்கட்டும்!

திருமதி சிமோன்

காதல் பரிமாற்றம்




துளையிட்ட உன்(என்)பார்வை என்(உன்)நெஞ்சில் பாசத்

தூதாகி, இதமாகி, பதமான மனதில்

முளைவிட்ட எண்ணங்கள் மூண்டுவர, அன்பு

முகைத்தெழுந்து முந்திவர, முற்றிநின்றக் காதல்

கிளைவிட்டு, நினைவலைகள் குறுகுறுக்கும் உணர்வில்

கிட்டிவரும் உறவின்பால் கிளர்ந்துவிடும் மோகக்

களைகளைந்து, பொங்கிவரும் பெருமழையாய் உன்(என்)னில்

கலந்திடுமோர் துடிப்பினிலே கரைகின்றேன்(றாய்) நானே(நீயே)!

திருமதி சிமோன்

சங்க இலக்கியங்களில் பண்டமாற்று


சங்க காலச் சமுதாயத்தில் நிலப் பிரிவுகளுக்கு ஏற்ற தொழில் முறைகள் மாறு பட்டாலும் ஒரு நிலத்தாருக்கும் மற்றொரு நிலத்தாருக்குமிடையே நெருங்கிய தொடர்பு இருந்தது.  ஒரு நிலத்தில் கிடைக்கும் பொருள்களை ஏனைய நிலத்திற்குக் கொண்டு சென்று பண்டமாற்று முறையில் வணிகம் செய்து வந்தனர். அதனால் பண்டைக்காலத்தில் உணவு, பொருள், மொழி ஆகியவற்றில் பரிமாற்றம் ஏற்பட்டது.  கைத்தொழிலாளர் தாங்கள் உருவாக்கிய சட்டி பானைபாய்கூடைமரப்பெட்டிவிசிறி  முதலான பொருள்களைத் தந்து மாற்றுப் பொருள் வாங்கினர்உடலுழைப்பைத் தந்து அதற்கு ஈடாய் ஏதாவது பொருள் பெற்றனர். அதிக விலையுள்ள பொருள்களை மட்டுமே தேவை கருதி காசு கொடுத்து வாங்கியுள்ளனர்.அன்றைய தமிழகத்தின் பண்டமாற்று முறையினை சங்க இலக்கியங்கள் தெளிவாகப் பதிவு செய்துள்ளன.

ஓர் இடையன் பாலைக் கொடுத்து அதற்கு ஈடாய்த் தானியத்தைப் பெற்றுக்கொண்டதை முதுகூத்தனாரின் குறுந்தொகைச் செய்யுள் விளக்குகிறது.
 பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாடுடை இடைமகன் சென்னிச்  (குறுந்தொகை 221)

தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி
( நற்றிணை - 183)
மருத நிலத்தைச் சேர்ந்த உப்பு வணிகர்கள் தம்முடைய நாட்டின் வெண்ணெல்லைக் கொடுத்து, நெய்தல் நிலப் பகுதியின் உப்பைப் பெற்று வந்து விலை கூறுகின்றனராம். கொள்ளை என்கிற சொல் கொண்டும் கொடுத்தும்  செய்யப்படுகிற வணிகத்தின் அதாவது பண்டமாற்று அடிப்படையில் உருவான சொல்லாகும் என்பதை அறியமுடிகிறது.

பண்டமாற்று முறையில் நடைபெற்ற உள்நாட்டு வணிகத்தில் பெரும்பாலும் பெண்கள் ஈடுபட்டதற்கான குறிப்புகள் அகநானூற்றில் இடம்பெற்றுள்ளன
ஊர்த் தெருக்களில் உப்பு விற்ற உமணப் பெண் நெல்லுக்கு அதை மாற்றியதை அம்மூவனார் காட்சிப்படுத்துகிறார்.இதோ அந்த பாடல்:

கதழ்கோல் உமணர் காதல் மடமகள்
சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி
நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச்
சேரி விலைமாறு கூறலின்.  (அகம்.140-5-8)

'நெல்லின் நேரே வெண்கல் உப்பு ' - நெல்லின் அளவுக்கே உப்பும் விற்கப்பட்டது என்பதனால் உப்பு எவ்வளவு உயர்ந்த பொருளாக மதிக்கப்பட்டது என்பது விளங்கும். சோழர் காலத்திலும் நெல்லின் விலையும் உப்பின் விலையும் அருகருகு இருந்தன என்று கல்வெட்டுக்களில் இருந்து தெரிகிறது.
கீழ் வரும் பாடலும் இதை உறுதிப்படுத்துகிறது எனலாம்.
நெல்லும் உப்பும் நேரே; ஊரீர்!
கொள்ளீ ரோஎனச் சேரிதொறும் நுவலும்
அவ்வாங்கு உந்தி அமைத்தோ ளாய்நின் (அகம் 390)

ஒருத்தி நெல்லை ஏற்காமல் கழற்சிக் காய் அளவிலான முத்துக்களையும் ஆபரணங்களையும் பண்டமாற்றுப் பெறுகிறாள். இதனைப் பாடல் 126 -ஆல் அறியலாம்.
பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள்,
கழங்குறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
பயங்கெழு வைப்பிற் பல்வேல் எவ்வி

யவனர் தம் அழகான வேலைப்பாடு அமைந்த மரக்கலங்களில் பொன்னைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, மிளகை ஏற்றிச் செல்லும் செய்தியை  அகநானூற்றின் 149 -ஆவது பாடல் விவரிக்கிறது.

யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி
(கறி = மிளகு)

வேடர் தேனையும், கிழங்கையும் கொணர்ந்து மதுபானக் கடையில் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக வறுத்த மீன் இறைச்சியையும், மதுவையும் வாங்கி உண்டதையும், உழவர் கரும்பையும் அவலையும் கொண்டுவந்து கொடுத்து, அதற்குப் பதிலாக வறுத்த மான் இறைச்சியையும், மதுவையும் பெற்று மகிழ்ந்ததையும் முடத்தாமக் கண்ணியார் பொருநராற்றுபடையில்  கூறியுள்ளார்.

தேனெய் யடு கிழங்கு மாறியோர்
மீனெய் யடு நறவு மறுகவும் .
தீங் கரும்போ டவல் வகுத்தோர்
மான் குறையடு மது மறுகவும்

கொல்லிமலையில் காந்தள் மிகுந்த காட்டில் உள்ள சிறுகுடி மக்கள் அருவியைச் சார்ந்திருக்கும் நிலத்தில் ஐவன நெல் விதைத்து உழவு தொழில் செய்து வந்தனர். அவர்கள் பசியால் வாடும் நிலை வரின் தம் வசமிருந்த யானைத் தந்தங்களைத் தானியத்திற்கு மாற்றி, சோறு சமைத்து உண்டனர் என்பதை
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பரு இலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
காந்தள் அம் சிலம்பில் சிறுகுடி பசித்தென
கடுங்கண் வேழத்துக் கோடு உண்ணும் (குறுந்தொகை - 100)
கபிலர் பாடலால் அறியமுடிகிறது.

சினம் மிக்க வேட்டை நாய்களையுடைய வேடன், மான் தசை வைக்கப்பட்ட 
ஓலையால் புனைந்த பெட்டியும் இடைச்சியர் குடம் நிறைய தயிரும் கொண்டுவந்து கொடுக்க, ஏரால் உழுதுண்டு வாழும் உழவர்களின் பெரிய இல்லங்களில் வாழும் மகளிர் அவற்றை பெற்றுக்கொண்டு வைக்கோலும் பதறும் களைந்த தூய்மையான நெல்லை மாற்றாக கொடுப்பார்கள் என கோவூர்கிழார் புறநானூற்றில் பாடியுள்ளார் (பாடல் 33)

கான் உரை வாழ்க்கைக் கதநாய், வேடுவன்
மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும், நிறைய,
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப , உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் புன்னாட்டுள்ளும்
                                
சுறாமீன் தாக்கிய புண் ஆறி என் தந்தை மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுவிட்டார். என் தாயும் உப்பை நெல்லுக்கு மாறி வர உப்பங்கழனிக்குச் சென்றுவிட்டாள். எனவே சேர்ப்பன் இந்த நேரத்தில் வந்தால் இனிதாக என்னைப் பெறலாம் என்று தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது – கல்லாடனார் பாடல்(குறுந்தொகை 269)



(பெரும்பாணாற்றுப்படை அடிகள் 164 முதல் 166 வரை .)        
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளா
ளெருமை நல்லான் கருநாகு பெறூஉ

என்பதால் நெய் விற்ற ஆயமகள் பொற்காசுகளை வாங்காமல் கன்றோடு கூடிய பால் எருமைகளை வாங்கிய செய்தியை கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடலால் அறிகிறோம்.
  
ஆயர்களின் ஆட்டு மந்தைக்கு அருமையான உவமையை பெருங்கெளசிகனார் காட்டுகிறார் -மலைபடு கடாம்  (413-414)
பகர்விரவு நெல்லின் பலவரி யன்ன 
தகர்விரவு துருவை வெள்ளையொடு விரைஇ
பண்ட மாற்றுமுறை வணிகத்தில் பலரிடம் தம் பொருளை விற்று அவர்களிடமிர்ந்து பெற்ற பல நிற அரிசிகள் ஒன்றாய்க் கலந்திருந்தால் எப்படி இருக்குமோ அது போன்ற பல நிறமுள்ள ஆடுகளைக் கொண்ட ஆட்டு மந்தையாம்.
இன்னும் பல எடுத்துக்காட்டுகள் கூறிக்கொண்டே போகலாம். நம் தமிழரின் வாழ்க்கைமுறை அக்காலம்தொட்டே சிறப்பாக இருந்ததையே இவை காட்டுகின்றன. 

லூசியா லெபோ