“எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா” என்று இயற்கையை இரசித்து, உறவில் மகிழ்ந்து, பகிர்வில் நிறைவைக் காண வேண்டிய மனிதன் தன்னலம், பொறாமை எண்ணங்களைத் தன்னுள் வளா்த்து மனதில் கனலையும், நினைவில் தீயையும் கொண்ட பிழம்பாக மாறிப்போகிறான்! வன்முறையின் வித்து அங்கே ஊன்றப்படுகிறது. ஆயுதம் ஏந்துவது மட்டுமே வன்முறையல்ல. வாய்மொழியும் ஒரு பார்வையுமே போதும் பிறரைக் காயப்படுத்த! தனிமனித மனம் மாறினால் சமூகமும், உலகமும் மாறும். அதற்கான முதற்படி ஆன்றோர் காட்டிய பாதையை அவ்வப்போது நினைவுறுதலே! ஏனெனில் நமது வாழ்வின் எல்லை எதுவென்று நாமே அறிவதில்லை.
மூப்பென்றும் முடமென்றும்
முற்றிவிட்ட நோயென்றும்
மூளும் தொல்லை
சாப்பிட்ட பத்தியமும்
சாக்காட்டைத் தவிர்ப்பதில்லை
சாவே எல்லை
காப்பாற்ற யாருமில்லை
கடைசிவரை துணையுமில்லை
காணும் உண்மை
கூப்பிட்டுக் கடவுளையே
கேட்டாலும் பதிலில்லை
கூடும் விந்தை!
இராசேசுவரி சிமோன்
france.kambane.magalirani@gmail.com
இன்றைய அறிமுகம் -- அரவிந்தர்
இலக்கியவாதி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர், கட்டுரை ஆசிரியர், இதழாளர், கல்லுாரி பேராசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், பல மொழி அறிந்தவர், ஆன்மீகவாதி என பன்முகம் கொண்ட அரவிந்தர் அக்ராய்ட் கோஷ் கல்கத்தாவில் 1872 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிறந்தார். இங்கிலாந்தில் படித்ததால் இருவேறு கலாச்சாரங்களை அறிந்தவராக இருந்தார். தாய்நாட்டின் மீது கொண்ட பற்றால், கேம்பிரிட்ஜ் இந்தியன் மஜ்லிஸ் என்ற அமைப்பில் சேர்ந்தார் (சுதந்திரம் பெற மிதவாதம் உதவாது என்ற கொள்கை உடையது). இந்தியா திரும்பிய பின் வங்கப்பிரிவினை இந்து முஸ்லிம் பிரிவுக்கு வழி வகுக்கும் என அதை எதிர்த்தார். பிரிட்டிஷ் அரசு அலிப்புர் சிறையில் அடைத்த போது அவர் வாழ்க்கைப்பாதை திசை திரும்பியது.
மனப்பக்குவம் அடைந்த அவர், காணும் அனைத்தும் கண்ணன் உரு என உணர்ந்தார். இந்தியா விடுதலை அடைந்தே தீரும், ‘மனித குல விடுதலைக்கு நீ உழை’ என ஒரு குரல் ஒலிப்பதை கேட்டார். சாதாரண மனிதனை தெய்வமனிதனாக்குவதை இலட்சியமாக்கினார். விரிவானதொரு வேதாந்த இயக்கம் மூலமே புத்தெழுச்சி சாத்தியமாகும் என நம்பினார்.
யோகா மூலம் நமது உடல் உறுப்புகள் ஒன்று சேர்ந்து தெய்வீக உணர்வைக் கொண்டு உயர் நிலைக்கு வரும் என்றார்.
அவரது உயரிய கருத்துகளில் சில---
1. அகங்காரத்தைத் துறந்து வாழ்க்கையில் கடவுளை ஏற்பதே நமது யோகத்தின் போதனை. வேறு துறவு கிடையாது.
2. பக்தி மார்க்கத்தில் அளவு மீறிய உணர்ச்சிவசப்படுதல் அதன் அடிப்படையாகாது. பக்தி வேறு வகையானது. சமதையிலும், ஆத்ம சமர்ப்பணத்திலும் கால் கொண்டது அது.
3.ஆன்ம சமர்ப்பணத்திற்கு எதிர்ப்பு, பொறுமையின்மை கூடாது. இவை ஜீவனில் ஏதோ ஒரு பகுதி தன்னை கடவுளுக்கு அர்ப்பணிக்கவில்லை என்பதைக் காட்டும்.
4. போராட்டங்களிலிருந்து தப்பிச் செல்வதாக நமது வழி இருக்கக்கூடாது. இறைவனை, முழுமுதல்வனை அடையும் வழியாக அது இருக்கட்டும்.
5. இலட்சிய நிலைக்கு குறைந்தவர்களாக இருந்தபோதும் நமது குறிக்கோளுக்கு முழு மனதோடு நம்மைக் கொடுக்க வேண்டும்.
6. வாழ்வைத் துறப்பது வேறு. தனிமனித வாழ்வை தெய்வத்தன்மையடையச் செய்வது வேறு. உலகிலிருந்து முற்றாக நம்மை விலக்குவது தவத்தின் உயர்வான ஆனால் குறுகிய தனித்துறை வளர்ச்சியாகும். இறைவன் தனது முழுமையில் எல்லாவற்றையும் அணைப்பது போல நாமும் எல்லாம் தழுவியவர்கள் ஆக வேண்டும்.
7. இந்த உலகம் என்றும் அழியாத உண்மை சொருபத்தின் (தெய்வம்) வெளிப்பாடு ஆகும். இது சத் (வியாபித்திருத்தல்), சித் (சக்தி), ஆனந்தம் (அழியாத இன்பம்) என்ற மூன்றையும் கொண்டது. நம் ஆன்ம உண்மை நிலையினை முதலில் அறிய வேண்டும். இறைவனை நோக்கி ஆன்மீக மாற்றத்தை உண்டாக்க வேண்டும். இந்நிலையில் மனம் பரந்து, விரிவடைந்து எதையும் உணரக்கூடிய ஆற்றலைப் பெறுவோம். இவ்வாற்றல் தெய்வீகத் தன்மைக்கு இட்டுச்செல்லும்.
அரவிந்தருடைய படைப்புகளில் தலையானவை---
1. தெய்வீக வாழ்க்கை-தெய்வீக ஊற்றில் பிறந்த மனித வாழ்க்கை, அறியாமையில் நுழைந்து வேறுபட்ட மன உணர்வுகளைப் பெற்று மீண்டும் தெய்வ நிலைக்கு வரமுடியும் என்பதைக் காட்டும் வழிநுால்.
2. சாவித்திரி--சத்யவான் என்னும் தெய்வீக உண்மையைக் கொண்ட ஆத்மா அறியாமை என்னும் மரணத்தில் தள்ளப்பட்டபோது சாவித்திரி என்ற தெய்வீகம் மீண்டும் காத்ததை விளக்கும்.
அரவிந்தர் என்ற உயரிய ஆன்மா 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உடலை விட்டு விண்ணுலகு எய்தியது.
1972 இல் அவரது நுாற்றாண்டை கௌரவிக்கும் வகையில் இந்தியா தபால்தலை ஒன்றை வெளியிட்டது. அவர் புதுச்சேரி வந்து 100 ஆண்டுகள் நிறைவதை (ஏப்ரல் 4 ஆம் தேதி) சிறப்புத் தபால்தலை வெளியிட்டு சிறப்பிக்க உள்ளது.
பாரீஸில் பிறந்த அன்னை தன் தியானத்தில் கண்ட “கிருஷ்ண’ னைத் தேடி புதுவை வந்து அரவிந்தரைக் கண்டு, அவருடனேயே தங்கியிருந்து 1973 இல் சமாதியடைந்தார்.
1926இல் அரவிந்தர் ஆசிரமத்தைத் தொடங்கினார். 1968 இல் ஆரோவில் நகர் உலக சமாதானத்திற்காக தொடங்கப்பட்டது.
-- தணிகா சமரசம்
Aucun commentaire:
Enregistrer un commentaire