பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 11 septembre 2011

சங்க இலக்கியங்கள்

சங்க இலக்கியங்கள்


தமிழ் என்ற சொல்லை விரைவாகச் சொல்லிப்பாருங்கள், நம் வாயில் ஊறுவது அமிழ்து தான். உச்சரிக்கும் பொழுதே இன்பத்தைத் தரவல்லது நம் தாய் மொழியாம் தமிழ். இம்மொழிக்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அவற்றுள் முக்கியமானது அதில் காணக்கிடக்கும் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் எனும் தொகுப்பில் உள்ள நூல்களைப்பற்றித் தெரிந்துக்கொள்ள என் தோழிகள் சிலர் விருப்பப்பட்டதால் அவை பற்றிய பருந்துப் பார்வை இதோ.

தமிழ் இலக்கிய வரலாற்றில் பொற்காலமாகத் திகழ்வது சங்ககாலமாகும். தமிழ் மக்களின் பண்பாட்டுச் சிறப்புகளையும் நாகரிக முறையினையும் அரசியல் அமைப்பினையும் உலகிற்கு உணர்த்துபவை அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள். இவற்றில் பகுத்தறிவுக்குப் புறம்பான கற்பனையினைக் காண இயலாது. உள்ளதை உள்ளவாறு இயற்கையின் பின்னணியில் கூறுபவை. இந்நூல்களின் காலம் கி.மு.500 முதல் கி.பி.100 வரையில் என்று கூறுவர். சங்க நூல்களை அகம், புறம் என இரு வகைகளாகப் பகுத்திருந்தனர். இத்தகைய பகுப்புமுறைமை வேறு எந்த மொழியிலேயும் இல்லை என்றே சொல்லலாம். அகத்தில் காதலையும் புறத்தில் வீரத்தையும் சிறப்பித்துக் கூறியுள்ளனர்.சங்கப் புலவர்களில் பெரும்பாலோர் அகத்தையே சிறப்பித்துப் பாடியுள்ளனர்.

சங்க இலக்கிய நூல்களை மேற்கணக்கு கீழக்கணக்கு என்று இருவகைப் படுத்திக் கூறுவர். எட்டுத் தொகையில் உள்ள எட்டு நூல்களும் பத்துப்பாட்டில் உள்ள பத்து நூல்களும் மேற்கணக்கு நூல்களாகும்.

எட்டுத்தொகை:

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறமென
இத்திறத்த எட்டுத்தொகை

என்ற பழம் பாடலால் எட்டுத்தொகை நூல்கள் இவையிவை என அறியலாம்.

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்னும் ஐந்தும் அகம்பற்றி இயம்புவனவாகும். பதிற்றுப்பத்து, புறநானூறு புறம்பற்றிக் கூறுவனவாகும். பரிபாடல் மட்டும் அகம்புறம் இரண்டையும் கூறும் வகையில் உள்ளது.

நற்றிணை: 9 அடிமுதல் 12 வரையுள்ள நானூறு பாடல்களைக் கொண்டது. 175 புலவர்களால் பாடப்பெற்றது. பன்னாடு தந்த மாறன் வழுதியால் தொகுப்பிக்கப் பெற்றது.

குறுந்தொகை: நான்கடி முதல் எட்டடி வரையுள்ள நானூறு பாடல்களைக் கொண்டது. இந்நூலைத் தொகுப்பித்தவர் பூரிக்கோ ஆவார். தமிழ் மக்களின் அன்புவாழ்வு, அரசியல், ஊர்கள், நகரங்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை இந்நூல் நமக்கு உணர்த்துகின்றது.

'செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே'

நாம் அனைவரும் அறிந்த இவ்வரிகள் தலைவன், தலைவியின் ஒத்த உள்ளத்தைக் காட்டும் குறுந்தொகைப் பாடலாகும்.

ஐங்குறுநூறு: குறிஞ்சி, முல்லை ,மருதம்,நெய்தல், பாலை, என்னும் ஐந்து திணைகள் பற்றியும் திணைக்கு நூறு பாடல்களாக ஐந்நூறு பாடல்களைக் கொண்டது இந்நூல். இது மூன்று அடி முதல் ஆறு அடி வரையுள்ள பாடல்களைக் கொண்டது. ஐந்து திணைக்குரிய பாடல்களை ஐந்து வேறுபட்ட புலவர்கள் பாடியுள்ளனர்.

தமிழ் மக்களின் இல்லற வாழ்வின் சிறப்பு, ஊர்கள், நகரங்கள், விழாக்கள், போன்றவை இதன்கண் குறிக்கப்பட்டுள்ளன .

பதிற்றுப் பத்து: சங்ககாலச் சேர அரசர்கள் பதின்மரையும் அவர்களுடன் தொடர்பு கொண்ட பேரரசர், சிற்றரசர் பற்றியும் கூறுவது. முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. இரண்டாம் பத்து இமயவரம்பன் நெடுஞ்செரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பாடியதாகும். எஞ்சிய ஏழு பத்துக்களும் ஒவ்வொரு சேரமன்னரைப் பற்றி வெவ்வேறு புலவர்களால் பாடப் பெற்றதாகும். தமிழ் நாட்டு நகரங்கள், போர்முறை, சமூக வாழ்வியல் ஆகியன பற்றிக் கூறும் சிறந்த வரலாற்று நூலாகவும் இது விளங்குகின்றது.

பரிபாடல்: பரிபாடல் என்னும் பாடல் வகையால் தொகுக்கப்பெற்றமையால் இப்பெயர் பெற்றது. பழங்காலத்தில் 70 பாடல்களைக் கொண்டு திகழ்ந்த இந்நூல் இன்று 22 பாடல்களையேக் கொண்டுள்ளது. மதுரை, திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலை மலை, வையை இவற்றின் சிறப்பு நிலையும் மலைவிளையாட்டு, புனல்விளையாட்டு போன்ற இன்ப ஆடல்கள், அக்கால மக்களின் ஆடையணி, இறை வழிபாடு போன்றவையும் இதற்கண் விளக்கப்பட்டுள்ளன.

கலித்தொகை: கலிப்பாவினால் ஐந்திணைகளைப் பற்றி ஒரே புலவராலோ அல்லது ஐவராலோ பாடப்பட்டது என்பர். இது 150 பாடல்களைக் கொண்டது.

அகநானூறு: இது நெடுந்தொகை எனவும் வழங்கப்பெறும். இது 13 முதல் 31 அடிவரை உள்ள பாடல்களைக் கொண்டது. இதனைத் தொகுத்தவர் உருத்திரசன்மர். தொகுப்பித்தவன் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி. பாலைத் திணையைப் பற்றி 200 பாடல்களும் பிற நான்கு திணைகளைப் பற்றி 200 பாடல்களும் உள்ளன.

புறநானூறு: புறத்திணைப் பற்றி 400 பாடல்களைக் கொண்டது. இவை 160 புலவர்களால் பாடப்பெற்றவை.தமிழ் மக்கள்தம் மொழி, ஒழுக்கம், கலை, பண்பாடு, அரசாட்சி, நாகரிகம் இவற்றை விளக்கும் கருவுலமாக இது விளங்குகிறது. நட்பிற்கு இலக்கணமாய் விளங்கிய அவ்வை- அதிகமான், கபிலர்- பாரி, கோப்பெரும் சோழன்- பிசிராந்தையார் போன்றோரது நட்பின் பெருமையை இந்நூலின் வாயிலாக அறிகிறோம்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்'
'அறநெறி முதற்றே அரசின் கொற்றம் '
'செல்வத்துப் பயனே ஈதல்'
'அல்லது செய்தல் ஓம்புமின்'

என்ற புறநானூற்று பாடல் வரிகளால் அக்கால தமிழ் மக்களின் பரந்த நோக்கினையும்  அவர்களது தூய வாழ்வினையும் அறிய முடிகிறது.

பத்துப்பாட்டு: இதிலுள்ள ஐந்து நூல்கள் ஆற்றுப்படை எனும் இலக்கிய வகையினைச் சேர்ந்தனவாகும். 'யாம்பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ' என்பதே ஆற்றுப்படையின் இலக்கணமாகும் .

திருமுருகாற்றுப்படை:முருகன் அருள்பெற்ற ஒருவன் அவ்வருளைப் பெறவிரும்பும் ஒருவனுக்கு முருகப் பெருமானின் அருள் உள்ளத்தை எடுத்தியம்பி அவனை அப்பெருமானிடம் ஆற்றுப்படுத்தும் முறையில் அமைந்துள்ளது இந்நூல். முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் அவன் எழுந்தருளி அருள் வழங்கும் வகையினை அழகாகப் புனைந்துரைக்கிறார் நக்கீரர் .

பொருநராற்றுப்படை: கரிகால் பெருவளத்தானிடம் பரிசில் பெற்ற ஒருவன் அம்மன்னனின் அரிய கொடைப் பண்புகளையும் இரவலரைப் போற்றும் பான்மையினையும் எடுத்துரைத்து அவனிடம் சென்றால் பெரும் பொருள் பெறுவாய் என்று தன் எதிர்ப்பட்ட ஒருவனை ஆற்றுப்படுத்தும் முறையில் இது அமைந்துள்ளது. முடத்தாமக் கண்ணியாரால் பாடப்பெற்றது இந்நூல்.

சிறுபாணாற்றுப்படை: ஓய்மா நாட்டு நல்லியக் கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட இந்நூலின் ஆசிரியர் நல்லூர் நத்தத்தனார் ஆவார். இந்நூலில் விரலி பற்றிய வருணனை, மூவேந்தர் தலைநகரங்கள், வள்ளல் எழுவர்தம் கொடைச் சிறப்பு, ஐவகை நில மக்களின் வாழ்வியல்முறை ஆகியவை திறம்பட விளக்கப்பட்டுள்ளன.

பெரும்பாணாற்றுப்படை:இது கடியலூர் உருத்திரங் கண்ணனாரால் பாடப்பெற்றது.இதன் பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன் என்பவனாவான்.இவனின் கொடைத் தன்மையை எடுத்துக்கூறி எதிர்வரும் பாணனிடம் "நீயும் அவனிடம் சென்றால் உன் வறுமை உடனே நீங்கப்பெறுவை"   என்று ஆற்றுப்படுத்துவதே இந்நூல்.

மலைபடுகடாம்: இது கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்பெறும். நன்னன்சேய் நன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. இதனை இயற்றியவர் பெருங்குன்றுர்ப் பெருங்கவுசிகனார் என்பவராவார்.

முல்லைப் பாட்டு: இதில் 103 அடிகளே உள்ளன. இதை இயற்றியவர் நப்பூதனார் என்னும் புலவராவார். கார்காலத்தின் தொடக்கத்தில் வருவதாகச் சொல்லிப் பிரிந்த தலைவன் வரும் வரைக்கும் ஆற்றியிருக்கும் தலைவியின் இயல்பு இதில் கூறப்பட்டுள்ளது.

மதுரைக் காஞ்சி: பத்துப் பாட்டில் பெரியது இந்நூல். காஞ்சி என்பது நிலையாமையைப் பற்றிக் கூறுவதாகும். மதுரையிலுள்ள அரசனுக்கு நிலையாமையைக் கூறும் முறையில் அமைந்தமையால் இப்பெயரினைப் பெற்றது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பலவகைப் பட்ட நிலையாமைக் கருத்துக்களை இதன்கண் கூறியுள்ளார் மாங்குடி மருதனார்.

நெடுநல்வாடை: தலைவனைப் பிரிந்துவாடும் தலைவியின் நிலை, அவளது கற்பு நிலை, தலைவனின் கடமை உணர்வு பற்றி இது கூறுகிறது.

குறிஞ்சிப்பாட்டு: ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தும் பொருட்டுக் கபிலரால் பாடப்பெற்றது இந்நூல்.

பட்டினப்பாலை: கரிகால் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்:

இவைத் தோன்றிய காலம் சங்க மருவிய காலம் எனப்படும். இந்நூல்கள் நீதியை அறிவுறுத்தும் முறையில் உள்ளன. இந்நூல்கள் பெரும்பாலும் சுருங்கிய அடிகளைக் கொண்டவை. திருக்குறள் தவிர மற்றவை காலத்தால் பிற்பட்டவை. 11 நூல்கள் நீதி நூல்களாக உள்ளன. அகம் பற்றிக் கூறுவன ஆறு. களவழி நாற்பது மட்டும் போர் நிகழ்ச்சி பற்றிக் கூறுகிறது.

நாலடியார்:  நான்கு அடிகள் கொண்ட வெண்பாவால் ஆனது.இந்நூல் சமண முனிவர்களால் எழுதப்பட்டது.

நான்மணிக்கடிகை: விளம்பி நாகனார் என்பவரால் எழுதப்பட்ட இந்நூல் 100 பாடல்கள் கொண்ட நீதிநூல் .

இன்னா நாற்பது : இவையிவை துன்பம் தருவன என்பதை ஒவ்வொரு பாடலும் கூறுவதால் இப்பெயர் பெற்றது. இதை இயற்றியவர் கபிலதேவ நாயனார்.

இனியவை நாற்பது: இனிய கருத்துக்கள் அடங்கிய நாற்பது பாடல்களைக் கொண்டது. இதன் ஆசிரியர் பூதஞ்சேந்தனார் என்பவராவார்.

திருக்குறள்: 133 அதிகரங்களையும் 1330 குறள் பாக்களையும் கொண்ட இந்நூல் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்ட இந்நூல் மக்கள் வாழ்க்கையில் அறிந்துகொள்ளத் தக்க அனைத்து உண்மைகளையும் உரைப்பதாக உள்ளது. இந்நூல் உலகின் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.

திரிகடிகம்: சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று மருந்துகளும் மக்கள் நோயைப் போக்கி உடலுக்கு நலம் விளைப்பது போல இந்நூற் கருத்துக்கள் அறியாமையைப் போக்கி இம்மை, மறுமை, இன்பம் பயக்க வல்லனவாகும். இதன் ஆசிரியர் நல்லாதனார் ஆவார்.

ஆசாரக் கோவை: இதன் ஆசிரியர் கயத்தூர் பெருவாயில் முள்ளியார். இந்நூலின் பாடல்கள் இன்னவை செயற்பாலவை என்றும் இன்னவை விலக்கற்பாலவை என்றும் கூறுகின்றன.

பழமொழி நானூறு: நானூறு வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் முன்றுறையரையனார். ஒவ்வொரு செய்யுள்ளின் இறுதியிலும் அது கூறும் நீதிக்கேற்பப் பழமொழி ஒன்று உள்ளது.

சிறுபஞ்ச மூலம் : காரியாசான் என்பவர் இதன் ஆசிரியர். சிறுபஞ்சம் -கண்டங் கத்திரி, சிறுவழுதுணை , சிறுமல்லி,பெருமல்லி, நெருஞ்சி - இவை நோயை போக்குவது போல இந்த அறநூல் மக்களை நன்னெறிபடுத்துகிறது.

முதுமொழிக் காஞ்சி: 100 பாக்கள் உள்ளன. நிலையாமையை உணர்த்தும் அனுபவங்களைக்கூறும் இது பத்துப் பத்துப் பாடல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.இதனை இயற்றியவர் கூடலூர் கிழார்.

ஏலாதி: ஒவ்வொரு பாடலும் ஆறு பொருள் பற்றிக் கூறுகிறது. இக்கருத்துக்கள் உயிருக்கு உறுதி பயப்பனவாகும். இதன் ஆசிரியர் கணிமேதாவியார்.

கார் நாற்பது: கார்காலத்தின் சிறப்புகளைக் குறிப்பிடும் 40 பாடல்களைக் கொண்டது. இதை இயற்றியவர் மதுரைக் கண்ணங் கூத்தனார்.

ஐந்திணை ஐம்பது: மாறன் பொறையன் என்பவரால் இயற்றப்பட்ட இந்நூல் ஐந்திணைகளைப் பற்றியது. திணைக்கு பத்துப் பாடல்களைக் கொண்டது.

ஐந்திணை எழுபது: திணைக்கு 14 பாடல்கள் வீதம் 70 பாடல்களைக் கொண்டது.மூவாதியார் இதன் ஆசிரியர்.

திணைமொழி ஐம்பது: இதன் ஆசிரியர் கண்ணன் சேந்தனார்.ஐந்திணைகளைப் பற்றி, திணைக்கு பத்துப் பாடல்களாக ஐம்பது வெண்பாக்களைக் கொண்டது.

திணைமாலை நூற்றைம்பது : திணைக்கு முப்பது பாடல்களாக 150பாடல்களைக் கொண்டது. இதனை இயற்றியவர் கணிமேதாவியார்.

கைந்நிலை: ஐந்திணை ஒழுக்கம் பற்றிய அறுபது வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். இதன் ஆசிரியர் புல்லங்காடனார்.

களவழி நாற்பது: போர்க்களம் பற்றிய நாற்பது பாடல்களைக் கொண்டது. சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் சோழன் செங்கணானுக்கும் நடைபெற்ற போரில் சிறைப்பட்ட சேரமன்னனை விடுவிக்கக் கருதிப் பொய்கையார் பாடியது. கழுமலம் என்ற இடத்தில் நடைபெற்ற போரினை அழகிய உவமைகளால் விளக்கியுள்ளார் புலவர்.

ஐம்பெருங் காப்பியங்கள் :

பழநதமிழில் பல காவியங்கள் இருந்திருக்கக் கூடும். ஆனால் நமக்குக் கிடைத்தவை ஐந்து மட்டுமே. அவை :சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி. இவை சங்க காலத்தை ஒட்டியும் அதன் பின்னரும் தோன்றி இருக்கலாம் என்பது தமிழ் அறிஞர் கருத்து.


தொகுப்பு:  திருமதி லூசியா லெபோ.