பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

jeudi 27 février 2014

எண்ணப் பரிமாற்றம்


அன்புடையீர்,
 வணக்கம். வளர்ச்சியும்  கால மாற்றமும் மனித வாழ்வில் இன்றியமையாதன. மிருகங்களுக்கொப்ப வாழ்ந்தவன் தன் அறிவால் இன்றைய நிலையை அடைந்திருக்கிறான். தன் உணவுக்காகவும், உடை-இருப்பிடத்திற்காகவும் அவன் கண்ட பரிணாமம் அளவிடற்பாலது.

அன்று அவன் நெருப்பைத் தன் வசமாக்கி உணவை வேக வைத்தது இன்றுள்ள எந்தச் சாதனைக்கும் இளைத்ததல்ல. சக்கரத்தை உருவாக்கி இடம் விட்டு இடம் செல்லப் பயணித்ததே இன்று நாம் விண்வெளியில் பயணிப்பதன் மூலம். எழுத்து, நூல்  என விரிந்த அவனது அறிவே இன்றைய கணினி.

பல தொழில்களின் ஆதாரமாக, கருவிகள் அதன் நுட்பம் எனப் பெருகியக் கண்டுபிடிப்புகள் உலகெங்கும் அவையன்றி வாழ்வில்லை என்ற நிலையை உருவாக்கி விட்டன. உலகம் சுருங்கி விட்டது. கடிதமெழுதிவிட்டு வாரக்கணக்கில் பதிலுக்காக ஏங்கும் காத்திருப்பில்லை. ஐயம் தீர்க்க , அலைந்து திரிந்து விளக்கம் தேடும் தொல்லையில்லை. பொழுதைப் போக்க வெளியே சென்று பணத்தை விரயமாக்கும் வேலையில்லை. ஒரே அறையில் இருந்து கொண்டு, இன்னும் சொல்லப் போனால் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு  தொலைபேசி வழியே மணிக்கணக்கில் அளவளாவலாம். தேவையான, வேண்டிய எல்லாச் செய்திகளையும் அறியலாம். நடனம், நாடகம் முதல் எல்லாவற்றையும் வீட்டிற்கே வரவழைக்கலாம்.

இந்த ஆக்கங்கள் மட்டுமே வளர்ந்திருந்தால்  மகிழ்வு கோலோச்சி இருக்கும். அமைதி நிலவி இருக்கும். ஆனால் ஆக்கலுக்கு பயன்படுத்திய தொழில் நுட்பத்தை அழிவுக்கும் பயனாக்கும் மனித இழி குணம் பொருளாதார வளர்ச்சியின்  பக்க விளைவாக இயற்கைச் சுரண்டலையும், மாசு நிலவும் சூழலையும், வறண்ட மனதையும், வன்முறை கலாச்சாரத்தையும் கூடவே உருவாக்கி விட்டது. எந்த வசதியும் இல்லாதக் காலத்தில் கொண்ட நிம்மதி இன்று பறி போய் விட்டது.

வளரும் விஞ்ஞானம் கத்தி போன்று கூர்மை  படைத்தது. அது அழுகிய ஒன்றை வெட்டி எறிந்து சமுதாயத்தைத் தூ ய்மையாக்கலாம். விரும்பும் வகையில் ஒன்றை உருவாக்க உதவலாம். ஆனால் அதே வேளையில் ஆளைக் கொல்லவும் செய்யலாம். அதை உபயோகிக்கும் விதத்தில் தான் உண்மையான வளர்ச்சி  அடங்கியுள்ளது. அந்த உண்மை வளர்ச்சியை அடைய மனம் உயர வேண்டும். மனிதாபிமானம் வளர வேண்டும். பகைமை மறைய வேண்டும். பண்பு செழிக்க வேண்டும்.

திருமதி சிமோன்

Aucun commentaire:

Enregistrer un commentaire