பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 16 janvier 2010

பெண்மையின் பரிமாணங்கள்

அம்மா

கன்னல் மொழியில் கனிந்த இசையும்
மின்னல் ஒளியில் மிதமாய் நிறையும்!
அம்மா என்னும் அமுத மழையே
இம்மா நிலத்தே இதமாய்ப் பொழியும்!
என்னைத் தந்து என்னில் இணைந்தாள்
மின்னும் கண்ணில் மீண்டும் அவளே!
பாசம் என்னும் பாலைப் புகட்டி
நேசம் கொள்ள நேரிய வழியில்
கலையில் விஞ்சக் கற்பில் மிஞ்ச
நிலையாய் மகளை நித்தம் பழக்கி
மாட்சி பெற்று மாண்பு உயர
வேட்கை கொண்டாள், வெற்றியும் கண்டாள்!
பரிவு காட்டிய பாசத் தாயின்
அறிவு சார்ந்த ஆளுமை பெற்றேன்!
அன்பு அளித்த ஆற்றல் கண்டேன்!
பண்பால் விளைந்த பணிவும் கொண்டேன்!
பற்றி இருந்த பந்தம் மறைந்து
சுற்றி நின்ற சுகமும் இழந்த
என்னைக் காக்கும் எனக்குள் உறையும்
அன்னை தந்த அழகுத் தமிழே!

-- இராசேசுவரி சிமோன்

கவி நூறு

உண்ணாமல் உறங்காமல் உறவாடும் பெண்ணாள் - நல்
உயிராகி உடலாகி ஒளியாகி நின்றாள்!
கண்ணாலே கதைபேசிக் களிப்பூட்ட வந்தாள் - எழில்
கலைஞான வடிவாகிக் கவிநுாறு தந்தாள்!


மண்ணாசை பொன்னாசை தன்னாலே ஓடும் - உயர்
மதுவாகும் அவளாசை என்முன்னே ஆடும்!
பண்பாலும் அன்பாலும் பாசத்தால் தேடும் - அவள்
பணிவொன்றே என்னெஞ்சில் தாலாட்டுப் பாடும்!

எண்ணாத எண்ணங்கள் என்மனதைத் தாக்கும் - செவ்
இதழொன்றே மருந்தாகி இனிதாகக் காக்கும்!
விண்ணோடு விளையாடும் மதியின்பம் தேக்கும் - வேல்
விழியாளின் பார்வையிலே அதுகூடத் தோற்கும்!

பண்பாடும் குரலோசை குயிலோசை மிஞ்சும் - அப்
பாவையவள் இராகத்தில் குழலோசை கெஞ்சும்!
மண்மீதில் எனையாளும் வளையோசை கொஞ்சும் - அவள்
மலர்வாயின் முத்தங்கள் தீஞ்சுவையை விஞ்சும்!

--
கவிஞர் கி. பாரதிதாசன்
பிள்ளைக் கனிதென்னன் தமிழே! தேனின் சுவையே!
பொன்னின் ஒளியே! பூவின் மணமே!
கண்ணின் மணியே! கனியின் அமுதே!
வண்ணச் சுடரே! வளரும் புகழே!
குழலும் யாழும் குயிலே உன்தன்
மழலைக் கீடாய் மயக்கம் தருமோ?
சின்னக் கிளியாய்ச் சிரிக்கும் அழகே!
உன்னைத் தீண்டி உச்சி முகர்ந்தால்
உள்ளம் சிலிர்க்கும்! உயிரும் தழைக்கும்!
வெள்ளம் போல பெருகு மின்பமே!

--
சரோசா தேவராசு

இலக்கியத்தில் பெண்கள்தீங்கனி பெற்ற தீந்தமிழ் ஔவையார்,
மாங்கனி உற்ற மதிப்புறு அம்மையார்,
நாண்மலர் சூட்டிய நங்கை கோதையார்,
தாண்மலர் பணிந்த தண்ணிசை ஞானியார்,
அங்கவை சங்கவை ஆதி மந்தியார்,
மங்கையர்க் கரசியார், மகிழ்நச் செள்ளையார்,
வெண்ணிக் குயத்தியார், வெள்ளி வீதியார்
இன்ன பலரும் இருந்தார் அந்நாள்.
அன்றுபோல் இன்றும் ஆன்ற அறிவால்
என்றும் சிறந்தே ஏற்றம் பெறுவர்!
இயல்தொறும் பயிலும் இன்னிய லாரே
இயற்றும் செயல்களில் இயல்பாய்ச் சிறப்பர்!
இலக்கியம் இயம்பும் இன்னெறி ஒழுக்கம்!
இலட்சிய வாழ்வில் இன்பம் நிலைக்கும்!
பெண்மையே என்றும் பெருமை சேர்க்கும்!
கண்ணெனப் போற்றிக் காப்பது கடனே!

--
தேவராசு