பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 16 janvier 2010

இன்றைய அறிமுகம் -- அன்னை தெரெசா


பல்லாயிரக்கணக்கான புகலிடமில்லாதோரைத் தாயினும் பரிவு காட்டி, அரவணைக்கும் அன்புள்ளம் ஒன்று 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி, தற்போதைய மாசிடோனிய குடியரசில் ஓர் எளிய குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாக ஆக்னஸ் கோன்ஸா போஜாஸியு என்ற பெயரில் அவதரித்தது.

தன் 18ஆம் வயதில் லொரேட்டோ சகோதரிகளின் சபையில் இணைந்து துறவை ஏற்ற ஆக்னஸ், இந்திய மண்ணில் ஏழைகளுக்கு இறைப்பணி ஆற்ற விரும்பி பாடம் கற்பிக்க ஆங்கில மொழியைக் கற்றார். 1929ஆம் ஆண்டு டார்ஜிலிங்கில் கன்னியர் மட பயிற்சியை ஆரம்பித்து, 24மே 1931இல் மத பிரமாணம் எடுக்கும் வேளையில் தெரேசா என்னும் பெயரைப் பூண்டார். 10செப்டம்பர் 1946இல், ஒரு இரயில் பயணத்தின் போது, ‘‘சேரிகளுக்குச் செல் - சேவைகளைச் செய்’’ என்ற இறைவனின் குரல் இதயத்தைத் தட்டுவதை உணர்ந்தார்.

அவ்வேளையில், இந்தியாவுக்கு இணையற்ற இலக்கியவாதிகளையும் , அறிஞர்களையும் அளித்த வங்க நிலம் ஏழைகள், அகதிகள், ஊனமுற்றோர், தொழுநோயாளிகள் என அநாதைகளின் இருப்பிடமாக இருந்தது. நெருக்கடியால் தெருவோரங்களிலும், இரயில் நிலையங்களிலும், தரிசு நிலங்களிலும் மக்கள் அவதியுற்றனர். நோய் பரவி, ஆங்காங்கே பிணங்கள் கேட்பாரின்றிக் கிடந்தன.

17ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய லொரேட்டோ மடத்தை விட்டு, போப் ஆண்டவரின் பிரத்தியேக அனுமதியின் பேரில் வெளியேறி, கல்கத்தாவின் மிக ஏழ்மையான மோட்டிஜில் சேரிக்கு மனம் நிறைந்த அன்புடனும், கையில் வெறும் ஐந்து ரூபாயுடனும் சென்றார். பல தரப்பட்ட அவமதிப்புகளினூடே தன் சேவையைத் தொடங்கித் தொடர்ந்தார்.

1950ஆம் ஆண்டு மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி என்ற அமைப்பைத் தோற்றுவித்து, தோட்டியா என்ற தாழ்த்தப்பட்ட இனத்தவர் அணியும் ஆடையை, அதற்கு அங்கீகரிக்கப்பட்ட உடையாக்கினார். 45வருடங்களுக்கு மேல் தொண்டாற்றிய அவர் முதலில் இந்தியாவின் பல இடங்களிலும், பின்னர் சர்வதேச அளவிலும் இத்தூய பணியை விரிவாக்கினார். 1952இல் ‘‘நிர்மல் இருதய்’’ என்ற இல்லத்தைத் திறந்தார். உயிர் பிரியும் தருணம் வரை கனிவுடனும், அன்புடனும் பராமரிக்கும் கருணை இல்லமாக அது செயல்பட்டது. இறைவனின் சாயலான மனிதனிடம் ஏசுவைக் கண்ட அன்னை தெரேசாவால் எந்தவொரு நோயாளியையும் அனாதையாக விட்டுவிட இயலவில்லை. பின்னர் 1957இல் தொழுநோயாளிகளுக்கான இல்லத்தைத் தொடங்கினார்.

தனது பணிக்கு விளம்பரம் தேடாத அன்னை தெரேசாவுக்குக் குடியுரிமையும், பத்மஸ்ரீ விருதையும் 1962ஆம் ஆண்டில் வழங்கி இந்தியா அவரைக் கௌரவித்தது. 1972இல் ‘‘பன்னாட்டு புரிந்துணர்வுக்கான ஜவகர்லால் விருது’’, 1980இல் இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதான ‘‘பாரத ரத்னா’’ வழங்கப்பட்டன. சமாதானத்தின் அச்சுறுத்தல்களாக விளங்கும் ஏழ்மையையும், துயரத்தையும் வீழ்த்தும் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக, 1979ஆம் ஆண்டில், ‘‘சமாதானத்துக்கான நோபல் பரிசு’’ பெற்றார். நோபல் பரிசு பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் பாரம்பரிய விழா விருந்தை மறுத்த அவர், அதற்காகும் நிதியை இந்தியாவின் ஏழைகளுக்குக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் ‘‘சுதந்தரத்துக்கான அதிபரின் பதக்கத்தை’’ 1985ஆம் ஆண்டு, வெள்ளை மாளிகையில் அன்னைக்கு வழங்கி கௌரவித்தார்.

தெற்காசிய மற்றும் கிழக்காசிய சேவைகளுக்காக, 1962இல், பன்னாட்டுப் புரிந்துணர்தலுக்கான பிலிப்பைன்சின் ‘‘ரமோன் மேக்சேசே’’ விருதைப் பெற்றார்.

அவரது அதிகாரபூர்வமான வாழ்க்கை சரித்திரம், இந்திய ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு, 1992இல் வெளியிடப்பட்டது.

அன்னையின் சொத்தெல்லாம் மூன்று வெள்ளைச் சேலைகளும், ஒரு சிலுவையும், ஒரு ஜெபமாலையுமே. ஆனால், விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர்  அமுத சுரபியாக அள்ளியள்ளி வழங்கினார். அன்பென்ற மழையில், இந்த அகிலத்தை நனைய வைத்த அந்த உன்னத அன்னையின் உயிர் மூச்சு 1997ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள், அவரது 87வது வயதில், நின்ற போது எதற்கும் கலங்காத கண்களும் கசிந்தன.

உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை 19அக்டோபர் 2003இல், அன்னை தெரேசாவிற்கு ‘‘ஆசீர்வதிக்கப்பட்டவர்’’ என்ற பட்டம் அளித்து

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்


என்ற வள்ளுவர் வாக்கை உறுதிப்படுத்தியது.

-- லூசியா லெபோ