பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 15 août 2010

பெண்களே பெண்களுக்கு

பெண் விடுதலை வேண்டும் என்று என்றோ பாரதி கண்ட கனவு  இன்று நனவாகி உள்ளதை நாம் அறிவோம்.  நம் முன்னோர்களில் பலர் எத்தனையோ போராட்டங்களுக்குப் பிறகு பெண்களுக்காகப் பல உரிமைகளைப் பெற்றுத் தந்துள்ளனர்.  இதன் விளைவாகப் பெண்கள் சுதந்திரமாக நடமாடுவதும், படிப்பிலும் பல துறைகளிலும் ஆண்களுக்குச் சமமாக முன்னேறி இருப்பதும் அறிந்ததே! வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடந்த பெண்கள் நாட்டை ஆள்வதும் பெரிய பொறுப்புள்ள பதவிகளை வகிப்பதும் இன்று சர்வசாதாரணமாகிவிட்டது. ஏன் விண்கலத்தில் ஏறி வானவெளியை வலம் வருவதும் அவர்களுக்குச் சாத்தியமாகிவிட்டது. இருப்பினும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் வேற்றுமைகள் மறைந்து அவர்களுக்கு வேண்டிய உரிமைகளும், மரியாதைகளும் கிடைக்கின்றனவா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் பெண்கள் தங்கள் உரிமைக்காகவும், சுயகௌரவத்திற்காகவும் இன்றும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதே வேளையில் தங்கள் குலப்பெருமையைத் தாங்களே அழித்துக்கொள்ளவும், தங்கள் இனத்தைத் தாங்களே அடிமைப்படுத்தவும் அவர்கள் தயங்குவதில்லை! வீட்டிற்கு வெளியேயும், உள்ளேயும்  ஆண்களால் பெண்களுக்குத் தொல்லை வரலாம். ஆனால் வீட்டிற்குள் பெண்கள் சிறுமையடையவும், துன்புறுத்தப்படவும் காரணம் பெரும்பாலும் பெண்களாகவே இருந்துவிடுகிறார்கள்!

கருவில் உள்ள குழந்தை ஆண் என்று தெரிந்தவுடன் கிடைக்கக் கூடாத புதையல் கிடைத்ததைப்போல மகிழ்வதும், அதுவே பெண் என்று தெரிந்தால் வானமே இடிந்து தலையில் விழுந்ததுபோலத் துயரப்படுவதும்  பெண்கள்தான். இந்தியக் கிராமங்களில் பெண்குழந்தை பிறந்தால் அதற்குக் கள்ளிப்பாலைப் புகட்டியும், நெல்மணிகளை மூக்கில் திணித்தும், ஈவு இரக்கமின்றிக் கொலை செய்வது பெண்கள்தான். வரதட்சணைக் கொடுமையால் ஸ்டவ், காஸ் சிலிண்டர் வெடித்துப் பெண்கள் தீக்கிரையாவதற்குக் காரணம் மாமியார், நாத்தி என்ற பட்டம் பெற்ற பெண்கள்தான். இவைகளைச் செய்திகளாக அறியும்போது மனம் துடித்தாலும், நமக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்கிறோம்.

எங்கு வாழ்ந்தாலும், தவறு என்று தெரிந்தாலும் சில பெண்கள் தங்களை மாற்றிக்கொள்ள விரும்புவதில்லை. கிராமங்களில், படிக்காத பெண்கள் நாகரிகமின்றிச் செய்வதை, நகரங்களில் வாழும் படித்த பெண்கள் நாகரிகமான முறையில் நளினமாகச் செய்கிறார்கள். கருவிலுள்ளது பெண் குழந்தை என்பதை நவீன கருவிகள் மூலம் தெரிந்துகொண்டு, கருக்கலைப்பு என்ற பெயரில் கொலை செய்யும் பெண்கள் நம்மிடையே இல்லையா?  உறவினருக்கோ அன்றி நண்பருக்கோ குழந்தை பிறந்த செய்தி கேட்டு, போய் பார்த்துவிட்டு,“என்ன! இந்தத் தடவையும் பெண்தானா! இப்படி அடுக்கடுக்காய்ப் பெண்ணாய்ப் பெற்று விட்டு எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறாய்?” என்று கேள்வியில் நஞ்சைக் கலந்து கேட்டு உடல்வேதனையுடன் இருக்கும் பெண்ணின் உள்ளத்தையும் நோகடிப்பது பெண்கள்தான்.  தனக்குப் பிறந்த குழந்தைகளுக்கிடையில் ஆண்-பெண் பேதம் பார்த்து வேற்றுமைகளோடு வளர்ப்பதும் “தாய்” என்ற பெண்தான்.

திருமணத்திற்காகத் தன் மகனுக்குப் பெண் தேடும்போது, தன் மகனின் நிறம், தகுதி எதையுமே நினைக்காமல், பெண் மட்டும் அழகாக, ஒல்லியாக, உயரமாக, வெள்ளையாக நிறைய பணத்தோடு வரவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களும் பெண்கள்தான். பெண் வெள்ளையாக இருந்தால்தான் பிறக்கும் குழந்தை வெள்ளையாக இருக்கும் என்று அவர்கள் போடும் தப்புக்கணக்கு இது. பார்க்கும் பெண்களிடத்தில் எதிர்பார்க்கும் தகுதி இல்லையென்றால் அதைச் சிறிதும் தயக்கமின்றி நேரிடையாகச் சொல்லி பெண்ணைப் பெற்றவர்களின் மனதை நோகச்செய்வதும் பெண்கள்தான். திருமண நேரத்தில் கறாராகப் பேசி பணம், நகை, வீடு என்று கேட்டுத் துன்புறுத்துவதும், வாழ வந்த பெண்ணிடமும், அவள் கொண்டு வந்த சீதனங்களிலும் குறை கண்டு ஏசுவதும் பெண்கள் தான். தன் மகளை வீட்டுவேலை எதுவும் சரியாகச் செய்யத் தெரியாமல் வளர்த்துவிட்டு, மருமகளைக் குறை கூறுவதுமன்றி, “இதைக் கூடக் கற்றுத்தராமல் உன் அம்மா எப்படித்தான் வளர்த்தாளோ” என்று தாயையும் சேர்த்துப் பழிப்பதும் பெண்கள்தான். சிறு பிரச்னைகளைப் பெரிதாக்கி, குடும்பத்தில் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்தி, அமைதியைக் குலைப்பதும் பெண்களே!    (தொடரும் ...)

-- விமலா துருவோ