பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 26 septembre 2012

பெண்களும் வேளாண்மையும்

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏழ்மையைப்  போக்கி மக்கள்    அனைவருக்கும் உணவு கிடைக்க விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், உற்பத்தி செய்த பொருட்களைச்  சந்தைப் படுத்துதல், பாதுகாத்தல் ஆகிய துறைகளில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். இது இன்றைய அறை கூவலாக இருப்பினும் இத்தகைய செயல்பாடுகளில் பண்டைய காலம் தொட்டு  மகளிர் பங்களிப்பு இருந்துள்ளது.


நாற்று நடும் பூசை முடிந்த பிறகு நாற்றுக் கொத்துக்களை ஆளுக்கு இவ்வளவு என்று பிரித்துக்கொண்டு பெண்கள் தயாராக நிற்கிறார்கள்.முதல் நாற்றை நிலத்தின் கன்னி மூலையில் சுமங்கலிப் பெண் ஒருத்தி நட்டுத் தொடங்கவும் பிறர் சீராக நாற்று நடத் தொடங்குகிறார்கள். அப்போது நடவுப் பாடல் பாடுவது வழக்கம்.இதோ ஒரு பாடல்:

அடிகொரு நாத்தை நடவங்காடி . .  அடி 
ஆணவம் கெட்ட பெண்டுகளா
பிடிக்கொரு படி காண வேணுமடி . . .அடி
பிரிச்சுப் போட்டு நடவுங்கடி
பொழுதும் போச்சுது பெண்டுகளா
போகணும் சீக்கிரம் புரிஞ்சிக்கடி
புளிய மரத்துக் கிளையிலதான்
புள்ள அழுவுது  கேளுங்கடி 

இன்றும் சில கிராமங்களில் இக்காட்சிகளைக் காணலாம். இப்படித் துவங்கிக் களை எடுத்தல், பயிரைக் காத்தல், அறுவடை செய்தல், தானியங்களைப் பதப்படுத்துதல் எனப் பெண்களின் பங்கு 80 விழுக்காடு உள்ளது( ஆனால் அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இன்மை  வேதனை  ). 
ஆண்களைப் போலவே பெண்களுக்கு விவசாய உற்பத்தி ஆதாரங்களை அணுகுவதற்குச் சமவாய்ப்பு வழங்கவேண்டும். அப்படிச் செய்தால் 20 - 30 விழுக்காடு உற்பத்தி அதிகரித்து சுமார் 10 - 15 கோடி பேர் பட்டினியிலிருந்து விடுபடுவார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கோவை பல்கலைக் கருத்தரங்கில் பேசிய வேளாண் விலைபொருள் உற்பத்திக் கமிஷனர் ராம் மோகன ராவ் 'பெண்கள் விவசாயி, விஞ்ஞானியாக  மாறி வளர்ச்சிப் பணியில் ஈடுபட வேண்டும்" என்றார். அவர்களின் வெற்றிக்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள்:
விழுப்புரம் மாவட்டத்தில் சொட்டு நிர்ப் பாசனத் திட்டத்தின் மூலம் இரண்டு ஏக்கர் நிலத்தில் மஞ்சள் சாகுபடி செய்து நிகர லாபமாக 11.80 இலட்சம் ரூபாய்  ஈட்டியுள்ளார் பெண் விவசாயி கோகிலா.
வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட மாநிலம் குஜராத். இங்குள்ள பெந்தபுரா கிராமத்தை சேர்ந்தவர் 43 வயதுடைய ரமிலாபென்.12 வருடங்களுக்கு  முன்பு சாதாரண கிராமத்துப் பெண். படிப்பறிவு இல்லாதவர். பால்பண்ணை கைகொடுக்கத் தற்பொழுது ஒரு கோடி சம்பாதிக்கிறார்.40 பேருக்கு எசமானி.வங்கியில் கடன் வாங்கிச் சிறிய அளவில் ஆரம்பித்தார்  பால் பண்ணையை  .  அவரது கடுமையான உழைப்பு, நேர்மையால்  உரிமையாளர் என்ற நிலைக்கு உயர்ந்துவிட்டார்.
பெண் விவசாயிகளின் மேம்பாட்டுத் திட்டம் துவங்கப்பட்டு அவர்களுக்கு முன்னுரிமைகள் கொடுக்கும் முனைப்பில் நாடு உள்ளது.பெண்களுக்குத் தேவையான பயிற்சிகள், விழிப்புணர்வு, கடன் வசதிகள். . . வழங்கப்பட வேண்டும்.சுய உதவி குழுக்களை ஏற்படுத்திப் பெண்கள் இணைந்து இத்துறையில் சாதனை படைக்க  ஊக்குவிக்க வேண்டும் .பெண், சக்தியின் பிறப்பிடம், சக்தியின் இருப்பிடம். அந்தச் சக்திகள் ஒன்று சேர்ந்தால்!!

லூசியா லெபோ
 

Aucun commentaire:

Enregistrer un commentaire