பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 28 septembre 2012

வேளாண்மையின் தாளாண்மை


                                                     
                                               

10,000 ஆண்டு பழமை வாய்ந்ததும், கிமு 7000 ஆண்டிலேயே இந்தியத் துணை கண்டம் செயல்படுத்தியதும் (கோதுமை, பார்லி உற்பத்தி), கிமு  5200க்கு முன்பே வீட்டில் வளர்க்கப்பட்டதுமான (சோளம், மரவள்ளி,மற்றும் கிழங்கு வகைகள்) விவசாயமே  வேளாண்மை  ஆகும்.

வேள் என்ற சொல்லின் உருவாக்கமான வேளாண்மை என்பதற்கு கொடை-ஈகை-வழங்குதல் என்றொரு பொருள் உண்டு. பயிர்கள் நிலத்தின் கொடை என்பதால்  விவசாயிகள் 'கொடையாளர்' என்ற தகுதியைப் பெறுகின்றனர். 'வேளான்' என்றால் நீரை ஆள்பவன் என்போரும் உண்டு. விருப்புடன் பிறரைப் பேணுதலும் வேளாண்மையே ! இலத்தீன் சொல்லான 'ager-நிலம்', 'cultura-பண்படுத்துதல்', பின்னர் 'cult-வழிபாடு, கல்வி' எனப் பொருள் பெற்று, (தமிழில் கூட கல்வி-அகழ்தல் என்ற பொருளில் குறிக்கப்படும்) பிறகு பண்பாட்டைக் குறிப்பதாகவும் ஆயிற்று. உண்மையில் விவசாயிகள் நிலை கையேந்தும்படி  இருந்தாலும், பொருளில் குற்றமில்லை ! விவசாயம் பற்றிப் பேச என்ன இருக்கிறது என்ற எண்ணம் தான் எல்லோருக்கும் தோன்றக்கூடியது. அதை புறம் தள்ளுவதாலேயே இன்றைய பசியும், பட்டினியும் மனித முன்னேற்றத்திற்குச் சவாலாக எழுந்து நிற்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

வேளாண்மை என்பது பயிர்களை உற்பத்தி செய்வது, கால் நடை வளர்ப்பு இரண்டையும் உள்ளடக்கியது. இதில் இன்றைய நடைமுறையான நெடு வேளாண்மை (Permaculture), உயிரி வேளாண்மை  (Organic Agriculture), தொழில் நுட்ப வேளாண்மை முறையில் ஓரினச் சாகுபடி (Monoculture) என வகைகள் உண்டு. 6°க்குக் குறைவான வெப்பத்தில் பெரும்பாலும் பயிர்கள் வளராது. ஒவ் வொருபயிருக்கும்  தனித் தன்மை உண்டு.  மழையே ஓரிடத்தில் வளரும் பயிரை முடிவு செய்கிறது. பொதுவாக வண்டல் மண் நிறைந்த சமவெளி வேளாண்மைக்கு ஏற்றது

கோதுமை ஒரு மித வெப்ப மண்டலப் பயிர். காரட் அதே வகை என்றாலும் உயர் பகுதிகளில் செழித்து வளரக் கூடியது. பருத்திக்கு 200 நாட்கள் பனி பொழிவற்ற  சூழல் தேவை. காப்பிக்கு அறுவடையின்போதும், அதற்கு முன்பும் வறண்ட நிலை தேவை. அதே பருவத்தில் சோளம் விளைய நீர் மிகத் தேவை ! இப்படிப் பயிருக்கும்,  மண் வளத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் ஏற்ப விவசாயம் செய்வதே நல்  விளைச்சலுக்கும், உடல் நலத்திற்கும் ஏற்றது.இமயமலைப் பகுதியின் ஒரே விளைநிலத்தில் 12க்கும் மேற்பட்ட பீன்ஸ்,பருப்பு, திணை வகைப் பயிர்களை வளர்க்கும் அளவு அம்மண் செழிப்பானதாம் !

இதில் தன்னிறைவு வேளாண்மை (சிறிய அளவில் சாகுபடி செய்வது), மாற்றிட வேளாண்மை (சில மலை வாசிகள் ஓர்சில மரங்களை வெட்டி எடுத்து எரித்து விட்டு, அந்த இடத்தில் திணை,கிழங்குகள் வளர்ப்பார்களாம். பின் அந்த இடத்தை அப்படியே விட்டு விட்டு வேறு இடத்தில் அவ்வாறே பயிரிடுவார்களாம். 10 அல்லது 20 ஆண்டுகளுக்குப்பின் மறுபடியும் பழைய இடத்தில் வந்து பயிரிடுவராம்.. மண் இந்த இடைவெளியில் எத்துணை வளம் பெற்றிருக்கும் ?) தீவிர வேளாண்மை (அதிகப்  பருவமழை பெறும் ஆசியப் பகுதியில் நடப்பது-முக்கியமாக நெல்) வணிக வேளாண்மை (இயந்திரம் பயன்படுத்தி அதிக அளவில் பயிரிடப்படினும் மகசூல் சற்றுக் குறைவானது-உம் :கோதுமை) தோட்டப் பயிர் (தேயிலை, காப்பி, ரப்பர்), கலப்புப் பண்ணை (பயிர் மற்றும் கால்நடை வளர்ப்பு) என பலவகை உண்டு.

வேளாண்மை மூலம் உணவுகள் (தானியங்கள்,காய்கறிகள்,பழங்கள், இறைச்சி), இழைமங்கள் (பருத்தி,கம்பளி,சணல்,பட்டு,ஆளி(ஒரு வகை தானியம்)), மூலப்பொருட்கள் (மரத்தடிகள், மூங்கில்,பிசின்),ஊக்கப்பொ ருட்கள் (புகையிலை,சாராயம்,கஞ்சா,அபினி,கொகெய்ன்,டிஜிடலிஸ் ),இயற்கை எரி  பொருட்கள் (மீத்தேன்,எத்தனால், பயோடீசல்), அலங்காரப் பொருட்கள் (பூ,தாவர வளர்ப்பு,மீன்,பறவை,வீட்டு விலங்குகள்) போன்றவை மனித வாழ்வைச் சுவையாக்குகின்றன.

இந்த வாழ்வின் சுவையை நாமே எப்படிக் கெடுத்துக் கொண்டோம் என்பதுதான் இனி  நமது இனத்தின் வரலாறாக இருக்கும்.

செயற்கையாக மண்ணைச்  சத்தூட்டுகிறோம் என்ற பெயரில், அம்மோனியம் நைட்ரேட்டைக் கலப்பது, 'சுழற்சி முறை பயிர்', 'விலங்கு எரு ஊட்டச் சத்து'களை மதிப்பிழக்க வைத்துவிட்டது.

நவீனச் செயற்கை உரம், பூச்சிக் கொல்லி, வருவாயை அதிகரிக்கச் செய்து சுற்றுச் சூழல் மாசுபாட்டுக்கு வழி வகுத்தது.

இறைச்சி உற்பத்தியிலும் எதிர் உயிர்மிகள், பிற வேதிப் பொருட்கள் மனித உடலுக்குக் கேடு விளைவிக்கின்றன.

கலப்பு நைட்ரஜன், பூச்சிக்கொல்லி போன்ற ரசாயன உரங்கள் நீரழிவு, புற்று,மலட்டுத்தன்மை, பிறவி ஊனம், பார்வைக் குறைவு போன்றவற்றுக்கு காரணமாகின்றன.

தழைச்சத்து (நைட்ரேட்) மழையால் அடித்துச் செல்லப்பட்டு, குடி நீரை அசுத்தமாக்குகிறது. (உலகில் 60% நல்ல நீர் வேளாண்மைக்குப் பயன்படுத்தப் படுகிறது)

டிராக்டரால் மண் அமைப்பு மாறி, இறுகுகிறது.

அதிக ஆழ உழவு காரணமாக, மேல் மட்ட மண் அரித்து செல்லும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்நிலை தொடர்ந்தால், 2025இல் 25% மக்களுக்கே உணவு கிடைக்கும் என்று ஆப்பிரிக்க ஐக்கிய நாடு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 'கானா இயற்கை வளங்கள் நிறுவனம்' தெரிவிக்கிறது.

சர்வதேச ஆய்வறிக்கைப்படி, இந்திய மண்ணில் இரும்பு, மாலிப்பிடினத்தைத் தவிர பாஸ்பரஸ், மக்னீசியம், போரான், துத்தநாகம் போன்ற சத்துக்கள் குறைவாக உள்ளது.

இறுதியாக வேளாண்மையில் நுழைந்துள்ள "அழிவுப்  பாதை" மரபணு தொழில் நுட்பம்.:

டிஎன்ஏ விலுள்ள மரபுக் கூற்றைப் பிரித்து, அதே இனத்திலோ, மற்றொரு இனத்திலோ பொருத்தி, புதிய உயிரினத்தை உருவாக்கும் விஞ்ஞானம்.. படைப்பையே மாற்றும் மகத்தான செயல்பாடு. சந்தேகமில்லை ! ஏற்கனவே அரிசி, கத்தரி, பட்டாணி, உருளை முதற்கொண்டு பலவற்றை மரபணு முறையில் மாற்றியமைத்த தாவரங்கள் ஆகச் செய்து விட்டார்கள் ! ஆனால் அதன் திட்டவட்டமான சாதக-பாதகங்கள் இன்னும் தெளிவுறவில்லை. மண்ணின் தன்மை எப்படி மாறும் என்பது தெரியவில்லை. மரபணு நுண்ணுயிர் எப்படி செயல்படும் என்ற விளக்கம் இல்லை. புது நச்சுக்கிருமி உருவாகாது என்பதற்கு உத்தரவாதமில்லை.

இதன் நல்ல வெளிப்பாடுகளாக நோய்,பூச்சி,களை எதிர்ப்பு, ஒளி சேர்க்கைத் திறன் , நைட்ரஜன் நிலைப்பு, அதிக சேமிப்புப் பகுதிகள் கொண்ட வேர்-விதை-காய்கறி, கொழுப்புக் குறைந்த எண்ணெய் வித்து, நோய் எதிர்ப்பு -அதிக உயிர்ச்சத்து 'ஏ ' கொண்ட உருளை, மரபு மாற்றம் செய்த விதை, உயிரி உரம், உயிரி எரிபொருள் எனச் சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த மரபணுக்கள் மற்றக் காட்டு உயிர்களுடன் கலந்து இயற்கை இனங்களையே அழித்து விடலாம்.

பூச்சி எதிர்ப்பு நஞ்சைப் பெற்றத்  தாவரங்கள் அழிந்தபின் புதைந்து, மண்ணை நச்சுத்தன்மை கொண்டதாக மாற்றிவிடலாம்.

தேனீ,வண்ணத்துப் பூச்சி, மண்புழு இனங்கள்  அழிந்து விடலாம்.

ஆடு-மாடுகள் கூட மறைந்து விடலாம்.(ஆந்திராவில் பி.டி. பருத்திச் செடி இலைகளை உண்டு  1500 ஆடுகளுக்கு மேல் உயிரிழந்தன. மேய்ந்த 12 மயில்கள் இறந்தன )

உலகின் மரபணு விதை விற்பனையில் 2/3 பங்கை 10 விதை நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன. இதனால் இயற்கையாக விதை கிடைக்காது, ஒவ்வொரு முறையும், விவசாயிகள் பணம் செலுத்தி விதை பெற்றாக வேண்டியுள்ளது. மான்சாண்டோ என்ற பன்னாட்டுக் கம்பெனி விற்ற மரபணு மாற்றப் பருத்தியை விதைத்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் அந்த மலட்டு 
விதைகளால் பாதிக்கப்பட்டுத் தற்கொலை செய்து கொண்டார்கள்.

பூச்சிகள், எதிர்ப்பு நஞ்சுக்கு  எதிரான சக்தியை வளர்த்துக்கொள்வதாய்  அமெரிக்கச் சற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனம் அறிவிக்கிறது.

ஒரே தன்மை கொண்ட பயிர்கள் என்பதால் ஒரே நோயில் ஒன்றாக எல்லாம் அழியவும் செய்கின்றன. இதன் முடிவு என்னவாகும் எனபது விஞ்ஞானிகளுக்கே தெரியுமோ என்னவோ !

விவசாயிகளுக்கு நச்சு உரங்களால் நுரையீரல் நோய், டிராக்டர் சத்தத்தால் கேட்கும் திறன் இழப்பு, பல வகைத்  தோல் நோய்கள், ஓசோன் ஓட்டை வழி சூரிய ஒளியில் நாள்தோறும் இருப்பதால் ஏற்படும் புற்று அபாயம் என உடல் நல அச்சுறுத்தல்கள் பல. முக்கியமாக  இளம் தொழிலாளிகள் இந்த அபாயத்திற்கு அதிகம் ஆளாகிறார்கள்.

முக்கிய இந்தியப் பிற இழப்புகள்:

இந்திய .விவசாய நில அளவு 37.05% ஆகக் குறைந்து விட்டது.

1993-94 வேளாண்மை உற்பத்தி - 25%
அதுவே 2005-06 இல் 13.03%

உணவு தானியம் 2001-02 இல் 76.89 லட்சம் டன்.
அதுவே 2004-05 இல் 61.40 லட்சம் டன்

மொத்த உலக உணவின்றி இருப்போர் 2.6 கோடி
இந்திய பட்டினியாளர்  65 லட்சம் அதாவது மொத்தத்தில் கால் பகுதி!

1951இல் விவசாயத்தில் ஈடுபட்டோர் 72%
தற்போது 58%

1997 முதல் 2008 வரை 1,82,936 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர் .
தற்போது அது 2 லட்சத்து 20 ஆயிரமாக கூடியுள்ளது. இதில் சராசரி 25 முதல் 45 வயதுள்ளவர்களே அதிகம்.

தமிழ் மண்ணின் வேளாண்மை அடையாளமாக உலகெங்கும் அறியப்பட்ட காங்கேயம் காளை அழிவு நிலையில் உள்ளது.

இத்தனையையும் ஒருசேர அறிந்துணர்ந்தபின் நெஞ்சம் கனக்க, பெருமூச்சு விடுவதைத் தவிர்க்க இயலவில்லை அல்லவா ?

திருமதி சிமோன்

.
Aucun commentaire:

Enregistrer un commentaire