பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 29 janvier 2014

கொடிமரம்

கோயில்களுக்கு அழகு தருவது கொடிமரமாகும். பக்தர்களைக்  காக்கவும்,இறை சக்தியை அதிகரிக்கவும்,தீய சக்திகளை விரட்டவும் கோயிலில் கொடிமரம் நடப்படுகிறது. இதற்கு துவஜஸ்தம்பம் என்ற வடமொழி   பெயரும் உண்டு.  . கொடிமரத்தில் திருவிழாவின் முதல்நாள் கொடியேற்றுவது துவஜாரோகணம் என்றும், விழா முடிந்து கடைசி நாள் கொடியிறக்குவது துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகிறது. அப்படிக்  கொடியேற்றும் நாளில் ஊரில் உள்ள அனைத்து மக்களும்  அந்தக்  கொடியேற்றத்தில் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைப்பர்,அது மட்டுமல்ல  அப்படிக் கொடியேற்றிய நாளில் ஊரில் உள்ளவர்கள்  அந்த திருவிழா முடிவடையும் நாள் வரை அந்த ஊரின் எல்லையைத்  தாண்டக் கூடாது  என்று கூறுவர். இறைவன் குடிகொண்டிருக்கும் ஆலயத்தில் கொடிமரத்துக்குத்தான் முதல்மரியாதை. அந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றது கொடிமரம். ஆலயத்தில் கொடிமரமும், கொடியேற்றமும்  இறைவனின் ஆளுமையை உணர்த்துகின்றன.
இது ஆலயங்களின் பலிபீடத்துக்கு முன்போ அல்லது பின்போ காணப்படுகிறது . கொடிமரத்தின் உயரம் கோயிலுக்கு கோயில் மாறுபடும் என்றாலும்  கோபுரத்தின் உயரத்தில் முக்கால்பங்காக கொடிமரத்தின் உயரம் இருக்கும். இந்தக் கொடிமரம் கர்ப்பக்கிரகத்தில் அமையும் மூர்த்தி மட்டத்தில் இருந்து கருவறை மேல் அமையும் ஸ்தூபி வரை உயர்ந்ததாக காணப்படும்.
இந்துக் கோவில் கொடிமரம் மூன்று பாகங்களை உடையது. அடியில் சதுரமாக இருக்கும் இது படைக்கும் கடவுள் பிரம்மனைக்  குறிக்கிறது.அதற்கு மேல் எண்கோணவேதி அமைப்பு- இது காக்கும் கடவுள் மாகாவிஷ்ணுவைக்  குறிக்கிறது.அதன் மேல் பாகம் உருண்டு நீளமாக இருக்கும்,அகம்பாவத்தை அழிக்கும் உருத்திரனை(சிவன்) குறிக்கிறது.ஆக மும்மூர்த்திகளைக் குறித்து நிற்கிறது.
கொடிமரத்தின் மேல் உள்ள உருவங்கள்:
சிவன் கோயிலில் நந்தியையும், பெருமாள் கோயிலில் கருடனையும், அம்பாள் கோயிலில் சிங்கத்தையும், முருகன் கோயிலில் மயிலையும், விநாயகர் கோயிலில் மூஞ்சுறுவையும், சாஸ்தா கோயிலில் குதிரையையும் கொடி மரத்தின் மேல்பகுதியில் அமைத்திருப்பார்கள். கொடிமரத்தில் உச்சியில் மூன்று பலகைகள் காணப்படும். கேரள ஆலயங்களில் ஒரே பலகை அமைந்திருக்கும். இவற்றை திருஷ்டிப்  பலகைகள் என்பது வழக்கம். அதில் ஒரு மணியும் கோர்க்கப் பட்டிருக்கும்.
கொடி மரத்தைக் காக்கும் பொருட்டுப்  பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால் கவசமணிவிப்பர். இதனால் வெயில், மழை போன்ற இயற்கை மாற்றங்களிலிருந்து கொடி மரம் காக்கப்படுகிறது.

வழிபாட்டிற்குச் செல்லும்போது மனம், உடல் தூய்மையாக இருக்க வேண்டும். வீடு, பணிச் சிந்தனைகளை மறந்து ஒருமித்த கருத்துடன் கோயிலில் நுழையவேண்டும். சலனம், சபலம், கோபம், வெறுப்பு போன்றவற்றை இங்கே பலியிட்டுச் செல், கடவுள் தரிசனம் வாய்க்கும் என்கிறது பலிபீடம். சந்நிதிக்குள் செல்லும் போது மனித உடம்பு ஒரு நடமாடும் பேட்டரியாக(மின்கலம்) மாறி விடும். மின்காந்தசக்தி பேட்டரியில் சேர்வது போல, கருவறையில் உள்ள தெய்வீகசக்தி உடம்புக்குள் குவியும். பிரகாரம் சுற்றி கொடிமரம் முன்பு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யும் போது, உடலுக்குத்  தேவையான ஆற்றல் போக, உடலில் இருக்கும் அதிகப் படியான ஆற்றல் பூமிக்குள் இறங்கி விடும். அது கொடிமரம் வழியாக மேலேறி பிரபஞ்ச சக்தியோடு (உலக சக்தி) இணையும். அதனால், தூயமனத்தோடு ஒருவர் கோயிலில் வழிபட்டால் போதும். அதன் பயன் மக்களுக்கெல்லாம் கிடைக்கும். 

கோயில் வழிபாட்டில் மூலவரை வணங்கியபின், பிரகாரத்தை வலம் வந்து கொடிமரத்தில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வர். கொடிமரத்தின் முன் ஆண்கள் அட்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும்.
அட்டாங்க வணக்கம்:- தலை,கையிரண்டு,செவியிரண்டு,புயங்களிரண்டு மேவாய்,என்னும் எட்டு அங்கங்களும் நிலத்தில் தோயும்படி வணங்குதல் வேண்டும்.
பஞ்சாங்க வணக்கம்:-தலை,கையிரண்டு,முழந்தாளிரண்டு என்னும் ஐந்து அங்கங்கள் நிலத்தில் தோயும்படி வழிபடல் வேண்டும்.
திரயாங்க வணக்கம்:-சிரசிலே இரண்டு கைகளையுங் குவித்தல். நிலத்தில் விழுந்து வணங்க முடியாதவர்கள் (முதியவர்கள்,முழங்கால் என்பு இழையம், முழங்கால் மென்சவ்வு இழையம் தேய்வடையும் குறையுடையவர்கள்) திரியங்க வணங்கத்தை மேற்கொள்வதில் தவறில்லை.
இவ்வணக்கமுறையை ஒரு தரம் இரண்டு தரம் பண்ணுதல் கூடாது. மூன்று தரம், ஐந்துதரம்,ஏழுதரம்,பன்னிரண்டு தரம் எனப்  பண்ணுதல் வேண்டும்.
நமது  பண்டைய காலத்துக்  கோவில்களில் கர்ப்பக் கிரகத்தின் நேர் எதிரில் தாமிர [Copper] உலோகத்தால் ஆன  கொடிமரம் அமைத்து இருப்பார்கள். இதற்கு அறிவியலார் கூறும் விளக்கம் இதோ:
 தாமிரம் [Copper] ஒரு கடத்தி [Conductor] மற்றும் ஈர்க்கும் சக்தி [Receiver] கொண்ட  உலோகம். அது மின் காந்த அலைகளையோ [Electro Magnetic Waves] அகிலக்கதிர்களையோ [Cosmic Rays] விண்மீன்திரளிலிருந்து [Galaxy] ஈர்த்துத்  தன்னைச்  சுற்றி அதை வெளியிடுகிறது [Emitting]. இது நமது உடலுக்கு மிகவும் நல்லது.
உயிர் பாசத்தை விட்டு இறைவனை அடைவதைக் குறிப்பது கொடிமரம்.
கொடிமரம் கடவுள்;  கொடிக்கயிறு திருவருட் சக்தி; கொடித்துணி ஆன்மா; தர்ப்பைக் கயிறு பாசம் எனப்படும். கொடியேற்றும் நிகழ்ச்சியானது மும்மல வயப்படும் ஆன்மா, திருவருட்சக்தியினாலே பாசம் அற்று, சிவஞான வடிவமாகிய பதியின் திருவடியை அடைதல் என்னும் தத்துவத்தை உணர்த்துவதாகும். கொடி மரத்தின் பீடம் பத்ரபீடம் எனப்படும். இங்கே இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு மனத்தைப் பலியிட வேண்டும் என்பதற்காக ஆன்மாவைப் பாசக்கயிறு சுற்றியுள்ளதை நினைவூட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றியிருக்கும்.   துணியில் உருவம் எழுதப் பெற்று வழிபாட்டில் வைத்துப் பூசித்துக் கயிற்றில் கட்டிக் கொடிமரத்தின் உச்சியில் ஏற்றுவர். திருவிழாவுக்கு வரும் அடியார்களைத் திருவருள் உயர்த்தி நற்கதிக்குச் செலுத்தும் என்பதே இதன் அடிப்படை உண்மையாகும்.



கிறித்துவ ஆலயங்களிலும் முகமதியரின் தர்காவிலும் (நாகூர் ) திருவிழாவிற்கு முன்பாகக்  கொடியேற்றும் வழக்கம் உண்டு.
 லெயா

lundi 30 décembre 2013

எண்ணப் பரிமாற்றம்

                                                   

அன்புடையீர்,

வணக்கம். "தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்த பொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த் திரளின் மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. அப்போது கடவுள் "ஒளி தோன்றுக" என்றார்: "ஒளி தோன்றிற்று" என்கிறது கிறித்தவ மறையுரை.

இவ்வுலகும், மனிதரும் உருவானதற்குக் காரணம் இறைவன். இறைவன் மனிதனுடன் கொண்டுள்ள உறவு, படைப்பிலிருந்தே தொடங்குகிறது என்பது அநேகமாக எல்லா மதங்களின் அடிப்படைக் கொள்கையாக இருக்கிறது . இறைவனை ஒளியாகக் கொள்வது அனைவரும் ஒப்புக்கொண்ட சித்தாந்தமாகவும், ஞானம் பெறுபவர்களின் அனுபவமாகவும் உள்ளது.

இருள் என்பது அச்சம் தரக்கூடியதாய், மறைந்து செயலாற்ற  இடமளிப்பதாய் இருக்கிறது.  (பெரும்பாலும் ரகசியமாக செய்ய விரும்பும் காரியங்கள் தரக் குறைவானதாய், பிறருக்குக் கேடு விளைவிப்பதாகத்தான் இருக்கும்)   மாறாக ஒளி மனதை விசாலப்படுத்துவதாய், பகிரங்கமாகச் செயல் படுவதாய், நீதி, நேர்மை உண்மை  எனும்  திண்மை கொண்டதாய் விளங்குகிறது. அது கடவுளின் அம்சம் எனக் கொள்வது முற்றிலும் பொருத்தமானதே!

இயேசு, "நானே உலகின் ஒளி. என்னைப் பின் செல்பவன் இருளில் நடவான்" என்கிறார்.

ஆரூரார், சம்ஹாரத் தாண்டவத்தில் சிவன் அணையா நெருப்பேந்தி, எரிகின்ற நிலத்தில் ஆடுவதாகக் கூறுகிறார். ஐந்து மூலகங்களில் நீரும், மண்ணும் நெருப்பில் உருகி, காற்றில் கரைந்து, வான் வெளியின் வெறுமையில் காணமல் போகிறது.

 மனமே அவன் ஆடும் நிலம். தன்  முனைப்பு (தான் எனும் எண்ணம்) எங்கே அழிகிறதோ அங்கே மாயை, செயல் எல்லாமே எரிந்தழிகின்றன. நெருப்பால் தூய்மை பெற்று, இன்ப துன்பங்களைச் சரிசமமாகக் காணும் துறவு பூண்டு வெறுமையுற்ற மனதில் இறைவன் குடி புகுகின்றான். எல்லாம் அவன் செயலாகும் நிலை, குறையில்லா மனதைத் தருகிறது. ஆன்மா வாழும் போதே அமைதியும், சாந்தியும் பெறுகிறது.

திருமதி சிமோன் 

ஆன்ம ஒளியின் தரிசனம்

                                                            


சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்
ஒருவனே சொல்லுதற்கரிய
ஆதியே நடுவே அந்தமே பந்தம்
அறுக்கும் ஆனந்த மாக்கடலே
தீதிலா நன்மை திருவருட் குன்றே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாதுநீ போவதோர் வகையெனக் கருவாய்
வந்து நின் இணையடி தந்தே!                                                      - மாணிக்க வாசகர்


தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனதினால் சிந்திக்கப்
போய் பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்!                   -  ஆண்டாள்


வானாய்  நிலனாய் வளியாய் அனலாய் 
தானாய் வழிபடுநான் தான் தானாய் .....
ஐந்நிறமாய் அந்நிறத்தின் ஆமொளியாய் அவ்வொளிக்குள் 
எந்நிறமும் வேண்டா இயனிறமாய்   .....                                  - வள்ளலார்


தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா                            - பாரதியார்


பேரொளியாய்ப் புன்னகைத்துப் பெய்மழைபோல் என்நெஞ்சம்
சீரொளியால்  பண்படவே  சிந்தையிலே  நீயொளிர்ந்து
தாயனைய  நாடிவந்துத்   தாள்சேர்த்து  ஊழ்மாற்றி
நீயணைத்துத்  தந்தசுகம்   "நீ"!                                                      









மெய்விளக்கு

                                                       


வேதாந்த தேசிகர் சொல்லும் மெய்விளக்கு’, நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்றும் ஆழ்வார்கள் அருளிச்செயல் என்றும் பாராட்டப்படும் பக்தி இலக்கியம். அதனை ஏற்றிவைத்த முன்னோடிகளாகிய  மூவரும்முதலாழ்வார்கள்என்று போற்றப்படுகிறார்கள். ஒரு தீபத்தை வைத்து இன்னும் பல தீபங்களை ஏற்றமுடியும். அதுபோல, மெய்விளக்காகிய அந்த நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தில் இடம் பெற்ற இரண்டுதீபப் பாடல்கள், மிகப் பிரபலமானவை. முதலில், பொய்கையாழ்வார் பாடியது:



வையம் தகளியா, வார்கடலே நெய்யாக,

வெய்ய கதிரோன் விளக்காக, செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன்
சொல் மாலை
இடர் ஆழி நீங்குகவே
என்று இந்த உலகத்தையே ஒரு பெரிய அகலாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதில் பெரும் பகுதி நிறைந்துள்ள கடல் நீரையே நெய்யாக நினைத்துக் கொள்ளுங்கள், அந்தக் கடலில் தினந்தோறும் உதிக்கின்ற, வெப்பம் மிகுந்த சூரியனையே நெருப்பாக எண்ணிக்கொள்ளுங்கள். அப்பேர்ப்பட்ட ஒரு பெரிய விளக்கைதான் பொய்கையாழ்வார் ஏற்றிவைக்கிறார்! இங்கே விளக்கு என்பது, ‘சொல் மாலை’, அதாவது இனிய தமிழ்ப் பாடல்கள். சிறந்த, ஒளி நிறைந்த சக்கரத்தினைக் கையில் ஏந்திய திருமாலின் திருவடியில் இந்தச் சொல் மாலையைச் சூட்டி வணங்குகிறார் பொய்கையாழ்வார். தன்னுடைய துன்பமாகிய கடல் நீங்குவதற்கு அவன் அருளை வேண்டுகிறார். கிட்டத்தட்ட இதேமாதிரி இன்னொருமெகாவிளக்கு, பூதத்தாழ்வார் ஏற்றிவைத்தது:




அன்பே தகளியா, ஆர்வமே நெய்யா

இன்பு உருகு சிந்தை இடுதிரியா, என்பு உருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்

என்னுடைய மனத்தில் உள்ள அன்புதான் அகல், இறைவன் மீது நான் வைத்திருக்கும் ஆர்வம்தான் நெய், அவனை எண்ணி உருகும் எனது சிந்தனைகள்தான் திரி, எலும்புகளெல்லாம் உருகும்படி என்னுடைய ஞானத்தைக் குவித்து அந்த விளக்கை ஏற்றிவைக்கிறேன். சிறந்த தமிழினால் அந்த நாராயணனைப் போற்றுகிறேன். தீபத்தின் மீது ஆண்களைவிடப் பெண்களுக்குதான் ஆர்வம் அதிகம். அவர்கள் செய்யும் விளக்கு பூஜையின்போது பாடப்படுகிற ஓர் இனிய தமிழ்ப் பாடல், இதற்கான காரணத்தைச் சொல்கிறது:

விளக்கே, திருவிளக்கே, வேந்தன்
உடன்பிறப்பே,
ஜோதி மணி விளக்கே, ஸ்ரீதேவி
பொன்மணியே,
அந்தி விளக்கே, அலங்கார நாயகியே,
காந்தி விளக்கே, காமாட்சித் தாயாரே,
பசும்பொன் விளக்கு வைத்துப் பஞ்சுத் திரி
போட்டு
குளம்போல எண்ணெய் விட்டுக் கோலமுடன்
ஏற்றிவைத்தேன்,
ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடி விளங்க,
வைத்தேன் திருவிளக்கு எந்தன்
மாளிகையும்தான் விளங்க

ஆழ்வார்களைப்போல இந்தப் பெண்கள் அன்பையோ, ஆர்வத்தையோ, ஞானத்தையோ, சிந்தனையையோ, உலகத்தையோ, சூரியனையோ விளக்காக ஏற்றவில்லை. நிஜமான பசும்பொன் விளக்கில் பஞ்சுத் திரி போட்டு, உண்மையான எண்ணெய் ஊற்றி அழகாக ஏற்றிவைக்கிறார்கள். அந்த விளக்கையே தெய்வமாகப் போற்றுகிறார்கள். அதன்மூலம், அந்த விளக்கு ஏற்றப்படும் வீடு சிறந்து விளங்குகிறது, அந்தக் குடும்பம் முன்னேறுகிறது, ஊரில் எங்கும் நலன் பெருகுகிறது. வெளியே ஏற்றப்படும் விளக்கு இருக்கட்டும், நமக்குள் சில விளக்குகள் இருக்கின்றன, ஒன்று, இரண்டு அல்ல, முழுசாக ஐந்து விளக்குகள்
தெரியுமா? திருமூலர் தனது திருமந்திரத்தில் விவரிக்கும் அந்த ஐந்து விளக்குகள்:

உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு
ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு!

நம் உள்ளம் ஒரு பெரிய கோயில். ஊனாகிய இந்த உடம்பு ஓர் ஆலயம். வள்ளலான கடவுளைப் புகழ்கின்ற இந்த வாய்தான் அந்தக் கோயிலுக்குக் கோபுர வாசல், தெளிவான உண்மையை உணர்ந்தவர்களுக்கு உள்ளே இருக்கும் ஆன்மா(ஜீவன்)தான் கடவுள் (சிவலிங்கம்). கோயிலுக்குள் இருட்டாக இருக்குமல்லவா? இறைவனை நோக்கிச் செல்லும் வழியில் வெளிச்சம் வேண்டாமா? அதற்காக ஐந்து மணி விளக்குகள் நமக்குள்ளேயே இருக்கின்றன. அவை, நம்மை ஏமாற்றக்கூடிய கள்ளத்தனம் நிறைந்த ஐந்து புலன்கள்!

நன்றி :
என்.சொக்கன்  (தினகரன்)