பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 29 janvier 2014

கொடிமரம்

கோயில்களுக்கு அழகு தருவது கொடிமரமாகும். பக்தர்களைக்  காக்கவும்,இறை சக்தியை அதிகரிக்கவும்,தீய சக்திகளை விரட்டவும் கோயிலில் கொடிமரம் நடப்படுகிறது. இதற்கு துவஜஸ்தம்பம் என்ற வடமொழி   பெயரும் உண்டு.  . கொடிமரத்தில் திருவிழாவின் முதல்நாள் கொடியேற்றுவது துவஜாரோகணம் என்றும், விழா முடிந்து கடைசி நாள் கொடியிறக்குவது துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகிறது. அப்படிக்  கொடியேற்றும் நாளில் ஊரில் உள்ள அனைத்து மக்களும்  அந்தக்  கொடியேற்றத்தில் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைப்பர்,அது மட்டுமல்ல  அப்படிக் கொடியேற்றிய நாளில் ஊரில் உள்ளவர்கள்  அந்த திருவிழா முடிவடையும் நாள் வரை அந்த ஊரின் எல்லையைத்  தாண்டக் கூடாது  என்று கூறுவர். இறைவன் குடிகொண்டிருக்கும் ஆலயத்தில் கொடிமரத்துக்குத்தான் முதல்மரியாதை. அந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றது கொடிமரம். ஆலயத்தில் கொடிமரமும், கொடியேற்றமும்  இறைவனின் ஆளுமையை உணர்த்துகின்றன.
இது ஆலயங்களின் பலிபீடத்துக்கு முன்போ அல்லது பின்போ காணப்படுகிறது . கொடிமரத்தின் உயரம் கோயிலுக்கு கோயில் மாறுபடும் என்றாலும்  கோபுரத்தின் உயரத்தில் முக்கால்பங்காக கொடிமரத்தின் உயரம் இருக்கும். இந்தக் கொடிமரம் கர்ப்பக்கிரகத்தில் அமையும் மூர்த்தி மட்டத்தில் இருந்து கருவறை மேல் அமையும் ஸ்தூபி வரை உயர்ந்ததாக காணப்படும்.
இந்துக் கோவில் கொடிமரம் மூன்று பாகங்களை உடையது. அடியில் சதுரமாக இருக்கும் இது படைக்கும் கடவுள் பிரம்மனைக்  குறிக்கிறது.அதற்கு மேல் எண்கோணவேதி அமைப்பு- இது காக்கும் கடவுள் மாகாவிஷ்ணுவைக்  குறிக்கிறது.அதன் மேல் பாகம் உருண்டு நீளமாக இருக்கும்,அகம்பாவத்தை அழிக்கும் உருத்திரனை(சிவன்) குறிக்கிறது.ஆக மும்மூர்த்திகளைக் குறித்து நிற்கிறது.
கொடிமரத்தின் மேல் உள்ள உருவங்கள்:
சிவன் கோயிலில் நந்தியையும், பெருமாள் கோயிலில் கருடனையும், அம்பாள் கோயிலில் சிங்கத்தையும், முருகன் கோயிலில் மயிலையும், விநாயகர் கோயிலில் மூஞ்சுறுவையும், சாஸ்தா கோயிலில் குதிரையையும் கொடி மரத்தின் மேல்பகுதியில் அமைத்திருப்பார்கள். கொடிமரத்தில் உச்சியில் மூன்று பலகைகள் காணப்படும். கேரள ஆலயங்களில் ஒரே பலகை அமைந்திருக்கும். இவற்றை திருஷ்டிப்  பலகைகள் என்பது வழக்கம். அதில் ஒரு மணியும் கோர்க்கப் பட்டிருக்கும்.
கொடி மரத்தைக் காக்கும் பொருட்டுப்  பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால் கவசமணிவிப்பர். இதனால் வெயில், மழை போன்ற இயற்கை மாற்றங்களிலிருந்து கொடி மரம் காக்கப்படுகிறது.

வழிபாட்டிற்குச் செல்லும்போது மனம், உடல் தூய்மையாக இருக்க வேண்டும். வீடு, பணிச் சிந்தனைகளை மறந்து ஒருமித்த கருத்துடன் கோயிலில் நுழையவேண்டும். சலனம், சபலம், கோபம், வெறுப்பு போன்றவற்றை இங்கே பலியிட்டுச் செல், கடவுள் தரிசனம் வாய்க்கும் என்கிறது பலிபீடம். சந்நிதிக்குள் செல்லும் போது மனித உடம்பு ஒரு நடமாடும் பேட்டரியாக(மின்கலம்) மாறி விடும். மின்காந்தசக்தி பேட்டரியில் சேர்வது போல, கருவறையில் உள்ள தெய்வீகசக்தி உடம்புக்குள் குவியும். பிரகாரம் சுற்றி கொடிமரம் முன்பு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யும் போது, உடலுக்குத்  தேவையான ஆற்றல் போக, உடலில் இருக்கும் அதிகப் படியான ஆற்றல் பூமிக்குள் இறங்கி விடும். அது கொடிமரம் வழியாக மேலேறி பிரபஞ்ச சக்தியோடு (உலக சக்தி) இணையும். அதனால், தூயமனத்தோடு ஒருவர் கோயிலில் வழிபட்டால் போதும். அதன் பயன் மக்களுக்கெல்லாம் கிடைக்கும். 

கோயில் வழிபாட்டில் மூலவரை வணங்கியபின், பிரகாரத்தை வலம் வந்து கொடிமரத்தில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வர். கொடிமரத்தின் முன் ஆண்கள் அட்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும்.
அட்டாங்க வணக்கம்:- தலை,கையிரண்டு,செவியிரண்டு,புயங்களிரண்டு மேவாய்,என்னும் எட்டு அங்கங்களும் நிலத்தில் தோயும்படி வணங்குதல் வேண்டும்.
பஞ்சாங்க வணக்கம்:-தலை,கையிரண்டு,முழந்தாளிரண்டு என்னும் ஐந்து அங்கங்கள் நிலத்தில் தோயும்படி வழிபடல் வேண்டும்.
திரயாங்க வணக்கம்:-சிரசிலே இரண்டு கைகளையுங் குவித்தல். நிலத்தில் விழுந்து வணங்க முடியாதவர்கள் (முதியவர்கள்,முழங்கால் என்பு இழையம், முழங்கால் மென்சவ்வு இழையம் தேய்வடையும் குறையுடையவர்கள்) திரியங்க வணங்கத்தை மேற்கொள்வதில் தவறில்லை.
இவ்வணக்கமுறையை ஒரு தரம் இரண்டு தரம் பண்ணுதல் கூடாது. மூன்று தரம், ஐந்துதரம்,ஏழுதரம்,பன்னிரண்டு தரம் எனப்  பண்ணுதல் வேண்டும்.
நமது  பண்டைய காலத்துக்  கோவில்களில் கர்ப்பக் கிரகத்தின் நேர் எதிரில் தாமிர [Copper] உலோகத்தால் ஆன  கொடிமரம் அமைத்து இருப்பார்கள். இதற்கு அறிவியலார் கூறும் விளக்கம் இதோ:
 தாமிரம் [Copper] ஒரு கடத்தி [Conductor] மற்றும் ஈர்க்கும் சக்தி [Receiver] கொண்ட  உலோகம். அது மின் காந்த அலைகளையோ [Electro Magnetic Waves] அகிலக்கதிர்களையோ [Cosmic Rays] விண்மீன்திரளிலிருந்து [Galaxy] ஈர்த்துத்  தன்னைச்  சுற்றி அதை வெளியிடுகிறது [Emitting]. இது நமது உடலுக்கு மிகவும் நல்லது.
உயிர் பாசத்தை விட்டு இறைவனை அடைவதைக் குறிப்பது கொடிமரம்.
கொடிமரம் கடவுள்;  கொடிக்கயிறு திருவருட் சக்தி; கொடித்துணி ஆன்மா; தர்ப்பைக் கயிறு பாசம் எனப்படும். கொடியேற்றும் நிகழ்ச்சியானது மும்மல வயப்படும் ஆன்மா, திருவருட்சக்தியினாலே பாசம் அற்று, சிவஞான வடிவமாகிய பதியின் திருவடியை அடைதல் என்னும் தத்துவத்தை உணர்த்துவதாகும். கொடி மரத்தின் பீடம் பத்ரபீடம் எனப்படும். இங்கே இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு மனத்தைப் பலியிட வேண்டும் என்பதற்காக ஆன்மாவைப் பாசக்கயிறு சுற்றியுள்ளதை நினைவூட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றியிருக்கும்.   துணியில் உருவம் எழுதப் பெற்று வழிபாட்டில் வைத்துப் பூசித்துக் கயிற்றில் கட்டிக் கொடிமரத்தின் உச்சியில் ஏற்றுவர். திருவிழாவுக்கு வரும் அடியார்களைத் திருவருள் உயர்த்தி நற்கதிக்குச் செலுத்தும் என்பதே இதன் அடிப்படை உண்மையாகும்.கிறித்துவ ஆலயங்களிலும் முகமதியரின் தர்காவிலும் (நாகூர் ) திருவிழாவிற்கு முன்பாகக்  கொடியேற்றும் வழக்கம் உண்டு.
 லெயா

Aucun commentaire:

Enregistrer un commentaire