பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 29 janvier 2014

விழாக்கள்

 தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் விளக்குவனவற்றுள் திருவிழாக்கள் சிறப்பிடம் பெறுகின்றன.  பண்டைக் காலத்திலிருந்தே விழாக்கள் நடை பெற்றதை 'மடியா விழாவின் யாணர் நன்னாடு'  என்று புறநானூறு கூறுகின்றது. மடியா என்பது ஆண்டுதோறும் என்று பொருள்படும்.மக்களின் வாழ்வில் சோர்வினைப் போக்கி இன்பமும் மலர்ச்சியும் புத்துணர்ச்சியும் ஊட்டுவன விழாக்கள். கொண்டாட்டமும் மகிழ்ச்சியும், பொழுது போக்கும் நல்லுறவுமே விழாக்களின் நோக்கமாகும்.

பண்டைய மக்களின் திருவிழாக்கள் மன்னனைச் சார்ந்து அமைவது வழக்கம்.  கிள்ளி வளவனின் பிறந்த விழாவாகிய இரேவதித் திருநாளில் எல்லாரும் பரிசில் பெற்ற நிலையை (முத்தொள்ளாயிரம் - 82) பாடலும்; தென்னன் பிறந்த திரு உத்திராடத் திருநாள்  திருவிழாக்களாகக் கொண்டாடப்பட்ட நிலையினை (முத்தொள்ளாயிரம் - 7) பாடலும் உணர்த்துகின்றன.
 இவை தவிரப்  போரில் மன்னரின்  வெற்றியும் விழாவாகக்  கொண்டாடப்பட்டதை
 ‘அரும்பவிழ்தார்க் கோதை அரசெறிந்த ஒள் வேல்
பெரும்புலவும் செஞ்சாந்தும் நாறிச் - சுரும்பொடு
வண்டாடும் பக்கமும் உண்டு குறுநரி
கொண்டாடும் பக்கமும் உண்டு’.(முத்தொள்ளாயிரம் - 109) என்னும் பாடலால் அறியலாம்.
போரில் மாற்றாரை வேலால் வீசி அழித்த சேரன், பின்பு, அந்த வேலுக்குப் பாராட்டும் விழா நடத்துகின்ற நிலையையே இப்பாடல் விளக்குகிறது. சங்க காலத் தமிழர்கள் சிற்றூரிலும், பேரூரிலும் கொண்டாடிய விழாக்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் கிடைக்கின்றன. அவற்றுள் சில,  சமயம் சார்ந்தவை வேறு சில சமூகம் தொடர்புடையவை.
சங்க காலத் தமிழர்கள் கொண்டாடிய சமய விழாக்களில் குறிப்பிடத் தகுந்தது கார்த்திகைத் திருவிழாவாகும். கார்த்திகை விண்மீனை, ‘அறுமீன்’ என்று நற்றிணைச் செய்யுள் ஒன்று குறிக்கின்றது.
திருமாலோடு தொடர்புடைய விண்மீன் திருவோணமாகும். இந்நாளில் கொண்டாடிய விழா ஓண விழாவாகும் என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது.
இவ்வோணம் கேரள மாநிலத்தில் வசிக்கும் மக்கள் மட்டும் கொண்டாடும் விழாவாக  இன்று மாறிவிட்டது
தைத் திங்களில் மகளிர் ஆறு, குளங்களில் நீராடுவது பற்றிய குறிப்புகள்  (கலித்தொகை, பா.எ., 13) (ஐங்குறுநூறு, பா.எ., 84.) நற்றிணை, பா.எ., 80)
காணப்படுகின்றதன . பின்னால் இதனையே மார்கழி நீராட்டு என்றனர்.
தமக்கு வாய்க்கும் கணவன்மார் நற்பண்புடையவராதல் வேண்டும் என வேண்டிப் பெண்கள் எடுத்த இந்நோன்பு பிற்காலத்தில் சமயத் தொடர்பு பெற்றதை ஆண்டாள், மாணிக்கவாசகர் பாடல்களால் அறிகின்றோம்
இளவேனில் விழா:
இளவேனில் காலம் காமவேளுக்குரியதாகக் கொள்ளப்படும்.காமவேள் விழாவின்போது காதலர்கள் களித்து விளையாடுவர்.சிலப்பதிகாரம் இதனை இந்திரா விழா எனக்  குறிப்பிடுகிறது.
திருப்பரங்குன்றத்து விழா:
முருகப்பெருமான் வள்ளியை மணந்து கொண்டதை மணவிழாவாகக் கொண்டாடினர். (பரி., 19-வது பாடல்). பாண்டிய மன்னன் தன் பரிவரத்தோடு இவ்விழாவிற் கலந்து கொண்டான்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது எனக்  குறள் குறிப்பிடுகிறது. 

கடவுளருக்கு மற்றுமன்றிக்  காவல் தெய்வம் போன்ற சிறு  தெய்வங்களுக்கும்  விழாக்கள் எடுக்கப்பட்டன. அன்னக்கொடி விழா, பொங்கல் விழா, சித்திரைத் திருவிழா, அந்தந்த ஊர்களில் கொண்டாடப்படும் தேர்த் திருவிழா என்று கொண்டாட்டங்களுக்கு அளவே இல்லை எனலாம்.
தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் பெரும்பாலும்  விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.கோவில் திருவிழாக்களில் கண்டிப்பாகத்  தேரோட்டம் நடைபெறும்.கடவுள்களை வாகனங்களில் ஏற்றி வீதியுலா வருவர்.
வாண  வேடிக்கையும் உண்டு. தேர்த் திருவிழாவின்போது, பல ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள் ஒன்றாகக் கூடித் தேரை இழுக்கிறார்கள். இறைவனின் திருவருளைப்  பெறவும் ஊர் மக்களின் ஒற்றுமைக்கும் இத்தகைய விழாக்கள் வழிகோலுகின்றன.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திலும் தூத்துக்குடி பனிமயமாதா கோவிலிலும் தேர்த் திருவிழா மிகச்சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறுவது  அனைவரும் அறிந்ததே.
முருகனின் வழிபாட்டு விழாக்களில் காவடி எடுத்தல், அலகு  குத்துதல் போன்ற சிறப்புகள் உண்டு.
சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம்,சல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய கலைகளை வளர்ப்பதற்காகவும் இவ்விழாக்களை நம் முன்னோர் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.இன்றும் பொங்கல் விழாவில் இவை இடம் பெறுகின்றன.
 வளையல் கடை, ரிப்பன் கடை, பொரிகடலைக் கடை, நீர் மோர்க்கடை,  கரும்புச்சாறுக் கடை, மிட்டாய்க் கடை மற்றும்  இராட்டினம் போன்றவற்றைக் கிராம திருவிழாக்களில் காணலாம்.
ஏழைகளும் குடும்பமாக வந்து மகிழ்ந்து கொண்டாடும் விழாக்கள் தொடர்ந்து என்றென்றும் நடந்து கொண்டேதான் இருக்கும். விழாக்களுக்கு முடிவே இல்லை எனலாம்.                             
                                                             

Aucun commentaire:

Enregistrer un commentaire