பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 29 janvier 2014

தமிழர் புத்தாண்டு

 புத்தாண்டில் புத்துலகைப் படைக்கப் புறப்படும் தமிழினமே,  நில்! உன் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு எங்கே தொடங்குகிறது என அறிவாயா நீ, சொல்! சித்திரை மாதத்தில் புத்தாண்டு என்றிருந்த நிலை மாற்றிய தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராவது தெரியுமா உனக்கு? அறியாமை தவறில்லை, அறிந்துகொள்ள விரும்பாமையே பெருந்தவறு! உண்ணல் உறங்கல் பெண்டிரை நண்ணல் என்ற உருப்படா வட்டத்துள் உலா வரும் தமிழினமே, கன்னல் மொழி தமிழுக்கெனத் தனிப் புத்தாண்டைத்  தம் ஆராய்ச்சித் திறத்தாலே உருவாக்கித் தந்தவர் மறைமலை அடிகளார்! தனித் தமிழின் தந்தை இவர்! அன்றிருந்த தமிழகத்தில், வடமொழி கலவாமல் நடை போட முடியாது தமிழ் என்று தவறாகக் கருதி இருந்த நிலையை உறுதியாக நின்று மாற்றியவர். தனித்தமிழ்க் கொடியை ஏற்றியவர். வட மொழியோ பிற மொழியோ ஏதும் கலவாமலேயே வடிவாகத் தனித்தமிழ் எழுதிட முடியும் என எண்பித்தவர். 'வேதாச்சலம்' என்ற தன் வடமொழிப் பெயரை, 'மறைமலை' என மாற்றிக்கொண்டவர். இல்லறத்திலிருந்து ஒதுங்கித் துறவறம் பூண்டதால் 'அடிகள்' என்ற பின்னடை சேர 'மறைமலை அடிகள்' ஆனவர். வடமொழி படித்தவர், ஆங்கிலப் புலமை மிக்கவர், தமிழ் அறிஞர்! 'மணிவாசகர் வரலாறும் கால ஆராய்ச்சியும்', 'முல்லைப் பாட்டு - மூலம், ஆராய்ச்சி உரை' போன்ற ஆய்வு நூல்களின் ஆசிரியர். ஆராய்ச்சிப் பேரறிஞர். திருவள்ளுவர் காலம் பற்றிப் பெருமளவு ஆராய்ச்சி மேற்கொண்டு ஆழமாகவும் அகலமாகவும் ஆய்வு செய்த பின், கிறித்துவுக்கு 30 ஆண்டுகட்கு முன்னர் வள்ளுவர் பிறந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு இவர் வந்தார்.

சென்னையில் திருவள்ளுவர் கழகம் 18 01 1935 -இல் வள்ளுவருக்கு விழா எடுத்தது. இவ்விழாவில் தமிழ்த் தென்றல் திருவாரூர் வி; கலியாண சுந்தரனார் (திரு. திரு வி; ), முத்தமிழ்க் காவலர் திரு கி..பெ. விசுவநாதன் (திரு கி..பெ)... போன்ற தமிழறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவுக்குத் தலைமை தாங்கிய மறைமலை அடிகளார், ”கிறித்து பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்ப திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்என அறிவித்துத் திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார். கிறித்து     ஆண்டுடன் 31 அண்டுகளைக் கூட்டித் திருவள்ளுவர் ஆண்டைக் கணக்கிட வேண்டும் என்பது அடிகள் குறிப்பு. இதனை அறிஞர்கள் அவை ஏற்றக்கொண்டது. அன்று தொட்டு அவ்வாண்டு நடைமுறைப் படலாயிற்று. (காண்க : 'திருக்குறள் வாழ்வியல் உரை' - மதுரை இளங்குமரனார். வர்த்தமானன் பதிப்பகம்.)

 '1969 -இல் கலைஞர் அவர்கள் தமிழ் நாட்டு ஆட்சிப் பொறுப்பு ஏற்றபின், பொங்கலுக்கு அடுத்த நாளைத் திருவள்ளுவர் நாளாகக் கொண்டு அரசு விடுமுறை அளிப்பது என்றும் 01 01 1970 முதல் அது நடைமுறைக்கு வரும் என்றும் ஆணை  இட்டார். திருவள்ளுவர் ஆண்டு முறையைத் தமிழ் நாடு அரசு ஏற்று 1971 முதல் அரசு நாட் குறிப்பிலும், 1972 முதல்  குறிப்பாக அரசிதழிலும், 1981 முதல் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது. தைத் திங்கள்  2 ஆம் நாளைத் திருவள்ளுவர் நாள் என்று அரசு 1974 முதல் கொண்டாடி வருகிறது.' (காண்க : திருவள்ளுவர் நினைவு மலர் பக்கம் 117). இதுதான் திருவள்ளுவர் ஆண்டின் பிறப்பு, வளர்ப்பு, வரலாறு.
திருவள்ளுவர் ஆண்டின் வரலாற்றை அறிந்துகொண்டதோடு நிற்காமல் தமிழர்களாகிய நாம், தமிழ் உணர்வோடு; அந்த ஆண்டு முறையைப் பின்பற்ற வேண்டாவா? கிறித்து ஆண்டோடு 31 ஆண்டுகளைக் கூட்டிக்கொள்ளுங்கள் - திருவள்ளுவர்  ஆண்டு கிடைத்துவிடும். எடுத்துக் காட்டாக, இந்த ஆண்டைக் கிறித்து ஆண்டு முறைப்படி 2005 என எழுதுகிறோம். இத்தோடு   31 -ஐக் கூடடினால் 2036 வருகிறது அல்லவா! அவ்வளவுதான். இதுதான் திருவள்ளுவர் ஆண்டு.

 மறைமலை அடிகள் காட்டிய தனித்தமிழ் உணர்வு நம்மிடையே மலர வேண்டும், அடிகளார் ஊட்டிய  அந்த உணர்வு இன்னும் வளரவேண்டும். ”தமிழ் மக்கள் தங்கள் தாய் மொழியாகிய தமிழைப் பயில வேண்டியது அவர்களது இன்றியமையாத கடமை. தமிழர், தம் தாய் மொழியை ஆங்கிலம்  முதலிய மொழிகளைவிட முதன்மையாகக் கருத வேண்டும்!”  சொல்பவர் யார் தெரியுமா? காந்தி அடிகளேதான்! (காண்க : 'காந்தி அடிகள் வலியுறுத்திய தமிழ் உணர்வு' லேனா தமிழ்வாணன், குமுதம் 24.05.2004). அன்று அண்ணல் காந்தி சொன்ன அறிவுரை இன்றும் நமக்குப் பொருந்துகிறதே! பல நிலைகளில் தமிழைக் கோட்டை விட்டிருக்கிறோம். பாருங்களேன், 60 ஆண்டுச் சுழற்சியில் நாம் புழங்கி வந்த, பிரபவ என்று தொடங்கி அட்சய என நிறைவு பெறும்  ஆண்டுகளின் பெயர்களைப் பாருங்கள். ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லையே! அத்தனையும் வடமொழிப் பெயர்களின் தமிழ் வடிவங்கள். ஆங்கிலேயனை விரட்டிய பிறகும் ஆங்கிலத்தைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறோம். வடமொழிக்கு விடைகொடுத்து அனுப்பிய பிறகும்  புரியாத  இந்த வடமொழிப் பெயர்கள் நமக்கு எதற்கு? இனிய தமிழ்க் கனிகள் இருக்க கனியாத காய்கள் மேல் இன்னும் ஏன் உவப்பு? திருவள்ளுவர்  ஆண்டைப் பயன் படுத்தினால் இந்த வடமொழிச் சிக்கல் எழாது, தமிழனின் தனிப் பெரும் தன்மானமும் விழாது! ஆகவே, திருவள்ளுவர் ஆண்டு முறையைப் பயன்படுத்துவோம், எங்கும் எதிலும் எப்போதும்!

 சரி சரி, வடமொழிப் பெயர்களைத் தாங்கிய 60 ஆண்டுச் சுழற்சியை ஓரங்கட்டி விட்டோம். இனி தமிழ் மாதங்களின் இல்லை, இல்லை - தமிழ்த் திங்கள்களின் பெயர்களைப் பார்ப்போமா? தை முதல் மார்கழி ஈறாக உள்ள 12 திங்கள்களுக்கும் தனித்தமிழ்ப் பெயர்கள் உண்டு. அவை எவை என அறிவீர்களோ? மிக மிக முற்காலத்திலேயே தமிழன் வகுத்துத் தந்த கால அட்டவணை (உயடநனெசநைச உயடநனெயச) வான வெளியில் ஞாயிறு வலம் வருதலை அடிப்படையாகக் கொண்டது. இந்த வான மண்டலத்தைப் பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பெயர் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் கண்ணுக்குப் புலனாகும் விண்மீன்களைக் கற்பனைக் கோடுகளால் இணைத்துப் பெறும் உருவங்களின் அடிப்படையில் பெயர்கள் இடப்பெற்றுள்ளன. இப்படிப் பெயர் கொடுத்தவர்கள் கிரேக்க வானியலார் என்பர். அவர்கள் பயன்படுத்திய சொல் என்ன தெரியுமா? horos'. இன்று ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் பல சொற்களுக்கு, 'horoscope,  horodateur, hour, here, year .' இச்சொல்லே வேர்ச் சொல். இந்த horosஎன்ற கிரேக்கச் சொல்லுக்கு 'boundary, limit, border  ' என்று பொருள். (காண்க : On line etymology dictionary & The American Heritage dictionary). இந்தச் சொல்லுக்கு மூல வேர்ச்சொல் தேடப் போனால் நம் தமிழுக்குத்தான் வர வேண்டும். பக்கம், விளிம்பு எனப் பொருள்படும் ஓரம் என்ற சொல்லின் அடிப்படையில் பிறந்த சொல் ஓரை. (காண்க : தமிழ்மொழி அகராதி - நா. கதிரைவேற்பிள்ளளை) இந்த ஓரை என்ற சொல்லின் கிரேக்க வடிவம்தான் 'hழசழள'. வானப் பகுதிகள் பன்னிரண்டிலும் ஞாயிறு தங்கிச் செல்லும் பக்கத்தைத் தமிழர்கள் ஓரை என்று அழைத்தார்கள். இதற்கு வடமொழியில் 'இராசி ' என்று பெயர். கிரேக்கத்துக்கு ஏற்றுமதி ஆனது ஓரை என்ற தமிழ்ச் சொல் மட்டும் அல்ல, அஃது உணர்த்தும் பொருளும் தமிழர்களின் வானியல் அறிவும்தான். ஆக, தமிழர்கள் கண்ட 12 ஓரைகளைத்தான் கிரேக்கர்களும் கண்டனர். இவற்றின் பிரஞ்சு, ஆங்கில, கிரேக்க, தமிழ்ப் பெயர்களையும் அவற்றுக்கு உரிய (தற்காலத்தில் உலகம் நெடுக வழங்கும்) குறியீடுகளையும்  எதிர் வரும் பட்டியலில் காண்க.

ஞாயிறு எந்த ஓரையில் தங்குகிறதோ, அந்த ஓரையின் பெயரையே அந்தத் திங்களுக்கு (மாதத்தக்கு)ப் பெயராய் இட்டனர் தமிழர். கிரேக்கர்களும் உரோமர்களும் இம்முறையைப் பின் பற்றவில்லை. எனவே, தமிழர்களாகிய நாம் நம் திங்கள்களுக்கு (மாதத்துக்கு)ச் சுறவம் முதல் சிலை ஈறாக உள்ள தனித் தமிழ்ப் பெயர்களைப் பயன்படுத்துதல் வேண்டும். முதலில் கடினமாகத் தோன்றினாலும் பழகியபின் இவை எளிமையாகிவிடும்.
வார நாள்கள் ஏழினுக்கும் கோள்களின் பெயர்களை இட்டனர் தமிழர். இம்முறையைக் கிரேக்கர்கள் பின்பற்றவில்லை, உரோமர்களோ மிகப் பிற்காலத்தில் தான் இம்முறையைக் கடைப்பிடித்தனர். கிழமை என்ற சொல்லுக்கு 'உரிமை' என்று பொருள். எனவே, ஞாயிற்றுக்கு உரிய நாள் என்ற பொருளில் ஞாயிற்றுக் கிழமை என்கிறோம். புதன், சனி என்பன தமிழ்ச் சொற்கள் அல்ல. ஆகவே, அவற்றுக்கு ஈடான அறிவன், காரி என்ற தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துதல் நன்று.

ஆக, தமிழர்களின் புத்தாண்டு அதாவது வள்ளுவர் ஆண்டு சித்திரைத் திங்களில் தொடங்கவில்லை மாறாகச் சுறவம் முதல்நாள் (சனவரி 14) தொடங்குகிறது என்பதை நினைவில் கொண்டு நம் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை அமைத்துக்கொள்ள வேண்டியது தமிழர்களாகிய நம் கடமை.
எனவே, இனி ஒரு விதி செய்வோம், அதனை எந்நாளும் காப்போம் :
திருவள்ளவர் ஆண்டே இனி நம் ஆண்டு!
சுறவத் திங்கள் முதல் நாளே நமக்குப் புத்தாண்டின் முதல் நாள்.
சுறவம் முதல் சிலை ஈறாக உள்ள திங்கள்களின் தனித்தமிழ்ப் பெயர்களையே நாமினி பயன்படுத்துவோம்.
கிழமைகளின் பெயர்களையும் தனித்தமிழிலேயே எழுதுவோம் ...”
என்ற உறுதிமொழியை இன்று எடுப்போம்!
வடமொழியோ பிறமொழியோ விட்டொழிப்போம்!
நம் அருமைத் தமிழ் மொழியாலே நாம் செழிப்போம்!
வாழ்க திருவள்ளுவர் ஆண்டு, வளர்க நம் தனித்தமிழ்ப் பற்று!
 
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பாரிசு


Aucun commentaire:

Enregistrer un commentaire