அன்புடையீர்,
வணக்கம். மனிதனுக்குத் தனிமையும், தன் குடும்பம், தன்
சுற்றம் என்ற உணர்வும், அதன்பாற்பட்ட சுயநலமும் எந்த அளவு உண்டோ அந்த அளவு
அவனுக்கு கூட்டமும், ஆரவாரமும், அதில் கலந்து கொள்ளும் ஆர்வமும் உண்டு.
முகமறியா மனிதரானாலும், மணிக்கணக்கில் அளவளாவி பகிர்ந்து, செய்திகளைக்
கொடுத்தும் வாங்கியும் இணைந்து விடும் இயல்பு உண்டு. தன் எல்லை
இழக்காமல்,இனிமை பெறும் நேரமது. அவன் அழுத்தத்திற்கு ஓர் வடிகாலாய், மனதை
இலேசாக்கும் சூழல் அது.
இதன் பொருட்டே பண்டிகைகளும், திருவிழாக்களும்
தோன்றியிருக்க வேண்டும். குடும்ப விழாக்கள் என்றால் கையைக் கடிக்கும்
சமாச்சாரம் அது. வரும் கூட்டத்தினரிடையே பேசத் தெரியாத ஒருவர் இருந்தால்
போதும். அவ்விழா நினைக்கவே அமைதி இழக்கச் செய்யும் ஓர் நிகழ்வாகப் பதிந்து
விடும். இந்த அபாயம் ஏதுமின்றி உரையாடி மகிழ திருவிழாக்கள் உதவுகின்றன.
மேலை நாடுகளில் 'பால்' என்ற பாடலுக்கு ஆடுவதும்,
உண்பதும் அருந்துவதுமாக உள்ள ஒன்று தான் நினைவுக்கு வருகிறது. ஆனால்
நம்மவர்கள் புத்திசாலிகள். அரிசி விளைந்தால் ஒரு விழா. மாதம் பிறந்தால் ஒரு
கொண்டாட்டம். மாட்டைப் பிடிப்பதற்கு ஒரு திருவிழா. கோலத் திறமையைக் காட்ட
ஒரு மாதம், அசுரன் ஒழிந்தால் அதற்கோர் பண்டிகை என்று வாழ்வின் போக்கோடுப்
பிணைத்து அவற்றை சுவைக்கச் செய்திருக்கிறார்கள்.
பக்தி மனித மனங்களில் தானே படிந்துள்ள ஒன்று. ஆனால்
நம் விழாக்கள் அதைத் தூண்டும் விதமாக எப்படி எப்படியெல்லாம்
மலர்ந்திருக்கின்றன! தெய்வத்தையே தேரில் அமர வைத்து, நம்மைப் போல் அதற்கொரு
வாழ்க்கைக் கதையைப் புனைந்து,ஒவ்வொரு நிலையிலும் என்ன செய்ய வேண்டும்
என்பதை தெய்வங்கள் செய்ததாக வர்ணித்து அதோடு ஒன்றிப் போகச்செய்து
விடுகிறார்கள்!
உலகில் எத்தனையோ பேர் உண்பதற்கு ஏதுமில்லாமல்
இருக்கும் போது விழாக்கள் தேவைதானா என்று கேட்போர் உண்டு. எப்போதும்,
எதிலும் ஓர் காரணம் இருக்கும். ஆனால் நாளடைவில் காரணம் மறந்து அல்லது
மறைந்து, காரியம் மட்டுமே சம்பிரதாயமாக நடந்து கொண்டிருக்கும். பணத்தை
வெளிக்காட்டும் அம்சமாக இதைக் கொள்ளாமல் விசாலமான மனதோடு அனைவரும் இணைந்து
மகிழ வேண்டும் என்ற ஒரே நோக்கோடு பார்த்தால் பண்டிகைகளும் திருவிழாக்களும்
மனிதனின் அன்றாட வாழ்க்கைச் சுமையிலிருந்து மூச்சு விடவைக்க உதவும்
நிவாரணியே அன்றி வேறல்ல!
திருமதி சிமோன்
Aucun commentaire:
Enregistrer un commentaire