பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 29 janvier 2014

கோலம்

பண்டிகைகள்,  கோயில் திருவிழா, பண்பாட்டு நிகழ்வுகள், திருமணம் போன்ற எந்த நல்ல காரியமானாலும் அவற்றில் வாழை மரம், மாவிலை, கோலம் ஆகிய மூன்றும் நிச்சயம் இருக்கும்.
கோலம் என்றதும் என் இளமைக்கால  நினைவுகளை  மனம் அசை போடுகிறது  தாம்பரம்  ரயில்வே காலனியில்  .நான் குடியிருந்த காலம் அது.
காலனியில் வசித்தவர்கள்  பெரும்பாலும் இந்துக்கள்.அங்கொன்றும்  இங்கொன்றுமாகக்  கிறித்துவர்கள் குறிப்பாக ஆங்கிலோ இந்தியர்கள் வசித்து வந்தோம்.இரண்டு வீடுகளுக்கு இடையே  சந்து கொண்ட வரிசை எங்களது. காலையில் எல்லா வீடுகளிலும் வாசலைப் பெருக்கி நீர் தெளித்துக்  கோலமிட நானும் என்  தமக்கையும் அவற்றைப்  பார்த்தபடியே  பெற்றோருடன் காலை திருப்பலிக்குச்  செல்லுவோம். எங்கள் வீட்டில் வேலை செய்யும் ஆயாவோ   அம்மாவோ  சின்ன கோலம் எங்கள் வாசலில் போடுவார்கள்.மார்கழி மாதம் வந்துவிட்டால் எங்கள் பக்கத்து வீட்டார் (நாயுடு) எங்கள் வாசலையும் ஆக்கிரமித்துக்கொண்டு வீட்டில் இருக்கும் மகளிர் (அம்மா, இரண்டு மகள்கள்) பெரிய பெரிய கோலம் போட்டு அசத்தி விடுவார்கள்.அவர்கள்  வீட்டுக் கோலத்தின் நடுவில் சாணி உருண்டையில் பறங்கிப் பூவைச் செருகி வைத்திருப்பார்கள்.எதிர் வீட்டில் உள்ள நண்பர் (அவரும் நாயுடுதான்) கிண்டலாகச்  சொல்வார். 'ஆண்டி உங்கள் வீட்டுக்  கோலத்தில் கேக் வைத்து ரோஜா பூ வைக்கலாமே" என்று.
நானறிந்த சின்ன  சின்ன புள்ளிக் கோலங்கள்  விரல் விட்டு எண்ணக்கூடியவை. அதனால்அழகாகக்  கோலம் போடுபவர்களைப்  பாராட்ட நான் தவறியதே இல்லை. இந்த இலட்சணத்தில் கோலப்  போட்டி ஒன்றுக்கு என்னை நடுவராகப்  போட்டார்கள். எப்படிச்  சமாளித்தேன் என்று அறிய ஆவலா? கண்ணைப்  பறிக்கும் வகையில் பல கோலங்கள் இருந்தாலும் முதல் பரிசுக்கான என்  தேர்வு சிக்கலான புள்ளிக் கோலம்தான். அடுத்து புள்ளிக் கோலத்தை அடிப்படையாகக் கொண்ட கம்பிக்  கோலம். மூன்றாவது இடத்தைப்  பெற்றது பல வண்ணங்களில் வரையப்பட்ட ரங்கோலி. என்ன உங்களுக்கும் உடன்பாடுதானே? கோலம் போடுவதை இரசிக்கவாவது தெரிந்ததே.என் முதுகில் நானே தட்டிக்கொண்டேன்.கோலம் பற்றி எனக்குத்  தெரிந்த செய்திகளைப்  பகிர்ந்து    கொள்கிறேன்.
காலையில், வாசலில் சாணம் தெளித்து, பெருக்கி, கோலம் போடுவது தமிழர் மரபு.கோலமிடுவது வாசலுக்கு அழகு செய்வது மட்டுமல்ல, மங்கலகரமானதும் கூட. வீட்டுக்கு வருபவர்களை வரவேற்பதற்கான அடையாளமாகவும், வீட்டில் வசிப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தைக்   கொண்டுவரும் அதாவது   மகாலட்சுமி வந்து தங்குவாள் என்பது ஐதீகம்.பனி பெய்யும் மார்கழி  மாதத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் உண்டு.

மார்கழியில் என்ன விசேஷம்?

இந்த  மாதத்தில்தான் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறான். அதாவது டிசம்பர் முதல் மே வரை சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கு நகர்கிறான். சூரியனின் போக்கில் மாற்றங்கள் நிகழும் போதும், பூமிக்கும் சூரியனுக்குமான தொடர்பில் மாற்றங்கள் ஏற்படும்போதும் சக்தி சூழ்நிலை உருவாகிறது.அந்த சக்தியை நமக்கு சாதகமாகப்  பயன்படுத்திக் கொள்ளவும் நம் இல்லத்தில் அந்த சக்த்தியைத்  தங்கவைத்துக் கொள்ளவும் பயன்படும் ஒரு யுக்திதான் கோலம் போடுதல்.மார்கழி மாதத்தில் அதற்கான வாய்ப்பு மிகத் தீவிரமாக உள்ளதாம்.
அரிசி மாவில் கோலம் போடுவது சம்பிராதயம்.சகல உயிர்களையும் தன்னுயிர் போல் பாவித்து அவற்றுக்கும் உணவளிக்கும் உயர்ந்த தானம் இதில் மறைந்து  இருக்கிறது.பச்சரிசி மாவில் கோலம் போட்டால் அந்த மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிட்டபின், மீதமிருக்கும் அரிசி மாவை எடுத்துச் சென்று தங்கள் வலைகளில் சேமித்து வைக்கும்.ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சிப்படுத்தும், இந்த முறையைப் போல் ஆன்ம நேயத்தையும், ஆன்மீகத்தையும் சிறப்பிக்கும் செயல் வேறு  இல்லையெனக் கூறலாம்.மாக்கரைசலினால் போடப்படும் கோலங்கள் காய்ந்த பின்னர் நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கக்கூடியது.உணவுக்கே அரிசி இல்லாத மனிதன் கோலம் போட  அரிசிக்கு எங்கே போவான் . அதனால் மாக்கோலத்தை வலியுறுத்திய இந்து மதம் மண்ணால் போடுகின்ற கோலத்தையும் தவறில்லை என்று ஏற்றுக்கொண்டது.தற்பொழுது வெள்ளைக் கல்பொடியைப் பயன்படுத்துகின்றனர்.பொதுவாக தமிழ்நாட்டுக் கோலங்களுக்கு நிறமூட்டுவது இல்லை. ஆனால் செம்மண் பூசும் வழக்கம் உண்டு. அதாவது போட்ட கோலத்தை சுற்றி செம்மண் கரைசலால் எல்லைகோடு இடுவர்.
கோலங்களை அவை வரையப்படும் முறையை ஒட்டிப்  புள்ளிக் கோலம், கம்பிக் கோலம் என இரண்டு வகையாக பிரிக்கலாம்.
புள்ளிக் கோலம்:
புள்ளிக் கோலம் என்பது, கோடுகளை வரையும் முன்,  புள்ளிகளை இட்டுக்கொண்டு அதன் அடிப்படையில் வடிவங்களை வரைவதாகும். இது மிகவும் சிக்கலான ஒன்று. இதைப் போடுவதற்கு நுட்பமான அறிவு தேவை. புள்ளிகளிடுவதிலும்  இருவித முறைகள் உள்ளன. ஒரு வகையில் கிடைவரிசையிலும், நிலைக்குத்துவரிசையிலும் ஒரு சதுர வலைப்பின்னல் வடிவில் அமையும்படி புள்ளிகள் இடப்படும். இரண்டாவது முறையில், நிலைகுத்தாக வரும் புள்ளித்தொடர்களில் (நிரல்கள்), ஒன்றுவிட்டு ஒரு நிரல்களிலுள்ள புள்ளிகள் ஒரே கிடைக் கோட்டிலும், அவற்றினிடையே வரும் நிரல்களிலுள்ள புள்ளிகள், முன்கூறிய வரிசைகளுக்கு இடையிலும் வரும். இவ்வாறு போடப்படும் புள்ளிகள் சமபக்க முக்கோண வலைப்பின்னல் வடிவில் அமைந்திருக்கும். இவ்விரு வகைகளையும் முறையே:நேர்ப் புள்ளிகள், ஊடு புள்ளிகள் என்பர்.
Pulli sq.jpg
Pulli dia.jpg
Pulli oodu.jpg
சதுர வலைப்பின்னல்
வடிவில் புள்ளிகள்

நேர்ப் புள்ளிகள்
ஊடுபுள்ளிகள்
இப் புள்ளிக் கோலங்களும்,  கோடுகள் வரையப்படும் முறைபற்றி இருவகையாகப் பகுக்கலாம்.
  • புள்ளிகளைக் கோடுகளால் இணைப்பதன் மூலம் வடிவங்களை உருவாக்கல்.
Nerkodui-1.jpg
Joint valaikoodu.jpg
நேர்க் கோடுகளால்
இணைக்கப்பட்ட
புள்ளிகள்

வளைகோடுகளால்
இணைக்கப்பட்ட
புள்ளிகள்
  • புள்ளிகளில் தொடாது, அவற்றுக்கு இடையில் வரையப்படும்  வளை கோடுகள் மூலம் வடிவங்களை உருவாக்கல்.
Valikodui-3.jpg
Valikodu-2.jpg
புள்ளிகளூடு
வளைகோடுகள்-1

புள்ளிகளூடு
வளைகோடுகள்-2எல்லைக் கோடுகள், படிக்கட்டுகளில்   போடவும் தொடர் கோலங்கள் உண்டு. பல டிசைன்களில் ஓட்டை இடப்பட்டு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட  தகர டப்பாக்களில் கோலப் பொடியை நிரப்பியும் இந்த கோலங்களைப்  போடலாம்.

கம்பிக் கோலம்
 கம்பிக் கோலம் என்பது கோடுகளை எளிமையான வடிவவியல் ஒழுங்குகளில் வரைவதன் மூலம் அழகிய சீரான வடிவங்களைப் பெறுதலைக் குறிக்கும்.
நிறக்கோலம் அல்லது வண்ணக்கோலம்:
இந்தி மொழியில் இதனை "ரங்கோலி" என்பர். இது ரங், ஆவலி என்னும் இரு சமசுக்கிருதச் சொற்களின் இணைப்பால் உருவானது.  ரங் என்பது நிறம் என்னும் பொருளையும், ஆவலி என்பது வரிசை அல்லது கொடி என்னும் பொருளையும் தருவன. இந்த நிறக்கோலத்தை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர். இராஜஸ்தானில்          இதை மதானே என்பர். வட இந்தியாவின் சில பகுதிகளில் சவுக்பூர்ணா என்றும்,வங்காளத்தில் அல்பனா என்றும்,பீகாரில்     அரிப்பனா என்றும், உத்தரப் பிரதேசத்தில் சவுக் பூஜன் என்றும் இதற்குப் பெயர் உண்டு.

புள்ளிகள் இல்லாது கோலம் போட்டால் கற்பனைக்கு தகுந்தவாறு சுதந்திரமாக வடிவங்களை உருவாக்கலாம் என்பதால் பெரும்பாலானோர் ரங்கோலி போடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.அளவும் வசதிக்கு ஏற்ப மாறுபடும். நிறக்கோலங்களுக்கான வடிவங்களின் எண்ணிக்கைக்கு எல்லை கிடையாது. திறமை உள்ளவர்கள் சில அடிப்படைகளை முன்வைத்துப் புதிது புதிதாக வடிவங்களை உருவாக்கிக் கொள்வர்.ரங்கோலி போடும் போது, அதில் நிறங்களை நிரப்ப பொதுவாக கோலப் பொடியில் கலந்து தான் நிரப்புவோம்.முற்காலத்தில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களிலிருந்து பெறப்படும் நிறப்பொடிகள் நிறக்கோலம் இடுவதற்குப் பயன்பட்டன.எடுத்துக் காட்டாக மஞ்சள் தூள், பல நிறங்களிலான மண், செங்கல் பொடி.பல்வேறு நிறங்களில் உள்ள பயறு,மைசூர்ப் பருப்பு, உளுந்து, அரிசி போன்றவையும் பயன்படுகின்றன.ரவை, மரத்தூள்,  பயன்படுத்திய  தேங்காய்த் துருவல் போன்றவற்றுக்கு விரும்பிய நிறம் ஏற்றியும் பயன்படுத்துவர். தற்காலத்தில் செயற்கைச் சாயங்களைக்கொண்டு நிறமூட்டிய பொடிகள் பயன்படுகின்றன. சற்று வித்தியாசமாக உப்பில் கலந்தும் போடலாம்.கலர் பொடியை கல் உப்பில் கலந்து, கலர் கொடுத்தால் அவை லேசாக மின்னும். கோலத்திற்கு அழகை அதிகரிக்கும்.மேலும் சிலர் கோலத்துக்கு அழகூட்ட சிறு விளக்குகளை வைக்கின்றனர். பல்வேறு நிறங்களிலான பூக்களின் இதழ்களையும், இலைகளையும் பயன்படுத்தியும் அழகிய நிறக்கோலங்களை இடுவதுண்டு.  கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையில் பூக்கோலம் மிகவும் பிரசித்தி பெற்றது.  பெண்கள் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து கோலங்கள் இட்டுத்  தும்பை, காக்கப்பூ, தேச்சிப்பூ, முக்குட்டி, செம்பருத்தி, கொங்கினிப்பூ, அனுமன் கிரீடம், சேதிப்பூ ஆகிய  பூக்களினால் கோலத்தை அலங்கரித்து.ஆடிப்பாடி மகிழ்வர்.

கோலம் போடுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அது  அழகியல் சார்ந்த கலை. அந்தக்  கலை உணர்வு இருந்தால், நிச்சயம் கோலம் போட முடியும்.
மனத்தை ஒருமுகப்படுத்தும் சிறந்த பயிற்சியாக முன்னோர்கள் உருவாக்கிய இந்த  கோலக் கலையை மறந்துவிடாமல் நம் இளைய தலைமுறைக்கு  கொண்டு செல்ல வேண்டும் ஏன் தெரியுமா?
  • கல்விக்கூடங்கள் இல்லாத அந்தக் காலத்தில் வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடந்த பெண்களுக்கு கணக்கு கற்றுக் கொடுத்தவை இந்தக் கோலங்கள்தான்.
  • .கணக்கும் நுண்ணிய கவனிப்பும் இதற்கு உள்ளே பொதிந்திருக்கும் அறிவியல் விஷயங்கள். இன்னோரு பயன், மனத்தை ஒருமைப்படுத்துவது.
  • அறிவு விசாலம், நாகரிக விருத்தி, சோம்பலின்மை, மறதியின்மை, சூட்சமபுத்தி,  ஊக்கமுடைமை, மனச்சோர்வின்மை போன்ற மனம் தொடர்பான செயல்பாடுகள் கோலம் போடுவதில் அடங்கியுள்ளன.
  • கற்பனைத்  திறனும், படைப்புத்  திறனும் (creativity)  கைவந்த கலையாகிவிடுகின்றன, கோலம் இடும் பெண்ணுக்கு.
  • குனிந்து, நிமிர்ந்து சில நிமிடங்கள் கோலம் போடுவதால், உடற்பயிற்சி செய்த மாதிரியும் ஆகிறது.இது மட்டுமா, கோலம் இடுவது சீரண  உறுப்புக்கும் பிறப்புறுப்புக்கும் நன்மை பயக்கும்.மேலும்  தெய்வம், கலை, உடல்நலம், சுத்தம் ஆகிய அனைத்தும் அடங்கியுள்ளன.
சென்னை, பெங்களுரு  போன்ற பெருநகரங்களில் கோலம் போடுவது என்பதே அரிதாகிவிட்டது. கோலம் போடுவதற்கு என்று ஒரு ஆள்வைத்துக் கொள்கிறார்கள். அடுக்கு மாடிகளில் வசிப்பவர்கள் எந்த வாசலுக்கு யாரென்று கோலம் போடவா  முடியும்! இதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த தீர்வுதான் ஸ்டிக்கர் கோலங்கள்.லிப்ட் -ஐ அடுத்த சிறிய வாசல் உடைய அப்பார்ட்மெண்ட்டாக  இருந்தாலும் அங்கே இந்த ஸ்டிக்கர் கோலத்தை ஒட்டி வைத்துத்  திருப்தி அடைகின்றனர்.
கோலப் புத்தகம்
கோலம் தொடர்பாக 1884 -ஆம் ஆண்டில் நூல் ஒன்று வெளிவந்துள்ளது. அட்டமங்கலத்துள் ஒன்றாகிய கோலப்புத்தகம், முதற்பாகம். இது நமது நாட்டு மாதர்களுக்கும் பாலிகா பாடசாலைகளுக்கும் உபயோகமாகும் பொருட்டு வேலூரில் இருக்கும் அமெரிக்கன் மிஷன் உயர்குலத்துப் பாலிகா பாடசாலையின் உபாத்தியாயர் திருவேங்கடம் பிள்ளையவர்களால் தமது தமக்கையார் சுப்பம்மாள் வேண்டுகோளின்படி இயற்றிச்  சென்னை கவர்ன்மென்ட் பிரஸிடென்சி காலேஜ்  ஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களால் பார்வையிடப்பட்டு இராயவேலூர் ஸ்காட்லாண்டு மிஷன் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் வே. இரத்தினவேலு ஐயர் அவர்களால் சென்னை ஆதிகலாநிதி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளது
கோலம் போடக்கூடாத பொழுதுகள்?
மறைந்த முன்னோர்களுக்கு(பித்ருக்களுக்கு) என்று ஒரு திதி, அதுதான் அமாவாசை. ஆகவே தான், அமாவாசையன்று முன்னோர்களுக்குத்  தர்ப்பணம், சிரார்த்தம் (திதி) முதலானவற்றைத் தவறாது செய்யவேண்டும். இதனால் பித்ருக்களின் பசியும் தாகமும் நிவர்த்தியாகும் என்கிறது சாஸ்திரம். அவ்வாறு தர்ப்பணம் செய்யும் நாளன்று, அதாவது அமாவாசையன்று, பித்ருக்களுக்குப் பிடிக்காத சிலவற்றை நாம் தவிர்க்க வேண்டும் அதாவது கோலம், மணி அடிக்கும் ஒலி, இரும்புப் பாத்திரத்தின் ஒலி போன்றவை.(தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலிலோ பூஜையறையிலோ கோலம் போடுவதைத்  தவிர்க்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்).

இந்தப்  புள்ளிக் கோலங்கள், நவீன டிசைனர்களை விஞ்சுகின்றன. கோலங்களாக உள்ள இவற்றை வீட்டு அலங்காரத்தில் வெவ்வேறு இடங்களில் பயன்படுத்த முடியும்.
இதைபோல் வேறு கலாச்சாரத்தில் உண்டா ? விசாரித்து சொல்லுங்கள் தோழிகளே!

லூசியா லெபோ

Aucun commentaire:

Enregistrer un commentaire