அந்திப் பொழுதில் உதயம்
மனம் போன போக்கில் அவர் நடந்து கொண்டிருக்கிறார். எண்ணங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. எதிலும் பற்றில்லை. விரக்தி. உலகம் இவரை ஒதுக்கிப் புறக்கணித்து, தன்வழி சென்றுவிட்டது போல ஒரு பிரமை. தன்னைத் தவிர அனைவரும் ஒரு அர்த்தத்துடன், ஓர் இலக்குடன் வாழ்வதாகத் தோன்றுகிறது. காண்போரெல்லாம் மகிழ்ச்சியாக ஆடிப்பாடும் போது, தான் மட்டும் வெறுமையின் நிழலாக உலவுவதாக உணருகிறார். வீசுகின்ற தென்றல் அவரது புழுக்கத்தைப் போக்கவில்லை. தண்ணிலவு அவரைக் குளிர வைக்கவில்லை. மின்னுகின்ற தாரகைகள் அவர் கவனத்தைக் கவரவில்லை. தவழ்ந்து செல்லும் சிற்றோடையோ, அதன் கரைகளில் அசைந்தாடும் பசும்புற்களோ அவரை ஈர்க்கவில்லை. இந்த இனிய சூழலுக்கு ஒரு விலக்காய், இயற்கையின் பண்ணுக்கு ஒவ்வாத சுருதியாய், இரவு ஓவியத்தின் கறையாய், மனித இனத்தின் தனிப்பிரதிநிதியாய் அங்கே அவர் நின்று கொண்டிருக்கிறார்.
இவர் ஏன் இப்படித் தாமரையிலைத் தண்ணீராக இருக்கிறார்? இவரது இளமைக் கனவுகளில் துள்ளல் இல்லாமலா இருந்திருக்கும்? நுண்ணிய உணர்வுகளில் ஆசை பொங்காமலா இருந்திருக்கும்? அத்தனையும் எங்கே! வாழ்க்கை பாரம் அந்த மென்மையைச் சிதைத்து விட்டதா? பட்ட அடிகள் உருக்குலைய வைத்து விட்டனவா? கால ஓட்டத்தில் மனம் மரத்துவிட்டதா?
மங்கிய நிழற்படமாகத் தன் கடந்த காலம் அவரைச் சூழ்கிறது. வேலையின்றி நோயாளியாக வளைய வந்து கொண்டிருந்த தந்தை. வீடு நிறைந்த குழந்தைகளையும், அவரையும் சேர்த்துப் பராமரிக்கும் சுமையின் அழுத்தத்தில் குன்றிப்போனத் தாய். எட்டோடு ஒன்பதாக, காட்டுச்செடியாய்த் தானே வளர்ந்த இளம்பருவம். விரும்பிய எதுதான் கிடைத்தது! நிறைவேற முடியாத கனவுகளைச் சுமந்து கொண்டே வாலிபத்தில் கால் பதித்தாயிற்று.
அது மட்டும் வசந்தமாகவா இருந்தது? இளங்குருத்தாய் முளைவிட்ட காதல் துளிர்விடு முன்பே சூழ்நிலைச் சூறாவளியில் சிக்கிச் சிதறிப் போயிற்று. தவிர்க்க இயலாத படியென்று எண்ணி ஏற்றுக் கொண்ட இல்லறம் எவ்விதச் சிறப்புமின்றித் தொடர்ந்து.....பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் சூழ்ந்தனர். கடமையில் காலம் பறந்தது. மாறுகின்ற உலகம் இவர் மாற வழி வகுக்கவில்லை! குழந்தைகள் வளர்ச்சியில் இவரது எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை அல்லது அவர்களது கனவுகளோடு இவரால் இணைய முடியவில்லை. ஏதோ ஒன்று மென்திரையாய் இவரைப் பிரித்தது. இதுதான் தலைமுறை இடைவெளியோ! தன் சொந்த இரத்தத்தில்-தான் தொட்டு, பேணி காத்த உயிருக்கும் தனக்கும் இடையே வெளியா? தன் குழந்தைகள் மீது உயிரையே வைத்திருப்பதாகக் கூறும் இந்தத் தலைமுறை, அவர்கள் வருங்காலத்துக்காகத் திட்டமிடும் தங்களைப் போலவே தங்களது பெற்றோரும் இருந்திருப்பார்கள் என்பதை ஏன் புரிந்துகொள்ளவில்லை அல்லது புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்?
இவரால் எதையும் பிரித்துணர இயலவில்லை. தன் மனம் யாரை, எதற்காக, ஏன் சாடுகிறது என்று விளங்கவில்லை. எது தன்னைப் பிறரிடம் கலக்கவிடாமல் தடுக்கிறது என்று தெரியவில்லை. முழு உலகும் வாழ்நாள் முழுதும் தன்னை வஞ்சித்ததுபோல் அதை உதாசீனப்படுத்தி விலகி நிற்கிறார். இப்படித் தனித்திருப்பதை வயதிற்கே உரிய துறவு மனப்பான்மையாக நினைக்கிறார். வேறு எதைப்பற்றியும் சிந்திக்க முன்வராத தன் போக்கை பரம்பொருளைத் தேடும் முதல் முயற்சியாகப் பாவித்து, அதில் பெருமையும் கொள்கிறார். உலக வாழ்வுக்குத் தன்னைப் பொருத்தமட்டில் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக முடிவுகட்டி விடுகிறார்.
படைப்பின் விசித்திரங்களில் ஒன்று இது. மனிதனைத் தவிர வேறு எந்தப் பிறவியும் கற்பனையில் சுகங்கண்டதில்லை. தனிமையில் இனிமை காண்பதில்லை. கடந்த காலத்தை எண்ணி பெருமூச்சு விட்டதில்லை. நிகழ்காலத்தை ஒப்பிட்டு ஏங்கியதில்லை.எதிர்காலத்தை நோக்கி பயந்ததில்லை. தான் பிறப்பெடுத்ததற்காக வருந்தியதில்லை. பிறரோடு கலப்பதில் தயங்கியதில்லை. மனத்தாங்கலும், விரோதமும் கொண்டு ஒதுங்குவதில்லை. எல்லாவற்றையும் விட்டு ஓடியதில்லை. காணாத ஒன்றுக்காக ஏங்கி, கண்காணும் நிதர்சன வாழ்வை புறக்கணிப்பதில்லை. சங்கடங்களை உருவாக்கிக்கொள்பவன் இவனே! அறிவுதான் இவனது சத்துரு. தானே தனக்கொரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டு, அதைவிட்டு இம்மியும் நகராது, தன் கருத்தோடு இசைபவர்களை மட்டுமே அதில் சேர்த்து, பிறரை எதிரிகளென பாவிக்கும் இந்தத் தன்மைதான் மனிதகுலத்திற்கே சாபம்!
“தாத்தா”..... மென்குரலொன்று அவர் மோனத்தைக் கலைக்கிறது. இலக்கின்றி அலைந்துகொண்டிருந்த எண்ணங்களைத் திருப்புகிறார். அவரது மகள் வயிற்றுப் பேத்தி. தங்கரதம் போல் நிற்கும் அவளை ஏறிட்டுப் பார்க்கிறார். வாஞ்சையுடன் கரம்பற்றி அவரருகில் அவள் உட்காருகிறாள். வழக்கம்போல இச்சிறுமியிடம் என்ன பேசுவது என்று புரியாமல் மௌனம் சாதிக்கிறார். ஆனால், வழக்கம் போலல்லாது, அவளும் மௌனமாக ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பது இவருக்கு லேசான ஆச்சரியத்தை அளிக்கிறது. “ஏன் என்னவோ போல இருக்கே!” என்று கேட்கிறார். “ஒன்னுமில்லே தாத்தா, வினோத் வரலியேன்னு பாக்கறேன்”. தினம் சந்திக்கும் அண்டை வீட்டுத் தோழனுக்குக் காத்திருப்பதில் எதற்கு இத்தனை வாட்டம் இவள் முகத்தில்? “என்ன வி்ஷயம்?” என்று விசாரிக்கிறார். “அவனுக்கும் எனக்கும் சண்டை” தயங்கியபடி அவர் முகத்தைப் பார்த்த அவள், தாத்தா என்ற உரிமையோடு, தன்னை அவர் புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கையோடு அவர் மீது சாய்ந்துகொண்டு தொடருகிறாள். தன்னையறியாது, அவள் நெருக்கத்தால் உந்தப்பட்டு, அவளை அணைத்துக் கொள்கிறார்.
"கடற்கரையிலே நான் கட்ன வீட்டை இடிச்சிட்டான் தாத்தா, நல்லா திட்னேன்...அதான்... வருவானா, இல்லியான்னு தெரியலே”. “வராட்டா போறான். அதுக்கு நீ ஏன் வருத்தப்படறே!” தனக்கே உரித்தான ஒதுங்கிக் கொள்ளும் பாணியில் அவர் கூறினார். அவளோ இன்னும் தயங்கியபடி, “அவன் என்னோடே நண்பன்தானே தாத்தா! இப்ப அவன்கிட்ட பேசாட்டா அது பெரிய சண்டையாயிடுமில்ல...அப்புறம் நாங்க சேரவே மாட்டோமே!” புதுமையாக அவளைப் பார்த்தார் அவர். என்ன இந்தக் குழந்தை! தன்மீது தவறில்லாத போதும், தீங்கிழைத்தவன் முன்பொரு முறை நண்பனாக இருந்தவன்தானே என்று எவ்வளவு பொறுப்பாக அவன் உறவைப்பற்றிச் சிந்திக்கிறாள்!” வியப்பு குன்றாமல் “என்ன செய்யப் போறே?” என்று கேட்டார். உண்மையிலேயே தன் வட்டத்தை விட்டு வெளிவந்து, பிறர் நோக்கில் பார்த்துப் பழகியிராத அவரால், அவள் செய்யக்கூடியதைக் கணிக்க முடியவில்லை. என்ன செய்ய வேண்டும் என்பதை தனக்குத் தானே சொல்லிக் கொள்பவள் போல அவள் தொடர்ந்தாள்-“அவன்கிட்ட போய் பேசுவேன். அப்புறம் நான் ஆசையா கட்ன வீட்டை ஏன் இடிச்சேன்னு கேட்பேன். இனிமே அப்டி செய்யக்கூடாதுன்னு சொல்வேன். அவ்ளோதான். அப்புறம் விளையாடுவோம்”.
என்ன!? இந்தப் பிரச்னையின் முடிவு இத்தனை எளிதானதா? எவ்வளவு சடுதியில் தனக்கு இழைக்கப்பட்டதை மன்னித்து, மறந்து, உறவுக்கு மீண்டும் சந்தர்ப்பம் அளிக்கிறாள்! எத்தனை பரந்த மனம்! எவ்வளவு துாய்மை இந்த உள்ளத்தில்! தவறு செய்த அவனுக்கு-குற்ற மனப்பான்மையோடு, நட்பைப் பெற முதலடி எடுத்து வைக்கத் தயங்கும் அவனுக்கு-எத்தனைச் சுலபமாகப் பாதை வகுத்துத் தருகிறாள்? அதே நேரத்தில், ஏனிப்படிச் செய்தாய் என்று கேட்கும் துணிவும், இனி இப்படிச் செய்யக்கூடாதென்று அறிவுறுத்தும் திறனும் கொண்டவளாக இருக்கிறாளே! இத்தனைப் பக்குவம் இச்சிறு வயதில் இவளுக்கு எங்கிருந்து வந்தது? தன்னை அறியாமல், “என் பேத்தியல்லவா!” என்ற பெருமிதம் எழுந்தது. அணைத்திருந்த அவரது கை பாசத்தோடு அவளை தன் மடி மீது இருத்திக் கொள்கிறது.
இவள் செயலுக்குப் பதிலாக அவன் எப்படி நடந்து கொள்வான்? தன்னை நோக்கி வந்த இவளது அன்பின் எதிரொலியாக, இவள் கூறுவதை ஏற்றுக் கொண்டு நட்புக்கரம் நீட்டுவானோ! அந்த நம்பிக்கை இவள் கண்களில் சுடர்விடுகிறதே! எத்தனை எளிதாக இந்தக் குழந்தைகள் “தான்” என்னும் அகந்தையிலிருந்து விடுபட்டு, உறவுக்கு பாலம் அமைக்கின்றன! இதனால்தான் குழந்தைகள் நடமாடும் தெய்வங்களாக ஒளிவீசுகிறார்களோ!
தெய்வத்தையே அணைப்பது போன்ற பரவசத்தில், பேத்தியை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.
இத்தனை அறிவுள்ள குழந்தை, “என் தாத்தா” என்று பெருமைகொள்ளத் தக்க வகையில் தான் நடந்துகொண்டிருக்கிறோமா என்ற கேள்வி முதன்முதலாக அவருள் பிறந்தது. வாழ்நாள் முழுதும் தன்னை மையமாகக் கொண்டு பிறர் தன்னை மதிக்கவில்லை, பேசவில்லை, தன் பேச்சைக் கேக்கவில்லை என்று நினைத்தாரே தவிர, தான் மற்றவர்களை மதித்தோமா, புரிந்து கொண்டோமா, அன்பு காட்டினோமா என்றெல்லாம் யோசித்ததேயில்லை. தன் நடத்தை மற்றவர்களைப் பாதிக்கிறதா என்று சிந்தித்ததில்லை. திறந்த மனதோடு சொந்த மனைவியைக் கூட நெருங்கியதில்லை என்ற உண்மை உறைத்தபோது, அவர் தலை தானே கவிழ்ந்தது.
உறவுகள் பேணுவதை, அவர்கள்பால் உள்ள தன் கடமையை ஒரு பாரமாய், தன்னை இறுக்கும் விலங்காய் எண்ணி மலைத்ததும், பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள விழையாமல் தன்னை ஒரு வரம்புக்குள் இருத்திக் கொண்டதும் பேதமையாகப் பட்டது. மேடு பள்ளங்களுக்கேற்ப வளைந்து கொடுப்பதல்லவா வாழ்க்கை? எனக்கு எது இல்லை என்று இப்படித் தனித் தீவாய் வாழ்ந்தேன்? ஒரு மனிதனுக்கு இன்னும் எதுதான் வேண்டும்? வாழ்வில் குறையோடு இருப்பவர்களெல்லாம் என்னைப்போல் நிறைவாக வாழத் தெரியாதவர்கள்தானோ! பெற்றவரும், உடன்பிறந்தோரும், மனைவியும் மக்களும் சூழ்ந்திருக்கையில் அவர்களோடு சொந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளாத நான், கண்காணா தெய்வத்தில் மட்டும் எப்படி இணையப் போகிறேன்? பூத்த சோலையாய் வாழ்ந்திருக்க வேண்டியவன் வரண்ட பாலையாய் நாட்களைக் கழித்திருக்கிறேனே!
ஒட்டுதலின்றி விலகியே நின்றாலும், என் சுற்றமனைத்தும் என்னைவிட்டு விலகாது எப்போதும் காத்து, தங்களோடு பிணைத்து, வாழ்க்கை பிளவுபடாமல் காத்திருக்கிறார்களே இந்தச் செயலுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன்? இது அன்பில்லாவிட்டால் பின் எதுதான் அன்பு? நினைக்க நினைக்க ஆதங்கமும், அதை ஈடுகட்டும் ஆர்வமும் பெருகின. உள்ளத்திலிருந்த கட்டு அறுந்ததும், உலகே புதுமையாகத் தோற்றமளித்தது. பொங்கி வரும் வெள்ளம்போன்ற உணர்ச்சி, எல்லாவற்றோடும் இணைந்து கரைந்துவிட வேண்டும் என்ற தாகத்தை ஏற்படுத்தியது. முதன்முறையாக, உள்ளத்தில் ஊறும் அன்பின் சுவையை உணரும் சிலிர்ப்பில், அவர் பேத்தியைப் பார்த்து கண்கள் பளபளக்கச் சிரித்தார். இந்த வயதில் தனக்குப் பாடம் புகட்டிய தன் அருமை ஆசானைத் தழுவி, ஆசையோடு முத்தமிட்டார். அவள் கைகளைப் பற்றியபடி உள்ளம் துள்ள வீட்டை நோக்கி நடக்கலானார். அந்திநேரத்தில் உதயமான அந்த வெண்ணிலா, பூமியைத் தழுவிக் குளிர வைத்தது!
-- இராசேசுவரி சிமோன்