கோடைக் காலம். அனைவரும், குறிப்பாக குளிர்நாடுகளில் வசிக்கும் எல்லோரும் இதமாக நடமாட விரும்பி எதிர் நோக்கும் பருவம். ஆனால் மனிதரைப் போலவே ஆனந்தமாக பரவும் கிருமிகளிடமிருந்து காத்துக் கொள்ள சில யோசனைகள் இந்த நேரத்தில் மிகத் தேவைப்படுகின்றன. அறிந்தவையே ஆனாலும்கூட நினைவுறுத்திக் கொள்வது அவசியமாகிறது.
1. வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர் உப்பு கலந்த வென்னீரால் வாய், தொண்டைப் பகுதியை அவ்வப்போது கொப்பளித்தால் இதமும் கிடைக்கும். மற்றவருக்கும் கிருமி பரவாது. இருமும்போது கைக்குட்டையால் வாயை மூடிக்கொள்ள வேண்டும். கைசுத்தம் மிக மிக அவசியம்.
2. தொண்டை வலி என்பது மிகச் சாதாரணமானது அல்ல. அதற்குக் காரணம் 200 வகையான கிருமிகளில் ஒன்றாக இருக்கலாம் என்கிறது மருத்துவம். அது எதுவென்று கண்டறிவதற்குள் நோயும் கடுமையுறலாம் அல்லது வலியால் அவதியும் தொடரலாம். பழைய பாட்டி வைத்தியமான வெதுநீரில் உப்பு போட்டு வாய்கொப்பளிப்பதும், எலுமிச்சைச் சாற்றில் வென்னீர் கலந்து, ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிப்பதும் சாலச்சிறந்தது என்கிறார்கள்.
தமிழர் கடைப்பிடிப்பது--வெதுநீரில் உப்பும் சிறிது பூண்டு தட்டிப் போட்டும் வாய் கொப்பளிப்பது.
சூடான பாலில் மஞ்சள் பொடி, மிளகுப்பொடி கலந்து குடிப்பது.
3. மோர் அருந்துவது நல்லது எனினும் அதிக நீர் சேர்த்தால் பயனிருக்காது. தயிரின் அளவைவிட 6 பங்கு நீர் கலப்பதே சரியான அளவு.
4. வரட்சியாலும், காற்றாடிகளின் உபயோகத்தாலும் கண்களில் நீர் வரண்டு விடக்கூடும். இமைகள் அடிக்கடி இமைத்து கண்ணீர் சுரப்பி வரண்டு விடாமல் காக்கிறது. நிமிடத்திற்கு 20 முறைகள் கண் சிமிட்ட வேண்டும். எந்தப் பாதிப்பும் வராமல் கண்ணீர்த் திரைதான் விழிகளைப் பாதுகாக்கிறது. இல்லையேல் விழிகளுள் உள்ள நுண்ணிய உறுப்புகள் இறுகி பல வியாதிகளுக்கு காரணமாகும். பலமணி நேரம் கணணி அல்லது தொலைக் காட்சி முன் இருப்போர் அடிக்கடி இமைப்பது இயலாதாகையால் கவனத்துடன் இருப்பது நல்லது.
5. வெயிலில் களைப்பால் துவளும்போது இடது நாசியை மூடிக்கொண்டு வலது நாசியால் சுவாசிக்க வேண்டும். அதே போல தலைவலிக்கு வலது நாசியை மூடிக்கொண்டு இடது நாசியால் மூச்சு விட வேண்டும்.
6. உடல் சோர்வுறும்போது வைட்டமின் ஏ, நீர்ச்சத்து நிறைந்த தக்காளியைச் சாப்பிட்டால் உடல் குளிரும். சோர்வு அகலும்.