அன்புடையீர்,
வணக்கம். சென்ற முறை குறிப்பிட்டிருந்ததைப் போல கம்பன் கழக “குறள் அரங்கம்” இனிதே ஆரம்பிக்கப்பட்டது. 50 பாடல்கள் கருத்துக்களுடன் விளக்கப்பட்டு, பின்னர் விவாதிக்கவும் பட்டன. கம்ப இராமாயணம் போன்ற கதையாக இல்லாமல், அறநெறி விளக்கமாக உள்ளதால் ஒருவேளை சோர்வு தருமோ என்று நினைத்ததற்கு மாறாக, பலஅறிஞர்களின் உரைகளோடு பலரது கருத்துக்களும் சேர்ந்து நிகழ்ச்சிக்குச் சுவை கூட்டின!
மகளிரணி சார்பில், “புதுக் கவிதை”யின் தோற்றமும், அதன் வளர்ச்சியும் பற்றிய கருத்துகளைப் பரிமாறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
இந்த மாத முதலில் புகழ்பெற்ற “லிசியே” கோவிலுக்கு யாத்திரையாக ஒரு சுற்றுலாப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. பங்கு கொண்ட அனைவரும் நிறைவு கண்டனர். தொடர்ந்து, அருகிலுள்ள “தொவில்” கடற்கரைக்கும் சென்றோம். கடல் கண்டு மனம் பொங்குவதில் ஒன்றும் புதுமையில்லை. ஆனால் அங்கே கவிதை பொங்கியது. சென்றது “கம்பன் கழகம்” அல்லவா? அங்கே “கடலோரக் கவியரங்கம்” ஒன்று “அலைகள்” என்ற தலைப்பில் காற்றில் தவழ்ந்தது. இந்து மகா சமுத்திரத்திரமாய் நின்று, ஒலிக்கக்கேட்ட அதே செந்தமிழை “மான்ஷ்” அலைகளால் (“தொவில்” கடற்கரை) வாழ்த்தி, அவள் சரித்திரத்திலேயே முதன்முறையாக செவிமடுத்திருப்பாள் கடல் அன்னை!
-- இராசேசுவரி சிமோன்