ஆனால், அவருடைய ஒன்பதாவது வயதில், அந்த அன்பு தமக்கை மடத்தில் சேர முடிவெடுத்தபோது, மீண்டும் தெரசாவின் வாழ்வில் இருள் சூழ்ந்தது. மிகவும் வருந்திய அவர், உடல் நலிந்து படுத்த படுக்கையானார். மருத்துவர்கள் கைவிட்ட நிலையிலிருந்த அவர் 1883 மே 13இல், அருகிலிருந்த மாதா சுரூபம் தன்னை நோக்கி சிரிப்பதைக் கண்டதுமல்லாமல், உடன் தன் நோயிலிருந்தும் விடுபட்டார்.
அதிலிருந்து “தன்னைக் கடவுளுக்குத் தந்து, தான் கடவுளையே எல்லாமாக நினைக்க”த் தலைப்பட்டார். 15 வயதிலேயே மிகக் கடுமையான வரையறைகள் கொண்ட கன்னியர் மடத்தில் சேர விழைந்தார். அங்கு சேருபவர்கள், உலகத் தொடர்புகளை முற்றாகத் துண்டித்து விட்டு, கடும் செப, தவங்களை மேற்கொள்ள வேண்டும். அவர் வயது, அவரது முந்தைய உடல்நிலை கருதி தயங்கியவர்களையும் சம்மதிக்க வைத்து, போப் ஆண்டவரின் (லியோன் 8) விசேட அனுமதியை நேரில் பெற்று, 9.4.1888 அன்று அங்கு சேர்ந்தார்.
ஆனால், அந்த கடுமையான வாழ்வு அவர் உடல் நிலையைப் பெரிதும் பாதிக்க, தனது 24 ஆம் வயதில் இறைவனடி சேர்ந்தார்.
மௌன விரதங்களின் போது அவர் எழுதி வைத்த “ஒரு ஆன்மாவின் வரலாறு” என்ற குறிப்புகள் அவரது மனித குலத்திற்கான பேரன்பையும், கடவுள் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையையும் பறைசாற்றின.
லுார்துக்குப் பிறது, நம்பிக்கையோடு மக்கள் தரிசிக்க விரும்பும் தலமாக இது விளங்குகிறது.
அவரது குறிப்புகளிலிருந்து அவரைப்பற்றி அறிய சில கருத்துக்கள் --
- “இறைவன் படைப்பனைத்துமே அழகானவை. ரோசாவின் வனப்பு ஒரு வயல்வெளிப்பூவின் அழகைக் குறைத்து விடுவதில்லை. ஆன்மாக்காளின் நிலைவேற்றுமையும் இத்தகையதே. புனிதர்களைப் போலவே எளியவர்களும் கடவுளை மகிழ்விப்பரே!”
- “என் வல்லமை அனைத்தும் மன்றாட்டிலும், தியாகத்திலுமே அடங்கியுள்ளது”.
- “உலகப் பொருட்கள் மேல் பற்றறுத்தவளாய் இருப்பது போல் வல்லமைகள் மேலும் பற்றறுத்து விட்டேன்”.
- “ஒரு நற்செயலைக் குறையென்று பிறர் கருதக் கூடுமானால், ஒரு குறையை நற்செயலெனக் கூறவும் வாய்ப்புள்ளது. எனவே அவர்களின் நிலையற்ற, மாறுபட்ட எண்ணங்களில் நான் நம்பிக்கை கொள்வதில்லை”.
- “பெரிய காரியங்களை என்னால் செய்ய இயலாது. வாய்ப்புமில்லை. எனவே என் ஒவ்வொரு சொல்லும், பார்வையும், அன்றாட வாழ்வின் தியாகச் செயலும் பூக்களாக, இவற்றை வாரி இறைத்து, அன்பின் கீதம் பாடி என் வாழ்வைக் கழிப்பேன்”.
- “இவ்வாழ்வுக்கப்பால் காரிருளின்றி வேறெதுவும் இல்லையென்று தோன்றினாலும், என் நம்பிக்கையால் நிறை மகிழ்வு கொள்வேன்”.
- “அன்பு அணைந்து விட்டால் மிகுதியாவது ஏதுமில்லை. எனவே என் அழைத்தலே அன்பு மட்டுமே”.
-- இராசேசுவரி சிமோன்