பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 29 avril 2011

எண்ணப் பரிமாற்றம்

Afficher l'image en taille réelle

அன்புடையீர்,

கர்ம யோகம்: கடமை செய்து இறை உணர்வு பெறுவது.
பக்தி யோகம்: அந்தரங்க உணர்வால் இறைவனை அடைவது.
ராஜ யோகம்: மனத்தைக் கட்டுப்படுத்தி, சிந்தனையை வழிப்படுத்தி இறை உணர்வு பெறுவது.
 ஞானயோகம்: அறிவால் அறிந்து இறைவனை அடைய முற்படுவது. 

இந்த நான்கு வகைகளில் மனிதர் இறைவனோடு ஒன்ற முடியும் என்று பெரியோர் வரையறுத்திருக்கின்றனர். இதுஅல்லாத மற்றுமோர் வழியும் உண்டு. அது இறைவனே முன் வந்து ஆட்கொள்வது.
எது எப்படி ஆயினும் இரண்டாமவர் அறிய வழி இல்லாத தொடர்பு இவை.

முதலில் இறைவன் இருக்கின்றனா என்ற கேள்வி வேறு பலர் மனங்களில் 
அவ்வப்போது -முக்கியமாக உலகின் பல்வேறுபட்ட துன்பங்களையும், அழிவுகளையும் 
காணும் போது உண்டாவதைத் தடுக்க இயல்வதில்லை.

ஆயினும் தனிப்பட்ட மனங்களும் சரி, தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையும்,
பல்வேறுபட்ட மதக் கொள்கைகளும், ஏன், விஞ்ஞானமும் கூட எல்லாவற்றையும்
செயல்படுத்துகின்ற மாபெரும் சக்தி ஒன்று இயக்குவிக்கிறது என்பதை மறுப்ப
தில்லை.

மனித இனத்தின் உலக வாழ்வு இத்துடன் முடிவதாகவே வைத்துக்கொண்டால் 
அதில் பொருளோ அன்றி திருப்தியோ அல்லது நிம்மதியோ, நிறைவோ இல்லை 
என்பதை அவனவனும் வாழும்போதே புரிந்து கொண்டு விடுகிறான். அதனாலேயே 
இறைவன்பால் தன்னால் மனம் திரும்புகிறது.

இங்குதான் மனிதன்  தனக்கென்று ஏற்படுத்திக்கொண்ட கோட்பாடுகள்,அதில் ஆழ்ந்துவிட்ட பிடிவாதம் இவை பேதத்திற்கு வழி வகுத்து, ஒருவர் மற்றவரின் அனுபவங்களை எடை
போடவும், விமர்சிக்கவும், புறக்கணிக்கவும் வைக்கிறது . சாதாரணமான உலக 
ரீதியான விஷயங்களிலேயே ஒருவர் பேச்சையும் செயலையும் அதற்குரிய அர்த்
தத்தில் புரிந்து கொள்ளமுடியாத உறவுதான் இங்கே நிலவுகிறது. இதில் மனம் மட்டுமே
சம்பந்தப்பட்ட உணர்வுகளை எப்படித்தான் எடைபோட முடியும்?

திறந்த மனதோடு பார்த்தால் ஏற்கவும், அதைத் தன்மயமாக்கிக்கொண்டு சிந்திக்கவும் 
பொதுவான ஒரு முடிவுக்கு வரவும் வாய்ப்பிருக்கும். அறிவால் மட்டுமே பார்த்தால்?

இயேசு தன்னை இறைமகன் என்றும், அவர் கூறும் சொல் ஒவ்வொன்றும் கடவுளிடமிருந்தே வருபவை என்றும் கூறினார். அவரைச் சுற்றி இருந்தவர்களோ 
நேற்றுவரை நம்முடன் சுற்றிக்கொண்டிருந்த தச்சன் மகன்தானே இவன் என்றுதான்
நினைத்தார்கள். வள்ளலார் இறைவன் தனக்கு அமுதூட்டியதாகவும், திண்ணையிலிருந்து 
விழும் தருணத்தில் தாங்கிப் பிடித்ததாகவும், தனக்குத் தண்டனை அளித்ததாகவும் 
கூடக் கூறுகிறார். துறவறம் பூண்ட குழந்தை தெரேசா எங்கோ மரண தண்டனை
அடைந்த கைதி ஒருவன் மனம் மாறி மன்னிப்புக் கேட்க வேண்டுமென தான் 
தவம் செய்து அதில் வெற்றி பெற்றதாகவும் கூறுகிறார்கள்.

இவர்கள் அனைவரின் புனிதமும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் 
இச்செய்திகள் நம்பப்படும் அறபுதங்களாகிவிட்டன. ஆனால் கடவுளின் அம்சமான
மனிதத்தில்  சராசரி வாழ்க்கைத தாண்டிய அனுபவங்கள் நேரிடும்போது 
அதை அந்த அனுபவத்திற்கு உரிய மனமே நம்ப மறுக்கிறது. நம்பினாலும் வெளியிடத்
தயங்குகிறது. மற்றவர் இதனை ஆராய்ந்து அதீத உணர்வின் வெளிப்பாடு, வெறும்
கற்பனை, மன அழுத்தத்தின் உச்சம்  என்றெல்லாம் பெயர் சூட்டுவார்கள் என்ற உண்மையால் அவை சமாதி கொள்கின்றன. "கண்டவர் விண்டிலர்"
ஆதலால் இந்தத் தேடலும் யுகயுகமாக நடைப்பெற்றுக் கொண்டே இருக்கிறது.

திருமதி சைமன்