பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 13 janvier 2012

பொங்கல் வாழ்த்துகள்


  
தைமகள் வருகவே! 
தமிழ் நலம் தருகவே!

தமிழினம் தழைக்க வந்தாள்
தைமகளே வருக என்று
நிமிர்நடை பெண்டிர் இங்கே
 நித்தமும் ஏற்ற வந்தோம்! 
உமியென உதிர்ந்து வாழும்  
உத்தமர் வாடா வண்ணம் 
நிமிரவே உலகில் என்றும்  
நிறையுமே பொங்கல் இன்றே!

விழியென காத்து நின்றே
 வழிவழி வளர்த்து எம்மை
எழிலுறு மங்கை காத்தாள்
 ஏந்தியே போற்ற வந்தோம்!
பழிசுமந் திடும்மாந் தர்க்கே
  பரிந்தளிப் பாளே அன்னம்
மொழியினை உயிராய்ப் பேண
 முகிவிலா நாளும் இன்றே!

தனக்கென உறவே இல்லா
 தமக்கென உணர்வே இல்லா
இனக்கொடு மைதாளா ஏழை
 இனமென தனியே உண்டு!
வனத்திலே வாழ்ந்த போதும்
 மனத்திலே பிரிவு கொண்டு
கனவிலும் ஒன்று சேரா
 கள்ளமும் வளர்வ துண்டே!

 ஆயிரம் சாதிச் சண்டை
 அதனினும் பிரிவும் கொண்டே
வாயினிக் கும்பேச் சுக்கோர்
 வகையிலே குறையொன் றில்லை!
ஆயினும் மனித மாண்பு
 அற்றிடா தொன்று சேர்த்துத்
தாயினும் பரிந்து காத்து
 தைமகள் தருவாள் பண்பே!

பொங்கிடும் இனிமை பாலில்
 பங்கிடும் உறவில் தண்மை
எங்கணும் பரவும் தென்றல்
 எழுப்புமே இனிய ராகம்!
தங்கிடும் வளமே வாழ்வில்
 தைமகள் வந்த பின்னே
தங்கமாய்த் தமிழன் மின்ன
 தரணியில் தடைதான் ஏது?

கதிரவன் காலம் பார்த்துக்
 கதிர்க்கரம் அணைத்து நிற்க
நதிவழி விரைந்தே நீரும்
 நமதரு உயிரே காக்க
விதிதனை மாற்றி பாரில்

 மதியினால் வெல்வோம் பூமி
பதிவிலே சாற்றி வைப்போம்
 பனுவலில் தமிழர் சீரே!
திருமதி சிமோன்