பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 13 janvier 2012

எண்ணப் பரிமாற்றம்

                                                                                                                   அன்புடையீர்,

வணக்கம்.

புது வருடப் பிறப்பில் நின்று கொண்டிருக்கிறோம். அது எதெதை எடுத்து வரப்போகிறது என்பதில்தான் வாழ்க்கையின் சுவை அடங்கியிருக்கிறது. எல்லாருக்கும், எல்லா விதமான நன்மைகளையும், இன்பங்களையும் அது அள்ளி வரட்டும்! ஆனால் "வேண்டுவதுவேறுகிடைப்பதுவேறாக " இருப்பதும் வாழ்க்கையின்சுவையே!  அவ்வாறிருப்பின், அதை எதிர் கொள்ளும்
 விவேகத்தை வளர்த்துக் கொள்வதில், அதற்கான மனத்திடம் பெறுவதில்
மட்டுமே வாழ்க்கைச் சக்கரம் ஓட முடியும். இன்பங்களைப்பருகும்போதே,
 அவற்றின் சுவடு கூட  என்னவென்று அறியாத மக்களையும் நினைவு கூர் வோம். அவர்களுக்கான நம் உதவிக் கரத்தை நீட்டுவோம்.


 "பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
                         அருமை உடைய செயல்" என்கிறார் வள்ளுவர். இந்த அருமையான செயல்கள் எவை , அவற்றை எப்படிச் செய்ய வேண்டும் என்பதில் வரும் குழப்பமே வாழ்க்கைப் போராட்டமாகிறது. அதில் வெற்றி பெறும் ஒரு சிலர் ஏனையோருக்குக் கைகொடுக்கும் விதத்தில் தாங்கள் இக்குறிக்கோளை அடைய செய்தவற்றைப் பாடமாகவும், அறிவுரையாகவும், கதைக் கவிதைகளாகவும் அளிக்கின்றனர். ஆனால் பெரும்பான்மை மனிதர்கள் இலக்கியமாக அவற்றை ரசிப்பதோடு நிறுத்தி விடுகின்றனர்.

ஒரு முறை ஒரு நண்பர் காந்தியிடம், "பகவத் கீதை சொல்லும் ரகசியம் என்ன?" என்று கேட்டார். நேரடியாக எந்தப் பதிலும் சொல்லாத காந்தி, அருகிலிருந்த செங்கற் குவியலைக் காட்டி, "அவற்றை எண்ணி வை. தினமும் இந்த வேலையைச் செய்" என்றார்.

நாள்தோறும் தொடர்ந்து இந்த வேலையைச் செய்த நண்பருக்கு அலுப்புத் தட்டியது. மற்றொருவரிடம், "இது கூலியாள் செய்யும் வேலை. நான் கீதையின் சாராம்சத்தை அறிய வந்தேன். செங்கற்களை எண்ணி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை" என்றார்.

இதைச் செவியுற்ற காந்திஜி, "உனக்கு இன்னுமா கீதை சொல்லும் ரகசியம் புரியவில்லை? தொடர்ந்து கடமையைச் செய்யும் தன்னலமற்ற சேவைதான் அது" என்றாராம்!

இப்படி வாழ்க்கையோடு இலக்கியத்தைப் பொருத்திப் பார்க்கும் பக்குவம் எத்தனைப் பேருக்கு வரும்?  அதனால் ஒரு சில அறிஞர்கள் சிக்கலான தத்துவத்தையும், சீர்மிகும் கருத்துக்களையும் சின்னஞ் சிறு கதைகளாக, விளையாட்டு உணர்வோடு பொருளைப் பொதிந்து அளித்துள்ளனர். பொழுது போக்காக அவற்றைப் படித்து மகிழ்ந்தாலும், அந்த ஆழமான கருத்துகள் உள்ளத்தில் பதிந்து செயலாற்றும் என்பது அவர்கள் நம்பிக்கை. பக்கம் பக்கமாக சொல்ல வேண்டியவற்றை ஒரு சில வரிகளில் அடக்கும் அவர்களது திறமை போற்றுதலுக்குரியது.

ரசித்து மகிழும் வேளையிலேயே வாழ்வின் பொருளையும் உணர்வோம்!


திருமதி சிமோன்