பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 15 février 2012

இசைக் கருவிகள்


இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற அரும் சாதனம் இசை.மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலத்திலேயே இசைக்கத் தொடங்கிவிட்டான்.  விலங்குகளை வேட்டையாடி உண்டவன் அந்த விலங்குகளின் தோலை மரக்கிளைகளில் தொங்கவிட்டிருந்தான். காய்ந்த அந்தத் தோல்களில் கிளைகள் உரசும்போது ஒலி உண்டானது. இதுவே தோல்கருவிகள் தோன்ற அடிப்படையாயிற்று.  காடுகளில் உள்ள மூங்கில் மரங்களில் வண்டுகள் துளைகளிட்டன. அந்தத் துளைகள் வழியாகக் காற்று புகுந்து வெளியேறும்போது குழல் இசை பிறந்தது.
குழலும் யாழும் முரசும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களால் பயன்படுத்தப்பட்டதை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இதோ பரிபாடல் வரிகள்:
 "எழுபுணர் யாழும் இசையுடன் கூடக்
  குழலளந்த நிற்ப முழவேழுன் தார்ப்ப"     

 பொதுவாக இசைக்கருவிகளை நரம்பு வாத்தியங்கள், காற்று வாத்தியங்கள், தாள வாத்தியங்கள் எனப் பிரிக்கலாம்.

நரம்பு வாத்தியங்கள்:   மேலை நாட்டு இசையில் இவற்றை கார்டோபோன்ஸ் (chordophones)  என்று அழைப்பர்.
 
                    
                                                                     
                                                                             யாழ்

இது மீட்டி வாசிக்கக்கூடிய நரம்புக்கருவி. இதுவே தமிழர் வாசித்த முதல் இசைக்கருவி. இது யாளி என்ற பூர்வகால மிருகத்தின் தலையைப் போல் செய்யப்படிருந்ததால் யாழ் என்று பெயர் பெற்றது. இதில் உள்ள ஒவ்வொரு நரம்பும் ஒவ்வொரு சுரத்துக்குச் சுருதி கூட்டப்படிருக்கும். சுத்தசுரங்களே இதில் வாசிக்க முடியும். இதன் வடிவம், வாசிக்கப்படும் நிலம், அதில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கை இவற்றின் அடிப்படையில் இது  வகைப்படுத்தப்பட்டது .  யாழ் தற்போது செல்வாக்கிழந்து வழக்கொழிந்தும் விட்டது. பல  நூற்றாண்டுகளில் இதன் உருவத்தில் மாறுதல்கள் அடைந்து வீணையாக மாறியதாகக்  கருத்தும் உண்டு.   
                                                                               வீணை 

யாழைக் காட்டிலும் வாசிப்பதற்குச் சுலபமானதும் அதே சமயத்தில் ஒலிக்கும் நாதம் அற்புதமாகவும் இருந்ததால், வீணையின் வரவு யாழின் செல்வாக்கைக் குறைத்தாலும், வீணையும் யாழும் சேர்ந்தே பல நூற்றாண்டுகள் இருந்திருக்கின்றன எனக் கருதப்படுகின்றது.இந்திய இசையின் பல நுட்பங்களையும் தத்துவங்களையும் இக்கருவியின் மூலம்  வெளிப்படுத்தலாம். பண்டைக்காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி.. 17- நூற்றாண்டில்தான்  அது தற்போதைய உருவத்தை அடைந்தது. தஞ்சையை  ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில் இது நிகழ்ந்தது.
வீணையின் அமைப்பு:
 தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி  முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி, குடப்பக்கத்தில் சற்றுப் பருத்தும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறுத்தும் இருக்கும். தண்டியின் இரு பக்கங்களிலும் மெழுகுச் சட்டங்கள் உண்டு. அவைகளின் மேல் 2 ஸ்தாயிகளைத் தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினாற் செய்யப்பட்டிருக்கும். யாளி முகத்திற்கு அருகிலிருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும் பயன்படுகின்றது. 4 வாசிப்புத் தந்திகள் லங்கர்களின் நுனியிலுள்ள வளையங்களில் முடியப்பட்டு, குதிரையின் மேலும், மெட்டுக்களின் மேலும் சென்று பிரடைகளில் பிணைக்கப்பட்டிருக்கும்.வீணை  பலா மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.
வலது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தாள-சுருதித் தந்திகள் வலதுகை சுண்டுவிரலால் மீட்டப்படும். தந்திகளை மீட்டுவதற்கச் சிலர் விரல்களில் நெளி அல்லது மீட்டி எனப்படும் சுற்றுக் கம்பிகளை அணிந்து கொண்டு மீட்டுவர். நகங்களால் மீட்டுவதும் உண்டு. வீணையை மீட்டுபவர் தரையில் அமர்ந்து மடியில் வீணையை  வைத்து வலது தொடையால் தாங்கிக்   கொண்டு தன்னுடைய வலது கையில் மீட்டுகோளை அணிந்து மீட்டு கம்பிகளை இடது கையால் அழுத்தி, கீழ்த் தண்டிலுள்ள மீட்டுக் கம்பிகளை வலக் கையால் மீட்டுவார்.வீணைக்கு உகந்த பக்கவாத்தியங்கள் தம்புராவும் தவிலுமாகும்.
சிட்டிபாபு, எஸ்.பாலச்சந்தர், வீணை தனம்மாள்  , வீணை காயத்ரி, ஆர்.பிசுமானி ஐயர் - புகழ்பெற்ற வீணை இசைக்கலைஞர்கள் 
                                                              வயலின் (பிடில்)


  இக்காலத்தில்   நாம் பயன்படுத்தும் வயலின் ஐரோப்பியர்களால் 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. ஸ்ட்ராடிவேரியஸ் (Stradivarius) என்னும் இத்தாலியர் இதனை உருவாக்கினார்.தென்னிந்திய இசை முறைமையான கர்நாடக இசையில், வயலின் தற்போது முக்கியமான கருவியாகப் பயன்படுகின்றது. இங்கு இது பாலசுவாமி தீட்சிதர் (1786 - 1858) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர் 1824 இல் எட்டயபுரம் சமஸ்தான வித்துவானாக இருந்தவர்.ஏனைய இசைக்கருவிகளைவிட இதில் வாய்ப்பாட்டு நன்றாக வாசிக்கக்கூடும். ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல.இதை இசைப்போர் பல மாதிரியான மிடற்றிசையின் ஏற்றத்தாழ்வுகளையும் பற்பல இசையமைப்புகளையும் நன்றாய் அறிந்திருக்க வேண்டும்.  

குன்னக்குடி வைத்தியநாதன், தி.என்.கிருஷ்ணன், லால்குடி ஜெயராமன், நாகை முரளிதரன், டாக்டர்.எல்.சுப்பிரமணியம் ஆகியோர் சிறந்த வயலின் மேதைகளாவர்.


                                   

                                                                        தம்புரா 

 பொதுவான இசைக்கருவி கம்பிகட்டப்பட்ட தம்புரா ஆகும், இது ராகம் இசைக்கும் நேரம் முழுவதும் நிலையான தொனியில் (ரீங்காரம்) இசைக்கப்படும். இந்தப் பணியைப் பாரம்பரியமாகத் தனியாகப் பாடுபவரின் மாணவர்கள் செய்கின்றனர். இது சலிப்படையவைக்கும் பணியாகத் தோன்றினாலும், உண்மையில், இதைப் பெறும் மாணவருக்கான வாய்ப்பு பெருமையானது மற்றும் அரிதானது. தம்புராவைப் பயன்படுத்திக் கொண்டு பாடி வரும்போது, ஒவ்வொரு சுவரமும் அதன் தானத்தில் வருகின்றதோ  என்பதை இசைப்போர் தெரிந்துக்கொண்டு பாடி வரலாம். பாடுவோர் பாடி நிறுத்தியிருக்கும் காலத்தில் இத்தம்புராவின் ஆதார சுருதி ஒலியானது “சீவா” வின் தொடர்பால் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருப்பதால் அவர் பாடிக்கொண்டிருப்பதைப் போலுள்ள ஓர் உணர்ச்சியையும்  அது உண்டாக்குகின்றது.
(இதில் நான்கு தந்திகள் இருக்கின்றன.இந்த நான்கு தந்திகளின் ஒலிகளும் தனித்தனியே பிரிந்து ஒலிக்காமல் ஒன்று சேர்ந்து ஒலிக்கும் போது, பிரதான மெட்டின் மேல் நான்கு தந்திகளுக்கும் மெட்டிற்கும் இடையே துண்டு நூல்கள் செலுத்தி வைத்துக் கொள்ளப்படும். இதற்கு “சீவா” என்று பெயர்). இது வண்டின் ஒலிபோல ரீங்காரத்துடன் தொடர்ந்து ஒலியாக கேட்கப் பெறும். இந்த “சீவா” என்ற ரீங்கார ஒலியினால் நன்றாக சுருதி சேர்க்கப் பெற்ற தம்புராவானது  “ரிகரிக” என்று ஒலித்து செவிப்புலனாகும். இது மிகவும் இனிமையாக இருக்கும். தம்புராத் தந்திகளின் சுருதி நன்றாக சேர்ந்திருப்பதற்கு இங்குக் கூறப்பெற்ற “ரிகரிக” என்று ஒலிக்கும் சிறப்பே குறிகாட்டியாகும்.
                                                          காற்று வாத்தியங்கள்
மேலை நாட்டு இசையில் காற்றுக் கருவிகளை ஏரோபோன்ஸ் (aerophones) என்பர். பண்களை இனிமையாக இசைக்கும் கருவி குழல். கொன்றை மரக் காயைக் குழலாக உருவாக்கி இசைத்தல்; ஆம்பல் கொடியின் தண்டினைக் (stem) குழலாக உருவாக்கி இசைத்தல்; இவை தமிழர் இசை மரபின் தொடக்கநிலைக் குழல் வகைகளாகக் கொள்ளலாம்.குரலிசைக்கு (vocal music) நிகரான எல்லா இசை நுட்பங்களையும் இசைக்க வல்ல சிறந்த கருவியாகப் பழந்தமிழர் இதனை உருவாக்கினர். குழலை, தனித்து இசையைப் பெருக்கும் கருவியாகப் பயன்படுத்தினர். யாழ், முழவு முதலான பிற கருவிகளோடு இணைத்தும் இசைத்தனர். பாட்டிசைக்குப் பக்க இசை வழங்கவும் பயன்படுத்தினர்.கூட்டு இசை நிகழ்ச்சியில் குழல் இசை வழி யாழிசையும், யாழிசை வழி தண்ணுமை என்னும் தாள இசையும், தண்ணுமை இசைவழி முழவும் சேரும் பாங்கைச் சிலப்பதிகராம் இவ்வாறு கூறுகிறது:


குழல்வழி நின்றது யாழே யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே தன்ணுமைப்
பின்வழி நின்றது முழவே . . .


 மூங்கிலால் உருவாக்கப்படுவது குழல் கருவி. இதில் எட்டுத் துளைகள் இருக்கும். பொதுவாகக் கருவியின் நீளம் 15 அங்குலமாக இருக்கும். சுற்றளவு 3 அங்குலமாக இருக்கும். குழலின் இடப்பக்கத் துவாரம் அடைத்திருக்கும். வலப் பக்கத் துவாரம் திறந்திருக்கும். வாய் வைத்து ஊதும் முதல் துளை "முத்திரை" அல்லது "முத்திரைத் துளை" எனப்படும். மீதி ஏழு துளைகள் மேலும் ஏழு விரல்கள் பண் அமைப்பிற்கேற்ப மூடித் திறக்கும். அப்பொழுது பண்ணிசை காற்றில் இனிமையாக மிதந்து வரும். பழந்தமிழர் உருவாக்கிய இக் கருவி இக்காலத்தில் புல்லாங்குழல் என அழைக்கப்படுகிறது.

                                  

இது நாதஸ்வரம்நாதசுரம்நாகசுரம்நாகஸ்வரம்நாயனம் என  பலவாறு அழைக்கப்படுவது உண்டு. சிறப்பாகத் தென்னிந்தியா,இலங்கை போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி  வழக்கில் உள்ளது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. வெகு தூரத்தில் இருந்து கேட்டாலும் இன்பத்தைத் தரும் இயல்பினைக் கொண்டது.

தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால் பொதுவாக எல்லாவகையான நன் நிகழ்வுகளிலும் இதற்கு இடம் உண்டு. வசதியான பெரிய கோயில்களில் அன்றாடம் இது பல தடவைகள் இசைக்கப்படுவது வழக்கம். ஏனையவற்றில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது. தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாதஸ்வரம் சிறப்பிடம் பெறுகின்றது.
நாதஸ்வரம் பண்டைத் தமிழ் இசைக்கருவியாகத் தெரியவில்லை. சங்ககாலத் தமிழ் இலக்கியங்களோ இடைக்கால இலக்கியங்களோ கல்வெட்டுகளோ    இந்த இசைக்கருவி தொடர்பான தகவல் எதையும் தரவில்லை.17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதசங்கிரகம்  என்னும் இசை நூல் துளைக் கருவிகள் பற்றிக் கூறுகின்ற போது இக் கருவியையும் நாகசுரம் என்ற பெயரில் பட்டியல் இடுகின்றது. இதுவே தற்போதைய நிலையில், கிடைக்கின்ற வரலாற்றுக் குறிப்பு எனலாம்.இது வட இந்தியக் குழல் இசைக்கருவியான ஷெனாய்  போன்றது. எனினும் இது ஷெனாயை விட அளவில் பெரியது. இது வன்மரத்தினால் செய்யப்பட்ட உடலையும், மரத்தினால் அல்லது உலோகத்தினால் செய்யப்படும் விரிந்த அடிப் பகுதியையும் கொண்டது. இதன் பாகங்கள் வருமாறு:


  • வட்டவடிவமாக விரிந்து காணப்படும் அணைசு.
  • உள் கூடான நீண்ட மரக்குழலால் ஆன உடல்
  • உடலின் மேற் பொருத்தப்படும் கெண்டை (செப்புத் தகடு)
  • அவ்வப்போது வைத்து இசைக்கப்படும் சீவாளி.

உடலின் மேற்பாகத்தில் 12 துளைகள் உள்ளன. மேலிருந்து வரும் 7 துளைகளும் இசைப்பதற்கு ஏற்றவை. மற்றைய ஐந்தையும் அவ்வப்போது மெழுகால் அடைத்தும் திறந்தும் கொள்வார்கள். நாதசுவரத்தின் நீளம் சுமார் 2.5 அடி..நாதசுரத்திற்குச்.சுருதிக் கருவியாக விளங்குவது ஒத்து என்ற நாதசுவரத்தைப் போன்றவடிவமுள்ள ஒரு கருவி. இதிலிருந்து ஆதார சுருதி மட்டும் தான் வெளிவரும். இதனை ஒருவர் வாயில் வைத்து, தொடர்ச்சியான ஒலியை எழுப்பி வருவார். இன்று இந்தக்கருவிக்குப் பதிலாக சுருதிப்பெட்டி  பயன்படுத்தப்படுகின்றது.நாதஸ்வரத்துக்குத் தாளக் கருவியாக அமைவது தவில்  (அல்லது தவுல்) என்ற தோற்கருவியாகும்.  நாதஸ்வரக் கலைஞர், ஒத்து வாசிப்பவர், தவில் வித்துவான், தாளக் கலைஞர் (ஜால்ரா) ஆகிய நால்வரும் ஒன்று சேர்ந்த இசைக்குழுவைப் பெரியமேளம் என அழைப்பர்.
நாதசுவரத்தில் இரண்டு வகைகள் உண்டு: திமிரிபாரி. திமிரி நாதசுவரம் உயரம் குறைவாகவும், ஆதார சுருதி அதிகமாகவும் இருக்கும். பாரி நாதசுவரம் உயரம் அதிகமாகவும், ஆதார சுருதி குறைவாகவும் இருக்கும்.

டி.என்.ராஜரத்தினம் பிள்ளை,திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளை, காரைக்குறிச்சி அருணாசலம் பிள்ளை, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், அளவெட்டி என்.கே.பத்மநாதன், தேசூர் டி.எஸ்.டி.செல்வரத்தினம், மன்னார்குடி எம்.எஸ்.கே.சங்கரநாராயணன், காஞ்சி எஸ்.சண்முகசுந்தரம் - நாதஸ்வரம் இசைப்பதில் சிறந்த விற்பன்னர்கள்.  

ஆண்கள் மட்டுமே நாதஸ்வரம் வாசித்து நாம் பார்த்திருக்கிறோம். எம்.எஸ். பொன்னுத்தாய் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாதசுவரக் கலைஞர்.இவரே முதலாவது பெண் நாதசுவரக் கலைஞர் ஆவார். திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடியில் பிறந்தவர். மதுரையில் நடேசபிள்ளை என்பவரிடம் 9 வது வயதில் நாதசுவரக் கலையைப் பயின்று தமது 13 ஆவது வயதில் அரங்கேற்றம் செய்தார்.1990 ஆம் ஆண்டு கலைமாமணி பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. 23 தங்கப் பதக்கங்கள், கலை முதுமணி, நாத கான அரசி போன்ற  பல்வேறு பட்டங்களும் பெற்றுள்ளார். இவரது கணவர் விடுதலைப் போராட்ட வீரர் சிதம்பரம் முதலியார்.எம்.எஸ்.பொன்னுத்தாய் அவர்கள் 17 01 2012 அன்று காலமானார்.அவருக்கு வயது 87.
                                            தாள வாத்தியங்கள்

வரம்பு கடந்து ஒடும் ஆறுகள் போன்றன பாடலும் ஆடலும். இவற்றை ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்தும் கரைகள் போன்றவை தாளங்கள்.பழந்தமிழர் பல்வேறு வகைத் தாளங்களைக் கண்டறிந்தனர்.தாள நுட்பங்களைப் பயின்ற இவர்கள் இவற்றைக் கருவிகளில் முழக்கி இன்புற்றனர்.தாளக் கருவிகள் அனைத்தையும் பொதுவாக முழவு என்றனர் பழந்தமிழர்.இது தோற்கருவி வகையைச் (percussion instruments) சேர்ந்தது. மேலை நாட்டு இசையில் தோற் கருவிகளை மெம்பிரானோபோன்ஸ் (membranophones) என்பர்.
பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கணப்பறை, தண்ணும்மை, முரசு, தூம்பு, சிறுபறை, மொந்தை போன்ற தாளக் கருவிகளை நம் பழந்தமிழர் பயன் படுத்தினர் என்பதைச் சிலப்பதிகாரம் வழியாக அறிகிறோம். காலகட்டத்தில் இவற்றில் பல அழிந்து போயின.

                                                       தண்ணுமை  (மிருதங்கம்) :

 


தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு  நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்டது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக  காலத்திலும் இருந்தற்கான  ஆதாரங்கள் உள்ளன.'மதங்கம்' என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் திரிபே 'மிருதங்கம்' என்னும் வடமொழிச் சொல் எனக் கருதுகிறார்கள். தமிழின் 'மெது' என்பதே 'மிருது' எனத் திரிந்தது.
பெரும்பாலும் பலாமரக்  குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது. இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த உருளை வடிவினதாக அமைந்துள்ளது. திறந்த இரண்டு முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. இத் தோற்பகுதிகள் இரண்டும் தோலினாற் செய்த வார்களினால் ஒன்றுடனொன்று இழுத்துப் பிணைக்கப்பட்டுள்ளன. வலப் பக்கத்தோலில் "சோறு" என்று அழைக்கப்படும் ஒரு கரு நிறப் பதார்த்தம் நிரந்தரமாக ஒட்டப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் வாத்தியத்தை வாசிப்பதற்குச் சற்று முன்னர், மாவும் நீரும் கலந்த ஒரு கலவை தடவப்படும். நிகழ்ச்சி முடிவடைந்ததும் இது நீக்கப்படும்.
மிருதங்கம் இருந்த நிலையிலேயே வாசிக்கப்படுவது வழக்கம்.  கச்சேரியில் மிருதங்கத்தின் பிரதானமான வேலை என்பது பாடுபவருக்கோ வாசிப்பவருக்கோ துணையாக இருப்பதே. தனி ஆவர்த்தனம் என்கிற கட்டத்தில்தான் மிருதங்க வித்வானின் முழுத் திறமையை  வெளிப்படுத்தும் வாய்ப்பு அமைகிறது.பரதநாட்டியத்தின் முக்கியமான தாளக் கருவி மிருதங்கம். இக்கருவி இசை நட்டுவனாரின் நட்டுவாங்கத்திற்குப் பக்க பலமாக இருக்கும். உறுதுணையாகவும் இருக்கும்.
மிருதங்கக் கலைஞர்களில் மிகச்சிறந்தவர்கள்: தஞ்சாவூர் நாராயணசாமி அப்பா, புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, கும்பகோணம் அழகநம்பியா பிள்ளை, தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர், பாலக்காடு டி.எஸ்.மணி ஐயர், குற்றாலம் சிவவடிவேலு பிள்ளை, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் எனலாம்.    
தவில்:


          
 
தவில் என்பது  நாதஸ்வரதிர்க்குத்  துணையாக வாசிக்கப்படும் தாள இசைக்கருவியாகும்.கர்நாடக இசைக்கும் கிராமிய இசைக்கும்  இது பயன்படுத்தப்படுகிறது.  விழாக்காலங்களிலும் திருமணம், குழந்தைக்குக் காது குத்தல் போன்ற நன்நிகழ்ச்சிகளிலும் இதன் பயன்பாடு அதிகம். விலங்கின் தோலால்  இழுக்கப்பட்டு வளையத்தைக் கொண்டு ஓட்டில் கட்டப்படிருக்கும் இந்தக் கருவியில், வலது பக்கம் இடது பக்கத்தைவிடச் சற்று பெரியதாக இருக்கும். தவில் வாசிப்பவர் ஒரு தோல் கயிற்றால்  தனது தோளின் மீது தவில் கருவியை மாட்டி முழக்குவார். வலது பக்கம் வலது கையாலும் இடது பக்கம் விரல்களாலும் முழக்கப்படும். எல்லா விரல்களிலும் கவசங்கள் அணியப்பட்டிருக்கும். இடது கையில் 'Portia' மரத்தால் செய்யப்பட்ட குச்சியை பயன்படுத்துவர்.
 தவில் வாசிப்புக்கும் மிருதங்க வாசிப்புக்கும் சில அடிப்படை வேறுபாடுகள் உண்டு. முதல் வித்தியாசம் மிருதங்கம் ஸ்ருதி வாத்யம். தவிலை ஒரு ஸ்ருதியோடு இணைக்க முடியாது. மிருதங்கத்தில் ஸ்ருதியோடு இணைந்து ஒலிக்கும் சாப்பு, மீட்டு போன்ற சொற்களை வாசிக்கும் போது காதுக்கு இனிமையாக ஒலிப்பது போல, தவிலில் வாசிக்க இயலாது. இதனால் தவில்காரர்களுக்கு ‘விவகாரம்’ என்று குறிக்கப்படும் லய நுணுக்கங்கள் அவசியமாகிறது. வாத்தியத்தின் ஒலி மட்டுமே ரசிகர்களை கவர முடியாமல் போகும் போது, கணக்குகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் வெவ்வேறு கோவைகள் (patterns) கேட்போரின் கவனத்தை தக்க வைக்க உதவுகின்றன. தவில் வாசிப்பு மிருதங்க வாசிப்பை விட பல மடங்கு நுட்பமாய் விளங்குகிறது.
 தவில்  வாசிப்பதில் மிகச்சிறந்த கலைஞர்கள்: நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, மலைக்கோட்டை பஞ்சாபகேச பிள்ளை, திருமுல்லைவாயில் முத்துவீரு பிள்ளை, கும்பகோணம் தங்கவேல் பிள்ளை, நாச்சியார்கோயில் இராகவ பிள்ளை, வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை, நீடாமங்கலம் ஷன்முகவடிவேலு பிள்ளை. 
    
                                                                             கடம்

இது மிக எளிமையான தாள கருவி. இது ஒரு பெரிய மண் பானையாகும். இதை வாசிப்பவர் அமர்ந்த நிலையில் கடத்தின் வாயைத் தன் வயிற்றோடு ஒட்டவைத்து இரண்டு கைகளாலும் அடித்து வாசிப்பார்.   மிருதங்கத்தைப்போல இன்றியமையாத இசைக் கருவியாக இல்லாவிட்டாலும், பல இசை நிகழ்ச்சிகளில் கடம் பயன்படுத்தப்படுகிறது. வாய்பாட்டுக் கச்சேரிகளுக்கு இடையிலும் தாள வாத்தியக் கச்சேரிகளிலும் கடத்தின் பங்கு ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்படுகிறது.  

தொகுப்பு: லூசியா லெபோ