பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 15 février 2012

இன்றைய அறிமுகம் - தியாகையர்


இசையால் இறைவனை வசமாக்கி, அவனில் கரைந்து, அவன் அருளில் மூழ்குவது என்பது மனதுக்கு இசைவான ஒரு இனிய அனுபவம்.

கர்னாடக இசை மூலம் இறை வழிபாடு செய்யும் "நாத யோகி"களாக விளங்கியவர்களில் ஆழ்வார்கள், நாயன்மார்கள், அருணகிரிநாதர், புரந்தர தாசர், மீரா பாய், கபீர்தாஸ், குருநானக், தியாகையர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் .

தியாகராஜ சுவாமிகள் (1767 - 1848 ) திருவாரூரில் திவ்விய நாத பஜனை செய்யும் ஒருவருக்கு மூன்றாம் மகவாகப் பிறந்தார். தன் எட்டாம் வயதில் திருவையாறில் உபநயனம் செய்விக்கும்போது , தந்தையிடம் காயத்திரி மந்திரம்,ராம தாரக மந்திரம் போன்றவற்றை உபதேசம் பெற்றார். அன்று முதல் பூஜை செய்து வரலானார்.  தாயிடம் ராமதாசர், புரந்தரர் கீர்த்தனைகளைக் கற்றார். சமஸ்கிருதக் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் ராமாயணம் படித்ததோடு ஜோதிடமும் கற்றார்.

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜியிடம் அரசவை வித்வானாக இருந்த வேங்கட ரமனையாவிடம் சங்கீதம் கற்றார். அரசவையில் பாடி பாராட்டும் பெற்றார். தினமும் ராம நாம ஜபம் செய்யும் வழக்கமுள்ள இவர், ஒரு நாளைக்கு லச்சத்து இருபத்தையாயிரம் வீதம் தனது 38  வயதுக்குள் 96  கோடி ராம நாமம் உருவேற்றினார். அப்படி ஒரு முறை உள்ளம் உருகி ஜெபிக்கும்போது கதவு தட்டிய சத்தம் கேட்டது. திறந்து பார்த்தபோது ராம லக்ஷ்மணர் விசுவாமித்திரர் நடத்திய யாகத்துக்குச் செல்லும் காட்சியைக் கண்டார். "ஏல நீ தயராது" என்ற புகழ் பெற்ற பாடலை அவர் பாடியது இச்சந்தர்ப்பத்தில்தான் !

தந்தை இறந்தபின் சொத்துக்களைப் பறித்துக்கொண்டு சகோதரர்கள் அவரை விரட்டி விட்டனர். ராம விக்ரகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு கூரை வீட்டில் குடியேறிய தியாகையர் உஞ்ச விருத்தி செய்து காலம் கழித்தார். ஒரு முறை சீடன் ஒருவனைக் கோபித்தபோது, 'ராம நாமத்தை உச்சரிக்கும் வாயால் கோப வார்த்தைகளைப் பேசக் கூடாது' என்ற மனைவியின் பேச்சைக் கேட்டு தவறை உணர்ந்தவராய், "சாந்த முலேக சவுக்கியமுலேது"  என்றப் பாடலைப் பாடினார். மனைவியின் தூண்டுதல் பேரில் "சம்போ மகாதேவ", "சிவே பாஹிமாம்" போன்ற மற்றக் கடவுளரையும் துதிக்கும் பாடல்களை இயற்றினார்.

இவரது பக்திப் பாடல்கள் மக்களைக் கவரவே இவர் புகழ் பரவலாயிற்று. இதைக் கண்டு பொறாமை கொண்ட  இவரது மூத்த சகோதரன் இவர் எழுதி வைத்திருந்த சுவடிகளை எரித்ததுமின்றி ராம விக்ரகத்தை காவிரியில் எறிந்து விட்டான்.  மிக வருந்திய தியாகையர் ராமனிடமே முறையிட,கனவில் ஆற்று மணலில் விக்ரகம் புதைந்துக் கிடப்பதைக் கண்டார்.  மகிழ்ச்சி மீதூர "தொரிகிதுவோ" (நீ எப்படி மீண்டும் கிடைத்தாயோ) எனப் பாடினார் !

சரபோஜி மன்னன் தன்னைக் குறித்துப் பாடக் கேட்டபோது மறுத்து, "நிதி சால சுகமா? ராமுனி சந்நிதி சேவசுகமா?"  என இவர் பாட, சரபோஜியே மாறுவேடத்தில் நின்று அதை ரசித்தாராம் ! இதைப் போலவே திருவிதாங்கூர் மன்னர் சுவாதி திருநாளில் அழைக்க, பாட மறுத்த பக்திமான் இவர். திருப்பதி, காஞ்சி, மதுரை போன்ற இடங்களில் இவரது இசை மழைப் பொழிந்துள்ளது.  இறந்த ஒருவனை கீர்த்தனைப் பாடி உயிர் பெறவும் செய்துள்ளார் !

பத்து நாட்களுக்கு முன்பே தாம் இறைவனை அடையப் போவதாகக் கனவு கண்டார்.  இதனை "கிருபை நெல" என்ற கிருதியில் விவரித்தார்.பகுள பஞ்சமி தினமொன்றில் பஜனைகளைக் கேட்டவாறே நாத ஜோதியாய் இறைவனில் கலந்தார் இவரது குருவின் சமாதிக்கருகில் தகனம் செய்யப்பட்டார். பெங்களூர் நாகம்மா என்பவர் ஆயிரத்து தொள்ளாயிரத்து  இருபத்தி ஐந்தாம் ஆண்டு திருவையாறில் இவருக்காகக் கட்டிய சமாதியில் இன்றும் "தியாகராஜ ஆராதனை" தூயக் கலைவிழாவாக நடைபெறுகிறது.

வால்மீகி தியாகராஜராக அவதரித்தார் என்று நம்பப்படுகிறது. ராமாயணத்தை வால்மீகி 2400  சுலோகங்களில் பாடினார். தியாகராஜர் 2400  கீர்த்தனைகளில் ராம சரிதத்தைப் பாடியுள்ளார். தியாக பிரம்மம் என்று இவர் போற்றப்படுகிறார். சங்கீத மும்மூர்த்திகளில் இவர் ஒருவர். தென்னிந்திய இசையை நிலைக்கச் செய்தவர். அபூர்வ ராகங்களையும், இலக்கணங்களையும் இயற்றியவர். இவரது பாடல்கள் திறமையும் கற்பனையும் நிறைந்தவை. ஒரே ராகத்தில் பல கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். 

இவரது பக்தி மேலீட்டால் நாரதர் சன்யாசி வேடத்தில் தோன்றி, "ஸ்வரார்ணம்" என்னும் சங்கீத கிரந்தத்தை அளித்ததாகவும் கூறுகிறார்கள். ஒரு முறை திருடர்களிடம் அகப்பட்டுக் கொண்டபோது,ராம இலக்குவர் சேவகர் வடிவில் வந்து காப்பாற்றினார்களாம் ! இத்தகு தெய்வ தரிசனம் பெற்ற ஒருவர் என்பதாலேயே இத் தெய்வீக இசையும் அவரிடம் குடிகொண்டது போலும் !

பிரகலாத பக்தி விஜயம், நௌகா சரித்திரம் போன்ற இசை நாடகங்களும் படைத்துள்ளார். பல கிருதிகளை இயற்றியதோடு, அவைகளை சங்கதிகள் மூலம் அழகாக்கினார். இவரது பாடல்கள் பக்தி ரசத்தில் உள்ளம் உருக்கும் உருப்படிகள் கொண்டவை. 

இந்திய இசை வரலாற்றில் அதிக சீடர்கள் பெற்றவர் என்கிறப் பெருமையும் இவருக்குண்டு !

தணிகா சமரசம்