பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 13 janvier 2012

இன்றைய அறிமுகம்


Jean de La Fontaine: (July 8, 1621, Château-Thierry – April 13, 1695, Paris)
ழான் தெ லா போந்தேன்:  
இவர் 17 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் வாழ்ந்த சிறந்த கவிஞர். நன்னெறிக்  கதைகளை (fables) க்  கவிதை வடிவில் கொடுத்தவர். பிற்காலத்தில் ஐரோப்பாவிலும் பிரான்சின் பல பகுதிகளிலும் குழந்தைகளுக்கான நன்னெறிக்  கதைகள் தோன்ற முன்னோடியாகத்  திகழ்ந்தவர்.
இவருடைய    இளமைக்  காலம் பற்றிய செய்திகள்   நிறைய  தெரியவில்லை. இவர் தம் ஊரிலேயே தொடக்க காலக்   கல்வியைப் பயின்றார். லத்தின் மொழியை விரும்பிக்  கற்றார். கிரேக்கம் கற்க ஆர்வம் காட்டவில்லை. இது குறித்துத்  தன் பிந்தைய நாளில் மிகவும் வருத்தப்பட்டார். அமைதியையும் தனிமையும் விரும்பியவர். இதனால் புத்தகங்கள் படிப்பதில் தன் பெரும்பொழுதைக்  கழித்தார். பிறகு வக்கீல் தொழிலுக்குப்  படித்துப்  பட்டம் பெற்றார்.
நம்  நாட்டின் பஞ்சதந்திரக்  கதைகளும் அராபு நாட்டின் ஈசாப்புக்  கதைகளுமே இவர் கதை எழுத வித்திட்டன என்றால் மிகையாகாது .     முன் குறிப்பிட்ட கதைகள் உரைநடையில் இருக்க இவர் குழந்தைகளுக்காக  எளிமையான பாடல்களாகத்  (nursery rhumes) தன் பாணியில் எழுதி இன்றளவும் தன் பெயரை தக்க வைத்துக் கொண்டார்.
இவர் படைப்புகளில்  243 நன்னெறிக்  கதைகள் தலை சிறந்தவையாகக்  கருதப்படுகின்றன. நன்னெறிக்காக  மட்டுமே 12000  கவிதை வரிகள்! அதுவும் சோம்பலுக்குப் பேர் போன இவரிடம் இருந்து! வியப்புதான். இவர் படைப்பில் பஞ்சதந்திரக் கதைகள் 12 இடம்  பெற்றுள்ளன .
ஹ்யுகோ (Hugo ) வின் காலத்துக்கு  முன்பு வாழ்ந்த  பிரஞ்சுக் கவிஞர்களுள்,    அம்மொழியின்     இயல்புகளை அறிந்த ஒரே  வல்லுநர்     ழான் தெ லா போந்தேன் என்று மேற்கத்திய  நாவலாசிரியர் பிளாபர்ட் குறிப்பிடுகிறார்.
இலக்கிய  இன்பம் மட்டுமல்லாமல், புத்தம் புதிய ஊட்டமிகு ஒழுக்க உணர்வுகள் இவர் கதைகளில் ஊடுருவிச்  செல்வதை மறுப்பவர் இலர் ; முரண்பாட்டின் மொத்த உருவமான  ரூசோ , உணர்ச்சிப் பிழம்பான லாமார்த்தின் போன்றோர் மட்டுமே இதனை ஒப்புக்கொள்ளாதவர்கள். எனவே, பிரான்சிலும் வெளி நாடுகளிலும் அனைவரும் ஆர்வமுடன் படிக்கும் நூல்களாக  இவர் படைப்புகள்  விளங்குகின்றன .பிரான்சில் இலக்கிய வட்டத்தில் இவருக்குப்  பல எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால்   வெளிநாட்டுப்  பழங்கதைகளும்  அவை தரும் நல்லொழுக்கங்களும் ஐரோப்பாக்  கண்டத்தில் பரவ இவர் காரணமானவர் என்பதை மறுக்க இயலாது.
   
இவருடைய கதைத் தொகுப்புகள்:
1668 இல் 1 முதல் 6 புத்தகங்கள் வெளியிடப்பட்டன .
நன்னெறிக் கதைகள் எழுதத் தொடங்கிய காலத்தில், நாகரிக முதிர்ச்சி அடைந்த மக்களுக்காகவே எழுத வேண்டும் என எண்ணி  இருந்தார். இருப்பினும், குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைப் போதிக்க நன்னெறிக் கதைகளே சிறந்த வழி எனக் கருதப்பட்ட  காலம் அது. ஆகவே அந்த வழியையே இவரும் பின் பற்றினார். தம் முதல் தொகுதியை  ஆறே வயதான
 ( Dauphin) தொபென் என்ற குழந்தைக்கு  அர்ப்பணம் செய்தார்.
1678 இல்  7 முதல் 11 புத்தகங்கள்   அரசரின்    அந்தரங்கக் காதலியான     Madame de Montespan என்பவருக்குக்  காணிக்கை ஆக்கப்பட்டது.    
 1693/ 1694- 12 ஆவது புத்தகம்.  அரசரின் பேரனான புர்கோஞ் கோமகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.       

 கதைப்  பாத்திரங்கள்:
"விலங்குகள் வாயிலாக மனிதர்களுக்கு நீதிநெறிகளைக்  கற்பித்தேன்  ".  அடிக்கடி  இவர் கூறும் வசனம்.
இவர் பயன்படுத்திய கதைப் பாத்திரங்கள் பல வகைப் பட்டவை :
சிங்கம், கரடி, ஓநாய், பூனை, பருந்து, பிணம் தின்னிக் கழுகு, பாம்பு, யானை,  -  இவை ஆளுமை, அதிகாரம்  போன்ற குணங்களை உடைய கொடிய உயிரினங்கள்
ஆடு, மான், கழுதை , வெள்ளாட்டுக் குட்டி, எலி, மீன், தவளை  - போன்ற பயந்த சுபாவம் கொண்ட எளிதில் இரையாகக்கூடிய உயிரினங்கள்
நிலா, சூரியன், காற்று, பானை, தாவரங்கள், நீர்,கடல், சூறாவெளி, தோட்டம், பூசணிக்காய் போன்றவற்றையும் இவர் பயன்படுத்தத் தவறவில்லை.         
மனித கதைப் பாத்திரங்களும் வருகின்றனர் :
அரசர்கள், தொழிலாளர்கள், நீதிபதிகள்,மருத்துவர், பணக்காரர், ஏழைகள் ,நகரவாசி, கிராமத்தான்,குருக்கள், வணிகர்கள்  - சமுதாயத்தில் பல்வேறு நிலைகளிலும் உள்ள பல்வேறு குணங்கள் கொண்ட மனிதர்கள், ஒரு சில பெண்மணிகள் ,
புராணக்  கதைகளில் வரும் அறிஞர்கள் , சரித்திரம், இலக்கியம்  - கூறும்  கதா பாத்திரங்கள், தத்துவ ஞானி ஆகியோரும் இடம் பெறுகின்றனர். இறப்பு பற்றியும் கூறியுள்ளார்.

 சில்வெஸ்டர் தெ சாசி (Silvestre de Sacy) என்னும் பிரான்ஸ் நாட்டு மொழி இயலாளர் லா போந்தேன் கதைகள் மூன்று பருவங்களில் இருப்பவர்களை ஈர்ப்பதாகக் கூறுகிறார். அவர்கள்:    
- கதைப்போக்கில் மகிழும் குழந்தை கள்
- கதைச் சொல்லப்பட்ட கவிதையின் கலைத்திறனைக் கண்டு ரசிக்கும் இலக்கிய மாணக்கர்கள்.
- கதைப்  பாத்திரங்கள் ஊடாக   காட்டப்படும் வாழ்வியல் பாடங்களை அறிந்துகொள்ளும் அனுபவசாலிகள்.

இவர்  இறப்பின்    300 -ஆம்  ஆண்டு விழா 1995 -ஆம்  ஆண்டு வந்தது. அப்போது இவர் நினைவாகப பிரஞ்சு அரசு அஞ்சல் தலை வெளியிட்டு இவரைக் கவுரவித்தது.

தொகுப்பு: லூசியா லெபோ