பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 31 décembre 2012

இலக்கியம் காட்டும் காதல்

                                                          

 சங்க இலக்கியங்களை அகம், புறம் என இரு வகைகளாகப் பகுத்திருந்தனர் பழங்காலத் தமிழர்கள் . இத்தகைய பகுப்புமுறைமை வேறு எந்த மொழியிலேயும் இல்லை என்றே சொல்லலாம். அகத்தில் காதலையும் புறத்தில்  வீரத்தையும் சிறப்பித்துக் கூறியுள்ளனர்.அக்காலத்துப்  புலவர்கள்  மிகவும் உற்சாகமாகக்  காதலைப் பாடி இருப்பதால் சங்க காலத்தில் காதலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது தெரிகிறது.அதனால்தான் அகம் சார்ந்த பாடல்களே புறம் சார்ந்த   பாடல்களைவிடவும் அதிகமாக  இருக்கின்றன.எட்டுத் தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகிய ஐந்தும் அகம் பற்றியவை. பத்துப்பாட்டு நூல்களுள் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை,  ஆகியவை அகநூல்கள் ஆகும்.  நெடுநல்வாடை அகமா புறமா என்ற பட்டி மன்றம் இன்றும் / இன்னும் நிறைவு பெறவில்லை!

அகம் என்பது உள்ளத்தே நிகழும், வெளியே புலப்படுத்த முடியாத உணர்வை,  இன்பத்தைக்  குறிப்பதாகும்.(உடல் - உறுப்பு இவற்றைவிட உணர்வுகளுக்கே முதன்மை கொடுத்து அகப் பாடல்கள் பாடப் பட்டுள்ளன).அதாவது தலைவன் - தலைவியரின் காதல் வாழ்வையும் மணவாழ்வையும் குறிப்பதாகும்.  இவற்றில் கூறப்படும் உணர்வுகள்  எக்காலத்துக்  காதலர்களுக்கும் பொருந்தும் என்பதால் ஒரு சில காட்சிகளைக்  காண்போம்:

"இம்மை மாறி மறுமையாகினும்
 நீயாகி யரெம் கணவனை
யானாகியர்நின் நெஞ்சுநேர் பவளே "

"யாயும் ஞாயும்  யாரா கியரோ
எந்தையும்  நுந்தையும் எம்முறைக் கேளிர் 
யானும் நீயும்  எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை  நெஞ்சந் தாங்கலந் தனவே"

காதல் வாழ்வில் அவனில் அவளும், அவளுள் அவனும் கலந்து கரைகின்ற தன்மையைக்  காட்டும்  குறுந்தொகைப் பாடல்கள் இவை:

மழை என்ற தலைவனுக்காக நிலமங்கை காத்திருக்க, மழை வந்ததும் எங்ஙனம்  அவற்றை பிரித்து பார்க்க முடியாதோ அதுபோல அன்புடைய  நெஞ்சங்கள் ஒன்று கலந்தனவாம். இவ்வழகிய கருத்தைப்  பாடிய கவிஞனின் பெயர் தெரியாததால் அவரது கவிதை வரியாலேயே அவர் செம்புலப் பெயல்  நீரார் என்று அழைக்கப் படுகிறார்.

பிளவுபடாத பொருந்திய காதலில் ஓருயிர் ஈருடல் என்ற  காதலர்களின் நிலையை,
"இருதலைப் புள்ளின்  ஒருயிரம்மே" (அகநானூறு 12)
"நினக்கு யான்
உயிர் பகுத்தன்ன மாண்பினனே" (நற்றிணை  128) பாடல்கள் வழி அறிகிறோம்.

கன்னி மாடத்தில் நின்ற சீதையை "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்" முதல் பார்வையிலேயே காதலில் விழுந்ததாகக்  கம்பர்   பாடுகிறார்.

"ஓதிமம்  ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையல் ஆகும்
சீதையின் நடையை நூக்கிச்  சிறியதோர் முறுவல் செய்தான்
மாதவள் தானும் அங்கு  வந்து நீர் உண்டு மீளும்
போதகம் நடப்ப நோக்கிப்  புதியதோர் முறுவல் செய்தாள் "

கம்பனின் காட்சிப் படைப்பு இது.வனவாசம் சென்ற ராமனும் சீதையும் கோதாவரி ஆற்றுக்குப்   பக்கத்தில் அமர்ந்து ஒருவர் மற்றொருவரைக் கண்டு  மகிழும் காதல் வரிகள் இவை. அன்னத்தின் நடையை சீதையின் ஒய்யார நடையுடன்  ஒப்பிட்டு ராமன் சிரிக்க, கம்பீரமாக நடக்கும் யானையின் நடையைத்  தன் தலைவனின் நடையுடன் ஒப்பிட்டு மகிழ்கிறாள் சீதை.

பிறன்மனை நயத்தலையும்  பரத்தையர் உறவையும் பெருங்குற்றமாகச் சொல்லும் வள்ளுவர் அன்புடைய காமம்  சமுதாயத்துக்குத்  தேவை என்கிறார்.

காதல் பற்றிய  குறள்கள்:

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

மலரினும் மெல்லிது காமம்   சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்

உள்ளக் களித்தலும் காண  மகிழ்தலும்
கள்ளுக்குஇல்  காமத்திற்கு உண்டு .

காதலனை நெஞ்சில் குடிவைத்திருக்கும் காதலி சூடாக எதையும் சாப்பிடுவதில்லையாம்.இதை
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும்  வேபாக் கறிந்து  - குறள்வழி  அறிகிறோம்.

அக மரபின் தொடர்ச்சியாக வருவது பக்தி மரபு . பக்தி என்பது  காதலின் ஓர் உன்னத வெளிப்பாடாகும். அன்பினால் இறைவனை அடையத் துடிக்கும் ஆன்மா தன்னைப் பெண்ணாகவும் இறைவனைத்  தலைவனாகவும் கொண்டு அன்பு செலுத்தும் நிலை நாயக - நாயகி பாவம் எனப்படும். நாயன்மார்களும் ஆழ்வார்களும் நாயக-நாயகி பாவத்தில் பல பாடல்களைப் பாடியுள்ளார்கள்.
தலைவனுடைய பெயரையும் நிலையையும் ஊரையும் கேட்டு, அதைச் சொல்லிச் சொல்லி அவன் மேல் பித்தாகிறாள்  தலைவி. தலைவியின் ஒருதலைக் காதலான பக்தியைத் தாய் கூறுவது போல நாவுக்கரசர் பாடியுள்ளார்.இதோ அந்த தேவாரப் பாடல்:

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னே அவனுடைய ஆரூர்  கேட்டாள்
பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள்தன்  நாமம் கெட்டாள்
தலைப்பட் டாள்நங்கை தலைவன் தாளே

கோதை என்ற ஆண்டாள் அவளுக்காக செய்யப்பட திருமண ஏற்பாடுகளை மறுத்துத்  திருவரங்கம் கோவிலில் உறையும் திருவரங்கனையே தன்  மணாளனாக வரித்துக் கொண்டவள்.இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் நூல்களை எழுதினார். கண்ணனுடன் கொண்ட தோழமை, கண்ணனைப்பற்றிய அவளுடைய கனவுகள் பற்றிய கருத்துகளை இவை விவரிக்கின்றன.

"ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்" என்கிறார்  பாரதியார்.
காதல் என்ற வார்த்தை காமம் சம்பந்தப்பட்டது, உடல் அவயங்களுடன் தொடர்புடையது என்று உலகம் நினைத்துக் கிடந்த காலத்தில், உண்மையான காதல் என்னும் உணர்வு பரம திருப்தியானது  சாதிக்கக் தூண்டுவது என்று பாடுகிறார் பாரதி.

காதலினால் மானுடர்க்குக்   கலவி உண்டாம்
கலவியிலே மானுடர்க்குக்  கவலை தீரும்
காதலினால்  மானுடர்க்குக் கவிதை உண்டாம்
கானம் உண்டாம் சிற்பம் முதல் கலைகளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே
மேலும் காதல் சாவைக்கூட இனிதாக்கிவிடும் என்கிறார்.
அவர் எழுதிய 'கண்ணமா  என் காதலி',  'கண்ணன் என் காதலன்''
ஆகிய கவிதைகள் முழுக்க முழுக்க  நாயக-நாயகி  பாவனைகள்தான்.

பாரதிதாசன்:காதல் படுத்தும் பாட்டை, 
கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்.என்கிறார்.
இவரின் காதல் பாடல்கள் பல, சமூக சீர்த்திருத்தங்களை வலியுறுத்துகின்றன.
காதல் அடைதல் உயிரியற்கை - அது
கட்டில் அகப்படும் தன்மையதோ - அடி
சாதல் அடைவதும் காதலிலே - ஒரு
தடங்கல் அடைவதும் ஒன்று கண்டாய்.

இலக்கிய வானில் காதல் சிறகை விரித்து உயரப் பறந்தவர்கள் தமிழர்கள் என்பது வெள்ளிடை மலை.

லூசியா லெபோ

Aucun commentaire:

Enregistrer un commentaire