பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 31 décembre 2012

காதலின் தன்னிழப்புகாதல் எத்தனைத்  தூய்மையானதாக இருந்த போதிலும், சம்பந்தப்பட்ட இருவரைத் தவிர மற்றவர்களால் ஏனோ புரிந்து கொள்ளப் படுவதில்லை. நட்பு, பாசம், பக்தி எல்லாம் உணர்வு பூர்வமாகப்  பகிர்ந்துகொள்ளப் பட்டாலும் இது மட்டும் பலரால் விமர்சிக்கப் படுவதற்கும், புறந்தள்ளப் படுவதற்கும் எல்லோரும் இதற்கு ஆட்படாததும் ஒரு காரணமாகலாம். ஆனால் 'காதல் சுவை' மட்டும் எல்லோரையும், எந்தக் காலத்திலும் கவர்கிறது. அதனால் தான்  சரித்திரக் காதலர்களும், இலக்கியக் காதலர்களும் என்றும் நினைவில் நிறைந்து நிற்கிறார்கள்! அதிலும் கூட சமுதாயப் பிரதிபலிப்பு பளிச்சிடுகிறது. எல்லோராலும் போற்றப்படுகிறக்  காதல் கதைகளில் எல்லாம் ஒன்று காதலர் சேர முடியாமல் பிரிக்கப் படுகிறார்கள் அல்லது உலகை விட்டு மறைந்தே போகிறார்கள்.சமூக ஏற்றத் தாழ்வோ  அல்லது உறவோ இவர்களுக்குத் தடைச் சுவராக நிற்கிறது. உலகின் எந்த பாகமானாலும் இந்த மனோபாவமே பெரும்பாலும் நிறைந்திருப்பது மனித குலத்தின் மனோவியாதியா அல்லது வக்கிரமா என்று தெரியவில்லை.

பாரதியைவிட இந்த அவல நிலையைக் கனன்ற நெஞ்சோடு எடுத்துரைத்தவர் வேறு யாருமில்லை:

"இங்கு புவிமிசைக் காவியங்கள்  எல்லாம் 
   இலக்கிய மெல்லாங் காதற் புகழ்ச்சி அன்றோ?
  நாடகத்தில், காவியத்தில் காதலென்றால் 
    நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பார்,
  ஊடகத்தே, வீட்டினுள்ளே, கிணற்றோரத்தே 
    ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார் 
   பாடை கட்டி அதைக் கொல்ல வழி செய்கின்றார் 
     பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க 
   மூடரெல்லாம் பொறாமையினால் விதிகள் செய்து 
      முறை தவறி இடரெய்திக் கெடுகின்றாரே!"

கிரேக்கம்,எகிப்து,அமெரிக்கா,ஐரோப்பியா,அரேபியா,இந்தியா உள்ளிட்ட நாடுகளின் புகழ் பெற்ற காதலர்களின் கதைகள் பெரும்பாலும் சோகத்தில் தான் முடிவடைகின்றன.  மனிதனைத்  துன்ப உணர்வுகளே ஆழமாக பாதிப்பது இதன் அடிப்படையாக இருக்கலாம். ஆனால் இந்தக் காதல் என்னவோ துன்பத்திலும் நிலைத்து நின்று வென்று விடுகிறது! காதலிப்பவரைப்  பிரிந்தாலும், இழந்தாலும் அவர்களுக்காகவே வாழ்ந்தும், இறந்தும் காதலை வாழ வைத்துவிடுகிறார்கள்.

 இறந்த மனைவியின் நினைவுக்காக, 20 வருடங்கள் முனைந்து, 20,000 வேலையாட்கள், 1,000 யானைகள் கொண்டு தாஜ்மஹாலைக் கட்டியதுமின்றி, அவள் நினைவாகவே மகன் சிறையில் அடைத்தும்,அவள் கல்லறையைக் கண்டவாறே கடைசி நாட்களைக் கழித்த ஷாஜஹானை விடவும் உலகத்திற்குக் காதலின் மேன்மையை யாரால் உணர்த்த முடியும்?

இங்கிலாந்து அரசி விக்டோரியா  காதல் கணவர் இறந்த பின் 40 ஆண்டு காலம், தன் முடிவு வரும் வரை கறுப்பு நிற உடையே அணிந்து துக்கம் காத்தார். எனினும் அவர் செவ்வனே ஆற்றியக் கடமைகளே, இங்கிலாந்தை 'சூரியன் மறையாத நாடு' எனப் புகழ் பெற வைத்தது.

காதல் மணம்  புரிந்த கியூரி அம்மையார்,கணவர் இறந்த பின்னரும் தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்து, பெளதிகத்தில் நோபல் பரிசை 1911இல் பெற்றார்.

இவ்வண்ணம் காதலிப்பவர்கள் இணைந்து வாழ்ந்தாலும், சேர்ந்தே மறைந்தாலும்,  பறிகொடுத்து  நின்றாலும் காதலால், காதலுக்காக  மட்டுமே வாழ்கிறார்கள்! அவர்கள் தன்னை இழப்பது  காதலில்  மட்டுமே!

திருமதி சிமோன்Aucun commentaire:

Enregistrer un commentaire