பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 31 décembre 2012

எண்ணப் பரிமாற்றம்

                                                               



அன்புடையீர்,

வணக்கம். "பிறக்கின்றப்  புத்தாண்டு உயிர்களுக்கெல்லாம் இன்பத்தை மட்டுமே வழங்கட்டும்".

 வாழ்க்கையின் நீண்ட பயணத்தில் மனித மனம் அந்தரங்கமாகத் தேடும் ஓர் உணர்வு "காதல்". இருவரை இணைத்து, வேற்று நினைவின்றி, தனக்குள் அந்த உறவின் இனிமையிலேயே மூழ்க வைக்கும் சக்தி கொண்டது காதல்.சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஓர் தருணத்தில், இரு உள்ளங்களில் ஏற்றி வைக்கப்படும் அந்த தீபம் என்றும் அழிவதில்லை! காதலுக்குத் தோல்வியில்லை; துளிர் விடும்போதே அது அமரத்துவம் பெற்று விடுகிறது. நினைவின் ஆழத்தில் பதிந்து போன பந்தம், மரணத்தை வெல்லும்! துரதிர்ஷ்டவசமாக அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை! நட்பு,பாசம்,பக்தி போன்றவற்றிலும் தன்னிழப்பு, நிறைவு ஏற்பட்ட போதிலும்,  உணர்ச்சிப் பெருக்கு, ஆழ்ந்த அன்பு, நெருங்கிய பிணைப்பு, பரிவு, அக்கறை, நெஞ்சுருகும்  பரிதவிப்பு போன்ற எண்ணற்றத்  தன்மைகளைத் தன்னகத்தே கொண்டது காதல். மன நெகிழ்வில் சுயநலம் துறக்கவும், தன்னை மறந்துத் தன் துணை பொருட்டு எல்லா உயர்வுகளையும், இன்பங்களையும் துச்சமாக எண்ணவும், அந்த ஒருவருக்காக, அவர்  நலனுக்காகத்  தன்னையே, ஏன் அந்த ஒருவரையே கூடத் தியாகம் செய்யவும் வைக்கின்ற பெரும் சக்தி அது.

அது வெறும் விருப்பு அல்ல, I love music  என்பது போல. வெறும் பாலியல் ஈர்ப்பு அல்ல, கவர்ச்சி மட்டுமே கொள்ள. காமம் அல்ல, உடலாசை தீர்ந்ததும் விலகிச்  செல்ல! விருப்பு,கவர்ச்சி,ஆசை எல்லாம் இருந்தும் அவற்றை மீறிய அன்பும்,பண்பும் கொண்டு கரைக்குள் அடங்கி சலசலக்கும் வற்றாத நதி!

காதலைப் பாடாத கவிஞன் இல்லை. அதைத் தொடாத இலக்கியம் இல்லை. 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று சொல்லாத இளையோர் இல்லை. எனினும் அந்த வார்த்தை உயிரில் கலந்து வந்ததா என்பதை அவர்கள் வாழ்க்கைக் காட்டிக் கொடுத்து விடும். காதலர் வாழ்வில் கருத்து வேறுபாடோ அன்றி சச்சரவோ இருக்காது என்பது இதன் பொருளல்ல. இரு வேறு இடங்களில் பிறந்து, மாறுபட்ட சூழ்நிலைகளில் வளர்ந்து, தனிப்பட்ட குணங்களைக் கொண்ட இருவர் அன்றாட வாழ்வின் அலைக்கழிப்புகளால் தடுமாறும்போது, அதன் எதிரொலி செயல்களில்  பிரதிபலிக்கத்தான் செய்யும். ஆனால் புற நடவடிக்கைகளுக்கு அப்பால் அங்கே 'காதல்' பரிதவித்துக் கொண்டிருக்கும். மீண்டும் சம்பந்தப்பட்டோர் இணைந்த பின்னர், நடந்தவற்றின்  சுவடு கூட அங்கே இருக்காது!

இந்தக் காதல் ஒரு காலத்தில் புனிதமாகப் பார்க்கப்பட்டது. "காதலின் புனிதம்" மாறாதிருந்தபோதும், பார்க்கும் பார்வை மாறி வருகிறது. 'எதிர் துருவங்கள் கவரும்', 'பஞ்சும் நெருப்பும்  அருகில் இருந்தால் பற்றிக் கொள்ளும்' என்பதான   மலிந்தக் கருத்துக்கள் போக, தற்போது காதல் 'பௌதிக மாற்றம்' என்ற அளவுக்குத்  தாழ்வை நோக்கித் தள்ளப்படுகிறது. அதனால் 'பசிக்கு உணவு தேடும் மனப்பான்மை' வளர்கிறது. அதன் விளைவுகள்,சமூக வாழ்வையே பாதிக்கும் பல பிரச்சனைகளாக உருவெடுக்கின்றன.

காதலிக்கும்போது, பசி, தூக்கம் குறைவதும், இதயத் துடிப்பு அதிகரிப்பதும், அமைதியும், அதே நேரத்தில் புத்துணர்ச்சியும், இணைய வேண்டுமென்ற தாகமும், இன்பமும் ஒரு சேர எழுவதும் உடலில் மாற்றங்களை ஏற்படுத்தத்தான் செய்யும். எது முன் வந்தது என்ற ஆராய்ச்சி 'கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா' என்பதற்கு ஒப்பானதுதான்.

உள்ளத்தில் ஏற்படும் நுண்ணுணர்ச்சி ஒன்றை அடிப்படையாகக் கொண்டு  இருவரிடையே உருவாகும் மன நெருக்கத்தை, மனித வாழ்வில் இறைவனோடு இணையும்  பேரின்பத்திற்கு முதற்படியாக, மண்ணுலகில் தன்னை ஈந்து  பெறும் இன்பத்தை, அதற்குரியப்  பீடத்தை விட்டு அகற்றுவது, நாகரிகச் செம்மையில் படியும் கறைக்கு ஒப்பாகும். காதலை விடுத்து, பொருள்,பதவி,சாதி,மதம் ஆகியவற்றில் மோகம் கொள்ளும்போது ஏற்படும் பௌதிக மாற்றத்தை அறிந்து, அவற்றைக் களைந்தால், உலகமாவது நிம்மதியாக இருக்கும்!

திருமதி சிமோன்     

1 commentaire:

  1. Honestly, frankly I loved your definition of Love. As a person who married for Love and still after 32 years I find truth in what you have written.Bravo!.AK

    RépondreSupprimer