பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 27 mars 2013

அறிவு

                                                         
நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்நாள் முழுவதும் தேடுகின்ற செல்வம், மனைவி, மக்கள், வீடு, நிலம், வாகனம், ஆடை ஆபரணங்கள் முதலியன எல்லாம் இந்த உடம்பை விட்டுப்புறப்படும்போது உடன் வருவதில்லை. நம்மைத் தொடர்ந்து நம்முடன் வருவது "அறிவு" ஒன்றே ஆகும். அந்த அறிவு நாம் எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும் அத்தனைப் பிறவிகளிலும் தொடர்ந்து வரும். ஆகவே மற்ற பொருள்களைத் தேடுவதோடு அறிவை ஆர்வத்தோடு தேடிப் பெறுதல் மிகவும் அவசியம்.


நாம் இயற்கையில் பெற்ற அறிவோடு பல வழிகளிலும் அறிவினைப் பெறுகின்றோம். பலவற்றைக் கண்களால் பார்த்தும் பலர் சொல்லக் காதுகளால் கேட்டும் நாவினால் சுவைத்தும் மூக்கால் மோந்தும் கை கால் உடலினால் தொட்டும் அறிந்து கொள்கிறோம். ஒரு குழந்தை எரிகின்ற அடுப்பில் நெருப்பைப் பார்த்து ஆசையுடன் அருகில் சென்று நெருப்பில் கையை வைத்தவுடன் அலறி அழுகின்றது. "நெருப்பு சுடும்" என்பதை அந்தக் குழந்தை நேரிடையாகப் பட்டு அறிந்து கொள்கிறது. இது அந்தக் குழந்தைக்கு 'நேர்முகப் பட்டறிவு'. அந்தக் குழந்தையின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற குழந்தை தானும் அவ்வாறு செய்து பார்த்துத்தான் அறிந்துகொள்வேன் என்று நெருப்பில் கைவைப்பதில்லை. அந்தக் குழந்தைக்கு அது 'மறைமுகப் பட்டறிவு'. இதுபோன்று நேர்முகமாகவும் மறைமுகமாகவும் அனுபவித்து அறிந்து கொள்ளும் பட்டறிவுடன் அவரவர் கற்கும கல்வியால் பெறும் அறிவும் சேர்கின்றது. இப்படிச் சேர்த்த அறிவினைக் கொண்டு ஒவ்வொருவரும் தத்தமக் குரிய ஆற்றலுக்கு அமைந்தவாறு தமதாக்கிக் கொண்ட உண்மை அறிவே வாழ்நாள் முழுவதும் பயன்படுகின்றது.


நல்லனவற்றை நாடி ஆய்ந்தறியவும், தீயனவற்றைத் தேடித் தொலைத்திடவும் அறிவே துணைபுரிகின்றது. செய்யத் தகுந்தவைகளைச் செய்விக்கின்றது. செய்யத் தகாதவைகளைச் செய்யாமல் தடுக்கின்றது குற்றங்களைக் கடிகின்றது. நீதியை நிலைநாட்டுகின்றது. தாம் வாழ்வதோடு பிறரை வாழவிடவும் மற்றவர் வாழ்வதற்குத் துணை புரியவும் இயன்றவரை சிலரையாவது வாழவைக்கவும் உதவி செய்கின்றது. வன்சொல் நீக்கி இன்சொல் பேசவைத்து மனித நேயத்தை வளர்க்கின்றது. துயரப் படுவோர்க்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லச் செய்கின்றது. யார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பி ஏமாறாமல் அதன் உண்மையை ஆராயந்து அறிந்து எச்சரிக்கின்றது. எந்தப் பயனையும் எதிர்பார்க்காமல் மற்றவர் துன்பத்தைத் தனக்கு வந்ததாக நினைக்கச் செய்து தக்க சமயத்தில் அவர்கள் கேட்காமலேயே சென்று உதவச் செய்கின்றது தவறு செய்கின்ற நண்பர்களை இடித்துரைத்து நல்வழிப் படுத்துகின்றது. நற்குண நற்செயல்களால் சமுதாயத்தில் மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத் தருகின்றது. துன்பம் நேரும் காலத்தில் தம்மைக் காத்துக் கொள்ள உதவுகின்றது. மனம் போன போக்கில் போகவிடாமல் தீமையிலிருந்து நீக்கி நல்வழியில் செலுத்திக் காக்கின்றது. சுருங்கச் சொன்னால் அறிவே மனிதனை மனிதனாக வாழ்வாங்கு வாழ வைக்கின்றது.


பல்வேறு கருத்து வேறுபாடுகளைக் கொண்ட நாம் துன்பம் தொலைய வேண்டும் இன்பம் பெருக வேண்டும் என்பதில் கருத்து ஒற்றுமை உடையவர்களாய் இருக்கின்றோம். துன்பத்திற்குக் காரணம் அறியாமை இன்பத்திற்குக் காரணம் அறிவுடைமை. அறியாமையை அகற்ற அகற்ற துன்பம் நீங்கும். அறிவு வளர வளர இன்பம் பெருகும் அறியாமையை அகற்றி அறிவை வளர்க்கச் சிறந்த அறிவு நுல்களை விருப்பமுடன் கற்றுணர வேண்டும். அறிவு நிறைந்த சான்றோர்களுடன் பழக வேண்டும். 


எனவே நாம் ஒவ்வொருவரும் கற்க வேண்டிய அறிவு நூல்களைக் கசடறக் கற்றுணர்ந்தும் கற்ற வல்ல அறிஞர்களோடு பழகியும் சான்றாண்மை மிக்க பெரியவர்களைத் துணையாகக் கொண்டும் நம்முடைய அறியாமையை அகற்றி அறிவை நிரம்பப் பெற்று இன்புற்று வாழ்வோமாக!


தேவராசு Aucun commentaire:

Enregistrer un commentaire