பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 27 mars 2013

எண்ணப் பரிமாற்றம்

                                                          

அன்புடையீர்,

வணக்கம். சென்ற வலைப்பூவின் தொடர்ச்சியான எண்ணக் குவியல் என இதைக் கொள்ளலாம். ஏனெனில் எந்தக் கருத்துமே அடுத்தக் கோணத்தைக் கொண்டதாகவே உள்ளது. அதிலும் சமூகப் பிரச்சனைகள் என்னும்போது, ஒன்றின் எதிரொலியாகவோ, விளைவாகவோ, அன்றி இயற்கையின் விபரீத விளையாட்டாகவோ சில வரம்பு மீறிய, சீரணிக்கச் சற்றுக் கடினமானக் காரியங்கள் நடந்து விடுகின்றன! அவை எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். எனினும் மறைக்கப்படவோ அல்லது மறுக்கப்படவோ கூடாததான உண்மைகள் அவை. 

'கடந்த காலத்தை விட இப்போது குற்றங்கள் மலிந்து விட்டன' என்பது  என்றும் மாறாத சொற்றொடராக விளங்கி வருகிறது. ஒன்று அவற்றைப் புரியும் இக்கட்டில் மனிதர்களைத் தள்ளும் சூழலைச் சமூகம் வளர்த்து வருகிறது என்று கொள்ள வேண்டும். அல்லது ஒட்டு மொத்த சமுதாயமும் நன்மை-தீமை பாகுபாட்டிற்கு அப்பாலான வாழ்க்கையை நடத்தி வருவதாகக் கொள்ள வேண்டும். உலகம் கைக்குள்ளாகச் சுருங்கி விட்ட இந்நாளில், அறிவின் தாக்கமும், விதி விலக்கான வேண்டாத செய்திகளின் பரவலும், புது முறை விளக்கங்களும், அதை எந்த அளவுக்கு ஏற்கிறோமோ அந்த அளவு புதுமையின் முன்னணியில் இருக்கிறோம் என்னும் மாயையும் மனிதர்களை அலைக்கழிக்கின்றன. சில கட்டுப்பாடுகளும், தன்னடக்கமும், நெறிமுறைகளும் தேவையற்ற அறிவுரைகளாகி விடுகின்றன.

மனிதன்  என்றுமே நல்லவற்றுக்கும் அல்லாதவற்றுக்கும் இடையே ஊசலாடிக்கொண்டு தான், தனக்கானப்  பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது . சீரிய வழியில் செல்ல மனசாட்சியும், நற்போதனைகளும் துணை செய்கின்றன. காலங்காலமாய் சொல்லப்பட்டவை என்பதாலேயே அவை சாரமிழந்து போய்விடுவதில்லை! அறிவின் துணை கொண்டு மாற்று தேடின், அவை இன்னும் மனிதத்தைப் புனிதமாக்க வேண்டும்.

தரந்தாழ்ந்தவைகளை நாலு பேர் மத்தியில் பேசக் கூடாது என்பது நாகரிகத்தால் விளைந்த ஓர்  ஒழுங்கு முறை. ஆணோ, பெண்ணோ தன் உடலழகை  கடை விரித்தல் அழகல்ல என்பது உச்சகட்ட தன்னடக்கம். தனக்குள்ள சுதந்திரம் பிறர் உரிமைக்குள் தலையிடாதவரையில்தான் என்றுணர்வது தலையாய மனித நேயம். ஆனால் தனி மனித மனச்சான்றும், அதைத் தூக்கி நிறுத்தும் கட்டுக்கோப்பும் நாளுக்கு நாள் தளர்ந்து வருகிறது. ஊடகங்கள்  மனிதனின் அந்தரங்கத்தில் இருள் அரக்கனை உலவவிடுகின்றன.சாமான்யன் தன் பலமிழந்த சமயத்தில் அவன் தன்னை ஆளும்படி விட்டுவிடுகிறான். அவனை வெற்றி கொள்வதுதான் தன் மனிதப் பிறவிக்கான சவால் என்பது அடிபட்டுப் போகிறது.

 வயதோ, இனமோ, உறவோ இன்றி மிருக உணர்வும், அதற்கான தேடலும், அதில் வெற்றி பெரும் வேட்கையும் தான் முன்னிற்கின்றன. இதில்  வெட்கத்திற்குரிய வேதனை என்னவென்றால் இவ்வன்முறைச் சம்பவங்கள் கூட்டு முறையில் அரங்கேற்றப்படுவது. தனிப்பட்ட ஒரு நபரையாவது, ஆயிரம் காரணம் காட்டி நியாயப்படுத்தவே முடியாத இத்தகு செயலுக்காக, புரிந்து கொள்ள?! வேண்டலாம். (மன தத்துவ மருத்துவர்களும், வக்கீல்களும் இதைத்தான் செய்கிறார்கள்). ஆனால் மனசாட்சிக்கு இடமே அளிக்காத ஒருமித்த சதியினை, பரிதாபத்துக்குரிய ஓருயிர் மீது நடத்தப்படும் அராஜகத்தினை சமூகம் ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும்? எந்த நோக்கத்திற்காக அது மவுனம் சாதிக்கிறது? எதனால் துணிந்து இந்நபர்கள் மீது தன் பலத்தை உபயோகித்து அவர்களை அடக்க முன்வரவில்லை?

இதற்கு ஒரே காரணம்தான் தென்படுகிறது: ஆழ்ந்த சமூக நலன் காக்கும் பண்பு குறைந்து விட்டது. தீமை களையும் உறுதியோடு அரசாங்கமோ, அதிகாரிகளோ செயல்படுவதில்லை. கடுமையான தண்டனை உண்டு என்பது  நிச்சயமானால், தன்  உணர்வுகளைக் கட்டுப்படுத்த நினையாதவன் கூட அதற்கு பயந்து தயங்குவான். இதற்கு கற்பு குறித்தான சமூக எண்ணங்கள் மாற வேண்டும். திருட்டு, கொலை, கொள்ளைகளை விடவும் ஒருவரது தனிப்பட்ட அந்தரங்கத்தில் தலையிடுவது மகத்தானக் குற்றம் என்பதை எல்லோருமே உணர வேண்டும்.

இயற்கையைக் கெடுத்து, அதன் விளைவுகளை அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறோம். மனிதப்பண்புகளை ஒவ்வொன்றாக இழந்து வருகிறோம். இயற்கைத் தடம் புரண்டு, சீற்றம் கொள்வதைத் தாங்க இயலாதது போலவே பண்புக் கொலையும் மனித இனத்தின் அழிவாக மாறுமுன் விழித்துக் கொள்வது நல்லது.

திருமதி சிமோன்


1 commentaire:

  1. இந்நாளில், அறிவின் தாக்கமும், விதி விலக்கான வேண்டாத செய்திகளின் பரவலும், புது முறை விளக்கங்களும், அதை எந்த அளவுக்கு ஏற்கிறோமோ அந்த அளவு புதுமையின் முன்னணியில் இருக்கிறோம் என்னும் மாயையும் .....
    you have managed to express how the modern society imposes 'new values' in the name of Tolerance and Freedom.
    Thank you.
    Alexis Kittery

    RépondreSupprimer