எவ்வாறுஒரு நூலிழை உதிரி மலர்களை சேர்த்திணைத்து அழகிய மாலையாக மாற்றுகின்றதோ அதைப்போலத்தான் தனித் தனியான மனிதர்களை உறவென்னும் நூலிழை ஒன்று சேர்த்துக் குடும்பம் என்னும் அழகிய அமைப்பை உருவாக்குகின்றது. ஆனால் இன்றோ உறவுகள் பேணப்படாமல் சிதைந்துவருவதனால் குடும்ப அமைப்புகளும் நலிந்துச் சிதைவுற்று வருகின்றன.மனிதர்கள்தீவுகளைப்போல் இருந்துகொண்டு ஒருவரோடொருவர் பேசுவதற்குக் கூட நேரமில்லாமல் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கின்றது. தான், தன்வசதி, தனக்குமட்டும் என்னும் சுயநலத்தால், பணம் ஒன்றே வாழ்வின் குறிக்கோளாக மாறி மனிதம் தொலைந்து கொண்டிருக்கின்றது. "செல்வர்க்கு அழகு செழுங்கிளைத் தாங்குதல்" என்பது முதுமொழி. நமக்கோ, எத்தனை செல்வம் வந்தாலும் அதற்கேற்ப நம் தேவைகளும் நிறைவடையாமல் கூடிக் கொண்டேதான் போகின்றன. இந்நிலையில் நாம் எங்கே செழுங்கிளைத் தாங்குவது? உறவினர்களுக்கு இன்னல் வந்த காலத்தில் உதவி செய்தலே மனிதப் பண்பு. ஆனால், உறவுகளைக் கொண்டாடினால் தனக்கு எங்கே இடையூறாகப் போய்விடுமோ! என்றே இன்றைய தலைமுறை சமுதாயம் உறவுகளை விட்டு விலகியே நிற்கின்றது.
பெற்ற தாய் தந்தையரையே பாரமாக நினைக்கும் இக்காலத்தில் உடன்பிறந்தோர் மற்றும் அத்தை, மாமா, சித்தப்பா, பெரியப்பா போன்ற உறவுகளையும் நினைப்பதற்கு நேரம் கூட இல்லை ,அவர்களைப் பற்றி நினைப்பதற்கு விரும்புவதும் இல்லை.இன்னும் சொல்லப் போனால், குடும்பத்திற்கு ஓரிரு குழந்தைகள் என்று ஆகிவிட்ட இந்நாட்களில் அத்தகைய உறவுகள் அருகியும் போய்விட்டன. "ஒரு ஊரில் ஒரு ராஜா" என்பதைப்போல உறவின் முறைகளையும் கதைகளின் வாயிலாக மட்டுமே அறிந்துகொள்ளும் நிலைமை உருவாகிக் கொண்டிர்ருக்கின்றது. பெரும்பாலும் எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய தாத்தா, பாட்டி உறவுகளின் நெருக்கத்தையும் இன்றைய குழந்தைகள் உணர்வதற்கும் அனுபவிப்பதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இதனால் குழந்தைகள்,தம்வாழ்க்கை முழுவதற்கும் பயன்படக் கூடிய, ஆரோக்கியமான எத்தனையோ நல்ல பழக்க வழக்கங்களையும், பண்பாடுகளையும் கற்றுக்கொள்ளத் தவறிவிடுகின்றனர். ஆண் பெண் என இருவரும் வேலைக்குச் செல்லும் இக்காலத்தில், 'இடமாற்றம்' தவிர்க்க முடியாத அவசியமான ஒன்றாகிவிட்டது. இந்நிலையில் , பெரியவர்களோடு ஒன்றாகச் சேர்ந்து வாழ்வதென்பது இயலாத ஒன்று. பெரும்பாலான இளம் பெற்றோர்களுக்கும் இதுவே மகிழ்ச்சியையும் அளிக்கின்றது. இயந்திரத் தனமான சூழ்னிலையில்,வளர்க்கப்படும் குழந்தைகள், மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்தல், அன்புசெய்தல், பெரியவர்களை மதித்து நடத்தல்,அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல் போன்ற தன்மைகள் இன்றி, மிகவும் பிடிவாதக்காரர்களாகவும் சுயநலக் காரர்களாகவும் மாறிவிடுகிறார்கள்.தன்னுடைய பெற்றோர்களை மட்டுமே அறிந்த குழந்தைகள் வெளியில் செல்ல ஆரம்பித்தவுடன் தனக்காக நண்பர்களைத் தேடிக்கொள்கின்றார்கள். நட்பு என்பதும் இனிமையானதுதான்.ஆனால் நட்புவட்டம் பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று அவ்வப்போது மாறுவதற்கு வாய்ப்புண்டு.ஆரம்ப கால நண்பர்கள் கடைசி வரைக்கும் நண்பர்களாக நீடிப்பதில்லை; ஆனால்,உறவுகள் அப்படியல்ல. கணவன் மனைவி உறவைத் தவிர மற்ற உறவுகள் நம் ஆரம்ப காலம் முதல் நம்முடன் தொடர்ந்தே வருபவை.நம்முடைய வாழ்க்கைத் துணையை மட்டும்தான் இடைக்காலத்தில் நாம் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் தாம் வாழ்க்கையில் இணைந்ததைப் புனிதமான உறவாக நினைத்து, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துத் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, ஒருவர்க்காக மற்றவர் வாழ்ந்த காலத்தில் வாழ்க்கை இனிமையானதாகக் குடும்பங்களும் செழித்தன. ஆனால், இன்று கணவனும் மனைவியும் நண்பர்களாக, அவரவர் விருப்பங்கள் அவரவரோடு இருக்க எல்லைகளை வகுத்துக் கூட்டுச் சேர்ந்து வாழும் வாழ்க்கையில், சிறுசிறு குறைகளைக்கூடப் பொறுத்துக் கொள்ளமுடியாமல் பிரிந்துவிடுகின்றனர். உறவுகளை ஒதுக்கித் தள்ளி விட்டு, நண்பர்களை உறவின் முறைகளைச் (மாமா, மச்சான், மாப்பிள்ளை)சொல்லி அழைப்பதே இன்றைய நாகரிகமாகிவிட்டது. மேற்போக்கான இதுபோன்ற செயல்களால் இன்றைய இளைய சமுதாயம் எங்கோ போய்க்கொண்டிருக்கின்றது. உறவுகளுக்குள் இழையோடிக் கொண்டிருக்கும் மென்மையான பாசம் என்னும் உணர்வே மனிதம் மடிந்து போகாமல் காக்கின்ற வேராக இருக்கின்றது. சிறுசிறு இடைஞ்சல்கள் இருந்தாலும் இதனை உணர்ந்து இன்றைய இளைய தலைமுறையினர் ,தம் குழந்தைகளுக்குத் தாமே வாழ்க்கையின் எடுத்துக் காட்டாக இருந்தால்தான், வருங்காலச் சமுதாயம் மனஅழுத்தம், மனஉளைச்சல் போன்ற பிரச்சினைகள் இல்லாமல் அமைதியாக வாழ வழி வகுக்கும் என்பதுதான் உண்மை!
சரோஜா தேவராஜு
Aucun commentaire:
Enregistrer un commentaire