பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 29 avril 2013

மழலைக் கவிதை


                                                           


மழலை முத்தம்:

அன்னை மடியின் அழகு மழலைத்  தருமே அமுதமுத்தம்
இன்பத்  தேனை இதயங் களிக்க வருமே இனிமைசத்தம்
செண்டு போல செழித்தக் கன்னம் கரும்பைத் தெவிட்டவைக்கும்
வண்டு விழியும் வண்ண உடலும் பெருமை வரவாக்கும்!


அசையும் தென்றல்:

அசைந்துவரும் தென்றலென அருகில் வந்தே
    ஆசையோட ணைக்கவிடு சின்னச் சிட்டே!
இசைந்துதரும் முத்தமென்ற இனிமை ஒன்றே
     இசைக்குமின்ப கீதமென்றன்  மனதுக் குள்ளே!
திசையெங்கும் பேரின்பம் தோன்றும்! உள்ளம்
     திகைக்கின்றேன் நீயில்லா நொடியில்! நானும்
வசைபாடும் இவ்வுலகை மறப்பேன், உன்னை
     வாயாரச் சீர்பாடி மகிழும் போதே!


குழந்தைச் சிரிப்பு:

வண்ண வண்ணப் பூக்களுமே
   வடிவாய் இங்கு  மணம்பரப்பும்
எண்ண எண்ணத் தொலையாத
    எழிலும் எங்கும் நிறைந்திடுமே
சின்னச் சின்ன விழிகாட்டிச்
     சிறுகை கொண்டு சிலிர்த்திடவே
என்னை, உன்னை மறந்திடவே
     எழிலாய் மழலைச் சிரித்திடுமே!


மழலையின் வெளியுலகு:

அன்னைக் கைகளில் அன்புக் குழந்தையின்
முன்னைச் சுகமே முற்றும் மறந்திட
பிள்ளைக் கனியது பேதமைத் துறந்திட
தள்ளும் வழியே படிப்பு!


பேதைமை, உண்மையும் பேரெழில் வண்ணமும்
தீதறு சொல்லுமாய்த் தீண்டிடும் செல்வமே!
உன்மன வானில் உவப்பினை நல்கவே
இன்பந் தருமோ உலகு!

திருமதி சிமோன்



குழந்தை 
குழவின் குரலோ குயிலினை வெல்லும்
மழவின் நடையோ மயிலினம் தோற்கும் 
மழலைச் சிரிப்போ மனதினை அள்ளும்
குழந்தைச் செயலே குறும்பு.
                               கவிஞர் வே. தேவராசு
முன்னை வினைவந்து முந்தியே தள்ளிட 
அன்னை வயிற்றில் ஐயிரண்டுத் திங்களாய்த்
தன்னை மறந்துத் தலைகீழ்த் தவமிருந்து 
மின்னலாய்த் தாக்கிய மெல்லடியில் ஊர்ந்தேஇம்  
மண்ணில் பிறந்த மகவும் சிறுபோழ்தில் 
"என்னே இதுநானெங் கேயிருக் கின்றேன்? 
பின்னே யுமிங்கே பிறந்தேனே!"என்றயர்ந்(து) 
அன்னியப் பட்டே அழுகின்ற(து) ஈங்கே!
                               சரோசா தேவராசு


ஆரி ராரோ ஆரி ராரோ
ஆரோ ஆரோ ஆரி ராரோ 
தென்னன் தமிழே! தென்றல் காற்றே! 
மன்னும் அழகே! மலரும் பொழுதே! 
மூன்றாம் பிறையே! முன்னோர்த் தவமே!
தோன்றும் கதிரே! தொல்மணித் திரளே! 
பட்டுப் பூவே! பனியின் துளியே! 
கட்டிக் கரும்பே! கனகச் செப்பே!
மொட்டே! மலரே! மோனத் தெழிலே! 
சிட்டாய் வந்தென் சிந்தை நிறைந்தாய்! 
கண்ணின் மணியே! களிப்புறு வண்டே! 
பொன்னின் அணியே! பொருந்தும் கலையே!
மானே! மயிலே! மழலைக் கிளியே! 
தேனே! சுவையே! தெவிட்டா அமிழ்தே! 
முத்துச் சரமே! முல்லைக் கொடியே! 
கத்தும் குயிலே! கம்பன் கவியே! 
வண்ணத் தமிழே! வளரும் புகழே!
அன்னை அருளே! அற்புதப் பொருளே 
ஆரி ராரோ ஆரி ராரோ 
ஆரோ ஆரோ ஆரி ராரோ

Aucun commentaire:

Enregistrer un commentaire