பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

jeudi 23 mai 2013

எண்ணப் பரிமாற்றம்

                                                       

அன்புடையீர்,

வணக்கம். என்றோ  அழியப் போகிற உலகை நினைத்து மனிதர் கொள்ளும் திகில் கொஞ்சமல்ல. தங்கள் செய்கைகளின் விளைவை எண்ணியோ என்னவோ, அவ்வப்போது ஒரு நாள் குறித்து, அதற்கான பயமும், பதட்டமும் கொள்கிறார்கள். முன்பு 2000 எல்லையாக்கப்பட்டது. பிறகு 21-12-2012! இதற்கு விஞ்ஞான விளக்கமும், மதக் கொள்கைகளும் உதாரணம் காட்டப்பட்டன. நல்ல வேளை,  இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! ஆனால்  எப்படி?  சுற்றிலும் பஞ்சம், நோய், வாழத் தகுதியற்ற இருப்பிடம் என அழிவின் வாசல் திறந்திருக்க!

வயது எத்தனை ஆனாலும் ஆசையோ, வாழ்க்கை மீது பிடிப்போ பெரும்பாலும் அற்றுப்போவதில்லை.வாழ்வு சுவையானதாக இல்லாவிட்டாலும், இந்த பூமியில் 'இருப்பே' சுவையாக உள்ளது. நீல வானும், சுடர் விடும் சூரியனும், குளுமை தரும் நிலவும், இரவும்-பகலும், வீசும் தென்றலும், சலசலக்கும் ஓடையும், பச்சைச்செடி கொடிகளும், பூத்த வண்ண மலர்களும் மனித மனத்தை மயங்கத்தான் வைக்கின்றன. இதன் எதிரொலியாக மனதில் பிறக்கும் உணர்வுகளுக்கும், அவற்றின் வடிகாலாகப் பிறக்கும் கலைகளுக்கும் மனிதன் அடிமையாகத்தான் மாறி விடுகிறான்.

இந்த ஆதார அமைதியின்பத்தைத் தான் நாம் கொஞ்ச கொஞ்சமாக அழித்து வருகிறோம்.பணம் என்னும் அரக்கன் தூண்டிவிட்ட பேராசை, உலகை அழித்துக் கொண்டிருக்கிறது. சுய நலப்பேய்க்  குடிகொண்ட இதயத்தின் மனித நேயம் நசுக்கப்பட்டு விட்டது. இன்றைய தன்னிறைவு, நாளைய உலகை நினைத்துப் பார்க்க விடவில்லை.எங்கு நோக்கினும் தூய்மையும், பசுமையும், அழகும் நிறைந்து உள்ளத்தை நிறைத்த உலகம்,  குப்பைக்கூளமாய், இடிபாடுகளுடன், வறண்டு, வெடித்து, உயிர் வாழத் தகுதியற்றதாய் மாறிக்கொண்டு வருகிறது.

பசுமைப் புரட்சி என்ற பெயரில் ரசாயனங்களைக்கலந்து  தயாரித்த உரங்கள் பூமியின் சக்தியை உறிஞ்சுகின்றன. அளவில் அதிகமாய், மெல்லக் கொல்லும்  விஷமேந்தி பயிர்கள் வளர்கின்றன. நீர் நிலைகளிலும் அது பரவி மனித இனத்தையே முடிவுக்குக் கொண்டுவந்து விடும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.   மிகப் பெரிய, ஒரு சில நிறுவனங்கள் தங்கள் கைகளில் உலகின்  அழிவுக்கானச்  சூத்திரத்தை  வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து இந்த வாழ்விடத்தைக் காக்க, அரசியல்வாதிகளையோ, தொழிலதிபர்களையோ நம்பிப் பயனில்லை என்று ஆங்காங்கே பொது மக்கள் கூடி, பழைய முறையில் இயற்கை உரங்களைப் பயன்படுத்தவும், அதற்கான ஆதரவை அளிக்கவும் முன் வந்து விட்டார்கள்! வருகிற 25/5/2013 அன்று உலகளாவிய அளவில் (MONSANTO அமைப்புக்கு எதிராக) சாத்வீகப்  போராட்டம் நடக்கவிருக்கிறது.

"நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு பெய்யென  பெய்யும் மழை"யாமே! தாய் மண்ணைக் காப்பாற்ற வேண்டும், வருங்காலச் சந்ததியினருக்கு ஓர் அமைதிப் பூங்காவாக அதைப் பரிசளிக்க வேண்டும் என்ற தாகம் கொண்டு செயல்படும் இவர்களது நல்லெண்ணத்திற்கு பலன் கிடைக்காமலா போய்விடும்?!

திருமதி சிமோன்  

Aucun commentaire:

Enregistrer un commentaire