பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

jeudi 23 mai 2013

ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்

நீண்ட விடுமுறையில்  பிரான்சிலிருந்து  தாயகம் வந்துள்ள நான் சமைக்க காய்வாங்க மார்கெட் சென்றேன்.அழகிய தக்காளிப் பழங்கள் என்னைக் கண்சிமிட்டி வரவேற்றன.அவை  புதிதாக அவதாரம் எடுத்துள்ள  பெங்களுரு தக்காளியாம். அடுத்த மாதம்  மகளைப்  பார்க்க பெங்களுருக்குப்  போகும்பொழுது மலிவாக வாங்கலாமே என்ற என்   எண்ணத்தில் மண்விழுந்தது. காரணம் இது அங்கு மட்டுமே   பயிரிடப்படுவதில்லையாம்.அதுசரி அந்த அழகிய நிறம், தோற்றம் இவற்றின் ரகசியம்? .நாட்டுத் தக்காளியின் தோல் மென்மையானது.பழுத்த ஒரு சில  நாட்களிலேயே அழுகிப்    போய்விடும்.அதனால் உருளைக்கிழங்கின் மரபணுக்களைத்  தக்காளியில் கலந்து  தோல் தடிமனான, சதைப்பற்றான தக்காளி தயாரித்து அதற்குப்  புதிய பெயர்  சூட்டப்பட்டுள்ளது.அதாவது என்னை ஏமாற்றியது  மரபணு மாற்றப்பட்ட புதியவகை தக்காளி.சாலட்,பர்கர்,பீஸா என்று எல்லா உணவுகளிலும் இதுதான்  பயன்படுத்தப்படுகிறது என்பது  கூடுதல் செய்தி.

 பிரான்சில்மரபணு மாற்றப்பட்ட (O GM) சோளம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் பொதுவாக வரவேற்பு கிடைக்கவில்லை.விவசாயிகளுடன்  சேர்ந்து மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். (ஐரோப்பிய ஒன்றியம் மரபு மாற்றுக் காய்கறிகளைத் தனியே வைத்திருக்கின்றன. இக்காய்களைச் சந்தை விற்பனைக்கு அனுமதித்தாலும் அவற்றின் மீது ஒட்டுத் தாள்கள் ஒட்டப்பட்டு அவை வேறுபடுத்தப்படுகின்றன).மரபணு மாற்றத்திற்கு ஆதரவாகச் சொல்லும் ஒரே காரணம் -அதிக மகசூல், பஞ்சத் தடுப்பு, வறுமை ஒழிப்பு - அதிகமாக உணவு உற்பத்தி செய்து, பசியை ஒழித்துவிடலாம் என்பதுதான்.

மரபணு மாற்றம் என்றால் என்ன?
ஜீன் எனப்படும் இந்த மரபணுக்கள் அனைத்தும் புரதங்களால்ஆனவை .ஒவ்வொரு புரதமும் பல்லாயிரக்கணக்கான குணாதிசயங்களைக் கொண்டிருக்கின்றன.ஒட்டுரகங்கள் மூலமாக புதிய பயிரை உருவாக்க முப்பது ஆண்டுகள் தேவைப்பட்டன.இந்த முறையில் மரபணு மாற்றம் இயல்பாக நடந்தது.ஆனால் இப்போது பயோ டெக்னாலஜி எனப்படும் உயிரியல் தொழில்நுட்பத்தின் ஒரு பிரிவான மரபணு தொழில்நுட்பத்தில் தேவையான  புரதங்களை நமது விருப்பம், தேவைக்கு ஏற்பத்  தேர்ந்தெடுக்கலாம்.புரதங்களின் விளைவு மோசமானதாக, தீங்கானதாக இருந்தால் அதை நம்மால் எளிதாகக்  கட்டுப்படுத்த முடியாது.

.நம்  உடலில் உள்ள புரதங்களில் இயல்பாக நோய் எதிர்ப்பாற்றல் இருக்கிறது. கிருமிகள் உடலுக்குள் நுழையும்போது  எதிர்த்துப் போராடி அவற்றைச்  செயலிழக்கச் செய்கின்றன. புதியவகை  உணவுப் பொருட்கள் மூலம் உடலுக்குள் புதிய புரதங்கள் நுழையும்போது, நம்முடைய உடல் அதை உடனே ஏற்றுக்கொள்ளாது.இதனால் ஒவ்வாமை என்னும் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது.அதன் விளைவாக  இறப்பு கூட ஏற்படலாம்.
பல நாடுகளில் மரபணு மாற்றபட்ட  விதைகள் பயிரிடப்பட்ட காலங்களில் இலட்சக் கணக்கான தேனீக்கள் இறந்துள்ளன.  மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களை உட்கொண்ட விலங்குகளுக்குப்  பல்வேறு உடல் நலக்கோளாறுகள் ஏற்ப்பட்டதாக  ஆய்வுகள் கூறுகின்றன.  "எலி, ஆடு, முயல் ஆகியவற்றிற்கு மரபு மாற்றுப் பயிர்களை உணவாகக் கொடுத்து ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அவ்விலங்குகளின் இரத்த உறைதல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகளில் மாற்றங்கள் காணப்பட்டன. எனவே மரபு மாற்றப் பயிர்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது" என்கிறார் இலண்டன் கிங் கல்லூரிப் பேராசிரியர் அந்தோனியோ.

மரபணு மாற்றுப் பயிர்களைப் பயிரிட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தடைசெய்துள்ளன .ஆனால் பன்னாட்டுக் குழுமங்களான .மான்சாண்டோ, கார்கில், சின்செண்டா, ஏடிஎம் குழுமங்கள் தமது பண வலுவால் பல நாடுகளில் தடைகளை உடைத்து நுழைந்து வருகின்றன. கொரியா, இந்தோனேசியா, கிழக்கு தைமூர், அமெரிக்கா,காங்கோ, ஸ்பெயின், சிலி,  கனடா, குரேசியா, வெனிசுலா போன்ற நாடுகளில் சின்செண்டா என்ற சுவிட்சர்லாந்து நிறுவனத்தை எதிர்த்துக்  கடும் போராட்டங்கள் நடந்து  வருகின்றன.
25 05 2013 - மான்சாண்டோ நிறுவனத்துக்கு எதிரான உலகளாவிய சாத்வீக  எதிர்ப்பைத்  தெரிவிக்கும் நாளாக அறிவிக்கப்பட்டது.ஏன் இவ்வளவு கோபம் விவசாயிகளுக்கும் சுற்றுச் சூழல் ஆர்வலர்க்கும்?
மொன்சாண்டோ  என்பது  பன்னாட்டு வேளா ண்மை உயிரித் தொழில்நுட்பக்  கூட்டுத்தாபனம் .
கிபி 1901 ஆம் ஆண்டு ஜான் எப்க்யுனி என்பவரது  மனைவி ஒல்கா மான்சாண்டோவின் பெயரால் துவங்கப்பட்ட நிறுவனமாகும்.உலகம் முழுவதும் இந்த நிறுவனம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட   உணவுப் பொருள்களை அறிமுகம் செய்து வருகிறது.இதன் கிளைகள் 55 நாடுகளில் உள்ளன.இதில் இந்தியாவும் அடங்கும். .உலகம் முழுவதும் உணவுப் பொருள்களை பயிரிட இந்த நிறுவனத்தின் விதைகளை  மட்டும் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கிடத்  திட்டமிட்டுச்  செயல்பட்டுவருகிறது . 2100 -உ க்குள் உலக உணவுச்சந்தையில் ஒரே ஒரு வல்லரசு நிறுவனமாக, சர்வாதிகார நிறுவனமாக மாறத் திட்டமிட்டுள்ளது.  இந்த நிறுவனம் கொடுக்கும் விதைகள் கொடிய இரசாயனங்களால் பாடம் செய்யப்பட்டவை.வழக்கமான விதைகளைவிட ஒன்றரை மடங்கு அதிகமானத் தண்ணீரை  உறிஞ்சக்கூடியவை .உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தின் பயன்பாடும் அதிகம் தேவை.இதனால் மண்வளமும் நீர்வளமும் குறைந்துவிடும் என்று விவசாய ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.ஒரு பயிரில் தொடர்பில்லாத மற்றொரு உயிரின் மரபணு புகுத்தப்படுவதால் மரபணுக்களில் குளறுபடி நடக்க வாய்ப்பிருக்கிறது .BIO DIVERSITY எனப்படும் பல்லுயிர்ப் பெருக்கமும் பாதிக்கப்படலாம்.  

மத்திய அமெரிக்காவின் வறுமை மிக்க ஹெய்தி நாட்டில், தலைநகரில் ஏற்பட்ட நிலநடுக்கப் பேரழிவுக்குப் பின்னர் ஏறத்தாழ 8 லட்சம் மக்கள் கிராமப்புறங்களில் அகதிகளாகக் குவிந்தனர். அவர்களுக்கு உணவளிக்க விதைச் சோளத்தை எடுத்துப் பயன்படுத்தியதால், கிராம மக்களிடம் சோள விதை பற்றாக்குறை ஏற்பட்டது. அவலத்தில் சிக்கியுள்ள ஹெய்தி நாட்டுக்கு உதவுவது என்ற பெயரில்,  மான்சாண்டோ நிறுவனம் தனது விதைகளைக் கொண்டு இப்போது ஆதிக்கம் செய்யக் கிளம்பியுள்ளது.
ஹெய்தி நாட்டுக்குப்  பல நூறு  டன் விதைகளைக் கொண்டுவந்து குவித்தது.  மரபணு மாற்றப்பட்ட சோள விதைகள் இவற்றில் கலந்துள்ளன என்ற குற்றச்சாட்டு உள்ளது. அவற்றைப் பயன்படுத்தும் விவசாயத் தொழிலாளர்கள் உரிய பாதுகாப்புக் கவசங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அரசே உத்தரவிட்டுள்ளது.ஆனால், இத்தகைய அபாயங்களைப் பற்றி அறிவிக்காமலேயே மான்சாண்டோவின் விதைகள் ஹெய்தியில் கொண்டுவந்து கொட்டப்பட்டன .
தம்  அனுபவ அறிவால் பாரம்பரியமாகச் சேகரித்துப் பயிரிட்டு வந்த சோள விதைகளை ஒழித்து, தனது விதைகளைத் திணித்து ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதை  உணர்ந்த  ஹெய்தி நாட்டின் விவசாயிகள்,மான்சாண்டோ நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடத்தினர்.
சோயா உற்பத்தி அண்மைக் காலங்களில் மிகப்பெரும் அளவில் அதிகரித்துள்ளது. சோயாவிலிருந்து உயிரி எரிபொருள் தயாரிக்கப்படுவதால் உலகச் சந்தையில் அதன் தேவை அதிகரித்துள்ளது.பெரும்பான்மை இலத்தீன் அமெரிக்க நாடுகளில் பயிரிடப்படும் சோயா, மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் மரபணு  மாற்றம் செய்யப்பட்டவையே. குறிப்பாக, மான்சாண்டோவின் ரவுண்ட் அப் ரெடி சோயா   பயிரிடப்படுகிறது. இந்த சோயா விதை மான்சாண்டோ கம்பெனி உற்பத்தி செய்யும் க்ளைபோஸ்ட் (Glyposte) என்ற களைக் கொல்லியைச் சார்ந்து நிற்கும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்தப் பூச்சிக் கொல்லிகள் உண்மையில் உயிர்க் கொல்லிகளே,ஒரு காலத்தில் அங்கு வனவிலங்குகள் நிறைந்த காடுகளும், சிறு விளைநிலங்களும், கல்விக் கூடஙகளும் நிறைந்திருந்தன.  ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்கள்  சமூகமாக வாழ்ந்த நிலைமாறி, இன்று வெறும் 30 குடும்பங்கள் மட்டுமே  அங்கு உள்ளன. மரங்களும் பறவைகளும், விலங்குகளும் இன்று அங்கு இல்லை.நம் நாட்டின் நிலைப்பாடு என்ன?
1960 -களில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பசுமைப்புரட்சியின் காரணமாக உணவு பற்றாக்குறையைச்  சமாளித்தாலும் நமக்குக் கிடைத்தது குறுகிய காலத்தில் பலனைத்  தரக்கூடிய சத்துக் குறைவான அரிசி வகைகளே.இவ்வகையான அரிசியின் மோகம் அதிகரித்ததால் ஊட்டச்சத்து அதிகமுள்ள சிறுதானியம் எனப்படும் கம்பு,தினை இவற்றை மறந்து வாழ்கிறோம். பழைய காலத்தில் 120 000 அரிசி வகைகள் இருந்தன. 'பசுமைப் புரட்சி'யின் விளைவாகத் தற்போது வெறும் ஐம்பது அரிசி வகைகள் மட்டுமே உள்ளன.உழவர்களின் வருவாயைப் பெருக்கிக் கிராம முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்ற கருத்தைப் பரப்பி வீரிய விதைகளையும் அவற்றின்   கட்டுக்கடங்கா விலைகளையும் விவசாயிகள்  மீது திணித்ததால் நிலமும், உடலும் பாழாகி, எதற்கும் லாயக்கற்றதாகி இன்று நிற்கின்றன  நிலமும் அதைச் சார்ந்த வேளாண் மக்களும். வறுமையில் வாடும் மக்களின் துயரைப்போக்க விவசாயம் இல்லை.இந்தியக் குடிமக்கள் எதைச்  சாப்பிட வேண்டும் எனப்  பன்னாட்டுக்  கம்பனிகள் தான் முடிவு செய்கின்றன  என்பதே  தற்போதைய நிலைமை.
மான்சான்டோ விதைகள் இந்தியாவுக்கு வந்தபோதே உலக மயமாக்கல்-ஏகாதிபத்தியங்களை எதிர்க்கும் புரட்சிகர அமைப்புகள், '' இந்த விதைகள் நம்  நிலங்களை மலடாக்கிவிடும், எல்லாத்   தானிய வகைகளிலும் மறுசுழற்சி விவசாய முறை முற்றிலும் அழிந்துவிடும்.'' என எதிர்ப்புத் தெரிவித்தன.  மேலும், ''வழக்கமாக, உழவர்கள் ஓராண்டு விளைச்சலில் இருந்து அடுத்த ஆண்டுக்கான விதைகளைப் பெறுவார்கள். ஆனால் மரபு மாற்று விதைகளை இப்படிப் பயிரிட முடியாது. மரபு மாற்று விதைகள் 'அறிவுசார் உரிமை'ச் சட்டத்தின் கீழ் வருகின்றன. மரபு மாற்று விதைகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும். அவற்றிடம் இருந்து தான் உழவர்கள் விதைகளைப் பெற வேண்டும். இல்லாவிட்டால் 'எங்களை ஏமாற்றி விதைகளைப் பயிரிட்டிருக்கிறார்கள்' என அந்நிறுவனங்கள் வழக்குத் தொடுக்கும்.  விதைகள் தேவைப்படும் ஒவ்வொரு முறையும்  நாம் பிறரிடம் கையேந்த வேண்டியிருக்கும் என்கிற அபாயத்தை விரிவாக எடுத்துக்  கூறின. அவற்றைச் செவிமடுக்காததன் விளைவு வட இந்தியாவில் பி.டி பருத்தி எனப்படும் மரபணு பருத்தியை அறிமுகம் செய்தது  மான்சாண்டோ.
பி . டி  என்றால் என்ன?
BT என்பது Bacillus Thuringiensis என்ற நுண்ணுயிரி(பாக்டீரியா).பருத்திச் செடியைத் தாக்கும். புழுக்களிடமிருந்து காப்பாற்ற இந்த நுண்ணுயிரிலிருந்து எடுக்கப்பட்ட ""கிரை 1ஏசி'' விஷப்புரதம் பருத்திச் செடியின் மரபணுவில் புகுத்தப்படுகிறது. இம்மரபீனி சேர்க்கப்பட்ட பருத்தி வகைகள் 'பிடி' பருத்தி எனப்படுகின்றன.இந்தியாவில் பிடி பருத்தி மூலம் ஏராளமான விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.  எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்கவில்லை .கடனைச்  செலுத்த  முடியாமல் போனதால்,  கந்து வட்டிக்குக்  கடன் கொடுக்கும் தனியாரிடம் ஏறக்குறைய 60 சதவீத  விவசாயிகள்  மாட்டிக் கொண்டுள்ளதாகவும் இங்கு மரபணு மாற்ற (பி,டி) விதைகள் வந்தபின் தான்  பெரும்பான்மையான தற்கொலைகள்  நிகழ்ந்துள்ளன என்றும் தெரிகின்றன .மிக மோசமாக 1995  -இல் இருந்து 2010 வரை  50 000 விவசாயத்  தற்கொலைகள் நடைபெற்றுள்ளமை  மகாராஷ்டிராவின் பதிவுகளில் பதிவாகி உள்ளது .மேலும் 1500 ஆடுகள் இறந்து போனதற்கு இந்த விதைகளின் வீரியம் பச்சையிலைகளிலும் தீவிரமாக இருந்ததே காரணம்.

அடுத்த அறிமுகம் பி.டி கத்தரிக்காய்.உலக அளவில்  கத்தரிக்காய் மரபணு மாற்றம்  செய்த மான்சாண்டோ என்ற அமெரிக்கக்  கம்பெனி, ஐரோப்பாவிற்குக்  கொண்டு செல்வதற்குப்  பதிலாக இந்தியாவுக்குக்  கொண்டு வருகிறது.. .இதில்   விஷத் தன்மை இருப்பதால் புழு,பூச்சி வெட்டு ஏற்படாது. இந்தக் கத்தரிக்காயைக்  கடிக்கும் பூச்சிகள் உடனடியாக இறந்துவிடும்.  அதனால்  இக்கத்தரிக்காய்  நீண்டநாள் கெடாமல் இருக்கும்.மரபணு மாற்றப்பட்ட பிடி கத்தரிக்காய் மூலம் எதிர்காலத்தில் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என முழுமையாகத்  தெரியவில்லை. .மரபணு  மாற்ற்றப்பட்ட  கத்தரிக்காய் விதைகளால், விவசாயிகளுக்கு எந்த லாபமும் இல்லை. ஒவ்வொரு கத்தரிக்காய்ச்  செடிக்கும், அந்த நிறுவனத்திற்குக்  காப்புத் தொகை (ராயல்டி) கொடுக்க வேண்டும். இந்தக்  கத்தரிக்காய் மூலம் தோல் நோய், மலட்டுத்தன்மை, அலர்ஜி, சிறுநீரகக்  கோளாறு ஆகியவை ஏற்படும் எனக்   கூறப்படுகிறது. இதனால் பிடி கத்தரிக்காய்க்குப்  பல நாடுகள் தடை விதித்துள்ளன. ஏராளமான கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது இதைப்  பயன்படுத்தத்  தொடங்கிவிட்டால் எதிர்காலத்தில் உண்மையான விதை கிடைக்காது. பிடி கத்தரிக்காய் அருகே பயிரிடப்பட்ட இடத்தில் உள்ள நாட்டுக்  கத்தரிக்காய் கூட மகரந்த சேர்க்கையால் பிடி கத்தரியாக மாறும். கருவில் உள்ள குழந்தைகளுக்குக்  கூடப்  பாதிப்பு ஏற்படும். எனவே பிடி ரக விதைகளை நிரந்தரமாகத்  தடை செய்து எதிர்கால சந்ததியினரைப்  பாதுகாக்க வேண்டும். பப்பாளி,வெண்டைக்காய் போன்றவற்றின் மீதும் ஆய்வுகள் தொடர்கின்றன .
  இந்தியாவில் BT பருத்தி, கத்திரிக்காய் ஆகியவற்றைக் கொண்டு வ்ந்து கொட்டிய அதே பிரச்சாரம்தான் ஆப்பிரிக்காவிலும் தொடர்கிறது.
இந்தியாவின்  வாழ்வாதாரமாகிய விவசாயத்தை ஒருபோதும்  வியாபாரமாக்கக்கூடாது.எந்தப்  பயிரானாலும் அதன் தன்மையை நிர்ணயிப்பது அது விளையும் மண்தான். இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவதே சரியான வழி.
லூசியா லெபோ

Aucun commentaire:

Enregistrer un commentaire