பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 15 mars 2010

இன்றைய அறிமுகம் -- ஔவையார்

     ஔவையார் என்ற பெயரில் ஐவர் குறிப்பிடப்படுகின்றனர். பழந்தமிழ் அகராதிப்படி ஔவை என்ற சொல்லுக்கு மூதாட்டி-தவப்பெண் என அர்த்தம் கொள்ளப்படுகிறது. கால வேறுபாடுகள் இருந்தபோதிலும், அந்தந்த சமகால ஆண் புலவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தும், இவர்கள் பெயர்கள் மறக்கவோ, மறைக்கவோ பட்டிருக்கின்றன.

     வள்ளுவர், நக்கீரர் வாழ்ந்த கடைச்சங்க காலத்து ஔவைக் குழந்தை பாடியதாக ஒரு பாடல். அதற்குக் கர்ணபரம்பரைக் கதையாக ஏதோ சொல்லப்பட்டாலும் அப்பாடலின் உள்ளார்ந்த சோகம் கவனிக்கத்தக்கது.

  “இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி
     விட்டசிவ னும்செத்து விட்டானோ - முட்டமுட்ட
      பஞ்சமே யானாலும் பாரம் அவனுக்கன்னாய்
       நெஞ்சமே யஞ்சாதே நீ!”

     பாரி, மூவேந்தர்களை தன் தமிழால் கவர்ந்தவர் இவர். அதியமான் நேடுமான் அஞ்சி மீது குறுநில மன்னர்கள் படையெடுத்தபோது தன்பாடல்கள் மூலம் அவர்கள் மனதை மாற்றினார். இவரது 59 பாடல்கள் குறுந்தொகை, நற்றிணை, அகநானுாறு, புறநானுாறு நுால்களில் உள்ளன.

     8 அல்லது 9ஆம் நுாற்றாண்டு பக்தி இலக்கிய புலவர்களான சுந்தர மூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் காலத்து ஔவை பிள்ளையார், முருகன் மீது மாறா பக்தி கொண்டவர். நாயனார் இருவரும் முறையே கரியிலும்(யானை), பரியிலும் (குதிரை) கயிலைக்குச் செல்ல,  அவர்களோடு தானும் கயிலை செல்ல விரும்பி அவசரமாக பிள்ளையாருக்குப் பூஜை செய்ய, பிள்ளையார் அவர் முன் தோன்றி “நான் உன்னை அழைத்துச் செல்கிறேன்” என்று வாக்களிக்க, மகிழ்ந்து விநாயகர் அகவல் பாடினார் என்பர்.  “சுட்ட பழம்” மூலம் விளையாடிய முருகனிடம் தோற்றது பற்றிய ஔவையின் பாடல் கீழே-

  “ கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி
     இருங்கதலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில்
      காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றேன்
       ஈரிரவும் துஞ்சாதென் கண்”.

     அடுத்து கம்பர், செயங்கொண்டார், புகழேந்தி, ஒட்டக்கூத்தர், சேக்கிழார் போன்றவர்கள் காலத்தில் இருந்த ஔவை. 2ஆம் குலோத்துங்க சோழன் காலம். பந்தன் அந்தாதி, அசதிக்கோவை, பல தனி நிலை செய்யுள்களை இவர் இயற்றியதாகக் கூறுவர். அரசவையில் கம்பன் ஆடம்பரமாக, செருக்குடன் இருந்ததைக் கண்டு ஔவை பாடியதாகக் கூறப்படும் செய்யுள்கள் அனுபவிக்கத் தக்கவை.

  “விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
     விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனில்
      பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை
       நஞ்சேனும் வேம்பேனும் நன்று”

   “வான்குருவி யின்கூடு வல்லார்க்குத் தொல்கரையான்
      தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
      வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்கான்
       எல்லோர்க்கும் ஒவ்வொன் றெளிது.”

     ஒருமுறை கம்பர் ஆரைக்கீரைக்கு ஔவையை ஒப்பிட்டு சிலேடையாக “1 காலடி, நாலிலைப் பந்தலடி” எனப்பாடினாராம். அதற்குப் பதிலடியாக ஔவை பாடியது அவரது கவிதைத் திறனை மட்டுமல்லாது அஞ்சாநெஞ்சையும் காட்டுகிறது--

     “எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
        மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமேற்
         கூரையில்லா வீடே குலராமன் துாதுவனே
          ஆரையடா சொன்னா யது!”

அ என்பதற்கு தமிழ் எண் - எட்டு, வ என்பது - கால் அதாவது எட்டேகால் என்பது “அவ” என அர்த்தமாகும்.  பெரியம்மை - மூதேவி, கூரையில்லா - குட்டிச்சுவர்,  குலராமன் துாதுவன் - குரங்கு.

     14-15ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்த ஔவை ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி நாற்பது ஆகியவற்றை இயற்றதாகவும், 18ஆம் நுாற்றாண்டில் ஒருவர்  “ஔவைக் குறள்” எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.

                                                     -- இராசேசுவரி சிமோன்