பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 30 novembre 2012

இன்றைய அறிமுகம் - டாக்டர் இராதா கிருட்டிணன்


1888  -ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதம் 5 -ஆம் தேதி திருத்தணியில் ஏழை தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்தார்.இவருடைய தந்தை சர்வபள்ளி வீராசாமி. தாயார் சீதாம்மா.தம் இளமைக் காலத்தைச்  சொந்த ஊரிலும் திருப்பதியிலும் கழித்தார்.16 வயதில் வேலூரில் கல்லூரிப் படிப்பைத் துவங்கினார்.அப்பொழுது  பெற்றோர் தேர்ந்தெடுத்த தனது தூரத்து உறவினரான சிவகாமு என்பவரை மணந்தார்.அடுத்த  ஆண்டு சென்னையில் தத்துவத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துத் தன்  மேற்படிப்பைத் தொடர்ந்தார்.விரும்பி இப்பாடத்தை எடுத்ததைக் காட்டிலும்  இந்தப் படிப்பை முடித்த அவரது உறவினர் தன்  புத்தகங்களை இலவசமாக கொடுக்க முன்வந்ததால் குடும்பப் பொருளாதாரச் சூழ்நிலையால் இதைப் படித்தார்.இத்துறையில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் உண்டானதால்  படிப்பைச் சிறப்பாக முடித்தார். முதுகலைப் பட்டம் பெற   அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை  ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றது.  20  -ஆம் வயதில் ஆய்வுக் கட்டுரை பிரசுரிக்கப்பட்டது.வேதாந்தத்தில் அறவியல் பற்றி அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையின்  தலைப்பு :"The Ethics of the Vedanta and Its Metaphysical Presuppositions". வேதாந்தத்தில் அறவியலுக்கு இடம் இல்லை என்னும் குற்றச்சாட்டை அக்கட்டுரை மறுத்தது.

படிப்பு முடிந்ததும் சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் தத்துவ  விரிவுரையாளராக ஆசிரியர் பணியைத் தொடங்கினார்.அப்பொழுது அவருடைய சம்பளம்  17 ரூபாய். தன்னம்பிக்கையினாலும்  சொந்த முயற்சியாலும் முன்னுக்கு வந்தவர் இவர். சென்னைப்  பல்கலைக்கழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் செம்மையாகப் பணியாற்றினார்.1929   -இல் இங்கிலாந்து மான்செஸ்டர் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார்.  இவர் கல்விப் பணிகளில் குறிப்படத்தக்க ஒன்று : கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஐந்தாம் சியார்சு மன்னர் அறக்கட்டளை யில் அமைந்த மனநல-அறநிலை அறிவியல் துறையில் (Chair of Mental and Moral Science) இவர் பணி புரிந்தது.  1936 - 1939 கால கட்டத்தில், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் கீழைச் சமயங்கள்-அறவியல் துறையில் பேராசிரியராகப் பணி புரிந்தார். 1939 -இல் பிரித்தானியக் கழகத்தின்  உறுப்பினராகத் (Fellow of the British Academy) தேர்ந்தெடுக்கப்பட்டார். 1938-1948 ஆண்டுகளில் காசி இந்துப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணிபுரிந்தார்.

1946 - 1952 வரை UNESCO வில் இந்தியப் பிரதிநிதியாகப் பதவி வகித்தார்.ரஷ்யாவின் இந்தியத் தூதராக  (1949 - 1952 ) பணியாற்றினார்.அப்பொழுது ரஷ்ய அதிபர் ஸ்டாலினை சந்தித்து உரையாற்றினார். இருவரிடையே நல்ல நட்பு இருந்தது. இந்தியா  திரும்பும் முன் இராத  கிருட்டிணனை சந்தித்த ஸ்டாலின் "மனிதனாக என்னை ஏற்று கொண்ட முதல் மனிதர் நீர்தான்" என உணர்ச்சிபட கூறினாராம்.இந்திய விடுதலைக்காக பாடுபட்ட காந்தி, நேரு, அம்பேத்கார், சுபாஷ் சந்திரபோஸ், தாகூர் போன்றவர்களுடன் நேரடியாக  தொடர்பு உண்டு இராதா கிருட்டிணன் அவர்களுக்கு. 1952 - 1962 வரை இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார்.இந்தக் காலக்கட்டத்தில் முக்கியமான காரசாரமான  விவாதங்கள் மக்களவை (மேல் சபை) யில் நடைபெறும்போது வடமொழி இலக்கியங்கள், பைபிள் இவற்றிலிருந்து மேற்கோள்கள் எடுத்துச் சொல்லி அந்தச் சூழ்நிலையை மாற்றிக் குடும்ப நிகழ்ச்சி போல நடத்தி செல்வார் எனத் திரு நேரு அவர்கள் கூறுகிறார். 13 மே 1962 முதல் 13 மே 1967 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அப்போது பல்வேறு மாநிலங்களில் பல குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அதன் மீதான மேல் முறையீடு உச்சநீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுக்  கருணை மனுக்கள்  பரிசிலனைக்கு வந்தபோது மரண தண்டனை தேவையில்லை என்ற  கருத்தைத் தெரிவித்தார். பதவிக் காலம் முடிவடைந்ததும் அடுத்துப்  போட்டியிட விரும்பவில்லை.

 இவர் சிறந்த தத்துவமேதை. தத்துவத் துறையில் ரஸ்ஸலுக்கு அடுத்தப்படியாக உலகத்தாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். உண்மையை உள்ளபடியே உணர உதவும் தருக்க அடிப்படையே தத்துவம் என்கிறார் இவர்.
இவர் நல்ல கல்வியாளர். ஆசிரியர் பணியைப்  பெருமையாய்க் கருதியவர். ஆசிரியர் தொழிலுக்கு மரியாதை கொடுத்தவர். மாணவர்கள் சிலர் அவர் பிறந்தநாளை  கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டபோது அவர் பின்வருமாறு கூறினார்: "என் பிறந்த நாளைத் தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதைவிட, அதையே ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் நான் பெருமையாக உணர்வேன்" என்று. அவரின் வேண்டுகோளுக்கிணங்க 1962 ஆம் ஆண்டு முதல்,  செப்டம்பர் மாதம் 5 -ஆம் நாள் ஆசிரியர்  தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இராதா கிருட்டிணனின் பேச்சுக்களும் எழுத்துக்களும் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றவை.தம் வாழ்நாளில் பலப்பல நூல்களை எழுதிக் குவித்தவர் முனைவர் இராதாக்கிருட்டிணன். 'வாழ்வியல்  - இந்துக்களின் பார்வையில்' (The Hindu View of Life), 'கருத்தியல் கோணத்தில் வாழ்க்கை, சமயம், சமூகம்' (The Idealist View of Life , Religion and Society), ' ‘கீழை மேலை நாடு-களில் மெய்ப்பொருளியல் வரலாறு’ (Eastern Religions and Western Thought), 'இந்தியத் தத்துவங்களின் ஊற்று நூல்' (A Source Book in Indian Philosophy). மதிப்புக்குரிய பன்னாட்டுத் தாளிகைகளிலும் அவர் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

 இராதாக்கிருஷ்ணன் இணையருக்கு ஐந்து பெண் குழந்தைகளும் சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர். இந்திய வரலாற்றுத் தொடர்பான துறையில் கோபால் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்.

விருதுகள்:


1954 -ஆம் ஆண்டு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஏறக்குறைய அதே சமயம் 'முனைவர் இராதாக்கிருட்டிணன் தத்துவங்கள்' (The Philosophy of Dr. Sarvepalli Radhakrishnan) என்னும் நூல்  அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.
உலகின் பதினேழு பல்கலைக்கழகங்களிலிருந்து டாக்டர் பட்டம் பெற்றவர் இவர். ஐந்து முறை நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப் பட்டார்.ஆனால் வெற்றி பெறவில்லை.
1931 -இல் 'சர்' பட்டம் இவருக்கு  வழங்கப்பட்டது ; இந்திய நாடு விடுதலை அடைந்த பின் அப்பட்டத்தை  இவர் துறந்துவிட்டார். 1963  -இல் 'Order of Merit' வழங்கி இவரைக் கவுரவித்தது காமன்வெல்த் நாடுகள் சபை. 1961 -இல் 'German Book Trade ' வழங்கிய 'சமாதானப் பரிசை'ப் பெற்றார். இவர் மறைவுக்குச் சில காலம் முன்பு - 1975 இல் - டெம்பிள்டன் பரிசு இவரைத் தேடி வந்தது. நோபல் பரிசுக்கு வழங்கப்படும் தொகையை விட இப்பரிசுக்கு வழங்கப்படும் தொகை உயர்ந்தது. ஆயினும் இப்பரிசுப் பணம் அத்தனையையும் ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்துக்கே கொடுத்துவிட்டார். இவர் நினைவாக அப் பல்கலைக்கழகம் 'இராதாக்கிருட்டிணன் உதவித் தொகை' வழங்கத் தொடங்கியது.
79 வயதில் சென்னைக்குத் திரும்பி "கிரிஜா" என்ற தன் இல்லத்தில் வசித்து வந்தார்.17 04 1975 அன்று  அமைதியாக இறையடி சேர்ந்தார். அப்பொழுது அவருக்கு வயது 87.

தொகுப்பு: லூசியா லெபோ.

Aucun commentaire:

Enregistrer un commentaire