பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 30 novembre 2012

கல்வியின் ஏற்றமும், இறக்கமும்

                                                       Étudiants en amphi


"சீனா தேசம் சென்றாவது கல்வி பயிலுங்கள்"  - இறைத்தூதர் முகமது நபி  சல் அவர்கள்

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை -  வள்ளுவர்
(பொருள்: கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கு இணையான செல்வம் ஏதும் இல்லை).

 மேலே குறிப்பிட்ட வரிகள் கல்விக்கு மனித சமுதாயம் கொடுத்த முக்கியத்துவத்தை விளக்குகின்றன. அதிலும் குறிப்பாக நம் பாரத நாடு கல்விக்கு அளித்த  முக்கியத்துவம் போல் உலகில் வேறு எந்த நாடும் தந்தது கிடையாது என நாம் பெருமிதத்துடன் சொல்லலாம். அரசனாக இருந்தாலும் சரி ஆண்டியாக இருந்தாலும் கல்வி எந்த முறையில் யாரிடம் கற்க வேண்டும் என்பதில்கூட ஒரு நடைமுறையை முறைப்படுத்தி வைத்து இருந்தார்கள். இதிகாச காலத்திலேயே தற்போது உள்ள PRE  K..G. எனப்படும் பால பாடத்தைக் கற்பிக்கும் முறை இருந்தது. எடுத்துக்காட்டாக அரண்மனையில் இருந்த இராமர், இலட்சுமணன் போன்றோர் தம் பால பாடத்தை அரண்மனையில் வசிட்ட முனிவரிடம் பயின்று பிறகு  மேற்படிப்புக்காக விசுவாமித்திர மகரிஷி வசம் ஒப்படைக்கப்பட்டனர் என்று இதிகாசம் நமக்குத்  தெளிவு படுத்துகிறது.
நம் பாரத பூமியில் உலகிலேயே முதன் முறையாகதட்சசீலம் நாலந்தா  காஞ்சி,  நாகர்ஜுனா, உஜ்ஜயினி போன்ற பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன.   

 திண்ணைப் பள்ளிக்கூடம்:


குருகுலம் சென்று பயிலும் முறைபோல திண்ணைப் பள்ளிக்கூட நடைமுறையும் நம் நாட்டில் இருந்து வந்தது. ஆசிரியரின் வீட்டுத்  திண்ணையில்தான் வகுப்பு நடைபெறும். மாணவர்கள் ஐந்து  வயது முதல் பள்ளிக்குச்  செல்லத் தொடங்குவர். மாணவர்கள் எழுத, படிக்க காகிதமோ, சிலேட் போன்றவை அப்போது புழக்கத்தில் வரவில்லை. மணலில்தான் எழுதக் கற்றுக் கொண்டார்கள். பிறகு  எழுத்தாணியால் ஓலைச்சுவடியில் எழுதக் கற்க வேண்டும். காலை ஐந்து மணிக்கே பள்ளிக்கு ஓலைக்கட்டை எடுத்துச் சென்று முந்தய நாள் ஆசிரியர் சொல்லித் தந்ததை மனப்பாடமாக ஒப்புவிக்க ஆசிரியர் வீட்டினுள் அமர்ந்தபடி கேட்டு கொள்வார். பிறகு ஆறு மணி அளவில் மாணவர் அனைவரும் குளம், வாய்க்கால் போன்ற இடம் நோக்கிச் சென்று காலைக்கடன் முடித்துக் குளித்துப் பின் எழுதுவதற்காக மணலை  எடுத்து வந்து பள்ளியில் பரப்பி எழுதக் கற்பார்கள். மதியம் 12 மணி வரை பாடம் பயில்வர் ; உணவு இடைவேளையாக 12 மணிமுதல் 3 மணிவரை செல்வர் ;  மீண்டும்  3 மணிக்கு வந்து பாடம் பயில ஆரம்பித்து 7 மணிவரை கல்வி கற்பார்கள்.

இப்படித்  திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தாய்மொழியில் படிப்பதை உணர்ந்து படித்து அறிவு, பண்பாடு, பண்பு என அனைத்திலும் சிறந்து விளங்கிய நம்மவரைப் பார்த்து விதி லேசாக முகத்தைத் திருப்பியது. ஆம் வந்தார் , நம் பண்பாடு, தாய் மொழிக்கல்வியை அழித்து நம் உடம்பில் அந்நிய மொழியின் மோகத்தை ஊட்டி நம்மை அடிமையாக்க  ஒருவர் .  அவர் தான் தாமஸ்    பெபிங்க்டன்   மெக்காலே. 1800 -இல் பிறந்த இவர்  1834 சூன் மாதம் இந்தியா வந்து குறுகிய காலத்திலேயே  ஒரு பகிரங்க அறிவிப்பை வெளியிட்டு அதை இங்கிலாந்துக்கு அனுப்பி ஒப்புதல்  பெற்று நிறைவேற்றினார் .அதுதான் ஆங்கில வழிக்கல்வி. குமாஸ்தாக்களை உருவாக்கும்  சொன்னதைச்  செய்யும் அடிமை முறைக்கல்வி. இதனால் தாய் மொழியில் கல்வி பயிலும் முறையானது அழியத்தொடங்கியது. நம்மவர்களும் இயற்கையிலேயே இருக்கும் வெளிநாட்டு மோகத்தில் தாய் மொழிக்கல்வியைப்  புறக்கணித்து ஆங்கில வழிக் கல்வியை ஆராதிக்கத் தொடங்கினர்.இன்னும் சிலரோ ஒருபடி மேலே சென்று மேல்படிப்புக்காக மேல்நாடு  நோக்கியும் போகத்  தலைப்பட்டனர். என்ன செய்வது பல்லாயிரம்  ஆண்டுகளுக்கு முன்பே பல மேல் நாட்டு மாணவர்களுக்கும் நாலந்தா பல்கலைக்கழகத்தில்  கல்வியறிவு புகட்டியது நம் முன்னோர் என்கிற உண்மையை வெளிநாட்டு மோகம் மறைத்துவிட்டது.

இந்தியக்  கல்வி முறையானது தற்போதும் உலகளவில்  அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் நம் முன்னோர்கள் போட்ட பாதை அப்படி. உலகில் எங்கும் இல்லாத வகையில்   காலை எழுந்தவுடன் படிப்பு என்று கூறி பிரம்மமுகூர்த்தம் என்னும் அதிகாலை வேளை தான் ஆழ்ந்த அமைதியான படிப்புக்கு ஏற்ற வேளை என்று படிக்கவும் ஒரு நேரத்தை குறித்தனர். மேலும் மனக்கணக்கு என்னும் முறையில் எப்படிப்பட்ட கணிதப்  புதிரையும் பேனா பேப்பர் துணையின்றி மனத்தினுள் போட்டு உடனே பதிலைச்  சொல்லும் முறையும் நம் கல்வியில் மட்டுமே உண்டு. இதனால் சாதாரண கணக்கு போடுவதற்கும் மேலை நாட்டு மாணவர்கள் calculator தேவை என்றிருக்க, நம் மாணவர் எவ்விதத்  துணையின்றி உடனடியாகப்  பதிலைக்  கூற முடியும். அதற்கும் காரணம் மனக்கணக்கு முறைதான். அதேபோல எவ்வளவு பெரிய கடினமான பாடமாக இருந்தாலும் வாய்விட்டுச்  சப்தமாக படிப்பதால் நாம் படிக்கும் வார்த்தைகள் தெளிவாக நாமே கேட்டு, மனத்தில் இருத்தி, பின்னர் மனப்பாடமாக ஒப்புவித்தல், பிறகு அதையே எழுதிப் பார்த்தல் என்ற முறையில் நம் கல்வி அமைந்திருப்பதால் எவ்வளவு பெரிய விடயத்தையும் தெளிவாக மனத்தில் பதித்துக் கொள்ளும் ஆற்றலை நம் நாட்டு மாணவர்கள் பெறுகின்றனர். உலகில் எங்கு வாழ்ந்தாலும் அந்த நாட்டு மொழியைத் தெளிவாகக் கற்று அந்த நாட்டு ப் பண்பாட்டுடன்  ஒன்றிவிட முடிகிறது  நம் இளைஞர்களால் . காரணம் மனத்தில் பதித்துக் கொள்ளும் ஆற்றலே!
ஏழை மாணவர்களும் கல்வி பயில வேண்டும் என்று அவர்களுக்கு மதிய உணவைப் பள்ளியில்  அரசே வழங்கும் முறையைக் கொண்டு வந்தது நம் நாட்டில்தான். உலகில் உள்ள அனைத்து முன்ணணி நிறுவனங்களும் தமக்குத் தேவையான திறமையான  விஞ்ஞானிகள்,மருத்துவர்கள், தொழில் நுட்ப வல்லுநர் என்று தேடித் தேடி அவர்கள் பயிலும் கல்லூரியிலேயே வந்து அவர்களைக்  கம்பளம் விரித்து அழைத்துப் போவது நமது நாட்டு மாணவர்களைத்தான். இது நமது கல்வி முறைக்கு உலக நாடுகள் தரும் அங்கீகாரம் அன்றி வேறென்ன?கல்வியுடன் சேர்ந்த கண்டிப்பு  ஆசிரியர்கள் காண்பிப்பதால் நம் நாட்டு மாணவர்கள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியறிவு பெறுகின்றனர்.இது போன்ற கல்வி போதிக்கும் நிலையை மேலை நாடுகளில் காணமுடியாது. ஆசிரியர் மீது  மதிப்பு, மரியாதை, பயம் என சரிவிகிதத்தில் கலந்து கல்வி புகட்டுவதால் மாணவர்கள் ஒழுக்கத்துடன் கல்வி பயில நம் நாட்டுக் கல்விமுறை வழி வகுக்கிறது.

ஒரு சமூகம் சிறந்த நிலை அடைந்தால் அதற்குப் பின்னால் கண்டிப்பாக அருமையான ஆசிரியர்கள் இருப்பதை அறியலாம் . அர்ஜுனனுக்கு துரோணாச்சாரியார் போலவும், திருடனாக திரிந்த வால்மீகிக்கு  நாரதர் போலவும் விவேகானந்தருக்கு ராமகிருஷ்ண பரமஅம்சரைப் போலவும் ஒவ்வொரு மாணவனுக்கும்  ஆசிரியர் ஒருவர் இருக்க வேண்டும். இதனால்தான் நம் நாட்டில் மாதா, பிதா, குரு , தெய்வம் என்று தெய்வத்துக்கும் மேலாக குருவை வைத்துள்ளனர். தற்போது ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆசிரியர் தினம் செப்டம்பர் மாதம் 5 -ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

நம் முன்னோர் அமைத்துக்கொடுத்த  பாதையில் செல்வதால் நமது கல்விமுறையானது உலகில் 3 -ஆவது இடத்தில் உள்ளது. சிறப்பு பெற்று விளங்கும் நமது கல்வித்துறை அண்மைக் காலமாகப்  புற்றீசல் போலப் பெருகிவரும் தரமற்ற சில தனியார் கல்வி நிறுவனங்களாலும் ஒழுங்கீனமான சில ஆசிரியர்களாலும்   பின்னடைவுகளை சந்தித்து வருகிறது.இதை கருத்தில் கொண்டு அரசாங்கம்  கடுமையான சட்ட திட்டங்கள் தீட்டி செயல் படுத்தினால்  இளைய சமுதாயத்தின் கல்வி நிலை மேம்படும். காரணம்  இன்னும் 10 ஆண்டுகளில் உலகில் உள்ள இளைஞர்களில் 50% இளைஞர்கள் இந்தியாவில் இருப்பர் எனப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இப்படிப்பட்ட இளைஞர் சமுதாயத்தை நேரான பாதையில் நடத்தி ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்த நமது பாரம்பரிய இந்தியக் கல்வி முறையால் மட்டுமே முடியும்.

அப்துல் தயுப்



ஒரு நாடு பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி பெற்று முன்னேறவும்ஆரோக்கியமான ஒரு சமூகம் சிறந்த முறையில் உருவாகவும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று தரமான கல்வி. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்வியின் இன்றைய நிலை  நம் நாட்டில்,குறிப்பாகத் தமிழ் நாட்டில் எப்படி இருக்கின்றது என்று  சிறிது ஆராய்ந்ததின் விளைவே இந்தக் கட்டுரை.

தம் பிள்ளை தொட்டிலில் இருந்து இறங்கிய உடனேயே ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்ற  வேட்கையில் சில பெற்றோர்கள் இருக்கிறார்கள்.அவர்களின் இந்த மனப்போக்கைத் தனியார் கல்வி நிறுவனங்கள் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.குழந்தை பிறக்கும் நாளை மருத்துவர் குறித்துக் கொடுக்கும் நாளில் இருந்தே நர்சரி பள்ளியில் இடம் தேட ஆரம்பித்து விடுகின்றனர்.முதல் நிலைக்கே ஆயிரக்கணக்கில் கட்டணம் அது மட்டுமல்ல பெற்றோர் ஏதேனும் பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். நுழைவுத் தேர்வும் அவர்கள் எழுத வேண்டி உள்ளது. என்று நம் கல்வித்துறையில் தனியார் நுழைந்தார்களோ அப்போது  ஆரம்பித்தது தான் நமது கல்வித்தரத்தின் வீழ்ச்சி. சில தனியார் கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்படும் ஆசிரியர்களே இதற்குச் சாட்சி.   வெறும் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த பெண்களை எல்லாம் 500, 600,ருபாய்க்கு நர்சரி பள்ளிகளில் ஆசிரியர் வேலைக்கு அமர்த்தி விடுவதிலேயே வீழ்ச்சி  துவங்கி விடுகிறது. பொறியியல் கல்லூரிகளில் அரசாங்கம் நிர்ணயித்த கல்வித் தகுதிகொண்ட பேராசிரியர்களை நியமித்தால் அவர்களுக்கு அரசாங்கம் நிர்ணயம் செய்த ஊதியம் வழங்கவேண்டி வரும் என்பதற்காகத் தங்கள் கல்லூரியில் படித்து முடித்த மாணவ மாணவிகளை மிகமிகக் குறைந்த சம்பளம் கொடுத்து ஆசிரியர்களாகப் பணியில் அமர்த்தி விடுகின்றனர். தங்கள் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படித்தால் தாங்களே வேலை வாய்ப்பும் பெற்றுத் தருவதாகவும்  சிறிதும் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் விளம்பரம் மூலம் சுய தம்பட்டம் அடித்து கொள்கின்றன இந்தக் கல்விநிறுவனங்கள். இவர்களால் பிள்ளைகளுக்கு எப்படித் தரமான கல்வியைத் தர முடியும்? இப்படி இவர்களைக் குறைந்த சம்பளத்தில் நியமித்து விட்டுக் கல்விக் கட்டணத்தை மட்டும் அதிக அளவில் வசூலிக்கின்றனர்.மாதக் கட்டணம் மட்டும் இல்லாமல் தேர்வுக் கட்டணம் தனி. ஒவ்வொரு  வருடமும் பள்ளிச் சீருடை,நோட்டு, புத்தகமும் அவர்களிடம் தான் வாங்க வேண்டும். சீருடை நல்ல நிலையில் இருந்தாலும் இது கட்டாயம். பள்ளியில் நல்ல குடிநீர் கிடைத்தாலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தருகிறோம் என்ற வகையில் அதற்குத் தனியாகப் பணம் வசூலிக்கின்றனர். இதனால் நடுத்தர மக்களும் அதற்குப் கீழ் வருமானம் உள்ளவர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

முன்பு எல்லாம் பள்ளி ஆண்டு விழாவில் கண்டிப்பாகத் தேசத்தலைவர்கள்  வேடமிடுதல்,தேசபக்திப் பாடல்கள் பாடுவது என்று இடம் பெறும். ஆனால் தற்போது  ஆண்டு விழா என்றாலே சினிமா பாடல்கள் மட்டுமே என்று ஆகி விட்டது.இந்த நிலையில் பிள்ளைகளின் மனத்தில் தேசிய உணர்வோதேசத்தலைவர்களைப் பற்றிய செய்திகளோ எப்படிப் பதியும்?போகிற போக்கில் படிப்பதோடு சரி.சில பொறியியல் கல்லூரிகளிலும் சினிமா சம்பந்தப்பட்டவர்களை தலைமை தாங்க அழைப்பதால்  இளைய தலைமுறையினரிடம் சினிமா பற்றிய சிந்தனை மேலோங்கி நிற்கிறது. இப்படிக் கொட்டமடிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை ஒடுக்கத்தான் சமச்சீர்க் கல்வி முறையும் வரையறுக்கப்பட்ட கல்விக் கட்டணமும் கொண்டு வரப்பட்டன.ஆனால் அதை ஏற்க அவர்கள் தயாராக இல்லை.ஏன் என்றால் அரசாங்கப் பள்ளியை விடத் தங்கள் கல்வித் தரம் உயர்ந்தது என்கிற மாயையை மக்கள் மனத்தில் பதித்து இருந்தனர்.அது இனி இல்லாமல் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே கல்வி முறை வந்து விட்டால் மக்கள் இனி ஏமாறமாட்டார்கள் என்றே பயந்து இந்தத் திட்டங்களை ஏற்க மறுத்து நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தே காலம் கடத்துகிறார்கள்

கண்பார்வை அற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக  நடத்தப்படும் கல்வி முறையிலும் சில மாற்றங்கள் வேண்டும்,அதாவது அவர்களின் பாடங்கள் Braille முறையிலும்,சாதாரண முறையிலும் இருந்தால்  பாடங்களைக் கற்றுத் தருவதில் அவர்களின் தாயாலும் உதவமுடியும்.கொரியா நாட்டில் இந்த முறை உள்ளது.

அரசும் இன்னும் தன் பள்ளி நிர்வாகத்தையும் பள்ளிப் பாது காப்பையும்  மேம்படுத்த வேண்டும்.இனி ஒரு கும்பகோணக் கோர விபத்தோ,பள்ளி வாகன விபத்தோ ஏற்படாமல் காக்க வேண்டும். எந்த நிலையிலும் தனியார் பள்ளிகளுக்குக் குறைந்தது இல்லை அரசு பள்ளிகள் என்ற நிலை கொண்டு வர வேண்டும். முறைகேடான ஆசிரியர்களைக்  கண்டறிந்து அவர்களை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும். ஒவ்வோர் அரசாங்க ஊழியரும்,அரசியல் வாதிகளும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்கவேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். சிறந்த திறமையும்அறிவும் நிறைந்தவர்கள் நம் நாட்டு மாணவர்கள்.நம் வருங்காலச் சமுதாயத்தை மாற்றி அமைக்கும் திறன் கொண்டவர்கள்.   அதிகபடியான கட்டணங்களை அவர்கள் மீது சுமத்தி அவர்களை நசுக்கி விடாதீர்கள். 

திருமதி  அப்துல் தயுப்.

Aucun commentaire:

Enregistrer un commentaire