பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 30 novembre 2012

நாலந்தா பல்கலைக்கழகம்


நம் நாட்டின் கலாச்சாரம்,பண்பாடு, நாகரிகம்,என அனைத்து அருமை,பெருமைகளையும் உலகத்துக்கு  மிகச் சிறந்த அளவில் கல்வி மூலமாகப் பறைசாற்றிய இந்தியாவின் முதலாவதும் மிக மிகத் தொன்மையானதுமான பல்கலைக்கழகம் நாலந்தா.(தட்சசீலப் பல்கலைக் கழகம் கிறிஸ்து பிறப்பதற்கு 700 வருடங்களுக்கு முன் பிறந்தது எனினும் துரதிர்ஷ்டவசமாக அது பாகிஸ்தானுக்கு உரிமை ஆகிவிட்டது!)'அறிவை அளிக்கும் இடம்' எனப் பொருள் கொண்ட, 5 -ஆம் நூற்றாண்டில் (கி.பி.427) குமார குப்தரால் ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் தனது சீரிய பணியைக் கிட்டத்தட்ட 900 ஆண்டு காலம் தொடர்ந்தது .  இன்று இப்பல்கலைக்கழகம் தொடர்பாக நாம் அறியும் செய்திகள் எல்லாம் இப்பல்கலைக்கழகத்தில் வந்து படித்த பல வெளிநாட்டு மாணவர்கள்,மற்றும் வெளிநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் மூலமாக மட்டுமே அறியமுடிகிறது. உதாராணமாக, வரலாற்றில் நாம் அடிக்கடி படித்த சீனப்பயணி யு வாங் சுவாங், ஈ ஜிங், உள்ளிட்டோர் இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள்.அதிலும் குறிப்பாக யு வாங் சுவாங், நாலந்தாவைப் பற்றிப் பல சுவையான முக்கியமான செய்திகளைத் தனது குறிப்புகளில் எழுதி உள்ளார். தற்போதைய பீகார் மாநிலம், பாட்னாவில் இருந்து 55 மைல் தொலைவில் கிட்டத்தட்ட  14 ஹெக்டேர் பரப்பளவில், மிகமிக நேர்த்தியான  முறையில் திட்டமிட்டு  அமைக்கப்பட்டு இருந்தன. உதாராணமாக, ஒவ்வொரு வகுப்பறையும் கூட எந்த முறையில் அமைக்கப்பட வேண்டும்  (30மாணவர்களுக்கு 1 ஆசிரியர்) என்ற முறையில் வகுப்பறைகள்,தியான மண்டபங்கள்,புத்தமதத் துறவிகளின் மடங்கள், பூங்காக்கள், குளங்கள்,மற்றும் எட்டு தனித்தனி வளாகங்களில் ஆலயங்கள்  என அனைத்தும் மிக சிறப்பாக  அமைக்கப்பட்டன.

இங்குப் புத்தமதத் தத்துவங்களுடன், இதர இந்தியத்  தத்துவங்கள்,மேற்கத்தியத்தத்துவங்கள்,மருத்துவம்,சுகாதாரம்,கட்டிடக்கலை, 
சிற்பக்கலை,வானியல்,வரலாறு,சட்டம்,மொழியியல், யோகசாஸ்திரம், தர்க்கவியல், என அனைத்துப் பாடங்களும்    முறையாகக்  கற்றுத் தரப்பட்டன. கிட்டத்தட்ட  10000 மாணவர்கள்  கல்வி கற்க,  2000  ஆசிரியர்களும் இங்குத் தங்கி இருந்து அவர்களுக்குக் கல்வியைப் போதித்தார்கள். 

இப்பல்கலைகழகத்தில்துருக்கி,Greece,இந்தோனேசியா,சீனா,,திபெத்,
ஜப்பான்,கொரியா,பெர்சியா,போன்ற வெளிநாடுகளில் இருந்து வந்த மாணவர்கள் கல்வி கற்றனர், தற்போது நடைமுறையில் இருக்கும் நுழைவுத் தேர்வு முறையானது அப்பொழுதே நாலந்தா பல்கலைகழகத்திலும் இருந்தது. சீனப்பயணி  யு வாங் சுவாங் எழுதிய குறிப்பில் இருந்து இது தெரியவருகிறது. இப்பல்கலைக்கழகத்தின் சிறப்பிற்கு இதுவும் ஒரு சான்றாகும்.
  
பல்வேறு துறைகளிலும் ஒவ்வொரு பாடமும் வெறுமனே கற்றுத்தரப்படவில்லை. மாறாக விவாதங்கள் மூலமாகப் பல துறைகளிலும் விரிவுரைகளை ஆசிரியர்கள் வழங்கினர்.  இப்பல்கலைகழகத்திற்கு, குப்த,ஹர்ஷமன்னர்கள், என்று பல மன்னர்கள் புரவலர்களாக இருந்து நிதிஉதவி அளித்துக் காத்துள்ளனர்.குறிப்பாக 200 கிராமங்களின் வருவாய் இப்பல்கலைக் கழகத்திற்கு என்று ஒதுக்கப்பட்டது.நாலந்தாவுக்கென்று தனியே விளைநிலங்கள்,காய்கறி தோட்டங்கள், பசுக்களும் இருந்ததாகத் தகவல்கள் நமக்குத்  தெரிவிக்கின்றன.  இந்து மதம்,பௌத்தம்,வானிலை,அறிவியல்,மருத்துவம்,கணிதம்,தர்க்கவியல்,யோகசாஸ்திரம் என்று  பல தலைப்புகளில்  லட்சக்கணக்கான ஓலைச்சுவடிகள் இப்பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த  தர்மாகஞ் (தர்மத்தின்  புதையல்) என்ற பெயர் கொண்ட 9 மாடி கட்டிட நூலகத்தில் இருந்தன. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து படை எடுத்து வந்த பக்தியார் கில்ஜி என்ற ஆப்கானிய தளபதி இந்த நூலகத்தைச் சூறையாடி எரித்தபோது இந்த நூலகம் எரிந்து முடிய மட்டும் 6 மாதங்கள் ஆனது எனபது வரலாறு.இப்படி அந்நிய நாட்டுப் படை எடுப்பால் அடிக்கடி பாதிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் ஒரு சில ஆசிரியர்கள்,சிலநூறு மாணவர்கள் மட்டுமே இருந்து கல்வி கற்கும் அளவுக்குச் சீர்குலைந்தது. இறுதியில் 14  -ம் நூற்றாண்டில் சகலராஜா என்னும் மன்னரின் மறைவினை அடுத்து ஆதரிப்போர் யாருமின்றிப் பொலிவிழந்து செயலிழந்தது.

இங்குப் பல தத்துவ மேதைகளும், அறிஞர்களும் ஆசிரியர்களாகப் பணி யாற்றினர்,இவர்களில் குறிப்பிடப்பட வேண்டியவர்கள் தர்மகீர்த்தி, தர்மபாலர், சந்திரபாலர், ஸ்திரமதி, குணமதி ஆகியோர் ஆவர். இந்த நாலந்தா பல்கலைக்கழகமானது தற்போதைய Oxford பல்கலைக்கழகம், Cambridge பல்கலைக்கழகம், போன்ற பல்கலைக் கழகங்களுடன்ஒப்பிடும் போது 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக விளங்குகிறது, ஆனால் துரதிஷ்டவசமாக நாம் நாலந்தாவை இழந்து விட்டோம். நம் நாட்டு ஜனாதிபதியாக இருந்த திரு.அப்துல் கலாம் அவர்களின் முயற்சியால் அமர்தியாசென் அவர்களின் தலைமையில் நாலாந்தாவை மறுபடி புனரமைக்க ஒரு குழு தற்போது உருவாக்கப்பட்டு உள்ளது .இந்தத் திட்டத்திற்கு 500 மில்லியன் டாலர் தேவைப்படும் என்பதால்  Singapore போன்ற வெளிநாட்டு உதவிகளை பெறத் துவங்கி உள்ளது இந்தக் குழு.. 


அப்துல் தயுப்  3 commentaires:

 1. சிறு பிழை திருத்தம்,10000 மாணவர்களுக்கு 2000 ஆசிரியர்கள் என்று இருக்கவேண்டும்.சிரமத்துக்கு மன்னிக்கவும்.நன்றி. அன்புடன் அப்துல் தயுப்.

  RépondreSupprimer
 2. பிழை திருத்தத்துக்கு நன்றி நண்பர் அயூப் அவர்களே!

  அன்புடன்
  பெஞ்சமின் லெபோ

  RépondreSupprimer
 3. அந்த நாளில் இவ்ளோ சிறப்பான கல்வியை கொடுத்த பல்கலைகழகத்தை பற்றிய அருமையான,நல்ல தகவல்.பாலாஜி

  RépondreSupprimer