பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 30 novembre 2012

எண்ணப்பரிமாற்றம்

                                                      

அன்புடையீர்,

வணக்கம். 'எழுத்தறிவிப்பவன்  இறைவனாகும்' என்னும் உயர்ந்த கொள்கை கொண்டது நம் நாடு. அறிவுக்கும், கற்பதற்கும் அவ்வளவாகத்  தொடர்பு இல்லை என்று நிரூபிக்கும் அளவு, படிக்காத மேதைகளும், சிந்தனையாளர்களும், விஞ்ஞானிகளும்,அறிஞர்களும் இருந்தபோதிலும், சராசரி மனித அறியாமையைக் கல்வி போக்குகிறது, அறிவுக் கண்களைத் திறக்கிறது என்பதில் ஐயமில்லை ! அந்த உயர்ந்த சேவையைப் புரியும் உன்னதர்களைப்  போற்ற வேண்டும் என்கிற உணர்வு முன்பு எல்லோருக்கும் நிறையவே இருந்தது. அவர்களும் தங்கள் தகுதி அறிந்த பொறுப்போடு, முன்மாதிரியாக நடந்து கொண்டார்கள்.

இப்போது கல்வி கற்பிப்பது  ஒரு தொழிலாக, கடமையாக பலருக்கு மாறி விட்டது. எனவே வருமானம் கருதியே நேரம் பார்த்து, 'வேலை' செய்கிறார்கள் அதனால் சமூகத்தில் அவர்கள் மீதான மதிப்பும் குறைந்து விட்டது. படிக்க வருபவர்களுக்கோ அன்றி பெற்றோருக்கோ 'உண்மை அறிவின்' தாகம் குறைந்து, செய்தி விபரங்களின் பெட்டகங்களாக மாற, மாற்ற விழைகிறார்கள்.பலன், காணுமிடமெங்கும் பட்டதாரிகள்,  திறமை இல்லாத நகல்கள்! உண்மைத் திறனாளிகள் கவனிப்பாரற்றுக் கிடக்கிறார்கள் அல்லது இந்தப் போட்டிகளில் நசுக்குண்டு நலிந்து போகிறார்கள்.

ஆயினும் ஆசிரிய பீடம் முற்றாகத்  தகர்க்கப்பட முடியாதது. உலகின் தொடர் சுழற்சிச்  சங்கிலி இருக்கும் வரை, அறிவொளியை ஏற்றும் பொறுப்பினை ஏற்கும் இனமும் அழிக்கப்பட முடியாதது. தற்போது வேதாந்தம், தத்துவம், சரித்திரம், ஏன், மொழிக்குக் கூட முக்கியத்துவம் குறைந்து, விஞ்ஞானம்,பௌதிகம்,வேதியல் போன்றவற்றுக்கே வரவேற்பு உள்ளது. இவை வாழ்க்கைத் தரத்தை உயர்த்தலாம். எனினும் மனிதன் ஆத்மார்த்தமாகத் தன்னிறைவு  பெற ஒரு சில உயர்ந்த கொள்கைகளும், கோட்பாடுகளும், நன்னெறிகளும் உள்ளன. அவற்றைப் பரம்பரையாக மனிதக் குலத்திற்கு எடுத்துச் செல்வது கல்வியாளர்களே !

வாழ்நாள் முழுவதும் கற்பது நிற்பதில்லை! நாம் எதிர்பாராத இடத்தில், எதிர் நோக்காச் சிந்தனையைத்  திடீரெனச்  சந்திப்பது ஒன்றும் புதிதல்ல. நாள்தோறும் நம் அறிவு புதுப்புதுச் செய்திகளை அனுபவங்களாக சேர்த்துக்கொண்டே இருக்கிறது. அதன் பிரதிபலிப்பை வாழ்க்கையில் எந்த அளவு கொண்டுவருகிறோம் என்பதில்தான் வாழ்வின் வெற்றி அடங்குகிறது.
அதற்கு அடித்தளமாக நாம் இடுவதே கல்வி.  அனுபவங்களைப் பாகுபடுத்தவும், சீரியவற்றைச்  செயல்படுத்தவும், அல்லனவற்றைப் பாடமாக எடுத்துக் கொள்ளவும் முயற்சிக்கும் தன்மையைச்  சிறு வயது முதலே வளர்ப்பதே பள்ளி.

குழந்தைகளை என்னதான் அறிவாளிகளாக்க பெற்றோர் முயன்றாலும், வெளி உலகில் அவர்களை வாழப் பழக்குவது ஆசிரியர்களே. அவர்கள் தங்கள் முக்கியத்துவத்தையும், கடமையையும் உணர்ந்தாலே ஓர் உன்னதமானத் தலைமுறை உருவாகிவிடும். அதற்கானச்  சூழலையும், கவுரவத்தையும் நாம் அளித்தலே நாம் அவர்களுக்கு அளிக்கும் உதவி !

திருமதி சிமோன் 

Aucun commentaire:

Enregistrer un commentaire