பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 30 août 2013

தமிழ்ப்பாடல்களில் எண்கள்

                                                            

பழந்தமிழ்ப்பாடல்களில் பலவகையான சித்துவிளையாட்டுக்களை புரிந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். தமிழில் மேல்வாய் இலக்கம் கீழ்வாய் இலக்கம் என்று எண்களின் வரிசையில் வரும். இவை பின்னங்கள் எனப்படும்.
 முக்கால்,அரை,கால், அரைக்கால்,இருமா,மாகாணி,ஒருமா,கீழரை என்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்து காளமேகப் புலவர் பாடிய பாடல் இதோ:

முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்கா லரைக்கால்கண் டஞ்சாமுன் - விக்கி
இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரையின் றோது

முக்கால்னா மூன்று கால்கள். வயதான பின் இரண்டு காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவது காலாகப் பயன்படுத்துகிறோமே…..அந்த நிலை வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்…நரை வருவதற்கு முன்னாலே
அக்காலரைக்கால்கண்டஞ்சாமுன்= அந்தக் காலர்களாகிய எமதூதுவரைக்கண்டு அஞ்சி கால்கள் நடுநடுங்குமுன்பாக , விக்கி இருமாமுன் = உயிர் பிரியுமுன்னர் விக்கிக்கொண்டு இருமல் ஏற்படுமுன்னர், ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப் போகும் முன்…காஞ்சியில்  மாமரத்தின் கீழ் உள்ள ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!
இதுதான் இந்த பாடலின் பொருள்.

பழந்தமிழ் சிலேடைப் பாடலொன்றில் பின்வருமாறு வருகிறது.
"பூனக்கி ஆறு கால்
புள்ளினத்திற்கு ஒன்பது கால்
ஆனைக்குக் கால் பதினாறு ஆனதே"
அதாவது:
பூனக்கி- பூ + நக்கி = பூச்சியினம்.
ஒன்பது கால் = 9 x 1/4= 2 1/4 = இரண்டு கால்.
கால் பதினாறு = நாலு கால்
பின்வரும்  பாடல் கம்பராமாயணத்தின் தொடக்கத்திலுள்ள தோத்திர பாடல்களுள் ஒன்று - அனுமன் துதி.

அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக
ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் நம்மை அளித்துக் காப்பான்.

இப் பாடலில் அஞ்சு (ஐந்து) என்னும் எண்ணை வைத்துக்கொண்டு எப்படி விளையாடியிருக்கிறார்.வந்த சொல்லே மிக்குவருதலை, ஏந்தல் வண்ணம் என்பர் தொல்காப்பியனார் .
பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயு பகவானுக்கு மகனாக பிறந்தான்.பின்னர் ஐந்திலே மற்றொன்றான நீராகிய கடலைத் தாண்டி வான் வழியாக (ஆறு - வழி) ராமனுக்காக(ஆரியர்க்காக) சென்று ஐந்திலே இன்னொன்றான பூமியின் மகளாகத் தோன்றியசீதையைக் கண்டு இலங்கையில் (அயலார் ஊரில்) அவ்வைந்திலே கடைசியாக உள்ளதீயை வைத்தான். அப்படிப் பட்டவன் நம்மைப் பாதுகாத்து அருளுவான்.
 சங்க காலத்தில் எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.

"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை."

பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம்... சிறு முட்களின் எண்ணிக்கை "0" அல்லது "5" ஆகிய இரு எங்களை கொண்டு முடிந்தால் மட்டுமே ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுத்தால் முழு எண்ணாக விடை வரும்.
மூதுரை என்னும் நூலில் ஔவையார் அவர்கள் எழுதிய பாடல் பின்வருமாறு.

மானம் குலம் கல்வி வன்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தளன்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திட பறந்து போகும்.

பசி வந்தால் மானம், குலம்,  கல்வி, வன்மை, அறிவுடைமை, தானம், தவம், பதவி, இளகிய மனம், காமுறுதல்  ஆகிய பத்தும் பறந்துபோகும்  என ஔவையார் கூறுகிறார்.
 ஔவையார் ஒரு சமயம் சில புலவர்களைக் காணச் சென்றபோது அப்புலவர்கள் கவலைதோய்ந்த முகத்தோடு காணப்படவே அதன் காரணத்தை வினவினார்.
“நாளைப் பொழுது விடிவதற்குள் நான்கு கோடிப் பாடல்கள்  இயற்றவேண்டும் என மன்னவன் ஆணையிட்டுள்ளான். அதனால் தான் கவலையடைந்துள்ளோம்” என்று அவர்கள் கூறினராம்.
இதைக்கேட்ட ஔவையார், “இவ்வளவுதானா, இதற்காகவா கவலை கொண்டுள்ளீர்கள்” என்று கூறி கோடி என்ற வார்த்தையை அடக்கிய 4 பாடல்களைக் சொன்னார். இதுவே நாலு கோடிப் பாடல்கள் எனப்படும்.(.ஒளவையாரின் தனிப்பாடல் 42):

“மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்”
“உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்”
“கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்”
“கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்”

நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரின் வீட்டு வாசலை மிதிக்காமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
கோடி பொன்னைக்  கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி  பொன்னுக்கு இணையானது ஆகும்.
பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி  பொன்னுக்கு இணையானது ஆகும்.
எண்களின் தமிழ் வடிவங்களை வைத்து சங்கேதச்சொற்களைப் புனைவதுண்டு.  உதாரணம்:

'ஏழு அஞ்சு மையன்னா' என்றும் 'ஒண்ணேமுக்கால் தையன்னா'
 
ஏழுக்குரிய தமிழ் வடிவம் = எ
அஞ்சு = ரு
ஏழு ஐந்து = எரு + மையன்னா - எருமை

ஒன்று = க
முக்கால் = 'ழு' வை ஒத்திருக்கும் வடிவம்

ஒண்ணேமுக்கால் = கழு + தையன்னா - கழுதை

இதைப்போன்றே ஔவையார் பாடல் ஒன்று இருக்கிறது.

கம்பர் ஔவையாரிடம் ஒரு பாடல்  சொல்லி நையாண்டி செய்ய, அந்த அம்மாள் அவரை நோக்கிப்பாடிய வசைக்கவி உண்டு.

'ஆரை' என்னும் கீரையை அடக்கி,

'ஒரு காலடி,
நாலிலைப் பந்தலடி' என்று விடுத்த விடுகவிக்கு 

எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே, - முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா!
என்று பதிலடி கொடுத்தார் ஒளவையார்.

பழமொழிகளிலும் எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம்
ஊரு ரெண்டு பட்ட கூத்தாடிக்கு கொண்டாட்டம்
‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’’
‘‘அஞ்சு வெரலும் ஒண்ணாவா இருக்கு’’

கன்று ஈன்ற பசுமாட்டை விலைக்கு வாங்கி வந்தவர் பசுவிடம் பால் இல்லாததால் ‘‘அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை’’ என்றார்.பசுவில் இருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், கோமியம், சாணம் இவையே அந்த 5 விதமான பொருள்களாகும். இதில் பால், தயிர், நெய் இவை கிடைக்கா விட்டாலும் கோமியம், சாணம் என்ற இரண்டு பொருள்கள் மட்டும் உறுதியாகப் பசுமாட்டில் இருந்து கிடைக்கும். இதனைக் குறிக்கவே  மேற்கண்ட பழமொழி..
மந்திரத்தில் ஐந்தெழுத்து மந்திரம் சிறப்பானது.  ‘நமசிவாய’ என்பதே அச்சிவ மந்திரமாகும். இதனைச் சொல்பவர் பலவிதமான நன்மைகளையும் அடைவர். அவர்களைத் துன்பம் என்றும் அணுகாது. இவ்வைந்து எழுத்து மந்திரத்தினை முழுமையாகக் கூற இயலாவிட்டாலும் ‘சிவா’ என்று இரண்டெழுத்தைக் கூறினாலும்  சிவபெருமான், மந்திரம் சொல்வோரைக் காப்பாற்றுவார் என்ற  தெய்வ நம்பிக்கையை விளக்குவதாகவும் இப்பழமொழி அமைந்துள்ளது.

ஒருவன் நன்கு பாடுபட்டு உழைத்து உண்ணுதல் வேண்டும். அதுவே அவனுக்குப் பெருமை தரும். உழைக்காது உண்பது இழிவானதாகும். தம் உழைப்பில் கிடைத்த பொருளைத் தானும் உண்டு, பிறருக்கும் கொடுத்து உண்டு வாழ்பவனுடைய வாழ்வே உன்னதமானதாகும். இதனை,

‘‘அஞ்சு விரல்ல பாடுபட்டு
பத்து விரல்ல அள்ளித் தங்கணும்’’

ஐந்து குழந்தைகளும் பெண்குழந்தைகளாகப் பிறந்துவிட்டால் அரசனைப் போன்று செல்வ வளமுடையவர்களும் செல்வ வளம் குன்றி வறுமை நிலைக்குத் தள்ளப்படுவர். அதாவது பிச்சை ஏற்று வாழும் ஆண்டியாக ஆவர் என்பதை,

‘‘அஞ்சும் பொம்பிளப் பிள்ளையாப் பிறந்தா
அரசன் கூட ஆண்டியாகி விடுவான்’’ என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

இறப்பு என்பது எந்த வயதில் வரும் என்று அறுதியிட்டுக் கூற இயலாது.  எவ்விடத்திலும் எவருக்கும் எவ்வயதிலும் வரும். இதனை,

‘‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’’ என்ற பழமொழி விளக்கியுரைக்கின்றது.

பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவது ஆளாகப் போரிட்டாலும், நூறு கௌரவர்களுடன் நூற்றியோராவது ஆளாகப் போரிட்டாலும் கர்ணனுக்கு மரணம் என்பது நிச்சயம். அதனை மாற்ற முடியாது என்ற மகாபாரதக் கதையை விளக்கத் தோன்றியதே இப்பழமொழியாகும்.

மனித வாழ்க்கையை எட்டு எட்டாகப் பிரித்து - ஓரெட்டில் நடக்காத நடை, ஈரெட்டில் பயிலாத கல்வி, மூவெட்டில் செய்யாத திருமணம், நாலெட்டில் பெறாத பிள்ளை ஐயெட்டில் சேர்க்காத செல்வம், ஆறெட்டில் சுற்றாத உலகம், ஏழெட்டில் கொள்ளாத ஓய்வு, எட்டெட்டில் நிகழா இறப்பு இவை வீண்.எனவே எட்டு என்பது வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த ஓர் எண் என்பது தெளிவாகிறது.

நற்குடியில் பிறந்தோரும் பசி வந்திடில் தங்களின் நற்குணங்களை இழந்துவிடுவர். இழிசெயல்களைச் செய்யத் தொடங்குவர். இதனை,

‘‘பசி வந்திடப் பத்தும் பறக்கும்’’என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது. அன்பு, கல்வி, ஈகை, கருணை, நட்பு, காதல், பகை, மானம், என்ற பத்துவிதமான குணங்களும் மிகுபசி உடையவனிடம் இருந்து விலகிவிடும்.

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க - என்று வாழ்த்துகிறோமே அவை என்னென்ன என்று கூறும் பாடல் இதோ:

துதிவாணி வீறு விசயம் சான்தனம் துணிவு
தனம் மதி தானியம் சௌபாக்கியம் போகம் அறிவு
அழகு பெருமை ஆறாம் குலம் நோய்கள்பூண் வயது
பதினாறு பேரும் தருவாய் பராபரமே...

இப்படி நிறைய பாடல்கள் நம் தமிழ்மொழியில் உண்டு.

தொகுப்பு:
லூசியா லெபோ.Aucun commentaire:

Enregistrer un commentaire