பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 30 août 2013

எண்ணப் பரிமாற்றம்

                                                         

அன்புடையீர்,

வணக்கம். 'சிறுகக் கட்டிப் பெருக வாழ்' என்றொரு பழமொழி உண்டு. சிக்கனத்தைப் போதிப்பது போல இருந்தாலும் ஒவ்வொன்றையும் கருத்தில் கொண்டு, கணக்கிட்டு கச்சிதமாக வாழவும்  அது வலியுறுத்துகிறது. நம்மை அறியாமலே வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அதன் போக்கைக் கணக்கிட்டே நாம் செயல்படுகிறோம்.

பள்ளிப் பருவத்தில் எதிர்காலத்தைப் பற்றியக் கற்பனைகளுக்கிணையாகக் எந்தப் படிப்பு எத்தகைய பலனைத் தரும், எது ஏற்புடையது, நம்மால் முடிந்தது எந்த அளவு என்றெல்லாம் கணக்கிட வேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் நமக்காக நமது பெற்றோர் குழப்பிக் கொள்கிறார்கள். பின் கிடைத்த வேலையைச் செய்ய நேர்ந்தாலும் கூட அப்படியிருந்தால், இப்படியிருந்தால் என்று மனம் வேறு கணக்குகளில் மூழ்குகிறது.  திருமணம் என்றாலும் இவள் அல்லது இவன் உறவு நமக்கு ஒத்து வருமா, குழந்தைகள் எத்தனை வேண்டும், அவர்களை எப்படி வளர்ப்பது என்று தொடரும் எண்ணக் கணக்குகள் முடிவற்றவை!இதில் சுற்றம் அதைச்சார்ந்த  ஏற்றத் தாழ்வுகள், பதவி,சொத்து என்று   வாழ்க்கைக்குத் தொடர்பு உள்ளதோ என்னவோ நம் ஆசைகளால் ஆன  மனக்கணக்குகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்தக் கணக்குகள் உரிய விடையைத் தருவதுண்டு. மாறாகத் தவறி விடுவதும் உண்டு. அப்போதுதான் குலைந்து போகிறோம். எங்கே தவறியது என்று புரிந்து கொள்ள முடிவதில்லை. புரிந்தாலும் செப்பனிட முடிவதில்லை!
காலம் பறந்து கொண்டே இருக்கையில், விட்ட இடத்திற்கு மீண்டும் போய்த் திரும்பவும் ஆரம்பிக்க இயலாதாகையால், இழந்தது இழந்ததாகவே ஆகி விடுகிறது. அந்தச் சோகத்தை நம்மால் சீரணிக்க முடிவதில்லை. அது வாழ்நாள் முழுவதும் உள்ளத்தில் பதிந்து போன வடுவாகிவிடுகிறது.

சுழல்கின்ற பம்பரம், தானே சுயமாக  இயங்குவதாய் எண்ணிக்கொள்வதால், வேகம் குறைவதையும், சுற்ற முடியாது செயலிழந்து போவதையும் தன் சொந்த பலவீனமாய் நினைத்து நொந்து போகிறது. கண்களுக்குத் தெரியாததால், அறிவு சிந்திக்காததால் தன்னைச் சுற்ற வைக்க ஒரு கயிறும், அதன் கட்டுப்பாடு  தன்னை இயக்குபவனிடமும் உள்ளதென்னும் உண்மை புரியாமல் போகிறது. அவன் எந்த அளவு கயிற்றை நெருக்கிச் சுற்றி, எந்த வேகத்தில் எந்த லாவகத்தில் தரையில் பம்பரத்தை விடுகிறானோ அந்த அளவே அது சுழலும்! தரை, காற்று என அதன் சுழற்சியைத் தடுக்கும் எத்தனையோ தடங்கல்களுக்கிடையே பம்பரத்துக்கும் "அவன் " போட்டக் கணக்குக்கும் ஏற்ப அது சுற்றுகிறது!

நமது கைகளுக்குள் அடங்கி, நமக்கு உகந்தவாறு வாழ்க்கை  நடக்கும் வரை  நாமும் இறுமாந்து, பெருமிதத்தில் உலவுகிறோம். அப்போதே இதற்கு ஓர் வரைமுறை உண்டு,  பிறருடைய வாழ்வோடு சம்பந்தப் பட்டிருப்பதால்  ஓர் எல்லை உண்டு, ஓர் முடிவும் உண்டு என்பதைப் புரிந்து கொண்டால், வாழும் வரை நிறைவுடனும், எதையும் எதிர் கொள்ளும் பக்குவத்துடனும் வாழலாம்!

திருமதி சிமோன் 

1 commentaire:

  1. அன்புச் சகோதரிக்கு
    வணக்கம்!
    'எண்ணப் பரிமாற்றம்' சிறப்பாக
    எண்ணிப் பார்த்து அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
    பாராட்டுகள்!
    தொடர்க தங்கள் பணி

    அன்படன்
    பெஞ்சமின்.

    RépondreSupprimer