பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 29 juillet 2012

பிரெஞ்சு இலக்கியம்

                                                

மொழியின் அடையாளம் கொண்டே அழைக்கப்படும் நாடு பிரான்ஸ். இங்கு மட்டுமின்றி பெல்ஜியம்,சுவிஸ்,கனடா,செநேகால்,அல்ஜீரியா,மொரோக்கா போன்ற நாடுகளிலும் பிரெஞ்சு பேசப்படுவதால் பிரெஞ்சு இலக்கியம் பறந்து விரிந்ததாய் இருக்கிறது. இது வரை இலக்கியத்தில் அதிக நோபல் பரிசுகளை வென்ற மொழி பிரெஞ்சு மட்டுமே! மேலை நாடுகளில் இலக்கியச் செழுமை உள்ள பெருமை கொண்டதும் இதுவே!

இலத்தீன் மூலம் வளர்ந்த உணர்வு பூர்வமான மொழி(romance language).  Celtic, Frankish (செல்டிக்,பிரான்கிஷ்)மொழிகளின் தாக்கமும், Spanish, Italian (ஸ்பெயின், இத்தாலியன் ) உடன் தொடர்பும் கொண்டது. 14  ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரைத் தொடரும் இலக்கிய வளம் உடையது. இது வரை 15  நோபல் பரிசுகளை வென்ற பிரெஞ்சு, முதல் நோபல் பரிசைத் தட்டிச் செல்லக் காரணமாய் இருந்தவர் Sully Prudhomme (1901). 2000 இல் கோ சிங்க்ஜியன் என்பவர் வென்றார்.

ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல மேதைகள் பிரெஞ்சு மொழியின் புலமையை உலகுக்கு எடுத்துக் காட்டினும், ஒரு சில உலகறிந்தவர்களின் பெயர்கள் கீழே:

18 ஆம் நூற்றாண்டு: Voltaire, Jean Jacques Rousseau, Denis Diderot
19             ,,                  : Honoré de Balzac, Gustare Flaubert, Emile Zola
20             ,,                  : Marcel Proust, Jean Genet, Louis Ferdinaud Céline

கவிதை: Victor Hugo, Arthur Rimbaud, Lafontaine
நாடகம்: Molière, Samuel Beckett, Jean Genet
சரித்திரம் மற்றும் கற்பனை: Blaise Pascal அறிவுக்கப்பாற்பட்டவைப் பற்றிய ("Les Pensées") சிந்தனை.
                                                      Bescarte - logic, arts et science
                                                      Jean-Jacques Rousseau - romantic
                                                      Jean Paul Sartre - Existentialism is a humanism-being and nothingness

இன்னும் இலக்கிய விமர்சனம், குழந்தைகள் சம்பந்தப்பட்ட கதைகள் முதல் குறுந்தகடுகள் வரை என்று பிரெஞ்சு இலக்கியம் ஒரு முடியாத தொடர்கதை.

திருமதி சிமோன் 



புனிதமும் வரலாறும்

                                                         

மோன்மார்த்று திரு இருதயப்  பேராலயம் :( Basilique Sacré coeur de Montmartre)

16 ஜூன் 1875 இல் ஆரம்பிக்கப்பட்டு முதல் உலக மகா யுத்த முடிவில் 1919 இல் முடிவடைந்த,  ரோமன் கத்தோலிக்கர்களால் கட்டப்பட்டு  தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட   பிரம்மாண்டமான ஆலயம். 

1870 இல் பேராயர் ப்புர்னியர்   (Fournier), 1789 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின்  நாட்டின் குலைந்த மனித நேயத்தை, இறைவனிடம் மன்னிப்பு வேண்டிப்  பெறுவோம் என்று பேசினார். அனைவரது ஆதரவையும் பெற்ற இந்த உரையே தேசிய விருப்பாக (Oeuvre du Voeu National) மாறி இந்த ஆலயமாக உருவெடுத்தது.

இக்கோவில் கட்டப்பட்டுள்ள மலை ஆராதனையின் அடையாளமாக தொன்றுதொட்டு விளங்கி வருகிறது. கொலுவா-ரோமன் (gaulois-romains) காலத்தில்  (Mercure-Mars) வழிபாட்டுத் தளமாக விளங்கியது, 3ஆம் நூற்றாண்டில்  ஆயர் தெனிஸ் (Dènis) சித்திரவதை செய்யப்பட்டு இறந்த பின் 11ஆம் நூற்றாண்டில் ( eglise St. Pierre de Paris) 6வது லூயி மன்னனால், அவர் நினைவாகக் கோவிலாக மாறியது. 

1871இல் தேசிய அசெம்ளி வோட் (National Assembly Vote) மூலம் புது ஆலயம் எழுப்ப அங்கீகாரம் அளிக்கப்பட்டது. 7 மில்லியன் பிரான் (franc-அந்தக்கால பிரஞ்சுப்  பணம்) நிர்ணயிக்கப்பட்டு, 87 போட்டியாளர்களால் 76 குழுக்களாக 78  திட்டம் சமர்பிக்கப்பட்டு , போல் அபாதி (Paul Abadie) எனும் கட்டடக் கலைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 50 வருடங்களில் 10 மில்லியன் பக்தர்கள் மூலம், 46 மில்லியன் பிரான் சேகரிக்கப்பட்டது.

பல கலைஞர் களின் ஒத்துழைப்பால் இன்றையக் கோயில் எழுந்தது. இதன் நடுப்பகுதி (central dome) 83 மீட்டர் உயரம் உள்ளது.  கூரைப்பகுதி (plafond) பிரான்சு மொசெய்க்கால் (473.78 மீட்டர் சதுர அடி) வேயப்பட்டது. கோவில் மணி 3 மீட்டர் அகலமும், 18,835 டன்  எடையும் கொண்டது.அதில்  மிகச் சிறந்த தொழில் நுட்பத்துடன் இசைக்கருவி பொருத்தப்பட்டது. அதைத் தாங்கி நிற்கும் கருவியே 7,380 கிலோ எடை உள்ளது.   மணி அடிக்கும் சுத்தியலின் எடை 1200 கிலோவாகும்.

பிரான்சின் இரண்டாவது சுற்றுலாப் பயணிகளின் ஆன்மிகத்  தளமாக இக்கோவில் விளங்குகிறது.

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக அல்லும் பகலும் தெய்வ ஆராதனை நடைபெற்று  வருகிறது.

                                                         

லூர்து:
பிரான்சின் தெற்கில் Midi Pyrénées என்றழைக்கப்படும் பகுதியில் 16,000 குடிமக்களைக் கொண்டது லூர்து நகர். மலைப் பிரதேசம். இயற்கை எழில் கொஞ்சும் இடமாயினும் சண்டை, புரட்சி என அழிவுகளையும் கண்ட இடம். இயேசு பிறப்பதற்கு முன்  முதல் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை ஒன்று இங்குண்டு.
1858 ஆம் ஆண்டு பெர்னதேத் என்ற சிறுமிக்கு பலமுறை "மாதா" காட்சி கொடுத்த பிறகு, இது கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமாக மாறினாலும், மத பேதமின்றி உலக முழுவதிலிருந்தும் பக்தர்கள் குவியும் புண்ணிய பூமியாயிற்று.

வருடம் முழுவதும் ஆறு மில்லியன் புனித யாத்திரையாளர்களும், 60,000 நோயாளிகள்-ஊனமுற்றவர்களும் இங்கே மாதாவின் அருள் நாடி வருகிறார்கள். உலகின் மிகப் பெரிய யாத்திரை ஸ்தலங்கள் மூன்றில் லூர்தும் ஒன்று. (மற்ற இரண்டு: Notre Dame de Guadalupe-Mexico) இங்கு  குமிழும் பக்தர்கள் பலரும் தனிப்பட்ட விதங்களில் "புதுமை"கள் பலவற்றை உணர்கின்றனர். இது வரை 2,000  தீவிர நோய்கள் விளக்க முடியாத வகையில் சுகப்பட்டதாக திருச்சபைக்கு தெரிவிக்கப்பட்டாலும், அது 66   புதுமைகளையே "அதிசயம்" என்று பிரகடனம் செய்துள்ளது.


                                                      
நோத்ரு தாம் த பரி (Notre Dame de Paris):


பாரீசின் "Paien"  கோவிலாக இருந்த இந்த மாபெரும் பொக்கிஷம், 'கோதிக்,ரோமன்' கலை வடிவங்களைப் பிரதிபலிப்பதாக உள்ளது. அரசன் ஏழாம்  லூயி 1163 இல் கட்ட ஆரம்பித்த இந்த வழிபாட்டுத் தலம், 1345 இல் முடிவுற்றது. மேலை நாட்டின் மிகப் பெரிய 'Cathédrale', அதி மேற்றாணியாரின் இருப்பிடம், பிரான்சின் முதல் சுற்றுலாத்தலம் என்ற பெருமைகளை உடையது. இரண்டு உலகப்  போர்கள்,புரட்சி,காலத்தின் அழிவு போன்றவற்றினின்று தொடர்ந்து இன்று வரை பாதுகாக்கப்பட்டு வரும் இக்கோவில் பிரான்சின் பிரம்மாண்டத்துக்கும், அதன் பெருமைக்கும் ஓர் எடுத்துக்காட்டு! அரச பரம்பரைத் தொட்டு, அரசியல் நிகழ்வுகள் வரை சரித்திரத்தில் பதிக்கப்படும் எல்லாமே இந்தக் கோவிலில்தான் நடைபெறும். உதாரணத்திற்கு ஒரு சில முக்கியச் செய்திகள்:

1239 செயின்ட் லூயி இயேசுவின் தலையில் சூட்டப்பட்ட முள்முடியை இக்கோவிலில் கொணர்ந்து வைத்தார்.
இன்னும் பல நினைவுச் சின்னங்களும் , கையெழுத்துப் பிரதிகளும் பாதுகாக்கப் பட்டுள்ளன.
அரச திருமணங்களும், முடி சூட்டல் விழாக்களும் இங்கு நடைபெற்றன. நெப்போலியன் பாப்பாண்டவர் Pie VII ஆசீரோடு பேரரசனாக முடிசூட்டிக் கொண்டார்.
மிகப் பெரிய மனிதர்களின் இறுதிச் சடங்கு இங்கு நிறைவேற்றப்படும். அதற்கான தேசிய புகழாரம் (hommage national) செலுத்தப்பட்ட நபர்கள்: Charles de Gaule, Francois Mitterand, Abbé Pière, Sr.Emmanuelle.
Rio-Paris Air France (Vol.447) விபத்துக்கு உள்ளானபோது அதில் இறந்தவர்களுக்கு இங்கு இரங்கல் அஞ்சலி சமர்பிக்கப்பட்டது.

இந்தக்கோவில் 4,800 சதுர மீட்டர் உள்பரப்புக் கொண்டது. மொத்தமோ 5,500 ச.மீ. நீளம் 127 மீ.-அகலம் 48 மீ. உயரம் -69 மீ. ரோசா வடிவத்தில் செய்யப்பட்டுள்ள பூ வேலைப்பாட்டின் அகலம் 13 மீ. சன்னல்களே 113 உள்ளன. இங்குள்ள இசைக்கருவிக்கான குழல்கள் மட்டும் 8,000. , ஒலிக்கும் மணியின் எடை  13  டன் , அடிக்கும்  நாக்கு 500 கிலோ .இன்னும் சிற்பங்கள், கண்ணாடி பூ வேலைகள், மரக் கதவுகளில் செய்யப்பட்டுள்ள நுணுக்கங்கள் என சொல்வதற்கு எண்ணிலாச் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன.

Victor Hugo 'Notre Dame de Paris'  என்றே நவீனம் ஒன்றைப் படைத்திருக்கிறார். குழந்தைகளுக்கான கதைகள், சினிமா,தொலைகாட்சி  என .பலரது படைப்பில் இந்தக் கோவில் இடம் பெற்றுள்ளது.

வருடத்திற்கு சுமார் 13.5 மில்லியன் மக்கள் வருகை புரிகின்றனர். (இது 2010 ஆம் ஆண்டு கணக்கு) 2,000 வழிபாடுகள் நடைபெறுகின்றன. (இந்த இடத்தில் பிரான்சில் இருக்கும் "இந்தியத்  தமிழ் ஞானகமும்" தன் பங்குக்கு சில காலம் தமிழில்  வழிபாடுகளை இம்மாபெரும் கோவிலில் நடத்தியது என்பதைப் பெருமையோடு சொல்லாமல் இருக்க முடியவில்லை.

திருமதி சிமோன் 


அறுசுவையும் பிரான்சும்

                                                    

படத்தைப் பார்க்கும்போதே நாவில் நீர் ஊறுகிறது  அல்லவா? உண்மையில் உணவைச் சுவைத்து, மணிக்கணக்கில் ரசித்து உண்பவர்கள் பிரெஞ்சுக்காரர்கள். எல்லா சக்திகளும் கலந்த உணவை முறைப்படுத்தி உண்பது அவர்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்று சொன்னால் அது மிகையல்ல.

இன்று காலை உணவு அதிகச் சக்தி உள்ளதாக இருக்க வேண்டும், மாலையில் சீக்கிரம் சாப்பிட்டு விட வேண்டும்  என்று சொல்லப்படும் ஆலோசனையை பல நூற்றாண்டுகளாகவே  கடைப்பிடிப்பவர்கள்.

"Lever à cinq, diner à neuf-Super à cinq, coucher à neuf-Font vivre d'ans nonante et neuf" - " நீண்ட ஆயுளுடனும், புத்துணர்வுடனும் வாழ காலை ஐந்து மணிக்கு எழுந்து ஒன்பது மணிக்கு உண்ணவும். மாலை ஐந்து மணிக்கு எளிமையாக உண்டு ஒன்பது மணிக்கு உறங்கவும்" என்ற சொற்றொடர் பழங்காலத்தியது.

பொதுவாக காலையில்  தானியக் கலவை (céréale) - பால் அல்லது ரொட்டி- , பழக்கூழ்(confiture) , காபி,டீ , சாக்கலேட் பானம், பழச் சாறு, தயிர்  போன்றவைகளை  உண்பார்கள்.
 திடமாக இருக்க விரும்புவோர் முட்டை, பதப்படுத்தப்பட்ட இறைச்சி(charcuterie), பால்கட்டி (fromage) சேர்த்துக்கொள்வர்.

பகலுணவு : நுழைவு (entrée) சமைத்ததோ,பச்சைக் காய்கறிகளோ; முக்கிய உணவு:கறி,கிழங்கு அல்லது தானியங்கள்,சமைத்த காய்கறிகள்; பால் கட்டி (fromage), கீரைகள் (salade),பழங்கள் அல்லது இனிப்பு வகைகள்; உடன் ரொட்டி,  பழ ரசம் (vin), நீர்; காப்பி.

gouter: குழந்தைகளுக்கு பிஸ்கட் அல்லது கேக் - பழ ரசம் (jus)
இரவு உணவு: சூப், மீன், கீரைகள்,பழங்கள்.

இது இல்லாமல் கொறிக்க (grignoter), croustille, brunch  என்றெல்லாம் சிறு பசி அல்லது ருசிக்குப் பலவகை உண்டு.

விருந்து என்றாலோ கேட்கத் தேவையில்லை. apéritif பசி உண்டாக்க, hors-d'oeuvre, potage -சூப் , entrée  -நுழைவு, premier,seconde plat -முதல்,இரண்டாம் தட்டு, salade verte -பச்சைக் கீரை , fromage -பால் katti,  entremets, dessert, fruit,digestif-செரிமானத்திற்கு café avec chocolat ou fruit sec - உலர் பழங்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். மொத்தத்தில் மனித இன்பங்களுள் தலையான உண்ணுதலை ஒரு கலையாகச் செய்பவர்கள் பிரெஞ்சுக்காரர்கள்!

திருமதி சிமோன் 

இராஜா பண்டிகை

                                                       

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில். வாழ்க்கைப்பட்ட  இடமோ பாண்டிச்சேரி.என் கணவர் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற தமிழர்.திருமணமான சில மாதங்களில் பாண்டிச்சேரியில்  இராஜா பண்டிகை வந்தது.காலையில் பாண்டு(band)  வாசிக்கப்பட்டு உள்ளூர் சொல்தாக்கள்(பிரெஞ்சு ராணுவத்தில் வேலை செய்தவர்கள் ) கடற்கரையில் அமைந்துள்ள சிப்பாய்கள் நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை  செலுத்தினர்.பாண்டிச்சேரி பொது மருத்துவமனையின் அருகிலுள்ள பூங்கா   கடற்கரை எங்கும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இரவில் வாண வேடிக்கை நடைபெற்றது கண்கொள்ளாக்  காட்சி. இந்தச் சிறப்புகளே  குறைவு . முன்பெல்லாம் அதிக செலவு செய்வார்களாம் இவ்விழாவுக்காக.  ஆமாம்  இராஜாவுக்கும் இந்த விழாவுக்கும் என்ன தொடர்பு?
எந்த இராசாவுக்காக   எதற்காக இவ்விழா கொண்டாடப்படுகிறது  என்று தெரிந்துகொள்ள  மிகுந்த ஆவலுடன் இருந்தேன். நீங்களும்  தானே?!

 மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசர்களை மக்கள் கொண்டாடுவது பொருத்தமானதே. அப்படி இல்லாமல் தங்கள் அரண்மனை ஆடம்பரங்களுக்காக அரசு வருவாயின் பெரும்  பகுதியைச் செலவிட்டு, பிரான்சின்  நிர்வாகப், பொருளாதாரச் சீர்கேடுகளைப்  பல்லாண்டுகளாக நீட்டித்திருந்த (பதினைந்தாம் லூயி,பதினாறாம் லூயி)  மன்னராட்சி முறையை வீழ்த்திய நாளுக்கான கொண்டாட்டம்தான் இது. பிரான்சில் அது நடந்தது 14 07 1789. இந்த நாள் Bastille Day (பஸ்தி நாள்) என்றும் "Fête Nationale"(தேசிய விழா) என்றும் அழைக்கப்படுகிறது. அதன் வரலாறு இதோ:

மன்னர்கள் உறுதியும் திறமையும் அற்றவர்களாகவும் ஆடம்பரத்தில் திளைத்தும் இருந்தனர்.அமைச்சர்களும் அதிகாரிகளும் ஊழல் மிகுந்தவர்களாகவும் நேர்மை அற்றவர்களாகவும் இருந்தனர். வேலை இல்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடியது. இதனால்  மக்கள் அதிருப்தி கொண்டனர்.  'ரொட்டி இல்லை என்றால் என்ன, கேக் சாப்பிடவும்' என்ற ராணி மேரி அந்துவானேத்தின் (மன்னர் பதினாறாம் லூயியின் மனைவி) கேலிப் பேச்சு   மக்களின் குமுறலை அதிகரித்தது.  
மேலும் வால்டேர்,ரூசோ , திதரோ,மண்டேச்க்கு முதலான அறிஞர்களின் எழுத்துகள்  மக்களின் போராட்டத்திற்கும்  புரட்சிக்கும் தூண்டுதலாக அமைந்தன.விளைவு   'பஸ்தி '  (Bastille)சிறைச்சாலை தகர்க்கப்பட்டது.
1789 ஜூலை 14 - ஆம் நாள் பல்லாயிரம்  பேர் கொண்ட மக்கள் கூட்டம் Hôtel des Invalides என்ற இடத்தில் அமைந்த படைக்கொட்டிலைச் சூறையாடி  ஆயுதங்களைக் கைப்பற்றியது. அதே போராட்ட உணர்வோடு அடுத்த சில நிமிடங்களில்  அடிமைத் தனத்தின் சின்னமாக திகழ்ந்த 'பஸ்தி '  சிறைச்சாலையைத் தகர்த்தெறிந்தார்கள்.ஒன்றுபட்ட மக்களின் எழுச்சியும் போராட்ட உணர்வும் செயல்பாடுகளும் அடக்குமுறைச் சின்னங்களையும் தகர்த்தெறியும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இது எனலாம்.இச்சிறை உடைப்பு நிகழ்வு நவீன காலப் பிரெஞ்சு தேசியத்தின்  எழுச்சியாகக் கருதப் பட்டது மல்லாமல் இந்நிகழ்வு பிரெஞ்சுப் புரட்சியாக வடிவெடுத்து பிரான்ஸ்  குடியரசாக மாறுவதற்கும் வழிகோலியது.   

 பிரான்சில் பல நூற்றாண்டுகளாக நீடித்திருந்த முழு மன்னராட்சி   (monarchie "absolue" ) வீழ்த்தப்பட்டு, நிலப் பிரபுத்துவ , கிறிஸ்தவ அதிகார முறைமைகளின் ஆதிக்கம் சரிந்து, பிரெஞ்சு சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.பல்லாண்டுகளாக வழக்கிலிருந்த அதிகாரக் கட்டமைப்புகளும் கருத்துகளும் தகர்க்கப்பட்டன. மக்களின் அடிப்படை உரிமைகள், சமத்துவம், குடியுரிமை, வாழ்வுரிமை ஆகிய அனைத்திற்கும் வித்திட்டது பிரெஞ்சுப் புரட்சியே என்றால் மிகையாகாது. அது மட்டுமல்ல, பிரெஞ்சுப் புரட்சிதான் இவ்வுலகில் உள்ள எல்லா சோசியலிச குடியரசு புரட்சிகளுக்கும் ஐரோப்பிய நாடுகளில் குடியரசு அரசாங்கம் அமைவதற்கும் அடித்தளமிட்டது. இதனால் ஆண்டுதோறும் இந்நாள் மிக எழுச்சியுடன் நாடு முழுவதும் நினைவு கூரப்பட்டுச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.    
 
1880 முதல் இந்த நாள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு  கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பிரெஞ்சு இராணுவ அணிவகுப்பு Champs Elysées என்ற அவெனுயுவில் நடைபெறும்.முப்படைகளின் ராணுவ மரியாதையைக் குடியரசுத் தலைவர் தன் சக அமைச்சர்கள் , அழைக்கப்பட்ட விருந்தினார்கள் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார்.இதுதான் ஐரோப்பாவில் மிக பழமையும் நீளமுமான அணிவகுப்பாகும்.இந்த அணிவகுப்பின் நேர்முக வருணனை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். 1971 ஆம் ஆண்டு அணிவகுப்பில் பெண்கள் முதல் முறையாகப் பங்கேற்றனர்.
1989 - பிரெஞ்சு புரட்சியின் 200 -ஆம் ஆண்டின் நிறைவை முன்னிட்டுப் பல  சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. மார்கரெட் தட்சர், ஜார்ஜ் புஷ், ஹெல்முட் கொஹி போன்ற தலைவர்கள் பங்கேற்றனர்.
அண்மைய  காலங்களில்  நேச  நாடுகளின் தலைவர்களும்  ராணுவமும்  அணிவகுப்பில் பங்குபெற அழைக்கப்படுகிறார்கள். 1994 -ஆம் ஆண்டு குடியரசு தலைவர் மித்திரன் அவர்களின் அழைப்பை ஏற்று  ஜெர்மன் வீரர்கள் பங்கேற்றனர்.
1999 -இல் மரோக் அரசர் ஹசன் II பங்கேற்றுச் சிறப்பித்தார்.
2005 -இல் பிரேசில் தலைவர் லுலா(Lula) அவர்களும் அந்நாட்டு இசைக்குழுவினர்,  விசேட  விமானப் பிரிவினர்களும் (escadrille de la fumée) சிறப்பு  செய்தனர் .
2007- ஹெலிகாப்ட்டர் உருவாக்கத்தின் 100 -ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்பட்டது.மேலும் traité de Rome கையொப்பமிட்டதின் 50 -ஆவது ஆண்டின் நினைவாக, 27 ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்தவர்கள் குடியரசு தலைவர் சர்கோசி அழைப்பிற்கிணங்கி வந்திருந்தனர்.        

2008 -இல் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளும் மேடையின் முன்பாக பிரான்ஸ், ஐரோப்பியக் கூட்டணி, ஐ.நா.சபை ஆகிய கொடிகளை ஏந்திய வீரர்கள் பராசுடில் இறங்கி மக்களை மகிழ்வித்தது முதல் முறையாகும்.
2009: இந்தியாவுக்குச் சிறப்புக் கவுரவம் அளிக்கப்பட்டது.90 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவ பேண்டு இன்னிசைக் குழுவினர், எழுச்சி பாடல்களை இசைத்தபடி முன் செல்ல இந்தியாவின் முப்படைகளையும் சேர்ந்த 400 வீரர்கள் அணிவகுப்பில் பீடுநடை போட்டனர். இந்த அணிவகுப்பை அதிபர் சர்கோசியுடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்  பார்வையிட்டார். பிரான்ஸ் தேசிய தின விழா அணிவகுப்பில் இந்திய வீரர்கள் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
 2010: முன்பு ஆபிரிக்கா கண்டத்தில்  பிரான்சின் வசமிருந்த 13 காலனிகள் பங்கேற்றன.
2011: ( France outre-mer) பிரான்சின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட ஆனால் பிரான்சுக்கு வெளியில் இருக்கும் நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் லா மர்செய்ஸ் பாடிச் சிறப்பித்தனர். தீயணைப்புப்   படை உருவாக்கத்தின் இரண்டாம் நூற்றாண்டின் நினைவாக அவர்களால் பல சாகச நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன.       

 பிரான்சில் பெரும்பாலும் எல்லா நகரங்களிலும் 13 அல்லது 14 தேதிகளில் வாண வேடிக்கை நடத்தப்படும். மேலும் Bal நடனமும் நடத்தப்படும்.
 இந்த நாளில் சிறு  சிறு குற்றங்களை மன்னிக்கும்  அதிகாரத்தைக்   குடியசரசுத் தலைவருக்குப் பிரெஞ்சு அரசியலமைப்பு  தந்துள்ளது.

"போராட்டமே பொதுமக்களின் திருவிழா" என்ற லெனின் சொற்கள் இங்கு மெய்ப்பிக்கப்பட்டுள்ளன எனலாம். பிரான்சின் புரட்சியாக வெடித்த போராட்டம் மக்களின் கோலாகல விழாவாக நடைபெற்று வருகிறது.

_- லுர்சியா லெபோ

mardi 26 juin 2012

எண்ணப் பரிமாற்றம்

                                                             

அன்புடையீர்,

வணக்கம். வீட்டிலாகட்டும் அன்றி சமூகத்திலாகட்டும் வழி நடத்திச் செல்ல  யாரேனும் ஒருவர் தலைமைப் பொறுப்பை ஏற்றாக வேண்டியுள்ளது. அப்படிப் பொறுப்பேற்பவர் தன் மனசாட்சிக்கு விரோதமின்றித் தன் கடமையைச்  செய்வாராயின் அந்த வீடும், சமூகமும் மகிழ்வுடன் முன்னேற்றப் பாதையில் நடை போடும்.

மாறாகஇருந்துவிட்டாலோவிளைவுகளைப்பற்றிச்சொல்லவேண்டுவதில்லை! குடும்பம் சிதைந்து உறவுகள் நசித்துப் போகின்றன..சமூகச் சீரழிவோ நாட்டை, மக்களை , ஏன் எதிர் காலத்தையே பாதித்து விடுகிறது. என்னதான் விழிப்புடன் சட்டமியற்றி, ஏறுமாறாக நடந்தால் தலைமையை மாற்றிவிடலாம் என்கிற சனநாயகம் வேரூன்றி இருந்தாலும், பதவியில் இருக்கும் கொஞ்ச நாட்களிலேயே அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து , பணம் சுரண்டும் வஞ்சகத்தை வேரோடு அழிக்கஇன்னும் எந்த உபாயமும் கண்டுப்பிடிக்கப்பட வில்லை. 

நோய்க் கிருமியைப் போல இந்தத் தலைவர்கள் இரத்தத்தை உறிஞ்சுகிறார்கள். அப்பாவிப் பொதுமக்கள் புலம்பியவாறே தங்கள் அன்றாட வாழ்வின் போராட்டத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள் ! எங்கும், ஒரு பக்கம் குழி பறிக்கும் நேர்மை அற்றவர்கள் , இன்னொரு பக்கம் அதில் விழுந்து கிடக்கும் பாதிக்கப் பட்டவர்கள் என இரண்டே வர்க்கம் உருவாகி வருகிறது.

உலகெங்கும் தலைமைப் பீடத்தில் எத்தனைத் தகுதியற்றவர்கள் செங்கோலோட்சி அழிவின் பாதாளத்தில்மக்களை அமிழ்த்தியுள்ளார்களென சற்றே நோக்கினால் மனம் பதைக்கிறது. இதற்கு விடிவே கிடையாதா?!

ஆங்காங்கே ஒரு சில புரட்சிகளும், எதிர்ப்புகளும் தோன்றிப் பயனில்லை ! ஒட்டு மொத்தமாக ஒன்று இவர்கள் தலைமை ஏற்கவே முடியாதபடி "தகுதிகள்" நிர்ணயிக்கப் படவேண்டும். அல்லது குறிப்பிட்டக் காலவரையறைக்குள் அவர்கள் தங்கள் திறமையையும், நேர்மையையும் நிரூபிக்காவிட்டால், அடுத்தத் தலைமையை ஆரம்பத்திலேயே தேர்ந்தெடுத்து வைத்து, மாற்றி விட வேண்டும். அப்போதுதான் தங்கள் பதவி தங்கள் நடத்தையைப் பொருத்தே நிலைக்கும் என்ற பயம் அவர்களுக்கு இருக்கும். 'நாற்காலியை'ப் பிடித்து விட்டோம், இனி அடுத்தத் தேர்தல் வரை நம்மை யாராலும் அசைக்க முடியாது என்ற கர்வம் ஒழியும். எந்த நேரத்திலும் பதவி பறிக்கப்படலாம் என்ற உண்மை அவர்களை நேர்வழியில் நடத்தும்.

இது ஒன்றும் புது சிந்தனை அல்ல. தவறு செய்யும் குழந்தைகளைத் திருத்தக் கண்டிப்புடன் சிலக் கடுமையான முடிவுகளை எடுப்பதில்லையா அதுபோன்று  பணத்தாசையாலும், பதவி மோகத்தாலும் நிலை கெட்டு நடப்போரைக் களைஎடுத்து மக்களை நிம்மதியாக வாழவைக்கும் வழிதான்.

எத்தனையோ விதங்களில் உலகுக்கு வழி காட்டிய இந்தியா , பல தியாகிகளை  அரசியல் வானில் சுடரக் கண்ட இந்தியா, ஓர் அமைதியான உலகைப் படைக்க இந்தத் துறையில் ஏதேனும் செய்யாதா என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு இது !

திருமதி சிமோன் 

அரசியல் நாடகங்கள்

                                        
                                               
முதல்வர் மாயாவதி:உத்திரப் பிரதேசத் தீயணைப்புத் துறையின் டி.ஐ.ஜி. தேவேந்திரநாத் மிஸ்ரா, தன்துறையில் ஊழல் இருக்கிறது என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டார் .

மாயாவதி மிஸ்ராவுக்கு புத்தி பேதலித்துவிட்டது என்று மனநல மருத்துவர் மூலம் சான்றிதழ் பெற்று மருத்துவமனையில் சேர்த்து , ஒரே வாரத்தில் விடுவித்து விட்டார் ! இனி அவருக்குப் பேச வாயேது ?!

2007- லக்னோ மால் அவென்யுவில் 5 ஏக்கர் நிலத்தில் அரசுப் பணத்தில் ரூ .86 கோடி செலவில் மிகப் பெரிய பங்களா கட்டியுள்ளார்.


                                                         

மம்தா பானர்ஜி :கொல்கத்தாவில் பவானிப்பூர் காவல் நிலையத்தில் அடைபட்டிருந்த திரினாமுல் கட்சித் தொண்டர்களைக் கட்சித் தலைவியும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா, போலீஸ் ஸ்டேஷன் சென்று (ரவுடித்தனத்திற்காகக்கைதுசெய்யப்பட்டிருந்தவர்கள்)ஆர்ப்பாட்டம் செய்யாத குறையாக மீட்டார்! ஒரு முதலமைச்சர் இதை விட எப்படி தன் நன்றியைக் காட்ட முடியும்?!


                                                                                         
                                                                     
ஜெயலலிதா:பதவி ஏற்ற ஆறு மாதங்களில் ஏழு அமைச்சர்கள் பணிநீக்கம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின்தொடர்மாற்றம் என இவரது நிர்வாக விளையாட்டு விளக்கம் இல்லாப் புதிர். சிறு வயதுபந்தாட்டம் மறக்கவில்லை போலும்!

'அண்ணா ' நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவ மனையாக மாற்றியுள்ளார்!ஒன்றுக்கொன்று இலவசஇணைப்போ?

தி.மு.க. அரசு 1989 இல் 25,000 மக்கள் நலப் பணியாளர்களை தற்காலிகமாக அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க நியமித்தது.(தன்கட்சி ஆட்களுக்காகவே இது உருவாக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.உண்மைஎன்னவோ) அடுத்த 2 ஆண்டுகளில் பதவிஏற்ற இவர் கட்சிஅவர்களைப் பணி நீக்கம் செய்தது.(இத் திடீர் அதிர்ச்சி கிட்டத்தட்ட 50 பேர் உயிரைக்குடித்தது)மீண்டும்1996இல் பதவி ஏற்ற திமுக ஒரு ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர்களாக அவர்களைப் பணியமர்த்தியது.2001இல் பதவிக்கு வந்த அ .இ .அ .தி.மு.க .பதினைந்தே நாட்களில் அவர்களை வீட்டிற்கு அனுப்பியது.2006இல் ஆட்சியைப் பிடித்த திமுக மறுபடியும் 13500 பேரை தற்காலிகப் பணியாளர்களாக நியமனம் செய்தது. இந்தப் பணி ஒப்பந்தம் 31-5-2012 வரை நீடித்தது.தற்போது பதவியிலுள்ள 'அம்மா' அரசு 8-11-2011இல் மூன்றாம் முறை பணி நீக்கம் செய்தது. சளைக்காத விளையாட்டாக இல்லை?! எப்படியோ 13500 பேரின் இன்பமும், துன்பமும் இவர்களால் புரட்டிப் புரட்டிப் போடப் படுகிறது.

இவரது சொத்துக் குவிப்பு வழக்கு ஒரு முடியாதத் தொடர்கதை ! இவருடைய வளர்ப்பு மகன் திருமணத்தில் இவரும் இவர் 'உயிர்த் தோழி'யும் அணிந்திருந்த  நகைகள் எடை போட்டுப் பார்க்க மாளாதவை !


                                                       

கருணாநிதி :


1972 இல் விவசாயிகள் போராட்டத்திலும், 1977இல் பிரதமர் இந்திராவை அவசர நிலை பிரகடனத்திற்காக மதுரையில் எதிர்த்தபோதும் பகிரங்கமாக வன்முறையில் ஈடுபட்ட திமுக , பின்னர் தன் போக்கை மாற்றிக் கொண்டது.

(பொதுவாக திமுக, அண்ணா திமுக இரண்டுமே அடியாட்கள் கொண்டு, தங்களுக்கு சாதகமான முறையில் காரியங்களைச் சாதிப்பவர்கள் என பெயர் எடுத்தவர்கள் !)

1976 கலைஞர் ஆட்சி வீராணம் லஞ்ச ஊழல் புகார் காரணமாகக் கலைக்கப்பட்டது.

2008-2009 களில் இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, "நாம் வேறொன்றும் செய்வதற்கில்லை" எனப் பேட்டி கொடுத்தார்.

2007இல் மேம்பால ஊழலுக்காகஇவரது கழக உறுப்பினர்கள் கிரிமினல் குற்றம் , தவறான ஆவணங்கள் , ஏமாற்றுதல் , நம்பிக்கைத் துரோகம் போன்ற வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றனர் !

இப்போதெல்லாம் "தார்மீகப் பொறுப்பு" ஏற்று , பெரும்பாலானத் தலைவர்கள் தன் பதவியைத் துறக்க முன் வருவதை எதிர்பார்ப்பதற்கில்லை !



கொடுமைச் சிகரங்கள்

                                                                       

செர்மனியின் அடோல்ப் ஹிட்லர்:

ஹிட்லர் பிறப்பால் ஆஸ்ட்ரியன். ஆனால் ஜேர்மன் நாட்டையும், தேசபற்றையும் அதிகம் நேசித்தார்.வியன்னாவில் புராதான யூதர்கள் வாழ்ந்தனர். சிறு வயதிலிருந்தே இவர் இந்த இனத்தவருக்கு எதிராகவே இருந்தார் என அவரது நண்பர் அகஸ்த் குபிசெக் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் . 1939 ஆம் ஆண்டு ஹிட்லரின் நாஜிப் படையினர் யூதர்களுக்கு எதிரான இனப் படுகொலையை அரங்கற்றிய ஆண்டு.   ஐரோப்பாவில் இருந்த யூதர்கள் பொது சமூகத்திலிரிந்து பிரிக்கப்பட்டு தடுப்பு  முகாம்களில் அடைக்கப்பட்டனர். இங்கே என்ன நடக்கிறது என்பதே வெளி உலகம் அறியாத நிலை. கடும் சித்ரவதைகளும் கண்மூடித்தனமானப் படுகொலைகளும் மிக சாதாரணமாக அரங்கேறின. 54 லட்சம் யூதர்கள் ஐந்து வருடங்களில் கொன்று குவிக்கப்பட்டனர்.
ஹிட்லரின் ஆட்சி காலத்தில் கணக்கற்ற ரஷியர்களும் அரசுக்கு எதிரிகள் என்று கருதப்பட்ட ஏராளமானோரும் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை  வெறும் ஆத்திர உணர்ச்சியால் மட்டும் செய்யப்பட்டவை அன்று. மரண முகாம்கள் பெரிய வாணிக நிறுவனங்களைப் போன்று திட்டமிட்டு அமைக்கப்பட்டன.கொலை செய்யப்பட்டவர்களின் விவரங்கள் குறித்து வைக்கப்பட்டன. ஒவ்வொரு முகாம்களிலும் இத்தனை பேர் கொல்லப்பட வேண்டும் என்று இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. அவர்களின் திருமண மோதிரங்கள், தங்க பற்கள் கொள்ளையிடப்பட்டன.
உலக வரலாற்றில் ஹிட்லரைப் போல் தமது சொந்தத் தலைமுறையினர் மீது  பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவர் வேறு எவரும் இல்லை. நாடு பிடிக்கும் இவருடைய பேராசையால் உலகம் ஒரு கோரமான பெரும் போரை சந்தித்தது. பல கோடி மக்கள் வீடிழந்தார்கள் . அவர்களது வாழ்க்கை சீர் குலைந்து போயிற்று.
ஐரோப்பிய நாடுகள் இவரின் மின்னல் வேகத் தாக்குதலால் செயலிழந்தன.
தான் எடுத்த தவறான முடிவுகளால் இவரது முடிவு தற்கொலையானது.  


                                                               


இத்தாலிய பெனிட்டோ முசோலினி:


உலகைப் பயமுறுத்திய சர்வாதிகாரிகளில் ஹிட்லருக்கு அடுத்தபடி இருப்பவர் முசோலினி. இவர் 1922 - 1943 காலப்பகுதியில் இத்தாலிய அரசை பாசிச அரசாக மாற்றி ஏகபோக சர்வாதிகார ஆட்சியை நடத்தினார்.  இட்லருடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின்பொழுது நேச நாடுகளுக்கு  எதிராகப் போரிட்டுத் தோற்றார். முசோலினியின் கருஞ்சட்டை படை இத்தாலியின் தலைநகரை கைப்பற்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. எதிர் கட்சிகளைத் தடை செய்தார். பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கினார், தன்னை எதிர்த்தவர்களை நாடு கடத்தினார். அதுமட்டுமல்ல தன் எதிரிகளைச் சிரச்சேதம் செய்யும்படி உத்தரவிட்டார். மூன்றே ஆண்டுகளில் இவ்வாறு சிரச்சேதம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் மேலாகும்.
ஹிட்லர் தற்கொலை செய்துகொள்வதற்கு 2 நாட்களுக்கு முன்னால் முசோலினி, புரட்சிக்காரர்களால் நடுரோட்டில் சுட்டு கொல்லப்பட்டார்.இது நடந்தது 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி. இவரை புதைப்பதற்கு முன், குற்ற இயல் ஆராய்ச்சி நிபுணர்கள் வந்து, இவருடைய மண்டை ஓட்டைப் பிளந்து,மூளையை எடுத்துச் சென்று விட்டார்கள் ஆராய்ச்சி செய்வதற்காக.



                                                                  


உகாண்டா அதிபர் இடி அமின்: ஆப்பிரிக்காவை இவர் ஆண்டபோது 'கொடுமைக்கு மறு பெயர் - பைத்தியக்காரச் செயல்களுக்கு இடி அமின்' எனப் பெயரெடுத்தார்.
உலகின் அதிபயங்கர கொடுங்கோலர்களில் ஒருவர். 1971 - 1979 வரை உகாண்டாவை ஆட்சி செய்தார். இவர் ஆட்சியில் இருந்தபோது அரங்கேறிய அரசியல் அராஜகங்களுக்கும் இனப்படுகொலைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் அளவே கிடையாது. இவரால் கொல்லப்பட்ட மனித உயிர்களின் எண்ணிக்கை பல லட்சம். இந்தியர்கள் நாட்டிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். அடியோடு ஒரு சில கிராமங்கள் அழிக்கப்பட்டன. கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் நைல் நதியில் வீசப்பட்டன. பின்னர் அவைகளை அடைப்பு ஏற்படாமல் வெளியே எடுத்துப்போட வேலையாட்கள் நியமிக்கப்பட்டனர். உகண்டா நாட்டில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டினார். இதில் கிறிஸ்துவ மத ஆர்ச்பிஷப் உட்பட பல்லாயிரம் பேர் படு கொலை செய்யப்பட்டனர். 1972இல் 'கடாபி' உதவியுடன் இஸ்ரேலியரை துரத்தினார். இதன் மூலம் இஸ்ரேலுக்கு எதிரான நிலையை 'உகாண்டா' எடுத்து, இஸ்லாமிய நாடுகள் சார்பாக நடந்து கொள்ள ஆரம்பித்தது. லஞ்சமும் ஊழலும் பெருகின. பொருளாதாரம் உருக்குலைந்தது.வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடின.  
எழுதப் படிக்ககூடத் தெரியாத இடி ஆமின் தனக்குத்தானே பல பட்டங்களை வழங்கிக் கொண்டார். ராணுவத்தின் பதக்கங்கள் அத்தனையும் தன் சட்டையில் குத்திக்கொள்வார்.
தன்சானியா ராணுவத்தால் உகண்டாவில் இருந்து துரத்தப்பட்ட இவர் லிபியாவுக்கு 1979 ஆம் ஆண்டு தப்பி சென்றார். அங்கிருந்து துரத்தப்பட்டு சவூதி அரேபியாவில் சரணடைந்து 2003 ஆம் ஆண்டு இறந்தார்.



                                                                 

ஈராக் அதிபர் சதாம் உசேன் :
-தன்கருத்துக்கு மாற்றுக் கருத்துச் சொல்பவரை உடனே கொல்வது இவர் வழக்கம்.

1982 இல் சதாம் சியா முஸ்லிம்களின் புனித நகர் ஒன்றிற்கு சென்றுவிட்டு வரும் வழியில் 'துயைல்"  என்ற இடத்தில் சியா முஸ்லிம்களின் கொலை முயற்சிக்கு இலக்கானார். எனவே இப்பகுதி ஈராக்கிய படைகளின் கோரதாண்டவத்திற்கு உள்ளானது. அந்த கிராமத்தின் மக்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அப்படி கைது செய்யப்பட்டவர்களில் 148 பேர் வீடு திரும்பவே இல்லை. இவர்களை கொலை செய்ததற்கு சதாம் உசேனே காரணம் என்ற குற்றத்திர்க்காகத்தான் இவர் தூக்கிலிடப்பட்டார்.ஆனால் இச்சம்பவத்தை மிஞ்சுகின்ற படி சதாமின் படைகள் பல கொலைகளை  நிகழ்த்தியுள்ளன 
16 03 1988 அன்று உலகை அதிர வைத்த அந்த சம்பவம் நடந்தது. வட ஈராக்கில் குர்திஸ் இன மக்கள் வாழும் ஹலப்ஜா நகரத்தின் மீது  ஈராக்கிய யுத்த விமானங்கள்  நச்சுவாயுத் தாக்குதலை மேற்கொண்டன. குழந்தைகள் பெண்கள் உட்பட 5000 க்கும் மேற்பட்டோர் கருகி இறந்து போனார்கள். 10.000 க்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி அங்கவீனர்கள் ஆனார்கள். இவர்களிலும் சிலர் நச்சுவாயுவின் தாக்கத்தால் பின்பு மெது மெதுவாக சித்திரவதைப்பட்டு இறந்தார்கள். சதாம் உசேன் செய்த குற்றங்களில் மனித குலத்திற்கு எதிரான மிகக் கொடிய குற்றமாக ஹலப்ஜா மீதான நச்சுவாயுத் தாக்குதல் அமைந்தது. மக்கள்  சதாமுக்கு எதிராக திரும்பினார்கள் .புரட்சி வெடித்தது. கலவரங்கள் அரங்கேறின.

13 12 2003 அன்று திக்ரித்துக்கு வெளியை உள்ள பாதாள  அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு  05 11 2006 இல் அவருக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. சதாமின் மேன்முறையீடு  நிராகரிக்கப்பட்டு 30 12 2006 அன்று தூக்கிலிடப்பட்டார்.    




                                                         

லிபியா அதிபர் முஹம்மத் கடாபி: 
 1969 ஆம் ஆண்டு அப்போதைய லிபிய மன்னர் இத்ரிசை பதவி இறக்கியப்பின் ஆட்சியைப் பிடித்தப்போது கடாபிக்கு வயது 27. லிபியர்களை கடாபி தனது ஆட்சிக்காலத்தில் செல்வந்தர்களாக மாற்றினார். அதிக பொருளாதார சலுகைகளை வழங்கினார். அப்படி இருந்தும் மக்கள் அவருக்கு எதிராக புரட்சி செய்ய காரணம் - கடாபிதான் எல்லாமே என்கிற 42 ஆண்டுகளுக்கும் மேலான சர்வாதிகாரம். இதனால் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பும் ஆத்திரமுமே புரட்சியாக வெடித்தது. மனித உணர்வுகளை மதிக்காது , அவர்கள் நலனை புறக்கணித்து தான் மட்டும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தார் . மாற்று கருத்துக்கள் உடையவர்களை சிறையில் அடைத்தார். தீவிரமாக செயல்பட்டோரை கொன்று குவித்தார்.20 10 2011 அன்று கழிவு நீர் குழாயில் பதுங்கியிருந்த கடாபியை புரட்சி படை பிடித்தது . மார்பில், முகத்தில், உடலில் காயத்தோடு இருந்தவரை புரட்சி படையினர் அடித்தே கொன்றார்கள். லிபிய இடைக்கால நிர்வாகமும் அவர்களின் ஆதரவாளர்களும் கடாபியின் மரணத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.  




                                                                          

பாகிஸ்தான் அதிபர் ஜெனெரல் பர்வேஸ் முஷாரப் :  நாட்டின் அரசியல் சாசனத்தையே ரத்து செய்த சர்வாதிகாரி.
-நீதி மன்றங்களின் அதிகாரங்களைப் பறித்துக்கொண்டார்.
-அதிருப்தியாளர்களை சிறையிலடைத்தார்.
-தன ஆட்சி நீடிப்பதை எதிர்க்கும் மனுக்களை ரத்து செய்ய சட்டமே இயற்றிக் கொண்டார்.


                                                            

 இலங்கை அதிபர் ராஜபக்சே :

இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு சம உரிமை மறுக்கப்பட்டதுடன் மொழி அந்தஸ்தும் மறுக்கப்பட்டுள்ளது. மானிட வரலாற்றில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மிக நீண்ட உரிமை போராட்டம் இவர்களுடையது எனலாம். இலங்கையின் தமிழ் ஈழ பகுதியில் தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு    2008, 2009 இல் நடத்திய இறுதிப் போரின் நாயகன்தான் மகிந்தா ராஜபக்சே. இவர் கொடூரமான ராணுவ தாக்குதலை தமிழர்கள் மீது நடத்தினார்.இரண்டாம் உலக போருக்கு பிறகு நடந்துள்ள மிக கொடூரமான இன அழிப்பு ப் படுகொலை இதுவாகும் .  
பொது மக்களை, பாதுகாப்பு பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பெருமளவு திரளச் செய்து கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற உறுதியும் அளித்து பாதுகாப்பு வளையத்தில் திரண்ட மக்கள் மீது தொடர் குண்டு வீச்சுகளை ராணுவம் மேற்கொண்டது. முள்ளிவாய்க்காலில் கடல், வான், தரை ஆகிய மூன்று வழிகளிலும் ஈழத் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் நெருக்கப்பட்டனர்.
அரசு திட்டமிட்டே மருத்துவமனைகளை குண்டு வீசி தகர்த்தது. போர் நடந்த பகுதியில் இருந்த மக்களுக்கு உணவு, மருத்துவ உதவிகள் குறிப்பாக அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் போன்ற மனித நேய அடிப்படையிலான உதவிகளை மறுத்ததன் மூலம் அவர்களின் துன்பத்தைக் கூட்டியது. போர்ப் பகுதியிலிருந்த மக்களின் எண்ணிக்கையைக் குறைத்துச் சொல்லியதன் மூலம் போதுமான அளவிற்கு உதவிகள் கிடைப்பதைத் தடுத்தது இலங்கை அரசு. ஐ.நா, செஞ்சிலுவைச் சங்கம், தனது சொந்த உளவுத்துறை,  விளைவுகளை விளக்கியதை மீறியும் ராணுவம் வெறித்தனமான குண்டு வீச்சை நிறுத்தவில்லை. போரின் இறுதிக் கட்டங்களில் பெருமளவிலான மக்கள் இறந்தது குண்டு வீச்சினால்தான்.பிணக்குவியலாய் முள்ளிவாய்க்காலின் கரை மாறியது. செஞ்சிலுவைச் சங்கத்தின் சொற்களில் 'இறுதி நாட்கள் கற்பனைக்கு எட்டாத மனிதப் பேரழிவை ஏற்படுத்தின".
தமிழ் இனத்தைப் பூண்டோடு அழிக்க இவர் எடுத்த நடவடிக்கைகளை பழைய அதிபர் ஸ்ரீமதி பண்டார நாயகா உட்பட பலர் கண்டித்தும் வரைமுறை இல்லா வன்முறையால் வெற்றி கண்டார்.
போரில் தப்பி பிழைத்தவர்கள் தம் சொந்த நாட்டிலேயே அகதிகளைப் போல முகாம்களில் அடைக்கப்பட்டனர். போர் கைதிகளையேதுன்புறுத்தக் கூடாது  என்ற சட்டம் இருக்கும் பொது, அகதிகளாக உள்ள இந்த மக்கள் சுகாதாரமற்ற சூழல், போதிய உணவு மற்றும் மருத்துவ வசதிகள் இன்றி சித்திரவதைப் படுகின்றனர். இவர்களுக்கான மறு சீரமைப்பு முயற்சிகள் மிகவும் தாமதமாக நடப்பது வருத்தமளிக்கிறது.
உலகளாவிய மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் மனித நேய சட்டங்கள் மீறப்பட்டதையும் போர்க் குற்றங்கள் நடைபெற்றதையும் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உலகிலுள்ள மனித நேயமுள்ள அனைவரின் வேண்டுகோளாகும்.