பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 30 septembre 2013

எண்ணப் பரிமாற்றம்

                                                      

அன்புடையீர்,

வணக்கம். மனித வாழ்வின் பெரும் சொத்தே 'நினைவுகள்' தான் என்று சொல்லலாம். இன்பமோ, துன்பமோ அவற்றை அசை போடுவது எந்நேரமும் மனதுக்குள் நடந்து கொண்டே இருக்கிறது.  நினைவுகள், அனுபவங்களின் அந்தந்த நேரத்து உணர்வுகளை மீண்டும் உணர வாய்ப்பளிப்பதால், அதே சுவையை இடம், காலம் கடந்து பெறுகிறோம்.

கற்பனைகள் இன்பந்தருபவைதான். எனினும் அவைகளை வளர்த்துக் கொள்ளும்போதே இது நடக்காமலும் போகலாம் என்ற ஐயத்திற்கு அங்கு இடமுண்டு. சில வேளைகளில் ஓர் அற்ப சுகத்திற்காக நடக்க முடியாததைக்கூட கற்பனை செய்து மகிழலாம். இதற்கு ஆசை மட்டும் இருந்தால் போதும். அந்த நிமிடம் தாண்டி அதற்குப்  பொருளுமில்லை, வேலையுமில்லை.

ஆனால் நினைவுகள் அப்படியல்ல. வாழ்வின் ஓர் உன்னத நிமிடத்தை, வினாடியை, அது உள்ளத்தில் ஏற்படுத்திய சிலிர்ப்பை, மகிழ்வை - அப்படியே தன்னை, தன் சூழ்நிலையை மறந்து மீண்டும் உணர்வில், கருத்தில் கொண்டு வந்து அதில்  மூழ்கடிக்கும் திறன் கொண்டது.

அதை இழப்பது என்பதை நினைத்துப் பார்க்கக் கூட பயமாக இருக்கிறது. எந்த நினைவும் இல்லாத ஒரு வெறுமை தவமாகப் போற்றப்படலாம். முற்றும் துறந்த ஞானிகளுக்கு அது எளிதில் வசப்படலாம். ஆனால் ஒரு சாமானியனுக்குத்  தனிமையில் துணை இருப்பது நினைவுகள்தான்.

அதனால்தான் மூளை வளர்ச்சிக் குறைந்தக் குழந்தைகளைக் காணும்போது மனம் பதைக்கிறது. அவர்கள் எதை, எவ்விதம் உணர்கிறார்கள், எதை நினைவில் நிறுத்துகிறார்கள், எது அவர்களைப் பாதிக்கிறது, எதை வெளியில் சொல்ல முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்  என்று புரிந்து கொள்ள முடியாமல் நமது நாகரிக உலகின் புற வளர்ச்சிகள் எல்லாம் தோற்றுப் போகின்றன.

அதை விடக் கொடுமை நன்கு வாழ்ந்து, பெரும் புகழும் பெற்று, சாதனைகள் பல படைத்து, சமூகத்தில் உயர் மட்டத்தில் நாலு பேரை வாழ வைத்தவர்களும், மூப்பென்ற செல்லரித்து, நினைவு மறந்து  நடைப் பிணமாய் உலவுவது!

விஞ்ஞானம் இக்குறைகளைப் போக்கப் போராடிக்கொண்டு தான் இருக்கிறது. மனிதனின் மிக அந்தரங்கமானதும், அத்தியாவசியமானதுமான இந்த மூளையைக்  காக்கும் அறிவியலுக்குத் துணை இருப்பது மனிதக் கடமை என்றே தோன்றுகிறது.

அதைவிட முக்கியம் நமது வட்டத்திற்குள் அவர்கள் இல்லை என்பதற்காக ஒதுக்கி விடாமல் அவர்களை அரவணைத்து, எப்போதும் போல் அன்பும், மதிப்பும் செலுத்துவது!

எப்போது அவர்கள் கவனத்தில்  நம் செயல்கள் பதிகின்றன என்று நாம் அறியாத போதிலும், அவர்களைப் புறக்கணிப்பது மனித நேயத்திற்கு அப்பாற்பட்டது. 

தற்கால உலகம் கல்வி எப்படி நமது அறிவை வளர்ப்பதோடு, மூளையின் செயல்பாட்டையும் காக்க உதவுகிறது என்பதை அறிவுறுத்தி விட்டது. சிந்தனை, வாழ்நாள் முழுதும் கற்பது இவைகள் எல்லாம் ஏதோ அறிவாளிகளுக்கானது என்று ஒதுங்காமல் உடலுக்கும், மனதுக்கும், நினைவுக்கும் வேண்டியவைகளைக் கற்று, கடைப்பிடித்து -  வாழும் வரை எடுத்தப் பிறவியை  பிறருக்குச் சுமையாகாது வாழ்ந்து முடிக்க முயல்வோம்!

  திருமதி சிமோன் 

நுண்ணறிவு

                                                             

நுண்ணறிவு என்பது புரிந்துகொள்ளும் ஆற்றல், சிக்கலைத் தீர்க்கும் ஆற்றல், தொடர்பு காணும் ஆற்றல், சூழ்நிலைப் பொருத்தப்பட, கருத்தியல் சிந்தனைத் திறன் போன்ற ஆற்றல்கள் அல்லது திறன்களின் தொகுப்பாகும்.

நுண்ணறிவுச் சோதனைகளின் தந்தை எனக் கூறப்படும் ஆல்பிரட் பினே என்பவர் புரிந்து கொள்ளல், புதுமை புனைதல், தொடங்கிய செயலைத் தொடர்ந்து முடித்தல், தனது நடத்தையில் உள்ள குறைபாடுகளைத் தானே உணர்தல் போன்ற கூறுகள் நிண்ணறிவினுள் அடங்கியுள்ளன என்றார்.

நுண்ணறிவின் அளவை உளவியல் வல்லுநர்கள் நுண்ணறிவு ஈவு என்னும் ஒர் அளவையினால் குறிப்பிடுகின்றனர்.
*  டெர்மன் என்பவர்தான் முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார்.
*  ஒருவருடைய மனவயதுடன் அவனது கால வயதினை ஒப்பு நோக்க நுண்ணறிவுத் திறன் அளவைக் குறிப்பிடுவர். மனவயதை கால வயதால் வகுத்து 100 ஆல் பெருக்கினால் கிடைக்கும் எண்ணே நுண்ணறிவு ஈவு எனப்படும்.
*  நுண்ணறிவு ஈவு (IQ) = மனவயது(மாதங்களில்) (MA)
                                          ---------------------------------------------------X 100
                      கால வயது (மாதங்களில் (CA)
*  100 ஆல் பெருக்குவது ஈவு பின்னமாக இல்லாமல் முழு எண்ணாக இருப்பதற்காகத்தான்.
*  மனவயது என்பது சோதிக்கப்படுபவரின் நுண்ணறிவு முதிர்ச்சியைக் குறிக்கும் அளவாகும்.
*  நுண்ணறிவு வளர்ச்சி 16 வயது வரை நீடிக்கும். எனவே நுண்ணறிவு ஈவு கணக்கிடும்போது சோதிக்கப்படுவோர் 16 வயதிற்குக் குறைவாக இருத்தல் வேண்டும்.

IQ - 120 இருந்தால் ஐஏஎஸ் படிக்கவைக்கலாம்
IQ - 110 இருந்தால் மருத்துவம் படிக்கவைக்கலாம்
IQ - 100 அல்லது அதற்குக் கீழே இருந்தால் ஏதாவது ஒரு பட்டம் படிக்கவைக்கலாம்
IQ - 80 க்கும் கீழே இருந்தால் சும்மா அவர்களைப் படி படி என்று துன்புறுத்துவதைவிட அவர்களின் பிழைப்புக்கான ஏதாவது தொழிலைக் கற்றுக்கொடுக்கலாம் என்று உளவியலாளர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.


அமெரிக்காவின் நியூமெக்சிகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்களின் குழு, அமெரிக்கா முழுவதும் பரவலாக, மக்களின் நுண்ணறிவுத் திறனை(IQ) சோதித்ததில், தொற்று நோய்கள், IQ திறன்களை பாதிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்று தெரிவிக்கின்றனர்.

இயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை

நமது மூளையின் எடை எவ்வளவாக இருக்கும் என் நினைக்கின்றீர்கள்? உமது உடல் எடையின் 2 வீதந்தான், நமது மூளையின் எடையாகின்றது.
வளர்ந்த மனிதனின் மூளை எடை 1.5 கிலோகிராம்.
ஒவ்வொரு நொடியும் நமது மூளைக்குள் 1 லட்சம் அமில மாற்றங்கள் நமக்குத் தெரியாமலே நடக்கின்றன.
நமது மூளையில் உள்ள ரத்த நாளங்களை விரித்து நீட்டினால், 1 லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு அவை நீளுமாம்.
மூளையில் 2 வயதில் தான் மிக அதிக செல்கள் அமைகின்றன. பிறகு அவை குறைய ஆரம்பித்து விடுகின்றன.
வாழ்க்கையில் மூளை, குவாட்ரிலியன்... அதா வது, 10 கோடியே கோடி தகவல்களை தனித்தனியாக தனக்குள் தக்க வைத்துக் கொள்கிறது!
18 வயதில் மனிதனின் மூளை வளர்வதை நிறுத்திக் கொள்கிறது.
நம் மூளை செயல்படும்போது 10 முதல் 23 வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்க வேண்டும் என்று விரும்பினால் எந்த உயர் பானங்களையும் தேடி அலைய வேண்டாம், குடிநீர் போதும்.

நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும்.  5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள் இறக்க துவங்கிவிடும்.
அறிவுக்கும் மூளையின் எடைக்கும் சம்பந்தம் இல்லை.
மிகச் சாதாரண மனிதர்கள் மூளையை 2 சதவீதமே பயன்படுத்துகிறார்களாம். நாம் புத்திசாலி என்று பாராட்டுபவர்கள்கூட 5 சதவீத மூளையையே பயன்படுத்துகிறார்கள். ஆய்வாளர்கள் 7 சதவீத மூளையையும், விண்வெளி விஞ்ஞானிகள் 11 சதவீத மூளையையும் பயன்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது.

இதயம் பம்ப் செய்யும் இரத்தத்தில் 15-20% நேரடியாக மூளைக்கு செல்கின்றது. 
மனித மண்டை ஓட்டை திறந்து மூளையை எடுத்தால் அதனுடன் நேரடியாக இணைந்துள்ள நம் கண்களும் அதனோடு சேர்ந்து வந்துவிடும்.  

மனித மூளையில் 80% தண்ணீரே உள்ளது. நீர் வறட்சி மூளையை பாதிப்புக்குள்ளாக்கலாம். ஆகையால், நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாகும். தொடர்ச்சியான இடைவெளியில் தண்ணீர் பருகிக்கொண்டிருப்பது ஆரோக்கியமான மூளை செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும்.

முன்பெல்லாம் மூளையில் உள்ள உயிரணுக்கள் இறந்தால் அவைகளுக்கு மாற்றாக புதிய அணுக்கள் வருவதில்லை என நினைத்திருந்தார்கள். ஆனால் உடற்பயிற்சியினால் மூளையில் நினைவாற்றல் மற்றும் படிப்புக்கு ஏதுவாக இருக்கும் ஹிப்போகேம்பஸ் என்ற பகுதியில் புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன எனக் கண்டுபிடித்து இருக்கின்றனர்.
 தோப்புக்கரணம் மூளையை நன்கு வளர்ச்சியடையச் செய்யுமாம். இயற்கையிலேயே மன அழுத்தம் உள்ள பிள்ளைகள்( ஆட்டிஸம்), மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கும் இது மிகவும் பயனுள்ள யோகாசனமாம்.


பெண்களின் மூளையில் உள்ள செல்களை விட ஆண்களின் மூளையில் உள்ள செல்களின் எண்ணிக்கை நான்கு சதவீதம் அதிகம். அதனால்,மூளையின் எடையும் ஒரு 100 கிராம் அதிகம். பெண்களின் மூளையில் செல்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும்,செல்களுக்கிடையே உள்ள இணைப்பு அதிகம். அதாவது, பெண்கள் குறைந்த அளவு செல்களை வைத்துகொண்டு விரைவாக வேலை செய்கிறார்கள்.

மூளையில் லிம்பிக் சிஸ்டம் என்றொரு அமைப்பு இருக்கிறது.இதுதான் நமது பலவித உணர்ச்சிகளைக் கையாள்கிறது. இது,ஆண்களைவிடப் பெண்களுக்கு சற்று பெரிதாக இருக்கும். இதன் விளைவாக மற்றவர்கள் மீது அக்கறை செலுத்துவது,உணர்வு ரீதியான பிணைப்பை ஏற்படுத்திகொள்வது,ஆகியவற்றில் ஆண்களை விட பெண்கள் மேலானவர்கள். இதனால்தான் குழந்தைகளைக் கவனிப்பது,வீட்டைப் பராமரிப்பது, போன்ற விசயங்களைப் பெண்கள் சிறப்பாகக் கையாள்கிறார்கள்.உலகத்தின் எந்தக் கலாச்சாரமாக இருந்தாலும் இதுதான் நியதி.

மூளையின் இடப்பக்கம் ,கணக்குப் போடுவது, தர்க்க ரீதியான சிந்தனைகள் இதற்கு பொறுப்பு.மூளையின் வலப்பக்கம் மொழியாற்றல், பேச்சுத்திறன் இதற்கு பொறுப்பு. இடப்பக்க மூளையையும் வலப்பக்க மூளையையும் கோர்பஸ் கோலோசம் (corpus colosum) என்ற ஒரு " சாலை : இணைக்கிறது. ஆண்களைவிடப் பெண்களின் மூளையில் இந்த சாலை பெரியது. அதன் காரணமாகப் பெண்களின் மூளையில் தகவல் பரிமாற்றங்கள் மிக வேகமாக நடக்கின்றன. இதனால் பெண்கள், மூளையின் இரண்டு பக்கங்களையும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். மொழியை கற்றுகொள்வதில் ஆரம்பித்து, உள்ளுளணர்வு என்று எல்லாவற்றிலும் அவர்களுக்கு திறன் சற்று கூடுதல். 

அந்தக் காலத்தில் மாணவர்களை, கற்பூர புத்தி, கரித்துண்டு, வாழை மட்டை புத்தி என்று பாகுபாடு செய்வார்கள்
கற்பூர புத்தி - இந்த வகை குழந்தைகள் சொன்னவுடனேயே புரிந்துகொள்வார்கள்..
கரித்துண்டு - இரண்டுமுறை சொன்னால் புரிந்துகொள்வார்கள்.
வாழை மட்டை புத்தி - எத்தனை முறை சொன்னாலும் புரிந்துகொள்ளமாட்டார்கள்.



அல்சைமர் நோய்


                                                          

கடந்த பத்தொன்பது ஆண்டுகளாக செப்டம்பர் மாதம் 21-ஆம் நாள் 'உலக அல்சைமர் தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது.இது ஒரு வகையான ஞாபக மறதி நோய்.ஜெர்மன் நாட்டு மனநல மருத்துவரும் நரம்பியல் வல்லுருமான Alois Alzheimer என்பவர்தாம் 1906 -இல் முதல் முறையாக இந்நோயைக்  கண்டறிந்தார். அதுமுதல் இந்நோய் அவர் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது.

 அமெரிக்காவில் சுமார்   55 லட்சத்துக்கு மேல் முதியவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.அமெரிக்காவின்   முன்னாள் அதிபர் ரீகன் இந் நோயால் பாதிக்கப்பட்டவர்.இந்திய மக்கள் தொகையில் 6.40 கோடி (5.5 சதவீதம்)  அல்சைமர் நோயினால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2030 -ஆம் ஆண்டில் 9 கோடியாகவும் (6.4 சதவீதம்), 2050 -ஆம் ஆண்டில் 11.30 கோடியாகவும் (7.2 சதவீதம்) உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.  முதியவர்களைப்  பெரும்பாலும் தாக்கும் இந்நோயினால், ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் முதியோர் இல்லத்தில் இவர்களுக்கென தனி உலகத்தையே உருவாக்கி வருகிறார்கள்.

பொதுவாக ஒருவரின் 60 வயதில்  அல்சைமர் நோய் இனங்காணப்பட்டு வருகிறது. நரம்பு மற்றும் மனநல பரிசோதனைகள் மூலம் இந்நோய் கண்டுபிடிக்கப்படுகிறது. இதைக்  குணப்படுத்த முடியாது. ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், சிகிச்சை அளித்து நோய் முற்றாமல் பார்த்துக்  கொள்ளலாம்.மூளைக்குள் இருக்கும் நரம்பு மண்டலத்தில் உருவாகும் ஒருவகை புரோட்டீன் அமிலத்தன்மையின் பரவல் காரணமாக நினைவாற்றல் இழப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.வயதாகும் போது மூளை செயல்பாட்டுக்குத்  தேவையான வேதிப் பொருள்கள் உடலில் சரியாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதனால்தான் வயதாகும் போது நினைவாற்றல்பிரச்சனை உருவாகிறது.
 இந்த நோயால் பாதிக்கபடுகிறவர்கள்   நினைவாற்றலையும், பகுத்தறிவு ஆற்றலையும்  இழந்து போவார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள்:
  •  பெயர், வாழ்விடம், வயது,  நேரம், தேதி மற்றும் நாளை  மறந்து போதல்.
  • ஆரம்பத்தில் அண்மைக் காலச்  சம்பவங்களே மறக்கும். காலம் செல்லச் செல்ல பழைய சம்பவங்களும் மறந்து போகும்.
  • யோசிப்பதில் திணறுவது எழுத்து மற்றும் எண்களை அடையாளம் காண்பதில் பிரச்சனை, கணக்கிடுதலில் பிரச்சனை போன்றவை.
  • தொடர்பாற்றலில் பிரச்சனை-  தாங்கள் பேசும் மொழியை பயன்படுத்துவதில் பிரச்சனை, சொற்கள் மறந்து போகும்.வார்த்தைகளை கண்டுபிடிக்கத் திணறுவது, ஞாபகம் வைத்துக் கொள்வது, வார்த்தைகளை வெளிப்படுத்துவதில் அல்லது  எழுதுவதில் பிரச்சனை  புதிதாகக்  கற்பதில் பிரச்சனை ஏற்படுவது
  • இயல்பற்ற நிலையில் இருப்பார்கள். கீழே விழுந்து விடுவோம் என்ற பயத்தினால் சமையல், வாகனம் ஓட்டுவது, வீட்டு வேலை போன்ற வேலைகளை செய்ய கஷ்டப்படுவார்கள். இந்த வியாதி முற்றும் போது, தினசரி நடவடிக்கைகளான குளியல், ஆடை அலங்காரம், உண்ணுதல் மற்றும் கழிப்பறை விஷயங்களைக்  கூடத்  துணையில்லாமல் செய்ய முடியாது.
  • புதிய மனிதர்கள் அல்லது புதிய சூழலைச்  சந்திக்கும்போது குழப்பம் ஏற்படும்.
  • நடத்தையில் மாற்றங்கள் ஏற்படும்.
    • அடிக்கடி கோபப்படல், மூர்க்கமாக நடந்து கொள்ளுதல், எளிதில் உணர்ச்சி வசப்படுதல் மற்றும் காரணமே இல்லாமல் சந்தேகப்படுதல்,
    • பொருத்தமற்ற பாலியல் வெளிப்பாடுகள்
    • தனிநல சுகாதார பழக்க வழக்கங்களைக்  கடைப்பிடிக்கத்  தவறுதல்
    •  சமுதாயத்தில் இருந்து விலகி நிற்பது
  • புதிய விடயங்களை அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்படல்.
கல்வி, விடா முயற்சியுள்ள மனநல நடவடிக்கைகள், ஊக்குவிக்கும் மொழி என இவை அனைத்தும் அறிவுத்திறனை அதிகரிக்க உதவும்.மேலும்  இவை மூளையைச்  சுறுசுறுப்பாக வைத்து வயதாகும் மூளையைப் புதுப்பிக்கும் என்று கூறுகிறார்  சிகாகோ ரஷ் பல்கலைகழக மருத்துவ மையத்தைச்  சேர்ந்த மருத்துவர் டேவிட் பென்னெட். அதனால் கற்பதை நிறுத்தாதீர்கள். கற்பதைத்  தொடருங்கள்..  இது அல்சைமரை தடுக்கும் என பரிந்துரைக்க படுகிறது .இதைதான் திருவள்ளுவர்,

"தொட்டனைத்து ஊறும்  மணற்கேணி மாந்தர்க்குக் 
 கற்றனைத்து ஊறும்  அறிவு"

'மணலில் உள்ளக் கிணற்றில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும். அது போல மக்களுக்குக் கற்றக்  கல்வியின் அளவுக்கு அறிவுஊறும். அதாவது மூளை வேலை செய்யும்' என்கிறார்.


அல்சைமர் நோய் தாக்கப்படும் நான்கில் ஒருவர் இளமைப் பருவத்தில் தலையில் காயம் ஏற்பட்டவராக இருப்பர். அதிலும் நடுத்தர வயதினர், தலையில் காயத்தை ஏற்படுத்தி கொண்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்த நோயால் தாக்கப்படலாம்.எனவே தலைக்குப் பாதுகாப்பு கொடுங்கள்.

சளி, தொண்டை புண், அல்சர், நுரையீரல் அழற்சி மற்றும் ப்ளூ போன்ற தொற்றுக்கள் அல்சைமரை ஏற்படுத்தும். ஈறுகளில் ஏற்படும் தொற்றுகள் மூளைக்குப் பாக்டீரியாவை அனுப்பும். அதனால் பற்களை நன்றாகத் துலக்கி, அவ்வகை தொற்றுக்களில் இருந்து விடுபடுங்கள்.

வைட்டமின் டி சத்தின் குறைபாடு அதீத அளவில் இருக்கும் போது, அறிவுத்திறன் பாதிப்படைய அதிகம்  வாய்ப்பு உள்ளது.  வைட்டமின் டி இயற்கையாகவே உள்ள உணவு, மற்றும் கரித் துகள், க்ரீன் டீ, ரெட் ஒயின் சாப்பிட்டால் இந்நோய் வராமல்  தடுக்க முடியும்.

அமெரிக்காவின் வட கரோலினாவில் இருக்கும் டியூக் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் நம்மூர் மஞ்சளின் மகிமையை உறுதி  செய்துள்ளார்கள்.மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்கிற உட்பொருள் மூளைக்குள் இருக்கும் நரம்பு மண்டலத்தில் உருவாகும்  புரோட்டீன் அமிலத்தன்மையின் பரவலைத் தடுக்க வல்லது என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான நம்மூர்  பேராசிரியர் முரளி துரைசாமி.

அல்சைமர் நோய்/ஞாபக மறதி நோயைத் தடுக்க உதவும் சில உணவு வகைகள்:

தானிய வகைகள்:குறிப்பாகப் புதிய செல் உற்பத்திக்கு உறுதுணையாக உள்ள கோதுமை, பாதாம் பருப்பு, முந்திரி, மற்றும் வால்நட் ஆகியவை.மேலும் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இன்றியமையாக் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
ப்ளூபெர்ரி,செர்ரி,தக்காளி,ப்ராக்கோலி,தயிர்,சாக்லெட்,மீன், முட்டை, மாட்டுக்கறி, கடல் சிப்பி. கடல் சிப்பியில்  துத்தநாகமும், இரும்புச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளன. இவை மூளையைக் கூர்மையாக்கும். மனத்தை ஒருமுகப்படுத்த பெரிதும் உதவும்.
 தினமும் 3அல்லது 5 கப் காபி பருகினால், அல்சைமர் நோயில் இருந்து 65 சதவீத பாதுகாப்பு கிடைக்கும் என்று ஐரோப்பாவில் நடந்த ஓர் ஆய்வு கூறுகிறது.
காபி பிடிக்கவில்லையா?   ஆப்பிள் ஜூஸ் பருகுங்கள்.- ஞாபக இரசாயனமான அசிடில்கோலினின் உற்பத்தியை ஆப்பிள் ஜூஸ் அதிகரிக்கச் செய்யும். அதனால் இது அல்சைமரை தடுக்கும் மருந்தாக விளங்குகிறது.
முறையான உடற்பயிற்சிகளுடன், மேலே குறிப்பிட்ட உணவு வகைகளை முடிந்தவரை அதிகமாக உணவில் சேர்த்து, அல்சைமர் நோயைத் தவிர்க்க முயலுவோம்.

பெரும்பாலும் முதுமையில் தாக்கக்கூடிய டிமென்ஷியா எனப்படும் நினைவிழப்பு நோய் இந்த நூற்றாண்டில் உலகம் சந்திக்கப் போகும் மிகப்பெரும் மருத்துவ,  சமூக நெருக்கடியாக உருவாகியிருப்பதாக அல்சைமர் (Alzheimer) நோய்க்கான உலக அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்தியா சீனா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டு வரும் பொருளாதார வளர்ச்சி அந்நாட்டினரின் ஆயுட்காலத்தைக் கூட்டி வருவதால் இந்த ஞாபகமறதி நோயும் அது ஏற்படுத்தக்கூடிய பொருளாதாரச் சுமையும் பன்மடங்கு அதிகரிக்கும் என்று அவ்வுலக அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்நோயால் தாக்கப்பட்ட தாயுடன் மகன்படும் அனுபவங்களை  Forget Me Not திரைப்படம்  சித்தரிக்கிறது.. இத்திரைப்படத்தின் உண்மையான ஜெர்மனிய பெயர் VERGISS MEIN NICHT.   முடிந்தால் ஒருமுறை பாருங்கள்.

'a journey of caring' - 'நலம் பேணும்  பயணம்' என்பதே இந்த ஆண்டின்  விருது வாக்கியமாகும். இந்நோயால் பாதிக்கப்பட்ட  முதிய தலைமுறையைக்  காக்கத்  தேவையான செயல்களில் நம்மையே ஈடுபடுத்திக்  கொள்வோம்.

லூசியா லெபோ

இளம் சாதனையாளர்கள்

                                                 

குழந்தைப் பருவத்து அறிவுக்கூர்மையை மழுங்க விடாமல் தங்களும் பிரகாசித்து, பிறர்க்கும் பயனளிக்கும் விதத்தில் வாழ்பவர் மிகக் குறைவு! அவர்களுள் ஒரு சிலர் கீழே:

இளம் சாதனையாளர்கள்

  • வில்லியம் மிட் என்பவர் தனது 14-வது வயதில் அரசியல் கலந்த அருமையான நாடகம் எழுதி புகழ் பெற்றார்.
  • விக்டர் ஹியூகோ தனது 15-வது வயதில் பிரெஞ்சு இலக்கிய கழகத்துக்கு சிந்தனைகள் பொதிந்த கவிதைகள் எழுதி அனுப்பினார்.
  • மாவீரன் அலெக்சாண்டர் 16 வயதிலேயே தனது தந்தையின் போர்ப் படையில் தளபதியானார்.
  • விஞ்ஞானி கலிலியோ தனது 17-வது வயதில் பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரத்திலுள்ள விளக்கு இப்படியும், அப்படியும் ஊசலாடுவது ஏன்? என்பது குறித்து ஆராய்ந்தார்.
  • பீதோவன் தனது 21-வது வயதில் இசை உலகில் தன் பெயரை நிலை நாட்டினார்.
மேற்கூறியவர்கள் என்றோ எங்கோ பிறந்து சாதனைப் படைத்தவர்கள் என்றால், நம்மில் நம்மோடு வாழும் இளம் பிஞ்சுகளின் திறமைகள் பின்வருமாறு:

 சென்னையைச் சேர்ந்தவர் ஷ்ராவன் குமரன்(14). அவரது தம்பி சஞ்சய் குமரன்(12). அப்ளிகேஷன்களை உருவாக்கித் தரும் கோ டைமன்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் ஷ்ராவன். அதே நிறுவனத்தின் சிஇஓ சஞ்சய். அவர்கள் இந்த நிறுவனத்தை தங்கள் வீட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கினர். இந்தியாவின் இளம் தொழில் அதிபர்களாக இந்த சகோதரர்கள் உள்ளனர். சென்னையில் உள்ள வேல்ஸ் பில்லபாங் சர்வதேச பள்ளியில் ஷ்ராவன் 9ம் வகுப்பிலும், சஞ்சய் 7ம் வகுப்பிலும் படித்து வருகின்றனர். இந்த சகோதரர்களின் தந்தை குமரன் சுரேந்தர் சைமன்டெக் நிறுவனத்தின் ஆன்ட்டி வைரஸ் மற்றும் செக்யூரிட்டி சொலுஷன்ஸ் டைரக்டர். தாய் ஜோதி லக்ஷ்மி முன்னாள் பத்திரிக்கையாளர். புரோகிராமிங் கற்றுக் கொள்ள, கேட்ஜெட்டுகளுடன் விளையாட தங்களை ஊக்கப்பட்டுத்தியதே தங்கள் தந்தை தான் என்கின்றனர் இந்த சுட்டிப் பையன்கள்.

ஷ்ராவனும், சஞ்சயும் சேர்ந்து கேட்ச் மீ காப் என்று திருடன், போலீஸ் விளையாட்டு அப்ளிகேஷனை கடந்த ஆண்டு வெளியிட்டனர். அவர்களின் இந்த முதல் அப்ளிகேஷனே சூப்பர் ஹிட்.

சகோதரர்கள் சேர்ந்து கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 11 அப்ளிகேஷன்களை உருவாக்கியுள்ளனர். அண்மையில் அவர்கள் எக்ஸ்ட்ரீம் இம்பாசிபிள் 5 அல்லது இஐ5 என்ற ஆக்ஷன் விளையாட்டு அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளனர். (நன்றி ஒன் இந்தியா தமிழ் ).


வயது பதினொன்று (பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை. கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.
பாளையங்கோட்டையை சேர்ந்த, 11 வயது மாணவி, இன்ஜினியரிங் படிப்பு முடித்தவர்கள் எழுத வேண்டிய எம்.சி.பி., மற்றும் சி.சி.என்.ஏ., தேர்வுகள் உட்பட, ஏழு தேர்வுகளை எழுதி, சாதனை படைத்துள்ளார். படிப்பில் மேலும் பல சாதனைகள் படைப்பதற்கு, மத்திய, மாநில அரசுகளின் உதவி கிடைத்தால், ஏதுவாக இருக்கும் என்றும் கூறுகிறார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, சங்கர் காலனி செண்பகம் நகரை சேர்ந்த, கல்யாண குமாரசாமி – சேது ராகமாலிகா தம்பதியின் மகள் விசாலினி, 11. இவர், பாளையங்கோட்டையில் உள்ள, ஐ.ஐ.பி.இ., லட்சுமி ராமன் மெட்ரிக் குலேஷன் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
ஐ.க்யூ., அதிகம்:-
சாதாரண மனிதர்களை விட நுண்ணறிவுத் திறன் (ஐ.க்யூ.,) அதிகம் உள்ளதால், நான்கு வகுப்புகளை, இரண்டு ஆண்டுகளில் படித்து தேர்ச்சி பெற்றதன் மூலம், 11 வயதில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு, இரண்டரை வயதாகும் போதே, இவரை பரிசோதித்த டாக்டர், மற்றவர்களை விட நுண்ணறிவுத் திறன் அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். சாதாரண மனிதர்களுக்கு நுண்ணறிவுத் திறன் அளவு, 90லிருந்து 110 வரை இருக்கும். விசாலினியின் ஐ.க்யூ., அளவு, 225 வரை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். புனேயில் உள்ள நிறுவனம் ஒன்றும், விசாலினியின் ஐ.க்யூ., அளவு, 225 ஆக இருப்பதை, உறுதி செய்துள்ளது.
விசாலியின் இந்த உலக சாதனை, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கு, 14 வயது பூர்தியாகியிருக்க வேண்டும் என்பதாலும், இவருக்கு தற்போது, 11 வயது தான் ஆகிறது என்பதாலும், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதற்கு, இன்னும் மூன்றுஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது.

vendredi 30 août 2013

எண்ணப் பரிமாற்றம்

                                                         

அன்புடையீர்,

வணக்கம். 'சிறுகக் கட்டிப் பெருக வாழ்' என்றொரு பழமொழி உண்டு. சிக்கனத்தைப் போதிப்பது போல இருந்தாலும் ஒவ்வொன்றையும் கருத்தில் கொண்டு, கணக்கிட்டு கச்சிதமாக வாழவும்  அது வலியுறுத்துகிறது. நம்மை அறியாமலே வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அதன் போக்கைக் கணக்கிட்டே நாம் செயல்படுகிறோம்.

பள்ளிப் பருவத்தில் எதிர்காலத்தைப் பற்றியக் கற்பனைகளுக்கிணையாகக் எந்தப் படிப்பு எத்தகைய பலனைத் தரும், எது ஏற்புடையது, நம்மால் முடிந்தது எந்த அளவு என்றெல்லாம் கணக்கிட வேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் நமக்காக நமது பெற்றோர் குழப்பிக் கொள்கிறார்கள். பின் கிடைத்த வேலையைச் செய்ய நேர்ந்தாலும் கூட அப்படியிருந்தால், இப்படியிருந்தால் என்று மனம் வேறு கணக்குகளில் மூழ்குகிறது.  திருமணம் என்றாலும் இவள் அல்லது இவன் உறவு நமக்கு ஒத்து வருமா, குழந்தைகள் எத்தனை வேண்டும், அவர்களை எப்படி வளர்ப்பது என்று தொடரும் எண்ணக் கணக்குகள் முடிவற்றவை!இதில் சுற்றம் அதைச்சார்ந்த  ஏற்றத் தாழ்வுகள், பதவி,சொத்து என்று   வாழ்க்கைக்குத் தொடர்பு உள்ளதோ என்னவோ நம் ஆசைகளால் ஆன  மனக்கணக்குகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்தக் கணக்குகள் உரிய விடையைத் தருவதுண்டு. மாறாகத் தவறி விடுவதும் உண்டு. அப்போதுதான் குலைந்து போகிறோம். எங்கே தவறியது என்று புரிந்து கொள்ள முடிவதில்லை. புரிந்தாலும் செப்பனிட முடிவதில்லை!
காலம் பறந்து கொண்டே இருக்கையில், விட்ட இடத்திற்கு மீண்டும் போய்த் திரும்பவும் ஆரம்பிக்க இயலாதாகையால், இழந்தது இழந்ததாகவே ஆகி விடுகிறது. அந்தச் சோகத்தை நம்மால் சீரணிக்க முடிவதில்லை. அது வாழ்நாள் முழுவதும் உள்ளத்தில் பதிந்து போன வடுவாகிவிடுகிறது.

சுழல்கின்ற பம்பரம், தானே சுயமாக  இயங்குவதாய் எண்ணிக்கொள்வதால், வேகம் குறைவதையும், சுற்ற முடியாது செயலிழந்து போவதையும் தன் சொந்த பலவீனமாய் நினைத்து நொந்து போகிறது. கண்களுக்குத் தெரியாததால், அறிவு சிந்திக்காததால் தன்னைச் சுற்ற வைக்க ஒரு கயிறும், அதன் கட்டுப்பாடு  தன்னை இயக்குபவனிடமும் உள்ளதென்னும் உண்மை புரியாமல் போகிறது. அவன் எந்த அளவு கயிற்றை நெருக்கிச் சுற்றி, எந்த வேகத்தில் எந்த லாவகத்தில் தரையில் பம்பரத்தை விடுகிறானோ அந்த அளவே அது சுழலும்! தரை, காற்று என அதன் சுழற்சியைத் தடுக்கும் எத்தனையோ தடங்கல்களுக்கிடையே பம்பரத்துக்கும் "அவன் " போட்டக் கணக்குக்கும் ஏற்ப அது சுற்றுகிறது!

நமது கைகளுக்குள் அடங்கி, நமக்கு உகந்தவாறு வாழ்க்கை  நடக்கும் வரை  நாமும் இறுமாந்து, பெருமிதத்தில் உலவுகிறோம். அப்போதே இதற்கு ஓர் வரைமுறை உண்டு,  பிறருடைய வாழ்வோடு சம்பந்தப் பட்டிருப்பதால்  ஓர் எல்லை உண்டு, ஓர் முடிவும் உண்டு என்பதைப் புரிந்து கொண்டால், வாழும் வரை நிறைவுடனும், எதையும் எதிர் கொள்ளும் பக்குவத்துடனும் வாழலாம்!

திருமதி சிமோன் 

கணிதம் பற்றிய சில செய்திகள்:


                                                                  

வணிகம், எண்களுக்குள்ளானத் தொடர்பு, நிலம்-அண்டம் போன்றவற்றின் அமைப்பை அளப்பதற்கான அறிவியல் கணிதம். இது எண்ணிக்கை, தோற்றம், வடிவம், மாற்றம், நுண்மைத் தரம் போன்றவற்றைத் துல்லியமாகக் கணக்கிடும்.

கணிதத்துறையில் இந்தியர்கள் செய்திருக்கும் சாதனை கணிசமானது. ஒன்று முதல் பத்து எண்கள் கொண்ட தசம வகைப்பாடு முதன் முதலில் இந்தியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அராபியர்கள் மூலமாக அது ஐரோப்பியர்களுக்கு அறிமுகமானதால் அதை அவர்கள் அராபிய எண்கள் என்று அழைத்தார்கள். அந்தப் பெயரே இன்று பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அராபியர்கள் அந்த எண் வரிசையை இந்திய எண்கள் என்றே அழைக்கிறார்கள். கற்றறிந்தவர்களின் கணிதச் சொல்லாடலில் அது இந்தோ அராபிய எண்கள் என்றே சொல்லப்படுகின்றன.

போதாயனர், பிங்களர், ஆரியப்பட்டர், பாஸ்கர ஆச்சாரியர் (முதலாமவர், இரண்டாமவர்) என மிக நீண்ட நெடிய கணித மேதைகளின் பாரம்பரியம் மிகப் பெரிய கணித சாதனைகளை நிகழ்த்தி வந்துள்ளன. பூஜ்ஜியம், எதிர்மறை எண்கள், முடிவிலி, பை – யின் துல்லியமான மதிப்பு (3.14), திரிகோணமிதி, அல்ஜீப்ரா சமன்பாடுகள், பித்தகோரஸ் சூத்திரம், நான்மடிச் சமன்பாடு, வகைகெழு என கணித வரலாற்றின் விதைகள் பெரும்பாலானவை இந்திய மண்ணில் இருந்துதான் முளைத்தெழுந்துள்ளன.

இந்தக் கணித அறிவுதான் நமது கட்டடக்கலையின் செழுமைக்குக் காரணமாக இருந்திருக்கிறது. வான சாஸ்திரத்தின் பல வெற்றிகளுக்கு அடிப்படையாக இருந்திருக்கிறது. அந்த பாரம்பரியம் நவீன காலத்திலும் ராமானுஜம் போன்றோரால் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.


Number : The Language of Science என்ற புகழ் வாய்ந்த நூலை எழுதிய Tobias Dantzig அந்த நூலில் சொல்கிறார் :" கணிதத்துறையில் இந்தியர்கள் (இந்து) செய்திருக்கும் சாதனைகள்  உலக  முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதில் சந்தேகமே இல்லை".


சகுந்தலா தேவி:

இந்திய பெண் கணிதமேதையான சகுந்தலா தேவி அவர்கள், 1939 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 04  ஆம் நாள் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை  சர்கஸில் வேலைப்பார்த்து வந்தார்.

சகுந்தலா தேவி அவர்கள், தன்னுடைய மூன்று வயதிலேயே, தன் தந்தையுடன் சீட்டு வித்தைகள் செய்து, அவருடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தினார். ஆறுவயதில், மைசூர் பல்கலைக்கழகத்திலும் மற்றும் எட்டு வயதில் ,அண்ணா பல்கலைக்கழகத்திலும் கணக்கு மற்றும் நினைவாற்றல் திறமையை வெளிப்படுத்தி, அனைவரையும் வியக்க வைத்தார்.

சகுந்தலா தேவி அவர்கள், 1977 ஆம் ஆண்டு 201க்கு ‘23’கனமூலத்தை மனதில் நினைத்தே கூறினார். பிறகு, ஜூன் 18, 1980ல் “லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியில்” நடந்த ஒரு நிகழ்ச்சியில் இரண்டு 13 இல்லக்க (அதாவது 7,868, 369,774,870 * 2,465,099,745,779  = 18.947.668.177.995.426.462.773.730)  எண்களை பெருக்கி வெறும் 28 வினாடிகளில் கூறி உலகையே வியக்க வைத்தார். இந்த விடை, 26 இலக்கங்கள் கொண்ட ஒரு எண் ஆகும். இது உலக சாதனையாக, ‘கின்னஸ் புத்தகத்தில்’ இடம் பெற்றுள்ளது.

படித்து, பயன்பெற கணிதவியலைப் பற்றி பல நூல்களை எழுதியுள்ளார்.
  • ‘புக் நம்பர்ஸ்’,
  • ‘பெர்ஃபெக்ட் மர்டர்’,
  • ‘ஃபிங்கரிங்: தி ஜாய் ஆஃப் நம்பர்ஸ்’,
  • ‘இன் தி வொண்டேர்லாண்ட் ஆஃப் நம்பர்ஸ்’,
  • ‘அஸ்ட்ராலஜி ஃபார் யூ’
சகுந்தலா தேவி அவர்களுக்கு, சிறுநீரகக் கோளாறும், சுவாசப் பிரச்சனைகளும் இருந்ததால், பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி, ஏப்ரல் 3 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டில், தனது 83 வது வயது மரணமடைந்தார்.

‘ஹ்யூமன் கம்ப்யூட்டர்’ அதாவது ‘மனித-கணினி’ என புகழப்படும் சகுந்தலா தேவி அவர்கள், உலகின் பல நாடுகளுக்கு சென்று, தன்னுடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தி, சாதனைகள் படைத்ததோடு மட்டுமல்லாமல், நமது பாரத நாட்டிற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கிறார்.


பிதகோரசு தேற்றம்
 

ஓடும் நீளம் தனை ஒரே எட்டு
கூறு தாக்கி கூரிலே ஒன்றை
தள்ளி குன்றத்தில் பாதியை சேர்த்தால்
வருவது கர்ணம் தானே

போதாயனர் என்னும் புலவர் எழுதிய பாடல் இது...

விளக்கம்:

அடிப்பகுதியினை (நீளம்) எட்டு சமமான பகுதிகளாக (கூறு) பிரித்து, அதில் ஒரு பகுதியினை கழித்து அதனுடன் குன்றின் அரை பகுதியினை கூட்டினால் கர்ணத்தின் அளவு கிடைக்கும்.

மேற்கூறியது வேறு ஒன்றமல்ல... நாம் கணிதத்தில் படித்த பிதகோரசு தேற்றம்தான் (Pythagoras theorem).

அடிப்பகுதி (Base) - 8
குன்று (Height) - 6

அடிப்பகுதியினை எட்டு சமமான பகுதிகளாக பிரித்து, அதில் ஒரு பகுதியினை கழித்து --> 8-(8/8) = 8 - 1 = 7

குன்றின் அரை பகுதி --> 6/2 = 3

அவை இரண்டையும் கூட்டினால் --> 7 + 3 = 10

பிதகோரசு தேற்றத்தின் படி (Pythagoras theorem):
கர்ணம் = அடிப்பகுதியின் வர்க்கம் + குன்றின் வர்க்கம் ஆகியவற்றின் வர்க்கமூலம்...

கர்ணத்தின் வர்க்கம் = (8 * 8) + (6 * 6) = 64 + 36 = 100
கர்ணத்தின் வர்க்கமூலம் = 10

பிதகோரசு தேற்றம் இயற்றப்படுவதர்க்கு முன்பாகவே அந்த கணித கூற்றினை நமது முன்னோர்கள் கூறிவிட்டனர்... நாம் அவற்றை உலகறிய எடுத்து செல்லாததால் நமது கண்டுபிடிப்பு உலகிற்கு தெரியவில்லை

ஒன்பதாம் வாய்பாடு :

இரு கைகளையும் பக்கவாட்டில் இணைத்து விரல்களை விரியுங்கள் .இப்போது, இடக்கைப் பெருவிரலிலிருந்து வலக்கைப் பெருவிரல் வரை பத்து விரல்கள்...எந்த எண்ணை 9 ஆல் பெருக்கவேண்டுமோ அந்த விரலை மடக்கிக் கொள்ளுங்கள். மடக்கிய விரலுக்கு இடப்புறம் எத்தனை விரல்கள் ? வலப்புறம் எத்தனை விரல்க்ள் ? இரண்டையும் இணைத்தால் அதுதான் விடை.! 


சில புதிர்கள்:

40-லிருந்து 10-ஐ 4முறை கழித்துப் பார்த்தால் கிடைக்கும் விடை என்ன?
(30தான். ஒவ்வொரு முறையும் 40லிருந்துதானே கழிக்கிறோம்?)

 I96I- இந்த எண்ணின் சிறப்பு என்ன? (திருப்பிப் போட்டாலும் அதே எண் தான் வரும்)

ஐந்து 9 களைக்கொண்டு 10 ஐ எழுதுங்கள். (99/99-1, 9+1=10)
இதே போல்  எட்டு "8" களை பயன்படுத்தி ஒரு 1000 உருவாக்குங்க!!! 

3 என்ற எண்ணை 5 முறை பயன்படுத்தி மொத்த கூடுதல் 31 என்று வர வேண்டும். (+,-,x , ÷  எதை வேண்டுமாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் )

ஒவ்வொரு மூன்றடிக்கும் ஒரு தூண் வீதம் நடப்படுகிறது எனில் 30 அடி நீளமுள்ள தாழ்வாரத்திற்கு எத்தனை தூண்கள் தேவை ?

30 அடிக்கு 10 தூண்கள் மேலும் முதலில் நடப்பட்டுள்ள தூணையும் சேர்த்து 11 தூண்கள்.

Mathematical Reviews என்ற கணித விமர்சனம் 1940 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று ஒவ்வொரு மாதமும் 2000 பக்கங்களுடன் வெளிவருகிறது. இதில் வெளியான 20லட்சம் கட்டுரைகள் பொக்கிஷமாகக் கருதப்படுகின்றன.

தமிழ்ப்பாடல்களில் எண்கள்

                                                            

பழந்தமிழ்ப்பாடல்களில் பலவகையான சித்துவிளையாட்டுக்களை புரிந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். தமிழில் மேல்வாய் இலக்கம் கீழ்வாய் இலக்கம் என்று எண்களின் வரிசையில் வரும். இவை பின்னங்கள் எனப்படும்.
 முக்கால்,அரை,கால், அரைக்கால்,இருமா,மாகாணி,ஒருமா,கீழரை என்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்து காளமேகப் புலவர் பாடிய பாடல் இதோ:

முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்கா லரைக்கால்கண் டஞ்சாமுன் - விக்கி
இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரையின் றோது

முக்கால்னா மூன்று கால்கள். வயதான பின் இரண்டு காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவது காலாகப் பயன்படுத்துகிறோமே…..அந்த நிலை வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்…நரை வருவதற்கு முன்னாலே
அக்காலரைக்கால்கண்டஞ்சாமுன்= அந்தக் காலர்களாகிய எமதூதுவரைக்கண்டு அஞ்சி கால்கள் நடுநடுங்குமுன்பாக , விக்கி இருமாமுன் = உயிர் பிரியுமுன்னர் விக்கிக்கொண்டு இருமல் ஏற்படுமுன்னர், ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப் போகும் முன்…காஞ்சியில்  மாமரத்தின் கீழ் உள்ள ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!
இதுதான் இந்த பாடலின் பொருள்.

பழந்தமிழ் சிலேடைப் பாடலொன்றில் பின்வருமாறு வருகிறது.
"பூனக்கி ஆறு கால்
புள்ளினத்திற்கு ஒன்பது கால்
ஆனைக்குக் கால் பதினாறு ஆனதே"
அதாவது:
பூனக்கி- பூ + நக்கி = பூச்சியினம்.
ஒன்பது கால் = 9 x 1/4= 2 1/4 = இரண்டு கால்.
கால் பதினாறு = நாலு கால்
பின்வரும்  பாடல் கம்பராமாயணத்தின் தொடக்கத்திலுள்ள தோத்திர பாடல்களுள் ஒன்று - அனுமன் துதி.

அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக
ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் நம்மை அளித்துக் காப்பான்.

இப் பாடலில் அஞ்சு (ஐந்து) என்னும் எண்ணை வைத்துக்கொண்டு எப்படி விளையாடியிருக்கிறார்.வந்த சொல்லே மிக்குவருதலை, ஏந்தல் வண்ணம் என்பர் தொல்காப்பியனார் .
பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயு பகவானுக்கு மகனாக பிறந்தான்.பின்னர் ஐந்திலே மற்றொன்றான நீராகிய கடலைத் தாண்டி வான் வழியாக (ஆறு - வழி) ராமனுக்காக(ஆரியர்க்காக) சென்று ஐந்திலே இன்னொன்றான பூமியின் மகளாகத் தோன்றியசீதையைக் கண்டு இலங்கையில் (அயலார் ஊரில்) அவ்வைந்திலே கடைசியாக உள்ளதீயை வைத்தான். அப்படிப் பட்டவன் நம்மைப் பாதுகாத்து அருளுவான்.
 சங்க காலத்தில் எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.

"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை."

பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம்... சிறு முட்களின் எண்ணிக்கை "0" அல்லது "5" ஆகிய இரு எங்களை கொண்டு முடிந்தால் மட்டுமே ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுத்தால் முழு எண்ணாக விடை வரும்.
மூதுரை என்னும் நூலில் ஔவையார் அவர்கள் எழுதிய பாடல் பின்வருமாறு.

மானம் குலம் கல்வி வன்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தளன்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திட பறந்து போகும்.

பசி வந்தால் மானம், குலம்,  கல்வி, வன்மை, அறிவுடைமை, தானம், தவம், பதவி, இளகிய மனம், காமுறுதல்  ஆகிய பத்தும் பறந்துபோகும்  என ஔவையார் கூறுகிறார்.
 ஔவையார் ஒரு சமயம் சில புலவர்களைக் காணச் சென்றபோது அப்புலவர்கள் கவலைதோய்ந்த முகத்தோடு காணப்படவே அதன் காரணத்தை வினவினார்.
“நாளைப் பொழுது விடிவதற்குள் நான்கு கோடிப் பாடல்கள்  இயற்றவேண்டும் என மன்னவன் ஆணையிட்டுள்ளான். அதனால் தான் கவலையடைந்துள்ளோம்” என்று அவர்கள் கூறினராம்.
இதைக்கேட்ட ஔவையார், “இவ்வளவுதானா, இதற்காகவா கவலை கொண்டுள்ளீர்கள்” என்று கூறி கோடி என்ற வார்த்தையை அடக்கிய 4 பாடல்களைக் சொன்னார். இதுவே நாலு கோடிப் பாடல்கள் எனப்படும்.(.ஒளவையாரின் தனிப்பாடல் 42):

“மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்”
“உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்”
“கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்”
“கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்”

நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரின் வீட்டு வாசலை மிதிக்காமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
கோடி பொன்னைக்  கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி  பொன்னுக்கு இணையானது ஆகும்.
பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி  பொன்னுக்கு இணையானது ஆகும்.
எண்களின் தமிழ் வடிவங்களை வைத்து சங்கேதச்சொற்களைப் புனைவதுண்டு.  உதாரணம்:

'ஏழு அஞ்சு மையன்னா' என்றும் 'ஒண்ணேமுக்கால் தையன்னா'
 
ஏழுக்குரிய தமிழ் வடிவம் = எ
அஞ்சு = ரு
ஏழு ஐந்து = எரு + மையன்னா - எருமை

ஒன்று = க
முக்கால் = 'ழு' வை ஒத்திருக்கும் வடிவம்

ஒண்ணேமுக்கால் = கழு + தையன்னா - கழுதை

இதைப்போன்றே ஔவையார் பாடல் ஒன்று இருக்கிறது.

கம்பர் ஔவையாரிடம் ஒரு பாடல்  சொல்லி நையாண்டி செய்ய, அந்த அம்மாள் அவரை நோக்கிப்பாடிய வசைக்கவி உண்டு.

'ஆரை' என்னும் கீரையை அடக்கி,

'ஒரு காலடி,
நாலிலைப் பந்தலடி' என்று விடுத்த விடுகவிக்கு 

எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே, - முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா!
என்று பதிலடி கொடுத்தார் ஒளவையார்.

பழமொழிகளிலும் எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம்
ஊரு ரெண்டு பட்ட கூத்தாடிக்கு கொண்டாட்டம்
‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’’
‘‘அஞ்சு வெரலும் ஒண்ணாவா இருக்கு’’

கன்று ஈன்ற பசுமாட்டை விலைக்கு வாங்கி வந்தவர் பசுவிடம் பால் இல்லாததால் ‘‘அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை’’ என்றார்.பசுவில் இருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், கோமியம், சாணம் இவையே அந்த 5 விதமான பொருள்களாகும். இதில் பால், தயிர், நெய் இவை கிடைக்கா விட்டாலும் கோமியம், சாணம் என்ற இரண்டு பொருள்கள் மட்டும் உறுதியாகப் பசுமாட்டில் இருந்து கிடைக்கும். இதனைக் குறிக்கவே  மேற்கண்ட பழமொழி..
மந்திரத்தில் ஐந்தெழுத்து மந்திரம் சிறப்பானது.  ‘நமசிவாய’ என்பதே அச்சிவ மந்திரமாகும். இதனைச் சொல்பவர் பலவிதமான நன்மைகளையும் அடைவர். அவர்களைத் துன்பம் என்றும் அணுகாது. இவ்வைந்து எழுத்து மந்திரத்தினை முழுமையாகக் கூற இயலாவிட்டாலும் ‘சிவா’ என்று இரண்டெழுத்தைக் கூறினாலும்  சிவபெருமான், மந்திரம் சொல்வோரைக் காப்பாற்றுவார் என்ற  தெய்வ நம்பிக்கையை விளக்குவதாகவும் இப்பழமொழி அமைந்துள்ளது.

ஒருவன் நன்கு பாடுபட்டு உழைத்து உண்ணுதல் வேண்டும். அதுவே அவனுக்குப் பெருமை தரும். உழைக்காது உண்பது இழிவானதாகும். தம் உழைப்பில் கிடைத்த பொருளைத் தானும் உண்டு, பிறருக்கும் கொடுத்து உண்டு வாழ்பவனுடைய வாழ்வே உன்னதமானதாகும். இதனை,

‘‘அஞ்சு விரல்ல பாடுபட்டு
பத்து விரல்ல அள்ளித் தங்கணும்’’

ஐந்து குழந்தைகளும் பெண்குழந்தைகளாகப் பிறந்துவிட்டால் அரசனைப் போன்று செல்வ வளமுடையவர்களும் செல்வ வளம் குன்றி வறுமை நிலைக்குத் தள்ளப்படுவர். அதாவது பிச்சை ஏற்று வாழும் ஆண்டியாக ஆவர் என்பதை,

‘‘அஞ்சும் பொம்பிளப் பிள்ளையாப் பிறந்தா
அரசன் கூட ஆண்டியாகி விடுவான்’’ என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

இறப்பு என்பது எந்த வயதில் வரும் என்று அறுதியிட்டுக் கூற இயலாது.  எவ்விடத்திலும் எவருக்கும் எவ்வயதிலும் வரும். இதனை,

‘‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’’ என்ற பழமொழி விளக்கியுரைக்கின்றது.

பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவது ஆளாகப் போரிட்டாலும், நூறு கௌரவர்களுடன் நூற்றியோராவது ஆளாகப் போரிட்டாலும் கர்ணனுக்கு மரணம் என்பது நிச்சயம். அதனை மாற்ற முடியாது என்ற மகாபாரதக் கதையை விளக்கத் தோன்றியதே இப்பழமொழியாகும்.

மனித வாழ்க்கையை எட்டு எட்டாகப் பிரித்து - ஓரெட்டில் நடக்காத நடை, ஈரெட்டில் பயிலாத கல்வி, மூவெட்டில் செய்யாத திருமணம், நாலெட்டில் பெறாத பிள்ளை ஐயெட்டில் சேர்க்காத செல்வம், ஆறெட்டில் சுற்றாத உலகம், ஏழெட்டில் கொள்ளாத ஓய்வு, எட்டெட்டில் நிகழா இறப்பு இவை வீண்.எனவே எட்டு என்பது வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த ஓர் எண் என்பது தெளிவாகிறது.

நற்குடியில் பிறந்தோரும் பசி வந்திடில் தங்களின் நற்குணங்களை இழந்துவிடுவர். இழிசெயல்களைச் செய்யத் தொடங்குவர். இதனை,

‘‘பசி வந்திடப் பத்தும் பறக்கும்’’என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது. அன்பு, கல்வி, ஈகை, கருணை, நட்பு, காதல், பகை, மானம், என்ற பத்துவிதமான குணங்களும் மிகுபசி உடையவனிடம் இருந்து விலகிவிடும்.

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க - என்று வாழ்த்துகிறோமே அவை என்னென்ன என்று கூறும் பாடல் இதோ:

துதிவாணி வீறு விசயம் சான்தனம் துணிவு
தனம் மதி தானியம் சௌபாக்கியம் போகம் அறிவு
அழகு பெருமை ஆறாம் குலம் நோய்கள்பூண் வயது
பதினாறு பேரும் தருவாய் பராபரமே...

இப்படி நிறைய பாடல்கள் நம் தமிழ்மொழியில் உண்டு.

தொகுப்பு:
லூசியா லெபோ.